November 3, 2014

அக்கினிப் பிரவேசம் -ஜெயகாந்தன்

ஜெயகாந்தனின் மிகப் பிரபலமான கதை என அவரின் ‘அக்கினிப் பிரவேசம்’ கதையைச் சொல்லலாம். முதன் முதலாக இந்தக் கதையைப் படித்தபோது, ‘என்ன மாதிரியான கதை இது?’ என்ற கேள்விதான் எனக்குள் எழுந்தது. ஏனெனில் இந்தக் கதையில் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. 1966-ல் வெளியான இக்கதை வாசகர்களிடையே எத்தகைய தாக்கத்தை உருவாக்கியிருக்கும் என்பதை இன்று வரையறுப்பது சிரமமானதுதான். ஏனெனில் நியாயங்களும் தர்மங்களும் காலத்திற்கு ஏற்ப, மனிதர்களுக்கு ஏற்ப மாற்றம் கொண்டுவிடுகிறது. ‘டீஸல் அநாகரிகம்’ என்று கதையில் பேருந்தை அவர் குறிப்பதிலிருந்தே இதை ஊகிக்க முடியும். அன்று அநாகரிகமாக தெரிந்த பேருந்து இன்று அத்தியாவசியமாக ஆகிவிட்டது போலவே நியாயங்களும் தர்மங்களும் காலத்திற்கு ஏற்ப மாறிவிடுகின்றன.

இந்தக் கதையில் குறிப்பிட வேண்டிய முக்கியமான அம்சம், அவனுக்கும் அவளுக்கும் அம்மாவுக்கும் பெயர்கள் இல்லை என்பது. ஏனெனில் அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் எனும் நோக்கிலேயே ஜெயகாந்தன் பெயரை வைக்கவில்லை. நடந்ததோ சொல்லத் தகாத காரியம் அதற்கு பெயர்கள் எதற்கு என்ற கரிசனம் அவருக்கு! ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது அல்லவா? கல்லூரியில் படிக்கும் ஒரு பெண் கெட்டுப்போய் வருகிறாள். அவளைத் தேற்றி ‘நடந்ததை யாருக்கும் சொல்லிவிடாதே, சொன்னால் வாழ்க்கை பாழாகிவிடும்’ என அம்மா சொல்ல, ‘சத்தியமா யாரிடமும் சொல்லமாட்டேன்’ என்கிறாள் பெண். ஒரு அம்மா தன் பெண்ணுக்கு இப்படியாக அறிவுரை சொன்னது சரிதானா? இல்லையா? என்று சூடான விவாதங்கள் கதை வெளியான காலத்தில் நடந்திருக்கும் என்பதை நாம் எளிதாக ஊகிக்கலாம்.

மனிதர்கள் காலங்காலமாக தங்கள் அகத்தை மறைத்துக்கொண்டே வந்திருக்கிறார்கள். தன்னைப் பற்றி உயர்வானவை மட்டுமே வெளிப்பட வேண்டும் என்பதில் அனைவரும் கண்ணும் கருத்துமாகவே இருக்கிறார்கள். எனவே அவளது அம்மா அப்படிச் சொன்னதில் எந்த வியப்போ, ஆச்சர்யமோ இல்லை. பிறருக்கு இப்படி நேர்ந்தால் நானே அவ்வாறுதான் பேசுவேன் என அவள் சொல்வது மனிதர்களின் பொதுவான இயல்பையே புலப்படுத்துகிறது. எனவே இது எந்தத் தாயும் செய்யக்கூடியதுதான் என்பதில் சந்தேகமில்லை. அப்படிச் செய்யாமல் இருந்தால்தான் அது விதிவிலக்கு! (இதே கதையை விரித்து கங்கை எங்கே போகிறாள் என்று நாவலாக எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன். அதில் அம்மா கத்தி ஊரைக்கூட்டி விடுவாள்.) 

