ஜெயகாந்தன் கதைகள் ஆ.வி. வடிவத்தில்!

1960-70களில் ஜெயகாந்தன் எழுதிய கதைகள் சிலவற்றை விகடன் பிரசுரம் ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளது. ஆனந்த விகடனில் வெளியான அதே வடிவத்தில் இக்கதைகளை வடிவமைத்திருப்பதோடு, ஓவியர்கள் கோபுலு, மாயா இருவரும் அப்போது வரைந்த அதே படங்களுடன் இத்தொகுப்பு அமைந்துள்ளது. பெரியார் எழுத்துக்கு முந்தைய எழுத்து வடிவமே இத்தொகுப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. பழைய ஆனந்த விகடன் இதழ்களைப் புரட்டும் அலாதியான ஓர் உணர்வு இத்தொகுப்பை படிக்கையில் நம்முடைய மனதை நிறைக்கிறது. கெட்டி அட்டையுடன் கிரௌன் வடிவத்தில் 370 பக்கமுள்ள இப்புத்தகத்தின் விலை ரூபாய் 350 என்பது சற்றே கூடுதல் என்றாலும், இது ஜெயகாந்தன் எழுத்தின் சிறப்பையும் செல்வாக்கையும் வெளிப்படுத்துவதோடு, நம்முடைய புத்தக அலமாரிக்கும் பெருமை சேர்க்கிறது.

இத்தொகுப்பைக் குறித்து ஜெயகாந்தன் சொல்வது:

1960, 70களில் நான் எழுதிய குறுநாவல்கள், சிறுகதைகள், பேட்டிக் கட்டுரைகள் ஆகியவற்றில் சில படைப்புகளை அப்படியே-பிறந்த மேனிக்கு, அழிவோ, மாற்றமோ இல்லாமல்-வாசகர்களுக்குத் தரவேண்டும் என்ற முயற்சியில் டாக்டர் ராம்-திருமதி வனிதாவின் கை வண்ணத்தில் வெளிவரும் தொகுப்பு இது.

ஓவியர்கள் கோபுலு, மாயா ஆகியோர் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கி இருக்கிறார்கள் என்பதைவிட உயிர் கொடுத்திருக்கிறார்கள் என்பதே பொருத்தம்.

இதிலுள்ள நயங்களை நான் திரும்பவும் சொல்லப் போவதில்லை. இவற்றை எழுதியவனையும் வாசகர்களையும் இவற்றை எழுதிய காலத்துக்கே அழைத்துச் செல்வது இதன் சிறப்பு அம்சம்!

தமிழுக்கு இந்த முயற்சி புதுமையானது. எழுத்துச் சீர்திருத்தம், வடிவ அமைப்பு இவை எல்லாம் இந்த எழுத்துக்கள் வெளிவந்த காலத்தில் இல்லை. அதேபோல் வடிவமைப்பிலும் எழுத்துச் சீர்திருத்தத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இதில் நேராமல் இருப்பது இந்த ஆக்கத்தின் நேர்மையைக் காட்டுகிறது.

இந்த முயற்சி எனது பழைய வாசகர்களை அந்தந்தக் காலத்துக்கு கொண்டுபோய் நிறுத்தி, அவர்களோடு பழைய உறவைப் புதுப்பித்துக்கொள்ள முயல்கிறது. அந்த முயற்சியில் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

தொகுப்பின் இறுதியில் 10 கேள்விகளுக்கு ஜெயகாந்தன் அளித்த பதில்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றிலிருந்து சிலவற்றை வாசகர்களுக்காக இங்கே தருகிறேன்.

எழுத்துத் துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்?

நான் வரவில்லை, எங்கோ போய்க் கொண்டிருந்த வழியில் எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகளை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பியதில்லை... என்னைப் பத்திரிக்கைகள் ஆதரிக்கவில்லை என்று புலம்பியதுமில்லை. நான் கல்லூரியிலோ, உயர் நிலைப் பள்ளியிலோ படித்தவனல்ல, அங்கே எழுத்தையோ இலக்கியத்தையோ கற்பதற்கு. நான் நடைபாதையில், குழாயடியில், சில நாட்கள் வேலைக்குப் போன சிறிய தொழிற்சாலைகளில் பொதுவான நடைமுறை வாழ்க்கையில்தான் இலக்கியத்தைக் கற்றேன். பிறகு, அங்கேதான் எழுத்தும் இலக்கியங்களுமே பிறக்கின்றன என்று அறிந்தேன். அறிந்ததை-வாழ்க்கை எனக்கு அறிவித்ததை-திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். வந்தவன்தான் போவான். நான் வந்தவனும் இல்லை; போகிறவனும் இல்லை.

