November 14, 2014

சுயரூபம் -கு.அழகிரிசாமி: ஈயென இரத்தல் இழிந்தன்று...

தமிழ் சிறுகதையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் கு.அழகிரிசாமி. ஜாலங்களும், உத்திகளும், பகட்டும், ஆரவாரமும் இன்றி எளிமையான நடையில், இயல்பான போக்கில் மனிதர்களின் மனத்தை திறம்படச் சொன்னவர் அவரைத் தவிர வேறொருவர் இல்லை. மனித மனத்தை அருகே நெருங்கியும், தூரமாக விலகியும் நின்று ஒருசேர பார்க்கும் வல்லமை அவர் கதைகளுக்கு உண்டு. கதைகளில் விலகி நிற்கும்போது பிறரையும், நெருங்கி வரும்போது நம்மையும் நாம் அடையாளம் காண்பதாகவே அவர் கதைகள் இருக்கும். 1970-ல் சிறுகதைக்காக முதன் முதலில் சாகித்திய அக்காதமி விருது (அன்பளிப்பு சிறுகதை தொகுப்பு) பெற்றவர் அவரே என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகே தி.ஜானகிராமன் சக்தி வைத்தியம் எனும் சிறுகதைத் தொகுப்புக்கு 1979-ல் விருது பெற்றார்.

கதை கிராமத்தில் தொடங்குகிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பழம்பெருமை உண்டு என்பதாகக் கதை தொடங்கும் போதே, பழம்பெருமையைச் சம்பந்தப்படுத்தும் ஒரு கதை என்பதை நாம் உணர்ந்துகொள்கிறோம். வீரப்பத் தேவரின் பேரன் மாடசாமித் தேவர், வீரப்பத் தேவரின் பெருமையாக மட்டுமின்றி தன் பரம்பரையின் பெருமையாகவே சொல்லித் திரிவது, கல்யாணம் ஒன்றில் அவர் தாத்தா கோபப்பட்டு சாப்பிடாது வந்துவிட்டதைச் சொல்வதுதான். அதை அழகிரிசாமி தனக்கேயான நகைச்சுவையோடு, ‘அவளுடைய மூத்த மகன் கல்யாணத்தின் போது யார் யாரோ தாங்கியும் கட்டாயப்படுத்தியும் அழுதும் இன்னும் என்ன என்ன விதமாகவோ கும்பிட்டுக் கூத்தாடியும் கை நனைக்காமலே (சாப்பிடாமலே) வந்துவிட்ட வைராக்கியத்தையும் மாடசாமித் தேவர் தம் வாழ்நாளில் சந்தித்த ஒவ்வோர் இரண்டு கால் பிறவியிடத்திலும் சொல்லிப் பெருமைப்பட்டிருக்கிறார்’ என்று கிண்டல் தொனிக்கும் விதமாகச் சொல்கிறார். அத்தகைய பரம்பரை இன்றிருக்கும் நிலையை கதையின் முதல் பத்தியிலேயே, ‘அந்தக் கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் ‘உண்டு’ என்று சொல்லுவதற்கு அந்தப் பழம்பெருமை ஒன்றுதான் மிஞ்சியிருந்தது’ எனும் வரிகளிலும், கொடுத்த கடனைப் பலமுறைக் கேட்டும் கொடுக்க முடியாத மாடசாமித் தேவரின் நிலைமையை கதாசிரியர் சொல்வதிலும் நாம் உணர்ந்து கொள்கிறோம்.

