BUDDHA –His Life And Teaching And Impact On Humanity: OSHO

சமீபத்தில் நான் ரசித்துப் படித்த ஒரு புத்தகம் ஓஷோவின் ‘Buddha –his life and teaching and impact on humanity’ புத்தகம். புத்தரைப் பற்றி வேறு யார் ஒருவராலும் இப்படிப் பேசியிருக்க முடியாது. புத்தரின் வாழ்க்கை, அவரது போதனைகள், அவர் மனித மனங்களிலும் சமூகத்திலும் ஏற்படுத்திய தாக்கம் ஆகியன குறித்து ஓஷோவின் மிக அற்புதமான உரையாடல் இந்தப் புத்கதம். அவர் புத்தகங்களைப் பல வருடங்களாக படிக்காதிருந்த நான் இப்போது மீண்டும் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். தற்சமயம் மட்டும் அவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். இதுவரை அவரைத் தமிழில் படித்த நான் இப்போது ஆங்கிலத்தில் படிக்கத் தொடங்கியுள்ளேன்.

புத்தரைப் பற்றிய அவரது இந்த உரை அழகானது; அதி அற்புதமானது. படிக்கப் படிக்கப் பரவசம் என்பது ஓஷோ ஒருவராலேயே சாத்தியம். அவரது பேச்சில் வெளிப்படும் வார்த்தைகளும் வாக்கியங்களும்தான் எவ்வளவு வசீகரமானதாக இருக்கின்றன! அவைகள் நம்மை மயக்கத்தில் ஆழ்த்துகின்றன எனினும் அது மயக்கமல்ல; நம்மை விழிக்கச் செய்யும் பேராற்றல் கொண்ட துப்பாக்கித் தோட்டாக்கள் அவை. அவரிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு தோட்டாவும் நம்மைத் துளைத்துச் சென்று, வாழ்க்கையை, மரணத்தை, மனதில் சதா உழன்று கொண்டிருக்கும் கொந்தளிக்கும் உணர்வுகளை மிகத் துல்லியமாக நாம் உணரும்படி செய்கின்றன. புத்தரின் போதனைகளை நேரடியாக நாம் புத்தரிடமிருந்தே கேட்பதான உணர்வை இந்தப் புத்தகம் தருகிறது. ஏன் எதனால் புத்தர் இப்படிச் சொல்கிறார் அல்லது இப்படிச் சொல்லவில்லை என்பதை அறியும் போது புத்தரின் மனதை நன்கு உணர்ந்தவராகவே ஓஷோ அவற்றை நமக்குச் சொல்கிறார் என்பதைவிட அவர் புத்தராகவே மாறி நம்மிடம் உரையாடுகிறார் என்பதுதான் உண்மை.

வேறு யாரையும்விட புத்தரின் வாழ்க்கையும் அவரின் போதனைகளும் வசீகரம் நிரம்பியவை. அவரிடம் வெளிப்படும் சாந்தமும், ஒளியும் எப்போதும் நம்மை ஈர்ப்பவை. அவைகள் ஓஷோவின் வார்த்தைகளில் இன்னும் அதிக ஒளியையும் பரவசத்தையும் பாய்ச்சுகின்றன. புத்தருக்கு எது நடக்கக்கூடாது என்று அவர் குடும்பத்தார் நினைத்தார்களோ கடைசியில் அதுவே நடந்தது ஏன் என்பதைப் பற்றியும், உண்மையைத் தேடி அவர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும், அவர் இறுதியாக ஞானமடைந்ததையும் நாம் அறிந்திராத பல்வேறு சிந்தனைகளினூடாக இந்த உரையில் நமக்கு உணர்த்திச் செல்கிறார் ஓஷோ. ஏற்றுக் கொள்ளுதல் (accept), நடுவழி (the middle way), சரியான சிந்தனை (right mindfulness), மௌனம் (silence), அமைதி (peaceful) ஆகியன குறித்துப் பலவற்றை மிகத் தெளிவாகவும், விரிவாகவும் பேசுகிறார் ஓஷோ.

புத்தகத்தைப் படித்து முடித்ததும் எனக்கு பாரதியின் கவிதை வரிகள் நினைவில் வந்தன. புத்தரின் வாழ்வும் சரி, போதனைகளும் சரி ‘இது இப்படித்தான்’ (suchness) என்று ஏற்றுக்கொள்வதில்தான் இருக்கிறது. நடந்ததை எதிர்த்துப் போராடவோ, நடக்காததை நினைத்து வருந்துவதோ முழு முட்டாள்தனம் மாறாக நடப்பதை சாட்சியாக கவனிப்பதே புத்த நிலை. அதையே பாரதியின் இந்த வரிகள் எனக்குப் புலப்படுத்தின.

சென்றதினி மீளாது மூடரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்;
தீமையெல்லாம் அழிந்துபோம், திரும்பி வாரா.

புத்தகத்திலிருந்து...