ஓர் எழுத்தாளன் எழுத்தை மட்டுமே நம்பிப் பிழைக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

பிழைப்பு என்றாலே ரொம்பச் சிரமமான காரியம்தான். ‘என்ன பிழைப்பு?’ என்பது அலுப்புக் குரல். இலக்கணப்படிப் பார்த்தால் பிழைப்பு என்பது குற்றம் என்று பொருள்படும். எழுத்தை வெறும் பிழைப்பாகக் கொள்வது ஒரு குற்றமே. பிழைக்க முடியுமா என்பதல்ல; கூடாது என்பது என் கொள்கை. என்னைப் பொறுத்தவரை எழுதுவதற்கு எனக்குக் காசு தருகிறார்கள். ஆனால், நான் எழுதுவதே காசுக்காக அல்ல. கல்லடி கிடைத்தாலும் நான் எழுதுவேன். எழுத்து, காசு தராவிட்டால்தான் என்ன? எழுத்து எனக்கு சீவனமல்ல; அது என் ஜீவன்!

ஜனரஞ்சகமாக எழுதக் கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஆம். ஜனங்கள் வளர்ந்து கொண்டே இருப்பவர்கள். வளர்ந்து கொண்டிருக்கும் ஒன்றின் அருகே குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிக்கு சமமாகப் போய் நின்று விட்டால், நாளைக்கு நாம் குறைந்துவிடப் போகிறோம் என்று அர்த்தம். ஜனங்களை விட்டு ஒதுங்கி விடவும் கூடாது; கலந்து விடவும் கூடாது. எப்போதும் ஓர் அடி முன்னே சென்றால்தான் ஜனங்களை இழுத்துச் செல்லவும் முடியும். அவர்கள் எதை வேகமாக விரும்பி எற்கிறார்களோ, அதை அவர்கள் அதே வேகத்தோடு வீசியும் எறிகிறார்கள். ஜனரஞ்சகம் என்ற பெயரால் என் எழுத்துக்கள் எறியப்பட வேண்டாம் என்றும் நினைக்கிறேன்.

உங்கள் மாத வருமானம் என்ன? அது போதுமானதாக இருக்கிறதா? இல்லையென்றால் பற்றாக்குறைக்கு என்ன செய்து சமாளிக்கிறீர்கள்?

வாழ்க்கை ஐம்பது ரூபாயிலும் இருக்கிறது, நூறு ரூபாயிலும், ஆயிரம் ரூபாயிலும் இருக்கத்தான் செய்கிறது. நான் வாழ்க்கை வண்டியில் எல்லா ‘கிளாஸ்’களிலும் பிரயாணம் செய்திருக்கிறேன். இன்றைக்கு எனக்கு ரூ 350-ல் தாங்குகிறது. நாளைக்கு முடியாவிட்டால் வேறு ‘கிளாஸு’க்கு இறங்கி விடுகிறேன். முடிந்தால் உயரே போவது. ஆனால், கடன் வாங்கமாட்டேன். பொருளாதார வாழ்க்கை என்பது, வாழத் தெரிந்தவர்களுக்கு ரொம்பச் சாதாரணமானது. பொருளாதார வீழ்ச்சியும் சரி, உயர்வும் சரி ஓர் எழுத்தாளனின் வீழ்ச்சியோ உயர்வோ ஆகாது. அவை யாவும் அனுபவங்கள் அல்லவா? எனக்குப் பிரச்னை, என்னுடைய ஆன்மீக வாழ்க்கையும், பிறருடைய சமூக வாழ்க்கையும்தான். பிரச்னைகளுக்குப் பற்றாக் குறை ஏது?

Related Posts Plugin for WordPress, Blogger...