ஜெயமோகனின் மழைப்பாடல்-4: பிறவிப் பெருமழை

துரியோதனன், காந்தாரியின் வயிற்றில் கருவாக நுழையும்போதே, பல்வேறு துர்ச்சகுனங்கள் தோன்றுகின்றன. பூமியில் நிகழும் உற்பாதங்கள் அனைத்தையும் மனிதர்கள் அறிவதற்கு முன்னரே விலங்குகள், தங்களது புலன்களின் கூர்மையால், உள்ளுணர்வுகளின் ஒருங்கிணைப்பால் எளிதாக அறிந்துகொள்கிறது. அதன் பிறகே மனிதர்கள் அறியவும் உணரவும் முடிகிறது. ஆறறிவு ஐந்தறிவுக்கு இடையேயுள்ள மிகப்பெரிய வேறுபாடு அல்லது குறை என்றே இதைச் சொல்லலாம். ஜெயமோகன் கைவண்ணத்தில் மழைப்பாடலில் இவைகள் அற்புதமான கற்பனை வீச்சுடன் விரிந்திருக்கின்றன. சகுனி கரிய ஓர் உருவத்துடன சதுரங்கம் ஆடுவது, Ingmer Bergmen திரைப்படமான The Seventh Seal-ல் அதன் நாயகன் மரணத்துடன் சதுரங்கம் ஆடும் காட்சியை நினைவில் கொண்டுவருகிறது. உண்மையில் பாண்டவர்களுக்கு எதிரி துரியோதனன் அல்ல மாறாக சகுனியும் காந்தாரியுமே என்பதை, துரியோதனன் வெறும் கருவி மட்டும்தான் என்பதை அந்தக் காட்சியை வாசிக்கும் தருணத்தில் உய்த்துணர்கிறோம்.

காட்டில் வசிக்கும் பாண்டுவின் மனம் இதுவரை இல்லாத இன்பத்தில் திளைக்கிறது. அமைதியான வனவாழ்க்கை அவனை துறவியாகவே மாற்றிவிடுகிறது. குந்தியின் மனம் மட்டும் காட்டு வாழ்வில் லயிக்காதிருக்கிறது. கைலாய மலைக்குச் செல்ல விரும்பும் பாண்டு, மைந்தன் ஒருவன் நீர்க்கடன் செய்வித்த பின்னரே மலை ஏறமுடியும் என்றுகூறி கௌதமர் தடுத்துவிட, மனமுடைந்தவனாக தன் பிறவியை சபித்துக்கொள்கிறான். அதுதான் சமயமென குந்தி தனக்கு ஏற்கனவே ஒரு மைந்தன் இருப்பதைச் சொல்கிறாள். தருமதேவனை வரவழைத்து அதே போன்று ஒரு குழந்தையைப் பெறச் சொல்கிறான் பாண்டு. இந்த இடத்தில் பணிப்பெண் அனகை மைந்தர்கள் எத்தனை வகை என்பதைச் சொல்லிச் செல்வது நம்மைத் திகைப்பில் ஆழ்த்தக்கூடியது.

இந்த இரு கருவும் உருவாவதற்கிடையே உள்ள பலவும் நாம் கவனிக்கத்தக்கது. சகுனியின் உள்ளத்தில் உறையும் தீய சிந்தனைகளே தீய சக்திகளைத் திரளச்செய்து, காந்தாரியின் வயிற்றில் கருவாக உருவாகிறது. தீய சக்திகள் எப்போதும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஊடகத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. எனவே அத்தகைய மனமுள்ளவர்கள் கிடைக்கும்போது அவர்களுக்குள் ஏதோ ஒருவிதத்தில் எண்ணமாக, செயலாக புகுந்துகொள்கிறது. குந்தியோ தருமதேவனை வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்ட பிறகே கரு அவளில் நுழைகிறது. தருமனின் கரு பாண்டுவின் நீர்க்கடன் செய்யும் விருப்பாலும், துரியோதனன் கரு பேராசையின், ஆணவத்தின் விருப்பாலும் உருவாகிறது. தீயவைத் தானாக வரும் நல்லவை வேண்டி விழையுபோதுதான் வரும் என்பதோடு, தீயவை பிறந்த பின்னரே எப்போதும் நல்லவை பிறக்கிறது. ஏனெனில் உலகம் எப்போதும் நலமாகத்தான் இருக்கிறது. அதில் உற்பாதங்கள் ஏற்படும்போதே அதை அழிக்க நல்லது தோன்றவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இயற்கை இவ்வாறாக இந்த உலகை எப்போதும் சமநிலைப் படுத்திக்கொண்டே இருக்கிறது.

