எனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்

ஒரு படைப்புக்கு முன்னுரை எவ்வளவுதூரம் அவசியம் அல்லது அவசியம் இல்லை என்பதைத் தீர்மானிப்பது கடினம். முன்னுரை இல்லாத புத்தகங்களை பார்க்கும்போது, உடையில்லாத மனித உடலைப் பார்க்கும் உணர்வுதான் எனக்கு ஏற்படுகிறது. ஒரு புத்தகத்திற்கு முன்னுரை என்பது நாம் அணியும் உடைகள் போன்றவைதாம். ஆடையை விலக்கி உடலைப் பார்க்கும் ஒரு கவர்ச்சியை முன்னுரை ஏற்படுத்தித் தருகிறது. ஒரு புத்தகத்தை வாங்க இருக்கும் தயக்கத்தை முன்னுரைகள் உடைக்கின்றன என்பது எத்தனைதூரம் உண்மையோ அப்படியே சில புத்தகங்களை வாங்குவதற்கு முன்னுரைகளே தடையாயும் அமைந்துவிடுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. எனவே முன்னுரை என்பது கவனத்துடனும், அக்கறையுடனும் எழுதப்படவேண்டிய ஒன்று.

முன்னுரைகள் மீது எனக்கு அளவற்ற காதல் உண்டு. அவையே நான் பல புத்தகங்களைத் தேர்வதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. எந்தப் புதிய புத்தகம் வாங்கினாலும் நான் முன்னுரையை முதலில் படித்துவிடுவேன். அது என்மனதில் பலநாட்கள் புதைந்து கிடந்தபடி, எப்போது என்னை மிகவும் வாட்டுகிறதோ அப்போது அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை படிக்கத் தொடங்கிவிடுவேன். என்னைக் கவர்ந்த எனக்குப் பிடித்த முன்னுரைகள் பல உண்டு. அவற்றில் ஒன்றிரண்டைப் பற்றியே இந்தப் பதிவில் பேசப்போகிறேன். குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த, ஜெயமோகன்-விஷ்ணுபுரம், மகாத்மா காந்தி-சத்திய சோதனை, ஜெயகாந்தன்-ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஆகிய மூன்று முன்னுரைகள் பற்றியே எழுதப்போகிறேன்.
1982 மார்ச் இருபத்திரண்டாம் தேதி இந்த நாவலின் மையப்படிமம் என்னை வந்தடைந்தது. துறவியாக ஆகும்பொருட்டு அன்று காலைதான் வீட்டைவிட்டுக் கிளம்பியிருந்தேன். திருவட்டாறுக்குச் சென்று கைக்கடிகாரத்தை விற்றேன். அன்று முழுக்க ஆற்றங்கரை மணலில் அமர்ந்திருந்தேன். இரவில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் வெளிப்பிரகாரத்தில் படுத்துக்கொண்டேன். ஏற்கனவே அங்கு சிலர் படுத்திருந்தனர். இரவு இரண்டாம் ஆட்டம் விட்டு சிலர் வந்து இருளுக்குள் படுத்துக்கொண்டனர். ஒரு முதியவர் பெருமாளைப் பற்றிப் பேசினார். மூன்று கருவறைகளை நிரப்பியபடி மல்லாந்து படுத்திருக்கும் ஆதி கேசவன் ஒரு யுகம் முடியும்போது புரண்டு படுப்பார் என்று அக்குரல் கூறியபோது, பெரியதோர் மன அதிர்வை அடைந்தேன். அவர்கள் குறட்டைவிட ஆரம்பித்த பிறகும் நான் தூங்கவில்லை. என் மனதிற்குள் சிலவருடங்களாக எழுந்திருந்த வினாக்கள் அப்பெரும் சிலையின் பாதங்களில் மோதி நுரைத்துச் சுழிப்பதாகப் பட்டது. மறுநாள் காலையில் கிளம்பினேன். வீடு நிரந்தரமாக அந்நியமாயிற்று.
