மழைப்பாடலை வரவேற்பது!

மண் மீது மழை இறங்கும் தருணங்கள் எப்போதுமே அழகானது; உற்சாகத்தையும் உவகையையும் தரக்கூடியது; அலாதியானது. வெயில் எப்போதும் எரிச்சலை, கோபத்தைக் கிளப்புவது. இருந்தும் நாம் மழையை அசௌகரியமாகவும் வெயிலை சௌகரியமாகவும் கருதும் மனோபாவம் கொண்டிருக்கிறோம். ஏனெனில் நாம் காரியவாதிகள்; எப்போதும் நமக்குக் காரியங்கள் முக்கியம். காரணங்கள் காரியத்தை தடைசெய்வது நம்மில் அசௌகரியத்தை உண்டுபண்ணுகிறது. மழைக்கு ஒதுங்கும் பலரும் அந்தக் கணத்தை தங்கள் வாழ்நாளிலேயே மிக நீண்டதாகக் கருதும் அளவிற்கு மழை அவர்களைப் பாடாய்படுத்துகிறது. எனவே மழையின் உண்மையான ரசிகர்கள் சிறு குழந்தைகளே. அவர்கள் இயல்பாகவே மழையை மிகவிரும்புகிறார்கள்; ரசிக்கிறார்கள். ஆனால் பெரியவர்களாகிய நாம்தான் அவர்களைத் தடுக்கிறோம்; 144 உத்தரவு போடுகிறோம். ‘வெளியே போகாதே, நனையாதே!’ என்று எத்தனை கட்டளைகள். ‘காய்ச்சல் வரும், சளி பிடிக்கும்!’ என்று எத்தனை எச்சரிக்கைகள். அவர்களும் வளரவளர இதே மனநிலையைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள்.

மழையின் குளிர்ச்சி, சில்லென்ற காற்று, அவை தருகின்ற கதகதப்பான வெம்மை, அவற்றால் மனதுக்குக் கிடைக்கும் புத்துணர்ச்சி, குதூகலம் இப்படி மழையின் குணங்கள் எண்ணற்றவை. வானும் மண்ணும் இணைந்து இப்பிரபஞ்ச வெளியில் அரங்கேற்றும் ஒளி-ஒலியின் அற்புதப் படக்காட்சி விந்தையிலும் விந்தையானது. கும்மிருட்டில், மழை சடசடவென் மண்ணில் இறங்கி மண்வாசனை கிளப்ப, வானம் இடையிடை இடியெனும் வாத்தியத்தை இசைக்க, வானில் மின்னல் வானமகளாய் நாட்டியமிட, மழை ஓசை நம் செவிகளில் ஒலிக்க, மெழுவர்த்தி ஒளியில் புத்தகம் வாசிப்பது சுகமானது. அப்போது ஆவி பறக்கும் சூட்டில் காபி அருந்தியபடி நம் சிந்தனையைக் கிளரிய புத்தகத்தின் வரிகளை, சாரலடிக்கும் ஜன்னலின் வழியே கறுத்துத் தெரியும் வானத்தை ஏறிட்டபடி, அசைபோடுவதற்கு ஈடுஇணை இன்பம் ஏதுமில்லைதான்.

ஒரு படைப்பாளியின் எழுத்துக்கு உற்சாகத்தைக் கொடுப்பவை மழை பற்றிய சித்திரிப்புகள் எனலாம். அதனால்தான் வாசகனும் அதே அளவிலான உற்சாகத்தை வாசிக்கும்போது அடைய முடிகிறது. மழையைப் பற்றிய வாசிப்பு நமக்கு நிஜ மழை அனுபவத்தை ஞபாகப்படுத்துவதும், நிஜ மழை அனுபவம் மழையை பற்றிய வாசிப்பை நினைவுறுத்துவதும் எப்போதும் நடக்கக்கூடியது. மனம் இயல்பாகவே மழையை வரவேற்பினும், அதில் நேரடியாகப் பங்குகொள்ள பலவும் நமக்குத் தடையாகிறது. எனவேதான் மழையைப் பற்றிய வாசிப்பு நம்மில் மனவெழுச்சியை, உற்சாகத்தை, மகிழ்ச்சியைக் கொண்டு சேர்க்கிறது. நேரில் காணமுடியாததை கற்பனையில் காணும் சாத்தியத்தை வாசிப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வனிலிருந்து இதுவரை வாசிப்பில் உணர்ந்த மழைத் தருணங்கள்தான் எத்தனை எத்தனை! ஆயினும் அவற்றில் மனதில் எப்போதும் நிலைத்திருப்பவற்றை, மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை கொடுத்தவற்றை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவை அனைத்திலும் ஜெயமோகன் மழைப்பாடல் காட்டும் மழைத்தருணங்கள் முதன்மையானது.