குந்தி குழந்தையை ஈன்றெடுத்த பிறகு, அவள் அகத்தில் இனம் புரியாத அச்சம் எழுகிறது. குழந்தைக்கு யுதிஷ்டிரன் என்று பெயர் சூட்டும் துர்வாசர், “இவன் அறப்புதல்வன் ஆதலால் தருமன் என்ற பெயரே நிலைக்கும்” என்கிறார். குந்தி தன் அச்சம் விலகாதவளாக பாண்டுவிடம், “நமக்கு வெல்ல முடியாத ஆற்றல் கொண்ட இன்னொரு மைந்தன் தேவை” என்கிறாள். அவள் மனதில் எழும் அச்சத்திற்கான காரணம் என்ன? இன்னொரு மைந்தன் தேவை என அவள் ஏன் நினைக்கிறாள்? இதற்கான பதில்களை வாசகனே உய்த்தறியுமாறு செய்திருக்கிறார் ஜெயமோகன். ஏற்கனவே ஒரு குழந்தையைத் தவறவிட்டது, காந்தாரி கருவுற்றபோது தோன்றிய துர்ச்சகுனங்கள், தன் புதல்வன் தருமநெறி தவறாதவன் என்று முனிவர் சொல்வது இவையே படிப்படியாக அவள் அச்சத்திற்குக் காரணமாகிறது. தன் மைந்தனால் காந்தாரியின் மைந்தனை வெற்றி கொள்ள முடியுமா என்ற சந்தேகத்தை இவைகள் ஏற்படுத்த, அவனுக்குத் துணையாக இன்னொருவன் தேவை என நினைக்கிறாள். “இந்த உலகில் கெட்டவர்கள் திட சித்தத்துடன் கெட்டவர்களாக இருக்கிறார்கள். நல்லவர்களோ ஐயத்துடனே நல்லவர்களாக இருக்கிறார்கள்” என்பார் ஓஷோ. இதேதான் குந்தியின் அகத்தே எழுந்து அவளை அச்சப்பட வைக்கிறது.

காகங்கள் கரைய, யானைகள் பிளிற, காற்று சூறாவளியென சுழன்று வீச, மருத்துவர் ஒருவரைப் பலிகொண்டு, அம்பிகை காந்தாரி சகுனி மூவரின் வஞ்சினத்தையும் உண்டு வளர்ந்தவனாக, பற்களுடன் பெரும் குழந்தையாக துரியோதனன் மண்ணில் வந்து வீழ்கிறான். அவன் கருவாகி உருவாகி பிறப்பது வரையான சித்தரிப்புகள், நாம் நம்முடைய கனவிலும் காணமுடியாதவை; கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாதவை. தனது படைப்பின் திறத்தால் ஆகச்சிறந்த புனைவாக இவற்றைத் தந்திருக்கிறார் ஜெயமோகன். ஏற்கனவே அவன் கருவானதை சூதர்கள் துர்ச்சகுனமாக கருதி பாடித்திரிவதை அம்பிகையும் சகுனியும் வெறுக்கிறார்கள். ஏனெனில் நல்லவர்கள் கெட்டவர்கள் இருவருக்குமான அலைவரிசை எப்போதுமே வெவ்வேறானது. “சிம்மம் குகை விட்டெழுவது போல வந்திருக்கிறான் மைந்தன். ஐந்து பூதங்களும் அதற்கு சான்றுரைப்பதைக் கேட்டேன்” என காந்தாரி மைந்தன் பெற்றதை திருதிராஷ்டிரனிடம் சொல்லும் சகுனியின் சொற்கள் இதையே பிரதிபலிக்கிறது.