அவன் நல்லவன். அவளும் நல்லவள். அவர்கள் தவறு செய்தபோதும் மன்னிப்புக்கு உரியவர்கள். காரணம் அவர்கள் உணர்ச்சிகளின் அடிமைகள்! ஆனால் இந்த சமூகம் கொடியது. உண்மை தெரிந்தால் அது அவளைச் சீரழித்துவிடும். நியாயம் தர்மம் எல்லாம் பிறருக்குத்தான் நமக்கு என வரும்போது நம் சௌகரியத்திற்கு ஏற்பவே அவற்றை வளைத்துக் கொள்ளவேண்டும் என்பதைக் காட்டவே இந்தக்கதை என்று எடுத்துக்கொண்டால் கூட, மகள் சொன்னதைக் கேட்டு பூரித்த தாய், ‘பரீட்சையிலே நிறைய மார்க் வாங்கிண்டு வருகிறாளே... சமத்து சமத்துன்னு நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பத்தான் நீ சமத்தா ஆயிருக்கே. எப்பவும் இன்னமே சமத்தா இருந்துக்கோ’ என்பது எந்த விதத்தில் நியாயம்? என்ன மாதிரியான ஒரு அறிவுரை இது? இனி அம்மாவுக்கே தெரியாமல் மகள் சமத்தாக இருக்கப்போகிறாள்! இதுவரை உயரப் பறந்த கதை இந்த வரிகளால் தன் நிலையிலிருந்து தாழ்ந்து கீழே இறங்கி விடுகிறது.

காரின் அழகும், மழையும், ‘ட்ரம்ப்பட்’டின் இசையும் அவளை மதி மயங்கச் செய்துவிடுகிறது என்றாலும் மழை, இருட்டு, யாருமே இல்லை, வழி தெரியாது என எத்தனை காரணங்கள்? மழையில் நனைவதைவிட, வழியைத் தேடி ஓடுவதைவிட தன்னை அவனிடம் இழந்துவிடுவது அவளுக்கு எளிதாக இருக்கிறது! அவளது பார்வையில் வரும் அவனது அழகைப் பற்றிய விவரணைகள் அவள் சுபாவமாகவே அவனிடம் ஈர்க்கப்பட்டிருந்தாள் என்பதை, அவனை எதிர்த்துப் போராடவோ ஓடவோ அவள் விரும்பவில்லை என்பதையே உணர்த்துகிறது. எல்லாம் முடிந்தபிறகு அழும் அவளைப் பார்த்து ‘பிடிக்கல்லேன்னா அப்பவே சொல்லி இருக்கலாமே’ என்பதாக அவன் நினைப்பது அவளது சம்மதத்துடனே எல்லாம் நடந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. அவனை அழிஞ்சு போகிறவன் என்றும், அவளைப் பளிங்கு என்றும் சொல்லும் அம்மா, மனசாலே கெட்டுப்போகாத அகலிகை ராமன் பாதம்பட்டுப் புனிதம் அடைகிறாள் என்பதை உதாரணமாகச் சொல்வது அபத்தமாகத் தெரிகிறது. போதாக்குறைக்கு அவளை ‘இப்போதுதான் நீ சமத்து’ என்று சிலாகித்துப் பேசுவது மனிதரிடையே மனத்தூய்மை என்பதையே இல்லாமல் ஆக்கிவிடும் அபாயத்தை அல்லவா சுட்டுகிறது. அதைவிட, குழந்தைகள் சரியையும் தவறையும் தங்கள் பெற்றோரிடமிருந்தே கற்றுக்கொள்கிறார்கள் என்பதாக உணர்ந்துகொண்டால் கூட மேலான பார்வை கிட்டும் எனலாம்.

அக்கினிப் பிரவேசம் எனும் கதையின் தலைப்பு இந்தக் கதைக்கு எவ்வளவு தூரம் பொருந்தும் என்பதும் குழப்பத்திற்கு உரியது. அக்கினிப் பிரவேசம் என்றதும் நம் நினைவுக்கு வருவது சீதைதான். அக்கினிப் பிரவேசம் தேவையில்லை ‘சமத்தாக’ இருப்பதே அக்கினிப் பிரவேசமா? ஜெயகாந்தன் பற்றி சொல்லும் சி.மோகன், ‘ஜெயகாந்தனிடம் பரிசீலனைக்கு இடமுண்டு ஆனால் பொருட்படுத்தத் தக்கது அல்ல. சிந்தனைகளின் பாதிப்பில் பெறப்பட்ட கருத்துக்களை தம் நாவல்களில் முதல் முறையாக இடம் பெறச் செய்ததன் மூலம் பரபரப்பான கவனத்துக்கு உள்ளானவர் அவர்’ என்கிறார். இந்தக் கதையைப் பொருத்தவரையிலும் அதுவே பொருந்தும்.

Related Posts Plugin for WordPress, Blogger...