ஜெயமோகனுக்கு வாழ்த்துகள்!

ஜெயமுாகன் தளத்தில் வெளியான வெண்முரசு விழா ஏன்? என்ற கேள்விக்கான அவரது பதில் எனக்கு மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது. எது எதற்கோ விழா கொண்டாடும் நாம் ஓர் இலக்கிய நிகழ்வுக்கு விழா கொண்டாடக்கூடாதா என்ன? அப்படி நினைப்பவர்களுக்கு ஒரு படைப்பாளி விழா ஏன் என்று விளக்கமளிக்கும் நிலையிலேயே நம் இலக்கியச் சூழல் இருக்கிறது என்பது வருத்தத்திற்கு உரியது. ஒரு படைப்பாளிக்கு ஊக்கம் தராவிடினும் புண்படுத்தாமலும் கொச்சைப்படுத்தாமலும் இருக்கும் ஓர் எளிய நாகரிகத்தைக்கூடவா நாம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை?

குறிப்பிட்ட படைப்பாளியின் எழுத்துக்கள் மீதும், படைப்பாளியின் மீதும் காழ்ப்புணர்ச்சி கொள்வது நம்மவர்களுக்கு கைவந்த கலை என்பதைச் சொல்லவேண்டியதில்லை. படைப்பாளியையும் படைப்பையும் கொண்டாடும் மனோபாவம் இன்னும் நம் இலக்கியச் சூழலில் உருவாகவில்லை என்றே சொல்லவேண்டும். ‘சொல் புதிது சுவை புதிது’ என்று தன் கவிதைகளைப் பற்றித் தானே சுயவிளம்பரம் செய்து கொண்ட அவல நிலையில் பாரதி வாழ்ந்த மண் அல்லவா இது?

சுந்தர ராமசாமி குறிப்பிடுவது போல ஒரு படைப்பை வாசித்து ஒரு முடிவுக்கு வராமல், தாங்கள் கொண்ட பல்வேறு முன்முடிவுகளால் கருத்துக்களை உதிர்ப்பவர்களைப் பற்றி ஜெயமோகன் கவலைப்பட வேண்டியதில்லை. அவரது பயணம் எத்தனை தூரம் என்றாலும் அத்தனை தூரத்திற்கும் காலோயாது அவருடன் பயணிக்க என்னைப் போன்ற வாசகர்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை இத்தருணத்தில் சொல்லிக்கொள்கிறேன். அவரது வெண்முரசு மகாபாரதம் இந்த மண்ணில் இருக்கும் காலம் வரை பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவருக்கு என்னைப் போன்ற பல்லாயிரக் கணக்கான வாசகர்களின் ஆசிகளும் வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு.

Related Posts Plugin for WordPress, Blogger...