இதுவரையில் அங்க அசைவு, பார்வையால் மட்டுமே தங்களை வெளிப்படுத்தி வந்த சகுனியும் விதுரனும், இரு பக்கங்களிலும் மைந்தர்கள் பிறந்துவிட்டதால், உரையாடல் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். விதுரனுக்கும் சகுனிக்கும் இடையே நடக்கும் பொருள்பொதிந்த, நுட்பமான, சுவாரஸ்யமான இந்த உரையாடல் அதனால்தான் நடக்கிறது. இனி இது மெல்ல மெல்ல வளர்ந்து பல்வேறு விதங்களில் வெளிப்பட்டு உச்சமாக பெரும் நாசம் விளைவிக்கும் என்பதை நாம் அறிகிறோம்.

விதுரன்: “ஆம். பாண்டவர்களுக்கு நீடித்த ஆயுள் உண்டு என்று நமித்திகர்கள் சொல்கிறார்கள். ஆகவே எவர் சதிசெய்தாலும் அவர்களுக்கு எந்தத் தீங்கும் விளையாது. காந்தாரத்தின் ஒற்றர்கள் சற்று திறனற்றவர்கள்.”

சகுனி: “திறனற்ற ஒற்றர்கள் மட்டுமே செய்யக்கூடிய பணிகளும் உள்ளன. திறனற்றவர்கள் நேரடியான சிலவற்றைச் செய்ய தயங்கமாட்டார்கள் அமைச்சரே.”

விதுரன்: “ஆனால் என்னுடைய திறன்மிக்க ஒற்றர்கள் இப்போது அங்கிருக்கிறார்கள். அத்துடன் ஒற்றர்களை அறிந்து வழிநடத்தும் தலைமையும் அங்குள்ளது. முறைமீறிய செயல்கள் இருபக்கமும் கூர் கொண்டவை காந்தார இளவரசே. நாம் முறைமீறுவது வழியாக நம் எதிர்தரப்பு முறைமீறுவதற்கு ஒப்புதல் அளிக்கிறோம்.”

தனது மதியூகத்திலும், திட்டங்களிலும் தனக்கு நிகரானவர் யாருமில்லை என்றிருந்த சகுனி, சாதுரியம் மிக்க இந்த உரையாடல் மூலம், தனக்கு இணையான ஒரு மதியாளனைக் கண்ட திகைப்பில் மலைத்து நிற்கிறான். விதுரன் இருக்கும் வரை தான் குந்தியை நெருங்க முடியாது என்பதையும் புரிந்துகொள்கிறான்.

மகாபாரதத்தின் முக்கிய முடிச்சாக, கட்டமாக நான் காண்பது துரியோதனைப் பற்றி திருதிராஷ்டிரன் எடுக்கும் முடிவுதான். ஜெயமோகன் இந்தப் பகுதியை மிக அற்புதமாகக் கையாண்டிருக்கிறார். ஒரு மனிதனின் ஆன்மா அவமதிக்கப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும் எப்போது நிகழ்கிறதோ அப்போது அவன் எதையும் செய்வதற்குத் தயாராகிவிடுகிறான். திருதிராஷ்டிரன் அவ்வாறு தயாராவதற்கு முன்பு முன்னோட்டமாகவே கண்ணில்லாத தீர்க்காசியமரை எரியூட்டும் சடங்குக் காட்சி அமைந்துள்ளது. அதில் கலந்துகொண்டு திருதிராஷ்டிரன் தனது அளவற்ற அன்பையும், அபிமானத்தையும் வெளிப்படுத்தும் அந்தப் பகுதி மூலமாக, அடுத்து வருகின்ற காட்சியில், திருதிராஷ்டிரனை புரிந்துகொள்ளுமாறு செய்துவிடுகிறார் நாவலாசிரியர். வாழ்க்கையில் என்னதான் நாம் முயற்சித்தாலும் நடப்பதைத் தடுக்கவோ, நடக்காததை நடத்தவோ மனித சக்தியால் ஆவது ஒன்றுமில்லை என்பதையே இவைகள் நமக்குத் தெரியப்படுத்துகின்றன.

