ஜெயமோகனின் மழைப்பாடல்-3: கண்ணீர் மழை

குந்தி யாதவப் பெண் என்பதால் பாண்டுவுக்கு மாத்ர நாட்டு இளவரசன் சல்லியனின் தங்கை மாத்ரியை மணமுடிக்கிறார் பீஷ்மர். பாவம் பீஷ்மர்! அவர் மணம் செய்யாவிடிலும் எல்லோருக்கும் மணமுடித்து வைக்கவேண்டிய வேலை அவருக்கு சபதம் ஏற்றதற்குப் பிராயச்சித்தம் போல. மாத்ரியின் மூலமாகவே பாண்டுவுக்கு சந்ததி பிறக்க முடியும் என்று குந்தி நினைக்கிறாள். ஆனால் பாண்டுவுக்கும் மாத்ரிக்குமான மணமங்கல இரவில், காமத்தின் விழைவு, அவனது உடல் நிலையைப் பெரிதும் பாதிக்கிறது. இந்நிலையில் நிமித்திகரை அழைத்துக் கேட்க, வேட்டையாடச் சென்ற போது இன்புற்றிருந்த இரட்டை மான்களை பாண்டு கொன்றதால் ஏற்பட்ட சாபத்தின் விளைவே இது என்கிறார்.

Steven Spielberg-கின் ஆகச்சிறந்த திரைப்படமான Schindler's List-ல் ஒரு அற்புதமான காட்சி வருகிறது. Second Lieutenant-ஆக பணிபுரியும் Amon Goeth வேலைக்கார யூதப்பெண் ஒருத்தியோடு சல்லாபித்துவிட்டு, சோம்பல் முறித்தவனாக மாளிகையின் மாடத்தில் நின்று புகைத்தபடியே, துப்பாக்கியை எடுத்து கீழே முகாமில் இருக்கும் யூதச் சிறுவனையும் பிறகு ஒரு பெண்ணையும் அதன்பிறகு முதியவர் ஒருவரையும் சுடுவான். அப்போது அவன் முகம் அந்தப் பெண்ணோடு சல்லாபத்தில் ஈடுபட்டதற்கு இணையான பரவசத்தை வெளிப்படுத்தும். பெரும் படைப்பாளிகளின் சிந்தனையும், படைப்பாற்றலும் ஒன்றுபோல்தான் இருக்கும் போல. பாண்டு அந்த மான்களைக் கொன்றதற்கான காரணமாக ஜெயமோகன் எழுதியிருப்பது இதையே தெரிவிக்கிறது.

“அம்புகள் ஒன்றன் மீது ஒன்றாக மான்களைத் தைத்தன. ஐந்து அம்புகள். முதல் அம்பு என் கையை விட்டெழுந்தபோது என் அகம் குற்றவுணர்வு கொண்டு சுருண்டது. ஆனால் அடுத்த அம்பு அக்குற்றவுணர்ச்சியைச் சிதறடித்தது. என் உடல் உவகையில் அதிர்ந்தது. அதுவும் ஒரு காமம் என்பது போல. அடுத்தடுத்த அம்புகள் வழியாக நான் இன்பத்தின் உச்சம் நோக்கிச் சென்றேன். என் கண்கள் கலங்கி உடல் சிலிர்த்துக் கொண்டிருந்தது. பாவம் போல பேரின்பம் வேறில்லை என அன்று அறிந்தேன். ஏனென்றால் பாவம் செய்பவன் தன்னைப் படைத்த சக்திகளை பழி வாங்குகிறான்.”

தனது பாவத்திற்குப் பிராயச்சித்தமாக பாண்டு வனம்புகுவதாக முடிவு செய்கிறான். முன்னர் திருதிராஷ்டிரன் ராமனாக தன் நாட்டை பாண்டுவுக்குக் கொடுத்தான். இப்போது பாண்டு ராமனாக வனம்புகுகிறான். அப்போது அனைவரும் கண்ணீர் மல்க கலங்கி நிற்கிறார்கள்.

கிள்ளையொடு பூவை அழுத; கிளர்மாடத்து
உள்ளுறையும் பூசை அழுத; உருவறியாப்
பிள்ளை அழுத; பெரியோரை என்சொல்ல?
'வள்ளல் வனம்புகுவான்' என்றுரைத்த மாற்றத்தால்.

