December 31, 2014

ஃபாரென்ஹீட் 451 -ரே பிராட்பரி

தற்போது பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவல் படும் பாட்டை நாம் ஊடகங்களில் காண்கிறோம். இனி வரும் காலங்களில் ஒரு கதாசிரியன் எதையும் சுதந்திரமாக எழுத முடியாது போலிருக்கிறது. சுந்தர ராமசாமியின் சிறுகதை ஒன்று படாதபாடு பட்டதை நாம் முன்னர் அறிவோம். ஒரு எழுத்தாளனை வெளியிலிருந்து கட்டுப்படுத்தும் புறச்சக்திகள் இன்று மலிந்துவிட்டன. ஏன்? எப்படி? என்று எதையும் சிந்திக்காமல் தடைசெய்யவும், எதிர்க் குரல் கொடுக்கவும் எப்போதும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. அதிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக ஒரு படைப்பை படைக்கும் வாய்ப்பை ஒரு எழுத்தாளன் நாளுக்கு நாள் இழந்து வருகிறான். எனவே, புத்தகங்கள் தடைசெய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி 1953-ல் ரே பிராட்பரி எழுதிய ஒரு நாவல்தான் Fahrenheit 451. ஜனவரி மாதம் க்ரியா பதிப்பகம் வெளியிட இருக்கும் ஃபாரென்ஹீட் 451 நாவலின் ஒரு பகுதியை தி இந்து நாளிதழ் டிசம்பர் 14, 2014-ல் வெளியிட்டது. அதைக் குறித்த பதிவு பின்வருமாறு:

புத்தகங்கள் தடைசெய்யப்படும் ஒரு நாட்டில் நடக்கும் எதிர்காலவியல் புனைவு நூல் இது. வேறு வேறு காரணங்களுக்காகப் புத்தகங்கள் தடைசெய்யப்படும் தற்போதைய இந்தியச் சூழலுக்கும் இந்நாவலில் பேசப்படும் விஷயங்கள் பொருத்தமாக இருக்கின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இப்படைப்பு, முகநூல் போன்ற பிந்தி வரப் போகும் ஊடகங்களையும் சமூகத்தில் அவை செலுத்தப் போகும் இன்றைய தாக்கங்களையும் கணித்திருக்கிறது…

“நான் உங்களை ஒன்று கேட்கலாமா? தீயணைப்பவராக எவ்வளவு காலமாக வேலைபார்க்கிறீர்கள்?”

“என்னுடைய இருபதாவது வயதிலிருந்து, பத்து ஆண்டுகளாக.

நீங்கள் எரிக்கும் புத்தகங்களில் எதையாவது, எப்போதாவது படித்திருக்கிறீர்களா?”

அவன் சிரித்தான். “அது சட்டத்துக்குப் புறம்பானது.”

“அட ஆமாம், சரிதான்.”

“இது பிரமாதமான தொழில். திங்கட்கிழமை மில்லேவை எரிக்க வேண்டும், புதன்கிழமை விட்மன், வெள்ளிக்கிழமை ஃபாக்னர், எல்லோரையும் எரித்துச் சாம்பலாக்கி, பின்னர் சாம்பலை எரிக்க வேண்டும். அதுதான் அதிகாரபூர்வமான பிரகடனம்.”

இன்னும் சற்று தூரம் நடந்த பின்னர், அந்தப் பெண் சொன்னாள்: “முன்பொரு காலத்தில் தீயணைப்பவர்கள் தீ வைப்பதற்குப் பதிலாகத் தீயை அணைத்தார்கள் என்பது உண்மையா?”

“இல்லை, தீயே பிடிக்காத வீடுகள்தான் எப்போதும் இருந்திருக்கின்றன. என் பேச்சை நம்பு.”

“ஆச்சரியம். அந்தக் காலங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அந்தச் சுவாலைகளை அணைக்கத் தீயணைப்பவரின் உதவியை நாடுவார்கள் என்று முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன்.”

அவன் சிரித்தான்.

அவள் சட்டென்று அவனைப் பார்த்தாள். “ஏன் சிரிக்கிறீர்கள்?”

“தெரியவில்லை.” மீண்டும் சிரிக்க ஆரம்பித்த அவன் சிரிப்பதை நிறுத்தினான். “ஏன்?” “தமாஷாக நான் எதுவும் சொல்லாதபோது சிரிக்கிறீர்கள், உடனேயே அலட்சியமாகப் பதில் சொல்லிவிடுகிறீர்கள். நான் என்ன கேட்டேன் என்று நிறுத்தி நிதானமாகச் சிந்திப்பதில்லை.”

அவன் நடப்பதை நிறுத்தினான். “நீ விசித்திரமானவள்தான்” என்றான் அவன், அவளைப் பார்த்து.

“உனக்கு மரியாதை உணர்வே கிடையாதா?”

“உங்கள் மனதைப் புண்படுத்த நான் நினைக்கவில்லை. மனிதர்களை அளவுக்கு மீறிக் கூர்ந்து கவனிப்பது எனக்குப் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன்.”

“சரி, இது உனக்கு எதையுமே உணர்த்தவில்லையா?” கருகிய நிறத்திலிருந்த அவனுடைய சட்டையின் கைப்பகுதியில் தைக்கப்பட்டிருந்த 451 என்ற எண்ணின் மேல் தட்டிக் காட்டினான்.

“ஆமாம்” என்றாள் மெல்லிய குரலில். தன் நடையின் வேகத்தை அதிகரித்தாள். “அதோ, அங்கே இருக்கும் அகலமான நகர நிழற்சாலைகளில் அதிவேகமாக ஓடும் ஜெட் கார்களை எப்போதாவது கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா?”