இருபது வருஷங்களாக அந்தக் கிராமத்து புளியமரத்தடியில் இருக்கும் முருகேச பிள்ளையின் பலகாரக்கடைக்கு ஏதாவது கடனாகச் சாப்பிடலாம் என்று போகிறார் தேவர். எடுத்தவுடன் அவ்வளவு சுலபமாகக் கடனாகப் பெற்றுவிட முடியுமா என்ன? அவருக்கு ஏற்றாற் போல தாஜாவாக, நைச்சியமாகப் பேசி பிள்ளையின் கவனத்தை தன் பக்கம் திருப்ப முயற்சிக்கிறார் தேவர். அதற்காக அவர் செய்யும் முயற்சிகளை, மனித மனத்தின் நுட்பத்தை அறிந்தவராக அழகிரிசாமி அற்புதமாக விவரிக்கிறார். இரண்டு முறை கேட்பதற்கு வாய்வரை வந்துவிட்டு, பின்னர் தயக்கத்தால் தன்னைப் பின்னிழுத்துக் கொள்ளும் தேவரின் மனவோட்டம் வாயிலாக பசி மனிதனை எந்த நிலைக்கும் தள்ளிவிடும் அவலம் நமக்கு உறைக்கிறது. ’அற்பப் பய’லுக்கு அனுதாபம் காட்டுவது தேவருக்கும், ‘வெறும் பயல்’ அனுதாபம் காட்டுவது பிள்ளைக்கும் அடியோடு பிடிக்கவில்லை எனும் வரிகள் மூலம் இருவரின் மன இயல்புகளையும் மிகத்துல்லியமாக விளங்கச் செய்திருக்கிறார் அழகிரிசாமி.

பசி என்பது தனிப்பட்ட ஒர் உணர்வு. அதில் பிறருக்கு எந்த அக்கறையும், அனுதாபமும் இருக்ககாது; இருக்கவும் முடியாது. அதனால்தான் பாரதி, ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்கிறான். ஒரு குடும்பத்திற்கு அல்லது இருவருக்கு என்றுகூட பாரதி சொல்லவில்லை. பிள்ளை ஒரு வார்த்தையும் கேட்காது, ஒரு மனிதன் பக்கத்தில் அமர்ந்திருக்கிறானே என்கிற உணர்வும் இல்லாது தனது மதிய உணவை சாப்பிடுவது இதையே புலப்படுத்துகிறது. காலையிலிருந்து ஒரு வாய் உணவுக்காக அமர்ந்திருக்கும் தேவரின் மனநிலையும், உடல்நிலையும், இயலாமையும் நம் மனதை இளகச் செய்கிறது. அதனால்தான் பிரபஞ்சன் ‘தமிழச் சிறுகதையின் தரத்தை இந்திய அளவுக்கு உயர்த்திய அழகிரிசாமியின் அமரத்துவம் பொருந்திய சிறுகதைகளுள் ஒன்று சுயரூபம். பசி, அதன் அரக்க முகத்தை, மனிதர்களின் கையாலாகாத நிர்க்கதி நிலையை அருமையாக மனம் துடிக்கத் துடிக்கச் சொன்ன இத்தரத்துக் கதைகள் தமிழில் வெகு சொற்பமாகத்தான் இருக்க முடியும்’ என்கிறார்.

பிள்ளை கடையச் சாத்திவிட்டு, வீட்டிற்குச் செல்லும்போது, மிஞ்சிய பலகாரங்களை எடுத்துச் செல்கிறார். அன்று வியபாரம் சுமார்தான். ‘அந்த விடியாமூஞ்சி வந்து சனீசுவரன் மாதிரி கடைவாசலில் உட்கார்ந்திருந்தா யாவாரம் எங்கே ஆகும்?’ என்று தேவரை நினைத்து பிள்ளை முணு முணுத்துக் கொள்கிறார். இனியும் கேட்காதிருந்தால் எதுவும் நடக்காது என்றுணர்ந்த தேவர், மிஞ்சிய இட்லியைக் கடனாகக் கேட்கிறார். ‘இதுக்குத்தான் நீர் இவ்வளவு நேரமும் வலைவீசினீரா?’ என்று தேவரை ஏளனமாகப் பார்க்கிறார் பிள்ளை. பசியின் கொடுமை அனைத்தையும் பொறுத்துக்கொள்ள வைக்கிறது. ‘பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்’ எனும் பழமொழியின் தீவிரத்தையும், தாக்கத்தையும் கதையின் இந்தக் கட்டத்தில் உணர்கிறோம். பழமொழிகள் மனிதவாழ்வின் அனுபவங்களின் வெளிப்பாடு என்பது எவ்வளவு சத்தியமானது.