எனும் கம்பராமாயண வரிகள் நினைவுக்கு வருகின்றன. சேவகர்கள், படைவீர்ர்கள், தளகர்த்தர்கள், அமைச்சர்கள் அனைவரும் கண்ணீருடன் விடைகொடுக்கிறார்கள். திருதிராஷ்டிரன் விம்மிஅழ, பாண்டுவை அணைத்து ஆசீர்வதித்து வாழ்த்துகிறான். சத்தியவதி தன்னால் கண்ணீர் விடமுடியவில்லை என உணர்கிறாள். ஆனால் ரதம் செல்லத்தொடங்க பாண்டு குனிந்து அரண்மனையை ஏறிட்டுப் பார்க்கும்போது அவன் விழிகளைப் பார்க்கும் சத்தியவதி உடைந்து அடக்கமுடியாமல் பீறிட்டு அழுகிறாள். அனைவரது கண்களின் கண்ணீரே அங்கே வானத்து மழையெனத் திரள்கிறது. துன்பியல் நாடகத்தின் காவியச்சுவை நிரம்பிய இப்பக்கங்கள் நம்மையும் கலங்க வைக்கிறது. குந்தி கலக்கமுறுவதாக ஜெயமோகன் காட்டவில்லை. ஏனெனில் விதி எங்கு கொண்டு சேர்க்கவேண்டுமோ அங்கு கொண்டு சேர்க்கும் என்பதை அவள் அறிந்திருக்கிறாள்.

மகாபாரதக் கதாபாத்திரங்களில் நாம் அதிகமும் அறிந்திராத அல்லது தெரிந்துகொள்ள விரும்பாத ஒரு பாத்திரம் விதுரனின் தாயார் சிவை. புறக்கணிக்கப்பட்ட அந்தக் கதாபாத்திரத்திற்கு ரத்தமும் சதையும் கொடுத்து உலவவிட்டிருக்கிறார் ஜெயமோகன். விதுரனைக் கருவாகச் சுமந்த வாடகைத் தாயாகவே அவள் இருக்கிறாள். சிவையின் பணிப்பெண் கிருபை தன் கணவன் குழந்தைகளோடு வீதியில் வரும் காட்சியை சிவை பார்ப்பதான சித்தரிப்பு மிகவும் புரிதலுடன் நுட்பமாக புனையப்பட்டதாகும். சூத்திரப் பெண்ணாகவும் இல்லாமல் ஷத்திரியப் பெண்ணாகவும் இல்லாமல் போவதோடு, இரு பக்கங்களிலிருந்தும் அவள் மீது படரும் ஏளனமும், அலட்சியமும் அவளை வேதனைப்பட வைக்கிறது. ‘மனநலம் மனிதர்க்குச் செல்வம் இனநலம் எல்லாப் புகழும் தரும்’ என்கிறான் வள்ளுவன். ஆனால் சிவையோ தன் இனத்தின் துணையில்லாமல், சென்ற இனத்தின் துணையுமின்றி மனநலம் சீர்கெட ஒரு நடைப்பிணமாய் தனிமையில் வாழ்கிறாள்.

விதுரனுக்கும் சுருதைக்கும் மணம் நிச்சயிக்கப்படுகிறது. வழக்கம் போல பீஷ்மர்தான் மணமகளைக் கொண்டு வருகிறார். அவளைப் பற்றிய சித்திரத்தை தன் மனதில் உருவாக்கும் விதுரன் அதிருப்தி அடைகிறான். இனம் புரியாத தத்தளிப்பு அவனை பணியில் இடையூறு செய்கிறது. அவன் மனதில் உள்ளது என்ன என்பதை நாம் விளங்கிக்கொள்ள, வாசிப்பில் நிகழும் பல்வேறு இடைவெளிகளைக் கடந்து செல்லவேண்டும். அதற்காக குறிப்பாக சிலவற்றைக் கூர்ந்து வாசிப்பது அவசியம். விதுரனிடம் சுருதையைப் பற்றி சத்தியவதி, “அழகி. மாந்தளிர் போல இருக்கிறாள்” என்று சொல்கிறாள். அக்கணம் ஏன் தன்னுள் எண்ணெயில் நெருப்பு ஏறுவதுபோல சினம் பெருகியது என விதுரன் எண்ணிக் கொண்டான். சத்தியவதியின் சிறிய சீர்ம்பல் நகைப்பை, கன்னங்களில் விழுந்த அழகிய சுருக்கத்தை, நரையோடிய கூந்தல்சுருள்களை அனைத்தையும் வெறுத்தான். வாளால் நெஞ்சில் குத்தி இதயத்தைப் பிளப்பது போல ஏதேனும் சொல்லவேண்டுமென நாவெழுந்தது. முன்னர் சத்தியவதியின் அழகைச் சிலாகித்த விதுரன் இப்போது வெறுக்கிறான்!