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலின் முன்னுரை இப்படித்தான் ஆரம்பிக்கிறது. முதன்முதலில் 1997ல் அகரம் வெளியீடாக இந்நாவல் வந்தது. இன்றைய பதிப்பில் இம்முன்னுரை இல்லாததற்கான காரணம் யாதோ எனக்குத் தெரியவில்லை. இந்த முதல் பத்தியைப் படித்ததும் சற்றும் தயக்கம் இன்றி நான் புத்தகத்தை வாங்கினேன். அப்போது ஜெயமோகன் பெயரைக் கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய அவர் படைப்புகளை அதிகம் வாசித்திருக்கவில்லை. அவரது ‘நாவல்’ எனும் கட்டுரையை மட்டுமே படித்திருந்தேன். அதுவே என்னை அவர்பால் ஈர்க்கப் போதுமானதாக இருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை இம்முன்னுரையை அவ்வப்போது பலமுறை வாசித்திருக்கிறேன். என்னை மிகவும் பாதித்த, எனக்கு மிகவும் பிடித்த, என்னைக் கவர்ந்த முன்னுரை என்று இதையே சொல்ல முடியும். வாழ்வின் அப்போதைய காலகட்டத்தில் என் மனதில் இருந்த உள்ளக் கொந்தளிப்பை இம்முன்னுரை எனக்குத் தெரியப்படுத்தியதாகவே நான் உணர்ந்தேன். இதன் வரிகள் எனக்கு மனப்பாடமாகிவிட்டிருக்கின்றன. எனவே என் எழுத்துக்களில் இப்போதும் அதன் தாக்கம் இருந்துகொண்டே இருப்பதை நான் உணரவே செய்கிறேன்.
மூன்றரை வருட நாடோடி வாழ்வில் என் தவிப்புகளுக்கு இணையாகவே அப்படிமமும் என்னைத் தொடர்ந்து வந்தது. அதை உடைத்து அறியவேண்டுனெனும் தவிப்பு. அதற்குரிய உபகரணங்கள் இல்லாத மொண்ணை மனதின் ஆற்றாமை. 1984ல் காசர்கோட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். தினக்கூலி வேலை. தோன்றும் போதெல்லாம் கட்டின்றி அலைதல். பெற்றோரின் அவமரணம். மனப்பிறழ்வுகளும் இலட்சியக் கனவுகளும் மாறிமாறி வதைத்த பிராயம் அது. பின்பு சுந்தர ராமசாமியைச் சந்தித்தேன். நான் எழுதலாம் என்றார் அவர். எழுதுவதன் மூலமே கண்டடையவும் முடியும் என அறிந்தேன். இப்படிமத்தை ஒரு நாவலாக எழுதிவிடவேண்டும் என்று எண்ணினேன்.
ஆனால் இதன் கருவை கூறியபோது ராமசாமி அதிக ஆர்வம் காட்டவில்லை. விளைவாக சற்று மனச்சோர்வு ஏற்பட்டது. ஆனால் திட்டத்தை கைவிடுவதும் எனக்குச் சாத்தியமாக இல்லை. 1988ல் ஒரு நாள் அதிகாலை, தூக்கமேயில்லாத இரவுக்குப் பிறகு எழுந்து, காசர்கோட்டிலிருந்து கும்பளா என்ற சிற்றூர் வரை நடந்து சென்றேன். பசுமை மண்டிக் கிடந்த தனித்த பாதையில் மெல்ல காலையொளி பரவியது. சிறுபறவைகள் சிறகுகள் ஒளிர செடிகள் மீது படிந்தன. அசாதாரணமான மனநிறைவு ஏற்பட்டது. விஷ்ணுபுரத்தின் தெருவொன்றில் நடந்து கொண்டிருப்பது போல உணர்ந்தேன். வேறுயாருக்காக இல்லாவிடினும், எனக்காகவாவது இதை எழுதிவிடவேண்டுமென்று முடிவு செய்தேன்.
ஒரு எழுத்து உருவாவதற்கான அடிப்படை இயல்புகளை இந்தப் பகுதி புலப்படுத்துகிறது. அப்படியான ஒரு தவிப்பு, வேட்கை இருக்கும்போதுதான் ஒரு படைப்பு சிறக்கிறது. எனவே விஷ்ணுபுரம் இன்றும் கொண்டாடப்படுகிறது எனில் அதற்கு காரணமான ஆதார சுருதி இந்தத் தவிப்பும் வேட்கையும்தான். ஆயினும் வெறும் தவிப்பும், வேட்கையும், ஆவலும் போதுமானதா என்ன? அதை வெளிப்படுத்தும் ஆற்றல் இருக்கவேண்டியது அவசியம். அதற்கான தயாரிப்புகளாக ஜெயமோகன் பின்வருபவற்றை குறிப்பிடுகிறார்.