விதுரன் துரியோதனன் பிறந்தபோது வெளிப்பட்ட துர்ச்சகுனங்களைப் பற்றிச் சொன்னதும் திருதிராஷ்டிரன் தனக்கு நாடுதான் முக்கியம் மகன் பொருட்டல்ல என்கிறான். அப்போது அம்பிகை, திருதிராஷ்டிரன் விழியற்றுப் பிறந்தபோது அவனையும் அவ்வாறே காட்டில் விட்டுவிடச் சொன்னார்கள் எனும்போது அவன் அகம் விழித்துக் கொள்கிறது. தங்களைப் போன்றவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்றோ, உரிமையற்றவர்கள் என்றோ முடிவு செய்ய பிறருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்பதாக அவன் அகத்தே எழும் கேள்விகளே, நாடு அழிந்தாலும் பாதகமில்லை ஒருபோதும் தன் மைந்தனைக் கைவிட முடியாது என்ற முடிவை எடுக்கவைக்கிறது. இதுவே பின்னால் நிகழும் அனைத்துச் சிக்கல்களுக்கும் காரணமாகி இறுதியாக போரில் முடிகிறது.

தருமனைத் தொடர்ந்து பீமன், அர்ச்சனன் இருவரையும் பெற்றெடுக்கிறாள் குந்தி. மாத்ரி, நகுலன் சகாதேவன் இருவரை பெறுகிறாள். ஒவ்வொருவரின் பிறப்பையும் மிக விரிவாக சித்தரித்திருக்கிறார் ஜெயமோகன். அவற்றில் அர்ச்சுனன் பிறப்பு ஓர் உன்னதச் சித்தரிப்பு. அந்த புல்வெளியும், மலைகளும், அருவிகளும், இடியும், மின்னலும், வானவில்லும் இன்ன பிறவும் நம் மனதில் அற்புதமான கனவு வெளியில் சஞ்சரித்த உணர்வைக் கொடுக்கிறது. ஜெயமோகன் வார்த்தைகளை நாம் நம்முடைய மனத்திரையில் கற்பனையாக விரிக்க, ஷண்முகவேலின் ஓவியங்கள் பெரிதும் துணையாகின்றன. நாம் நம் கற்பனையால் நிரப்ப இயலாத காட்சிகளின் சித்தரிப்புகளை அவரது ஓவியங்களே முழுமையுறச் செய்கின்றன. காட்டுத் தீ பரவ, அனைவரும் மலைஏறிச் செல்வதும் மலையுச்சியில் புல்வெளிப் பிரதேசத்தைக் காண்பதும், பாண்டு தருமன் பீமனோடு மின்னலைக் காண்பதுமான ஓவியங்கள் நம் அகத்தை எழுச்சியுறச் செய்பவை.

பாண்டு தன்னுடைய குழந்தைகளுடன் கொண்டிருக்கும் அன்பின் பிணைப்பு நம்மிலும் அன்பின் ஊற்றைப் பெருக்குவது. பாண்டு ஐவருடன் வனத்தில் திரியும் காட்சியை நம்முடைய மனம் கற்பனையில் உருவாக்கும் சித்திரம் நமக்குள் எத்தகையதொரு நிறைவையும், ஆனந்தத்தையும் கொடுக்கிறது. “இப்படி ஆரத்தழுவுகையில் இந்தப் பாழும் உடல் அல்லவா இவர்களுக்கும் எனக்குமான தடை என்று தோன்றுகிறது. ஆன்மா மட்டுமேயான இருப்பாக நான் இருந்திருந்தால் மேகங்கள் மேகங்களைத் தழுவிக்கரைதல் போல இவர்களை என்னுள் இழுத்துக் கொண்டிருப்பேன்” என்கிறான் மாத்ரியிடம். நம் மனம் இயல்பாகவே இந்த இடத்தில் பாரதியின் பாடலில் நுழைகிறது. பாண்டுவின் அன்பு வெளிப்படும் தருணங்களை பாரதியின் இந்த வரிகள் மிகச்சரியாகப் படம்பிடிக்கிறது.