அவன் மனதில் சுருதையைப் பற்றிய எண்ணங்கள் சிற்றெரும்பின் வரிசையாய்த் தொடர்கின்றன. மிக எளிய சூதப்பெண். அரசி அல்ல. சக்ரவர்த்தினி அல்ல. வாளும்வேலும் நூலும் நெறியும் கற்றவளல்ல. தலைநிமிர்ந்தவள் அல்ல. தோள்விரிந்தவள் அல்ல. வெறும் பெண். உன்னுள் உள்ள வெறும் சூதனுக்கு அவளே துணை. சிவை விதுரனையும் சுருதையையும் ஆசீர்வதித்து மணவறைக்கு அனுப்பிய பிறகு தாளமுடியாதவளாக கதவைத் தட்டி உள்ளே சென்று சுருதையிடம் “நீ இங்கேயே இரு... நீ இங்கேயே இரு” என்கிறாள். அவளை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு வரும் சுருதையைப் பார்க்கிறான் விதுரன். அவள் அவனருகே வந்து அமர்ந்தாள். அப்போது நெடுங்காலமாக அறிந்தவள் போல, மிகமிக அண்மையானவள் போலத் தோன்றினாள். இவற்றுடன் சிவையின் தனிமைத் துயரை இணைக்கும் போது நம் மனதில் எழும் மனச் சித்திரமும் சொற்சித்திரமும் பலவற்றுக்கும் விடை பகர்வது. சிந்திக்குந்தோறும் பரவி விரிந்து கொண்டே செல்லும் எல்லை இல்லாதது. பெரு மழையின் இடியாக அதன் தாக்கம் நம் மூளையில் இறங்கி சித்தத்தை உறைய வைப்பது. கண்களில் மழையென கண்ணீரைப் பெருக்குவது.

அதன் உச்சமாக வெளிப்படுவது விதுரன் பராசரரின் தேவிஸ்தவம் வாசிப்பது மட்டுமல்ல. சுருதை மெத்தையில் துயின்ற இடத்தைக் கைகளால் வருடும்போது அங்கே வரும் அவள், “இந்த இடம்போதும்... எனக்கு எப்போதுமே அரண்மனைகளில் மிகச்சிறிய இடம்தான்... அவ்வளவு போதும்” என்று அழுதபடி விதுரனை அணைப்பதும்தான். ஒரு படைப்பாளி எத்தனையோ எழுதலாம். ஆனால் சிலதான் மிகச்சிறந்ததாக அமைகிறது. மழைப்பாடலின் மிகச்சிறந்த, படைப்பின் திறம் முழுமையும் வெளிப்பட்ட, ஓர் இடமெனில் அது பதின்மூன்றாம் பகுதியின் தனிப்புரவி எனும் பகுதியே. இந்தப் பகுதியின் முத்தாய்ப்பாகவே சார்வாகனுக்கும் விதுரனுக்குமான உரையாடல் அமைந்து, நம்மைப் பெருமூச்செரியச் செய்து, ஆசுவாசப்படுத்துகிறது.

இதற்கு மேல் தொடர்ந்து வாசிக்க இடைவெளி தேவை என உணர்ந்தவனாக புத்தகத்தை மூடி வைக்கிறேன்.

(தொடரும்...)
1. மழை இசையும் மழை ஓவியமும்
2. இடியும் மின்னலும்
4. பிறவிப் பெருமழை

Related Posts Plugin for WordPress, Blogger...