“நீ பேச்சை மாற்றுகிறாய்.”

“புல் எப்படி இருக்கும், மலர்கள் எப்படி இருக்கும் என்று கார் ஓட்டுபவர்களுக்குத் தெரியாது என்று சில சமயங்களில் நான் நினைப்பதுண்டு. ஏனென்றால், அவற்றை அவர்கள் நிதானமாகப் பார்ப்பதில்லை” என்றாள் அவள். “தெளிவற்ற பச்சை நிறத் திட்டு ஒன்றைக் கார் ஓட்டுபவர் ஒருவருக்குக் காட்டினால், அட, ஆமாம், அதுதான் புல் என்பார்! வெளிர் சிவப்புத் திட்டா? அது ரோஜா மலர்த் தோட்டம்! வெண் திட்டுகள், வீடுகள். பழுப்பு நிறத் திட்டுகள், பசு மாடுகள். ஒருமுறை என் மாமா நெடுஞ்சாலையில் மெதுவாக வண்டியை ஓட்டிச் சென்றார். மணிக்கு நாற்பது மைல் வேகத்தில் சென்றார். அவருக்கு இரண்டு நாட்கள் சிறைத் தண்டனை கொடுத்தார்கள். வேடிக்கையாக, ஏன், வருத்தமாகக்கூட இல்லை?”

“நீ ஏகப்பட்ட விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கிறாய்” என்றான் மோன்டாக், சற்றே சங்கடத்துடன்.

“நான் சுவர்தொலைக்காட்சியைப் பார்ப்பதோ, குதிரைப் பந்தயங்கள் அல்லது பொழுதுபோக்குப் பூங்காக்களுக்குப் போவதோ மிக அரிது. ஆகவே, வினோதமான சிந்தனைகளுக்கு எனக்கு நிறைய அவகாசம் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். ஊருக்கு வெளியே 200 அடி நீளத்துக்கு அமைந்திருக்கும் விளம்பரப் பலகைகளைப் பார்த்திருக்கிறீர்களா? கார்கள் மிக வேகமாக ஓடத் தொடங்கியதால், அவர்கள் பார்வையில் கொஞ்ச நேரமாவது நீடிக்க வேண்டுமென்பதற்காகப் பலகைகளின் நீளத்தைக் கூட்ட வேண்டியதாயிற்று.”

“எனக்கு அது தெரியாது!” மோன்டாக் திடீரென்று சிரித்தான்.

“உங்களுக்குத் தெரியாத வேறொன்றுகூட எனக்குத் தெரியும் என்று அடித்துச்சொல்வேன். காலையில் புற்களின் மேல் பனித்துளி இருக்கும்.”

தனக்கு அது தெரியுமா, தெரியாதா என்று அவனால் உடனேயே நினைவுபடுத்திப்பார்க்க முடியவில்லை, அது அவனுக்கு மிகவும் எரிச்சலூட்டியது.

“தவிர, நீங்கள் கவனித்துப் பார்த்தால்”-அவள் வானத்தை நோக்கித் தலையை அசைத்தாள்- “நிலவில் மனிதன் ஒருவன் இருக்கிறான்.”

வெகு நாட்களாகவே அவன் பார்த்திருந்திருக்கவில்லை.

மீதி தூரம்வரை அவர்கள் மௌனமாக நடந்தார்கள்—சிந்தனையில் ஆழ்ந்துவிட்ட மௌனத்தில் அவள், அவ்வப்போது அவளை நோக்கிக் குற்றம் சுமத்தும் பார்வையை வீசிக்கொண்டு, ஒருவித இறுக்கமும் சங்கட உணர்வும் கலந்த மௌனத்தில் அவன். அவளுடைய வீட்டை அவர்கள் அடைந்தபோது அங்கே எல்லா விளக்குகளும் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன.

“அங்கே என்ன நடக்கிறது?” அவ்வளவு விளக்குகள் எரிந்துகொண்டிருப்பதை மோன்டாக் பார்த்ததேயில்லை.

“அதுவா, என் அப்பா, அம்மா, மாமா எல்லோரும் சும்மா சுற்றி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். பாதசாரியாக இருப்பதைப் போலத்தான் இதுவும். இன்னும் கொஞ்சம் அபூர்வம், அவ்வளவுதான். வேறொரு சமயம்-உங்களிடம் நான் சொல்லியிருக்கிறேனா?-பாதசாரியாக இருந்ததற்காக என் மாமாவைக் கைது செய்தார்கள். உண்மையில், நாங்கள் ரொம்பவுமே விசித்திரமானவர்கள்.”

“சரி, நீங்கள் அப்படி எதைப் பற்றிப் பேசுகிறீர்கள்?”

அதற்கு அவள் சிரித்தாள். குட் நைட்! அவள் வீட்டுக்குப் போகும் பாதையில் நடக்கத் தொடங்கினாள். திடீரென்று ஏதோ ஞாபகம் வந்ததைப் போலத் திரும்பி வந்து அவனை வியப்புடனும் ஆர்வத்துடனும் பார்த்தாள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்று கேட்டாள்.

நான் என்னவாக?... அவன் கத்தினான்.

ஆனால் அவளோ போய்விட்டிருந்தாள், நிலவொளியில் ஓடியபடியே. அவளுடைய வீட்டின் முன்கதவு மெதுவாகச் சாத்திக்கொண்டது.

Related Posts Plugin for WordPress, Blogger...