அள்ளி அணைத்திடவே - என்முன்னே
ஆடி வரும்தேனே!
ஓடி வருகையிலே - கண்ணம்மா
உள்ளம் குளிருதடீ;
ஆடித் திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவுதடீ
உச்சி தனைமுகந்தால் -கருவம்
ஓங்கி வளருதடீ;
கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளம்தான்
கள்வெறி கொள்ளுதடீ;
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடீ.

பாண்டுவின் மனதில் குழந்தைகளைப் பற்றிய இந்த சிந்தனைகள் அவனை உச்சமான பரவச நிலைக்கு அழைத்துச் செல்கிறது. அந்த நிலையில், இரண்டே சாத்தியங்கள்தான் இருக்கின்றன. ஒன்று மனப்பிறழ்வு அல்லது மரணம். திரும்பி வருவது அபூர்வமாகவே நிகழ்கிறது. அதே மனக்கிளர்ச்சியுடன் அவன் மாத்ரியைக் கூட மரணம் அவனை அரவணைத்துக் கொள்கிறது. மரணம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது! அதுவரை வெறுப்பிலும் கசப்பிலும் இருந்த அம்பிகையும் அம்பாலிகையும் இணைகிறார்கள். இருவரும் வனம் புகுவதாகச் சொல்ல, பேரரசி சத்தியவதியும் அவர்களைத் தொடர்கிறாள். அவள் மனம் கொண்டிருந்த பல்வேறு கற்பனைகளும் கனவுகளும் உருத்தெரியாமல் மறைந்து விடுகின்றன. அதைப்பற்றி விதுரன் கேட்கும்போது, “நான் இதுவரை சொன்ன எந்தச் சொல்லுக்கும் இனி நான் பொறுப்பல்ல. நான் கண்ட கனவுகள் கொண்ட இலக்குகள் அதற்காக வகுத்த திட்டங்கள் அனைத்தும் இன்று சற்றுமுன் இறந்த இன்னொருத்தியுடையவை. நான் வேறு” என்கிறாள். அவள் தன்னைத்தான் குறிப்பிட்டு அவ்வாறு சொல்கிறாளா இல்லை குந்தியை நினைத்து அப்படிச் சொல்கிறாளா என்பதை யார் அறியக்கூடும்?

மழைப்பாடல் காதல் வீரம், அன்பு பாசம், வஞ்சம் சூழ்ச்சி, இரக்கம் கருணை, துயரம் சோகம், மகிழ்ச்சி ஆனந்தம், பொறாமை என மனிதர்களின் அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்கி, பல்வேறு அடுக்குகள் கொண்டதாய், அழகின் நேர்த்தியோடும் இதிகாசத்தின் காவியச் சுவையோடும், பிரம்மாண்டமாக நம் மனத்திரையில் படர்ந்து விரிந்து, இசையாய் ஓவியமாய் பாடலாய் நிறைகிறது. மகாபாரதத்தை நாம் நேரடியாகப் பயின்ற போதும், உய்த்தறியவும் உணரவும் முடியாத பலவற்றையும், ஜெயமோகன் தன்னுடைய கற்பனை வீச்சாலும், புனைவின் திறத்தாலும் மழைப்பாடலில் தெவிட்டாத இசையாக இசைத்திருக்கிறார். அஸ்தினபுரி அரண்மனை மூலை முடுக்குகள் மட்டுமின்றி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மனங்களின் மூலை முடுக்குகளிலும் ஊடுருவிப் பார்க்கும் வல்லமை கொண்டதாக அவரது பார்வை இருக்கிறது. வாசிக்குந்தோறும் பக்கங்களை மட்டும் நாம் வாசிக்கவில்லை, மனித மனங்களையே வாசிக்கிறோம் என்றுணர்கிறோம். மழைப்பாடல் தூறலாய், சாரலாய், மழையாய், புயலாய், இடி மின்னலாய், காட்டாற்று வெள்ளமாய் நம்மின் அகத்தில் நிறைந்து ஓர் உன்னத அனுபவமாக என்றென்றும் நிலைத்து நின்றுவிடுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...