தேவர் வெட்கத்தையும் தயக்கத்தையும் தள்ளிவிட்டு, ‘கோவிச்சுக்காதீங்க. நான் இப்படியெல்லாம் கேக்கிறவனில்லே, ஏதோ இண்ணைக்குக் கேக்கிறேன். என் பாட்டன் பூட்டன் காலத்திலே கூட இப்படி எங்க குடும்பத்திலே யாரும் கெஞ்சினது கிடையாது. எங்க பாட்டனாரு, ஒரு கோவத்திலே சொந்தத் தங்கச்சி வீட்டிலே கூடச் சாப்பிடமாட்டேன்னு வந்தவரு...’ என்று பிள்ளையிடம் தஞ்சம் அடைகிறார். கெஞ்சுகிறவனிடம் மிஞ்சுவதும், அவமதிப்பதும்தானே மனிதனின் ஆதார விலங்கு குணம். ‘ஐயா நீர் பொழைச்ச பொழைப்பும், ஒம்ம பாட்டன் பொழைச்ச பொழைப்பும் எனக்குத் தெரியும். சும்மா ஆளைப் போட்டு பிடுங்காதீங்க’ என்று தேவரைச் துச்சமாக மதித்துப் பேசுகிறார் பிள்ளையவர்கள்.

தேவருக்கு தன் பரம்பரையை பேசியதால் கோபம் வருகிறது. பேச்சு கைகலப்பில் முடிகிறது. பசியால் வாடும் தேவரின் இயலாமை அந்தக் கைகலப்பில் வெளிப்படுகிறது. இருந்தாலும், அப்போதும் கூட அவர் பசியில் மயங்கியவராக, நம்பிக்கை இழக்காதவராக, ‘இன்னுமா மனசு எரங்கலை’ என்று மன்னிப்பையும், இட்லியையையும் ஒருசேரக் கேட்கிறார். ‘இந்தா, திண்ணுத் தொலை. இப்படி மானங்கெட்ட தீனி திண்ணு உடம்பை வளக்கலேன்னா என்னவாம்?’ என்று பிள்ளை இட்லியைக் கொடுக்கிறார். தேவருக்கு ‘இந்தப் பயகிட்ட நான் பிச்சை வாங்கித் திங்கவா?’ எனக் கோபம் தலைகாட்ட மீண்டும் மோதல் நிகழ்கிறது. பாவம் அவரிடம் மோதுவதற்கு சக்தி ஏது? தேவரை தள்ளிவிட்டு எச்சரித்துச் செல்கிறார் பிள்ளை. கீழே விழுந்து கிடக்கும் தேவருக்கு அவமானமும் பயமும் மனதைக் கௌவிப் பிடிக்கிறது. இருந்தும், ‘இந்த அற்பப் பயல் யாசகமாகக் கொடுத்த இட்டிலியை வாங்கி நாய்த் தீனி தின்னாமல் இருந்தோமே, இந்தக் கடும்பசியிலும்-அது போதும்; மற்றக் கேவலம் எது வந்தாலும் வரட்டும்’ என்று ஆறுதலடைகிறார்.

கதையின் கடைசி கட்டத்தில் வெளிப்படும் தேவரின் செயலுக்குக் காரணமான ஆழ்மனத்தின் சூட்சுமத்தை மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார் அழகிரிசாமி. இயலாமையில் இரப்பதும், இரப்பதை நினைத்து வருந்தி வேண்டாம் என உதறுவதும், உதறியபின் மீண்டும் இரஞ்சுவதும், அதன் பிறகு வீம்பாக மறுப்பதுமானவை கதையின் உச்சம் எனலாம். மனித மனம் அப்படியும் இப்படியும் கடிகாரத்தின் பெண்டுலமாக அலைவது வெகு இயல்பாக இத்தருணத்தில் நிகழ்கிறது. மனிதன் இரண்டு முனைகளில் ஒன்றின் பக்கமாகச் சாய்வதே, சக்தியைத் திரட்டிக்கொண்டு, மீண்டும் மறு முனைக்குச் செல்வதற்குத்தான் என்பார் ஓஷோ. பிள்ளையிடம் வாங்கிச் சாப்பிடாதது குறித்து, ‘தமக்குத்தாமே ஆறுதல் தேடிக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி வீட்டை நோக்கி நடந்து வந்தார் மாடசாமித் தேவர்’ என்று முடியும் கதையின் இறுதி வரிகளில் வெளிப்படும் சாப்பிடாமல் போனதால் கிடைத்த ஏமாற்றத்தின் தொனியும் இதில் சேர்ந்ததே. 