ஏற்றுக்கொள்ளுதல் என்ற வார்த்தை அவ்வளவு நன்றாக இல்லை. அதில் ஏதோ நிறைந்திருக்கிறது - அந்த வார்த்தையால் அல்ல உங்களால் - ஏனெனில் நீங்கள் எப்போதும் முடியாத போதுதான் ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் விருப்பமில்லாமலும் அரைமனதுடனும் ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் எப்போதும் ஏதுவும் செய்ய முடியாத போதே ஏற்றுகொள்கிறீர்கள். ஆனால் மனதின் அடியாழத்தில் அது வேறுவிதமாக நடந்திருக்கக்கூடாதா என்று ஏங்குகிறீர்கள்; அப்படி நடந்திருந்தால் நீங்கள் மகிழ்வீர்கள். நீங்கள் பிச்சைக்காரனைப் போல ஏற்றுக்கொள்கிறீர்கள், அரசனைப் போல அல்ல- இந்த வேறுபாடு மகத்தானது.

ஏன் அதிக அளவிலான சுமையை சுமக்க வேண்டும்? ஏனெனில் நீங்கள் ஒருபோதும் உண்மையாக எதையும் ஏற்றுக்கொள்வதில்லை. கவனியுங்கள் - நீங்கள் எதையாவது எற்றுக்கொள்ளும்போது, அது ஒருபோதும் சுமையாக இராது; அதை சுமக்கவேண்டியும் இருக்காது. நீங்கள் அதிலிருந்து விடுபவீர்கள். ஏற்றுக்கொள்வதன் மூலமே நீங்கள் விடுபட முடியும். அரைமனதுடனும், நிர்க்கதியான நிலையிலும் ஏற்கும்போது, அது சுமக்கவேண்டிய சுமையாகிறது. ஒன்றை நினைவில் வையுங்கள்; முழுமையடையாத எதையும் மனம் எப்போதும் சுமந்துகொண்டுதான் இருக்கும். முழுமைடைந்துவிட்ட ஒன்றை விட்டு மனம் விலகிவிடும். ஒன்றை, அது ஒருநாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில், உடன் எடுத்துச்செல்வது மனதின் சுபாவம். நீங்கள் கடந்த காலத்திலிருப்பதால், அளவுக்கு அதிகமாக கடந்தகாலத்தை சுமப்பதனால், நீங்கள் நிகழ்காலத்தில் வாழ்வதில்லை. உங்கள் நிகழ்காலம் கடந்த காலத்தினால் குழம்பியிருக்கிறது. அதனால் உங்கள் எதிர்காலமும் அவ்வாறே இருக்கும்- ஏனெனில் கடந்தகாலம் பாரமாகிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அதன் சுமை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

அதிருப்தியுடன், வேறுவழியின்றி எதையும் ஏற்றுக்கொள்ளாமல், எப்போதும் ‘இது இப்படித்தான்’ என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே இயற்கையின் நியதி என்று புரிந்துகொள்ள வேண்டும். நடப்பதை சுலபமாகப் பாருங்கள். ஏதாவது இயல்பாக இருக்கும்போது செயற்கையான அழுத்தத்தை அதன் மீது ஏற்றாதீர்கள். கதவைத் தேர்ந்தெடுத்து அதன் வழியாக வெளியேறுங்கள். நீங்கள் ஒவ்வொரு நாளும் முட்டாள்தனத்துடன் சுவற்றின் வழியாக வெளியேற நினைக்கும்போது, நீங்கள் பதட்டமும் குழப்பமும் அடைகிறீர்கள். துன்பம் உங்கள் வாழ்வின் அடிப்படையாகிறது; மையமாகிறது.

வெறுமனே பாருங்கள். எந்த நிலையிலும் எதையும் எதிர்பார்க்காதீர்கள், ஏனெனில் விருப்பம் உங்களைத் தவறான பாதைக்கே வழி நடத்தும். விரும்பாதீர்கள்; கற்பனை செய்யாதீர்கள். வெறுமனே நடப்பதை உங்கள் முழுமனதுடன் பாருங்கள்... அப்போது திடீரென கதவு திறக்கும். நீங்கள் சுவற்றின் வழியே வெளியேறத் தேவையில்லை, சேதமின்றி கதவின் வழியே வெளியேறலாம், அப்போது நீங்கள் சுமையற்று இருப்பீர்கள். நினைவில் வையுங்கள் ‘suchness’ என்பது புரிந்துகொள்ளுதல், அது நிர்க்கதியான நிலையல்ல. அதுவே ஏற்றுக்கொள்வதற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு. முழுமனதுடன், வரவேற்கும் மனோபாவத்துடன் ஏற்றுக்கொள்ளும் நிலையே ‘suchness’, அது முடியாத நிலை அல்ல.

தரமான ஆர்ட் தாளில் நேர்த்தியான அச்சாக்கத்துடன், புத்தரின் பல படங்களோடு அழகாக வெளியாகியுள்ளது இந்தப் புத்கதம். புத்தரை மட்டுமல்ல தன்னைத் தானே அறியும் ஆவல்கொண்ட அனைவருக்கும் ஏற்ற புத்தகம் இது.

Related Posts Plugin for WordPress, Blogger...