லாவோட்சுவும் கன்பூசியஸும் புத்தரும் மூன்று கோப்பை பானமும்

நான் ஒரு அழகான கதையைக் கேள்விப்பட்டேன் –அது எவ்வளவுதூரம் சரியானது என்பதை அறியவில்லை, அதைச் சரிபார்க்க முயலவும் இல்லை.

சொர்க்க லோகத்தில் ஒரு மதிய வேளையில், பிரபலமான உணவகம் ஒன்றில் லாவோட்சு, கன்பூசியஸ், புத்தர் மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பணியாளன், ஒரு தட்டில் ‘வாழ்க்கை’ என்ற பானத்தை மூன்று கோப்பைகளில் அவர்களுக்குக் கொடுத்தான். புத்தர் உடனடியாக கண்களை மூடியவராக மறுத்து, “வாழ்க்கை ஒரு துயரம்” என்று சொன்னார்.

கன்பூசியஸ் தன் கண்களை பாதி மூடியவராக –அவர் ஒரு நடுநிலையாளர், அவர் தன் பொன்னான கொள்கையை போதிப்பவராக, பணியாளிடம் தனக்கொரு கோப்பையைத் தரும்படி சொன்னார். அவர் சற்றே சுவைத்துப் பார்க்க விரும்பினார் –முழுதுமல்ல ஒரு மிடறு, ஏனெனில் சுவைக்காமல் வாழ்க்கையை துன்பமானது என்றோ அல்லது இன்பமானது என்றோ எப்படிக் கூற முடியம்? கன்பூசியஸின் மனம் அறிவியலைச் சார்ந்தது, அவர் மறைஞானி அல்ல, அவர் ஒரு நடைமுறையாளர், இந்த பூமியோடு கட்டப்பட்டவர். அவர் இந்த உலகில் அறியப்பட்ட முதல் நடைமுறையாளர், மிகவும் தர்க்கபூர்வமானவர். அது மிகச் சரியானதுதான் –அவர் சொன்னார், “முதலில் நான் குடித்துப் பார்க்கிறேன் பிறகு என்ன நினைக்கிறேனோ அதைச் சொல்கிறேன்” என்றார். அவர் ஒரு மிடறு குடித்துவிட்டு, “புத்தர் சொன்னது சரிதான், வாழ்க்கை துயரமானது” என்றார்.

லாவோட்சு மூன்று கோப்பைகளையும் எடுத்துக்கொண்டு, “ஒருவர் மூன்றையும் குடித்துப் பார்க்காமல் எதைச் சொல்லமுடியும்?” என்று எல்லா கோப்பைகளையும் குடித்துவிட்டு நடனமாடத் தொடங்கினார்!

புத்தரும் கன்பூசியசும் அவரிடம், “ நீங்கள் எதையும் சொல்லப் போவதில்லையா” என்று கேட்க, “இதையே நான் சொல்ல விரும்புவது –எனது நடனமும் பாடலும் எனக்காகப் பேசுகின்றன” என்றார். ஒருபோதும் முழுமையாக ஒன்றைச் சுவைக்காமல் நீங்கள் எதையும் சொல்ல முடியாது. முழுமையாகச் சுவைத்த பிறகு நீங்கள் எதையும் சொல்ல முடியாது எனெனில் நீங்கள் அறிந்தவற்றை சொல்ல வார்த்தைகள் போதுமானவை அல்ல.

புத்தர் ஒரு முனை, கன்பூசியஸ் நடுவில். லாவோட்சுவோ புத்தரின் கோப்பை, கன்பூசியசின் கோப்பை, தனக்கான கோப்பை என மூன்றையும் குடித்துவிட்டு வாழ்வின் மூன்று பரிமாணங்களிலும் வாழ்பவராகிறார். என்னுடைய அணுகுமுறை லாவோட்சுவினுடையது. வாழ்க்கையை அதன் எல்லா பரிமாணங்களிலும் வாழுங்கள் ஒன்றுக்கு எதிராக மற்றொன்றைத் தேர்ந்த்தெடுக்காதீர்கள் மேலும் நடுவில் இருப்பதற்காகவும் முயலாதீர்கள். சமநிலையில் இருக்க முயற்சிக்க வேண்டாம் –சமநிலை என்பது பழகக்கூடிய ஒன்றல்ல. அது வாழ்க்கையை அதன் எல்லா பரிமாணங்களையும் அனுபவிக்கும்போது கிடைக்கக்கூடிய ஒன்று. அது இயல்பாக நிகழக்கூடியது; அது உங்களது முயற்சியால் கொண்டுவரக்கூடியது அல்ல. அப்படி உங்களின் முயற்சியால் கொண்டுவந்தால் அது திணிக்கப்பட்டதாக, பொய்யானதாக இருக்கும். அப்படிச் செய்யும்போது நீங்கள் உங்களைத் தளர்வாக வைத்திருக்க முடியாமல் பதட்டத்தில் இருப்பீர்கள் ஏனெனில் சமநிலையை வலிந்து கொண்டுவரும் போது எப்படித் தளர்வாக இருக்க முடியும்? 

சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்க்கையை வாழாதீர்கள். வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள். வாழ்வை முழுமையாகப் பருகுங்கள்! ஆம், சில சமயம் கசப்பின் சுவை இருக்கவே செய்யும் -அதனாலென்ன? அந்த கசப்பின் சுவை இனிப்பின் சுவையை உணரும் தகுதியை உங்களுக்குத் தரும். நீங்கள் இனிப்புச் சுவையைச் சிலாகிக்கும் தருணம், கசப்பின் சுவையை அறிந்தபோதே வரும். ஒருவன் எப்படி அழுவது என்பது தெரியாதபோது, எப்படி சிரிப்பது என்பதையும் அறியமுடியாது. ஒருவன் அழ்ந்த சிரிப்பை, வயிறு வலிக்கும் சிரிப்பை, அனுபவிக்காவிடில் அவனது அழுகை முதலைக் கண்ணீராகவே இருக்கும். அது உண்மையானதாக, நம்பகமானதாக இராது.

நான் நடுவழியை போதிக்கவில்லை, நான் முழுவழியை போதிக்கிறேன். அதன்பிறகு சமநிலை தன்னால் கூடும், அந்தச் சமநிலை அளவுகடந்த நேர்த்தியுடனும், வசீகரத்துடனும் இருக்கும். நீங்கள் அதை நிர்பந்திக்காதீர்கள், அது இயல்பாக வரும். நேர்த்தியாக இடமாக, வலமாக, நடுவாக நகரும்போது, மெதுவாக சமநிலை வரும் ஏனெனில் அப்போது நீங்கள் ஒட்டுதல் இல்லாதவராகிறீர்கள். துன்பம் வரும்போது, அது விலகிவிடும் என்பதை அறிகிறீர்கள், மகிழ்ச்சி வரும்போது அதுவும் விலகிவிடும் என்று அறிகிறீர்கள். எதுவும் நிலைத்திருப்பதில்லை, அனைத்தும் கடந்து போகும். எப்போதும் மாறாது நிலைத்திருப்பது உங்களது சாட்சிபாவம் மட்டுமே. அந்த சாட்சிபாவம் சமநிலையைக் கொண்டு வரும். அந்த சாட்சிபாவமே சமநிலை.

The Book of Understanding –Osho 

குறிப்பு: சொற்பொழிவுக்கு இடையே ஓஷோ சொல்லும் கதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றைத் தமிழாக்கும் என் முயற்சியில் இது ஏழாவது கதை.

Related Posts Plugin for WordPress, Blogger...