நாவலின் வடிவம் பற்றிய தேடலுடன் பேரிலக்கியங்களைக் கற்க ஆரம்பித்தேன். ஒரு பயிற்சியாக சிறுநாவல் ஒன்றையும் எழுதினேன். (ரப்பர்) 1989ல் இதன் பொதுத்தோற்றம் ஒன்று மனதில் உருவாயிற்று. விரிவாக ஆய்வுசெய்ய ஆரம்பித்தேன். காவியமரபை மலையாளம் மூலம் அறிந்து கொண்டேன். இந்திய ஞான மரபில் அறிமுகம் ஏற்கனவே இருந்தது. தாந்திரீகவியலும், சிற்பவியலும் மெதுவாக என்னை உள்ளிழுத்துக் கொண்டன. 1988ல் ஜவகர்லால் நேருவின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டங்களை ஒட்டி அளிக்கப்பட்ட சலுகைகளை பயன்படுத்திக்கொண்டு இரு நீண்ட சுற்றுப் பயணங்களை நடத்தினேன். முதலில் நாற்பது நாள் குமரிமுதல் உத்தரகாசிவரை, பிறகு முப்பது நாள் அஜந்தாவும் ராஜஸ்தானும். தன்னந்தனியாக, வெறுந்தரையில் தூங்கியபடி, தரும உணவுகளை உண்டு, எவ்வித திட்டங்களும் இன்றி நடத்திய அப்பயணங்கள்தான் என்னுள் உறங்கிய இப்படிமத்தை முளைக்க வைத்தன என்று படுகிறது. குறிப்பாக சாஞ்சியிலும், விதிஷாவிலும், கபிலவாஸ்துவிலும் கண்ட ததாகதரின் முகங்கள் என்னை புதிதாகப் படைத்தன. மீண்டும் மீண்டும் என் கனவுகளில் அப்பெருமுகங்கள் இருள்திரைவிலக்கி வருகின்றன. 1991 1992கள் பௌத்த தரிசனங்களைப் பயில்வதில் போயிற்று. 1993ல் வைணவ ஆலயங்களைச் சுற்றிப் பார்த்தேன்.
1991ல் அருண்மொழியை மணம் புரிந்து கொண்டேன். தேனிலவு நாட்களில் பெரும்பாலும் இந்நூலைப்பற்றியே பேசுவேன். என் நடை போதிய அளவு தயாராகிவிட்டது என்பதை ‘திசைகளின் நடுவே’ மூலம் அறிந்தேன். 1991 டிசம்பர் 23ம் தேதி, மழை பெய்து கொண்டிருந்த இனிய மாலையொன்றில், திடீர் உத்வேகத்திற்கு ஆளாகி இதன் முதல் அத்தியாயத்தை (முதற்பகுதியின் தோற்றுவாய்) எழுதினேன். அதுவரை அந்த மையப்படிமமன்றி வேறெதுவும் என்னிடமிருக்கவில்லை. எழுத எழுத காலமும், இடமும், கதாபாத்திரங்களும் அந்தந்த கணங்களில் பிறந்து வந்தன. 1996 ஏப்ரலில் நாவலை முடிக்கும்போதுதான் இதன் வடிவம் எனக்குத் தெளிவாகியது.
ஜெயமோகனின் இந்த தீவிர முயற்சிகள் அவர் தன் எழுத்துகளுக்காக மேற்கொள்ளும் கவனத்தையும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. தற்போது அவர் எழுதிக் கொண்டிருக்கும் வெண்முரசுக்கு அவர் இதைவிட அதிகமான ஆராய்ச்சிகளையும், வாசிப்பையும் மேற்கொண்டிருப்பார் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு படைப்பிற்குப் பின்னிருக்கும் எழுத்தாளனின் இத்தைகய அர்ப்பணிப்பு உணர்வும் உழைப்புமே ஒரு படைப்பை உயர்த்துகிறது; அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. அவன் படைப்பை வாசித்த பிறகு அதை நாம் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் பெரும் படைப்புக்கு பின்னாலிருக்கும் எழுத்தாளனின் உழைப்பையும், இத்தகைய மனோபாவத்தையும் நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய முயற்சிகளும் உழைப்பும் மனோபாவமும் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன் தன் படைப்பை பிறர் நிராகரிக்க முடியாதபடியே படைத்திருப்பான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அதைக் கண்டு கொள்ளும் கவனமும், அக்கறையும், ஆற்றலும் வாசகனுக்கு இருப்பது அவசியம்.