தோட்டியின் மகன் நாவலின் முன்னுரையில் சுந்தர ராமசாமி, “மாலையில், இருள் கவியும் நேரத்தில், மலையடிவாரத்தில், காய்ந்து வெடித்துக் கிடக்கும் வயல்வெளிகளின் ஓரத்தில், ஓர் ஒற்றையடிப் பாதை வழியாக நான் தன்னந்தனியே நடந்து போய்க்கொண்டிருப்பேன். வளைந்த முதுகுடனும் குனிந்த தலையுடனும். அந்தச் சித்திரத்தில் வேட்டியின் விளிம்பு பறக்க நான் விடாமல் நடந்து கொண்டிருந்தாலும் என் பக்கத்தில் நின்ற தென்னை மரம் அதே இடத்தில் இருந்துகொண்டிருந்தது ஒரு முரண்பாடாகவே இருந்ததில்லை” என்று குறிப்பிடுவார். மழைப்பாடல் வாசித்த பின்னரும் அது மனதில் இருந்துகொண்டே இருக்கிறது அந்த தென்னை மரம் போல.

அரும்புகள் முழுக்க விரிந்த
கரிய கால் கொண்ட
வேங்கை மரத்தில்
வண்டுகள் ரீங்கரிக்கின்ற,
மலைச்சரிவுகள் எதிரொலிக்க
யானை மத்தகம் பிளந்து
சிம்மம் உலவுகின்ற,
மாமலையின் அதிபன் வருவதைச் சொல்ல
பெருங்கடல் நீர் அள்ளி,
நீலமணியருவியென
மண் நிறைத்து ஒழுகி,
மலை கண்ணிமைப்பதுபோல
மின்னல் ஒளிர
இடிமேளம் முழங்க
வரும் இந்த மழையை
எப்படி வரவேற்பது தோழி!

என்பதாக நற்றிணையின் மழைக்காட்சி ஒன்றினை சங்கச் சித்திரங்களில் கவிதைப் படுத்தும் ஜெயமோகன், ‘எத்தனை வகையான மழை, இந்த ஒரே கவிதைக்குள்! முதலில் கரிய வேங்கை மரத்தில் வண்டுகள் மொய்ப்பது போல ரீங்கரிக்கும் இளம் மழை. பின்பு மலைச்சரிவுகள் அதிரும் யானைப் பிளிறல் போன்ற பெருமழை. கடல் முழுக்கக் குடித்து உமிழும் மழை. மண்ணை மூடும் நீலமணி அருவி. இடிநாதம் சேவை செய்ய ஊர்வலம் வரும் மழை’ என வியக்கிறார். அவரது மழைப்பாடலும் அவ்வாறாகவே பல வடிவங்களைத் தன்னகத்தே கொண்டு நம்மைக் கவர்வதாக, திகைக்க வைப்பதாக, உற்சாகம் தருவதாக, பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது. அதை எப்படி வரவேற்பது என்று தெரியாமல்தான் நாம் பலவும் எழுதுகிறோம்; பேசுகிறோம். மழையை வரவேற்பதற்கு அதில் நனைவதைத் தவிரவும் சிறந்த வழியில்லை என்பதுபோலவே மழைப்பாடலை வரவேற்க, அதன் வாசிப்பில் நனைவதைவிடவும் சிறந்த வழி வேறேன்ன இருக்கக்கூடும்?

Related Posts Plugin for WordPress, Blogger...