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.

கழைதின் யானையார் என்ற புலவர் பாடிய இந்தப் புறநானூற்றுப் பாடல் இதையே வேறோர் வகையில் தெரியப்படுத்துகிறது. கேட்டும் கொடுக்காதிருப்பது இழிந்தது எனில் கொடுத்தும் ஏற்காதிருப்பது அதைவிட உயர்ந்தது என்கிறார் அவர். இந்தக் கதையில் எது இழிந்தது, எது உயர்ந்தது என்பதையே அழகிரிசாமி தனக்கேயான இலக்கியத் திறனோடு வெளிப்படுத்தியுள்ளார். தேவர், பிள்ளை போன்ற இரண்டு வகையான இயல்புடைய மனிதர்கள் இந்த உலகத்தில் எப்போதும் இருக்கவே செய்கிறார்கள். மனிதர்களிடையே இப்படியான வேறுபாட்டை ஏற்படுத்துவது எது? என்ற கேள்விக்கான பதிலில்தான் வாழ்க்கையின் தேடல் இருக்கிறது.

‘மனிதனின் அடையாளம் என்பது என்ன? அவனது குணமா? அவன் சேர்த்துவைத்திருக்கும் பணமா? அவன் வாழும் விதமா? அல்லது அவன் பிறந்த சாதியா? மாடசாமித் தேவரின் நெஞ்சில் இரண்டு உணர்வுகள் விஸ்வரூபம் கொள்கின்றன. ஒன்று பசி என்னும் உணர்வு. இன்னொன்று சாதி என்னும் உணர்வு. இரண்டு விஸ்வரூப கோலங்களும் ஒரே ஆளின் நெஞ்சில் எழுச்சி கொள்கின்றன என்பதுதான் முக்கியமான புள்ளி. ஒன்றையொன்று வெல்லத் துடித்து, இறுதியில் சாதியின் விஸ்வரூபம் வெற்றிபெறுகிறது. மனிதன் சாதியால் கட்டமைக்கப்பட்ட ஒரு விலங்கு என்பதுதான் சுயரூபம்’ என்கிறார் பாவண்ணன். சாதி என்ற சுயரூபமல்ல அங்கே வெளிப்படுவது, மாறாக தன் சுயத்தின் மீது மனிதனுக்கு இருக்கும் அடிப்படை உணர்வும் பற்றுதலுமே அங்கே வெளிப்படுகிறது. தி.ஜாவின் ‘பரதேசி வந்தான்’ கதையிலும், நாஞ்சில் நாடனின் ‘விரதம்’ கதையிலும்கூட வெளிப்படுவது இதுதான். பசியா அல்லது சுயமா (தன்மானமா) என இரண்டுக்குமிடையே மாறிமாறி தத்தளிப்பது அழகிரிசாமியின் இந்தக் கதையில்தான் அழகாக வெளிப்பட்டிருக்கிறது.

மனிதனை வாட்டும் பசியுணர்வை அடிப்படையாகக் கொண்டு மிக யதார்த்தமாகவும், எளிமையாகவும், அதேசமயம் சிறுகதையின் முழு வீச்சுடன் புனையப்பட்ட சுயரூபம் கதையை ஆகச்சிறந்தது எனலாம். மனித மனம் எப்போதும் இரட்டைகளில் (பகல்-இரவு, கோபம்-சாந்தம்) அல்லாடிக் கொண்டிருப்பதே அதன் சுயரூபம். அது நிலையாக ஒன்றில் நிலைத்திருக்காது ஊசலாட்டத்தில் இருக்கும் தன்மை உடையது. அதன் அந்த குணத்தையே மிக இலாவகமாக அழகிரிசாமி இந்தக் கதையில் படம் பிடிக்கிறார். கதையிலிருந்து ‘வேண்டாம்’ என்று எதையும் நீக்கமுடியாதபடி கதை கச்சித வடிவம் பெற்று சிறப்பாக வந்திருப்பதை முக்கியமாக குறிப்பிடவேண்டியது அவசியம்.

Related Posts Plugin for WordPress, Blogger...