ஒரு படைப்பை எழுதி முடித்த பின்னர் எழுத்தாளன் பெரும் மனநிலை என்ன? அவன் எண்ணியிருந்தபடிதான் படைப்பு வந்திதிருக்கிறதா? என்பது முக்கியமானது. எழுத்தாளன் படைப்பை எழுத எழுத அவன் ஆழ்மன இயக்கத்தையும் மீறி அவன் மீது புறச்சக்தி ஒன்றின் தாக்கம் இருப்பது நிதர்சனமானது. எழுத்தாளனையும் மீறி படைப்பை இதுவே வழிநடத்துகிறது. இதை ‘படைப்பின் தருணம்’ எனலாம். எழுத்தாளன் இல்லாமலாகி எழுத்து மட்டுமே உருவாகும் தருணம் இது. இத்தகைய தருணம் ஒரு படைபின் ஆக்கத்தில் நிகழும்போதுதான் ஒரு படைப்பு சிறக்கிறது; சிலாகிக்கப்படுகிறது. தற்போது ஜெயமோகன் எழுதிய நீலம் மலர்ந்த நாட்கள் கட்டுரையில் இதை நாம் காணலாம். எனவேதான் நீலம் அனைவராலும் கொண்டாடத் தக்கதாக அமைந்துவிட்டிருக்கிறது. விஷ்ணுபுரம் நாவலை எழுதியதைப் பற்றி சொன்ன ஜெயமோகன் நாவலை முடித்த பிறகான தன் எண்ணங்கள இவ்வாறு குறிப்பிடுகிறார்.
தீவிரமான இந்த பயணம் நான் எண்ணியிருந்தபடி இறுதி விடைகளை நோக்கி என்னைக் கொண்டு செல்லவில்லை. நான் சற்றும் விரும்பாததொரு நாஸ்திகத்தன்மை இப்படைப்புக்கு வந்துவிட்டதோ என்றும் சஞ்சலம் கொண்டிருந்தேன். இதை பிரசுரிப்பது பற்றிக்கூட தயக்கம் ஏற்பட்டது. பிறகு படிக்கும்போது எனது தருக்கங்களை மீறி, என் ஆழ்மன இயக்கம் இதில் பதிவாகியிருப்பதை உணர்ந்தேன். ஒவ்வொரு வாசிப்பிலும் என்னை எனக்கு கற்பிப்பதாகவே இப்படைப்பு உள்ளது. அப்படியே வாசகர்களுக்கும் இருக்கக் கூடும்.
வாழ்வைச் சித்தரிப்பதல்ல இந்நாவல். அதன் அடிப்படைகளை ஆராய்வது. அத்தகைய தேடல் கொண்டவர்களே இதன் வாசகர்கள். நாவலில் இருந்து மேலும் விரிவடையக் கூடிய திறன் கொண்டவர்களே அவர்கள். நாவலை தங்களை நோக்கி சுருக்கிக் கொள்ளும் வாசகர்களை நோக்கி இது தன் வாசல்களை மூடிக்கொள்ளும். துரதிர்ஷ்டவசமாக அரசியல் கோட்பாடுகள் சார்ந்த எளிமைப் படுத்தல்கள் இங்கு இரண்டாம் வகை வாசகர்களையே உருவாக்கியுள்ளன. எந்தப் படைப்பின் முகப்பிலும் எழுத்தாளனின் மௌன வேண்டுகோள் ஒன்று உள்ளது –‘தயவு செய்து கவனமாகப் படியுங்கள்’. அதை மன்றாடலாக முன்வைக்கவேண்டிய சூழலே நமக்குள்ளது.
அவரது அந்த மன்றாடல் அவரது படைப்பை பொருத்த மட்டில் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. படைப்பை நோக்கி தங்களை விரித்துக்கொள்ளும் திறன் கொண்டவர்கள் மட்டுமே அவரை நெருங்குகிறார்கள். மற்றவர்கள் விலகி நின்று அதையும் இதையம் சொல்லி புலம்பித் திரிகிறார்கள். அவர்கள் படைப்பை தங்களை நோக்கி சுருக்கிக்கொள்ளும் பேதைகள் என்பதில் சந்தேகமில்லை. சுந்தர ராமசாமி கருத்தரங்கு ஒன்றில் பேசியபோது, “என் விமர்சனக் கருத்துகளை என் வாசகன் சரிவரப் புரிந்துகொள்கிற போது அவனிடமிருந்து முதல் ஆபத்து எனக்கு வருகிறது... என்னை நிராகரிக்க நான் அவனுக்குக் கற்றுத் தந்து நான் எழுதவிருக்கும் படைப்புகள் மூலம் என்னை அவனால் நிராகரிக்க முடியாமல் ஆக்குவதே நான் ஏற்றுக்கொண்டிருக்கும் சவால்” என்று சொல்கிறார். இப்படி தன் படைப்புகளை நிராகரிக்க முடியாமல் ஜெயமோகன் செய்துவருவதே அவர் மீது சிலர் எரிச்சலும் காழ்புணர்வும் கொள்ளக் காரணம் என்று தோன்றுகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...