ஜெயமோகனின் மழைப்பாடல்-2: இடியும் மின்னலும்

சகுனி, பெரும் படையோடும் ஏராளமான செல்வங்களோடும் ஆரவாரத்துடன் அஸ்தினபுரிக்குள் நுழைகிறான். அவன் படைகள் பல நாள் பெய்த பெரு மழையின் காட்டாற்று வெள்ளம் என சாலைகளில் நுழைந்து அஸ்தினபுரியைத் திணறடிக்கிறது. அதிகாரத் தோரணையில் தான் கொணர்ந்த செல்வத்தையும் படைகளையும் என்ன செய்யவேண்டும் என்று அவன் ஆணை இடும்போதே அவன் மனதில் உள்ளவற்றை நாம் அறிந்துகொள்கிறோம். ஏற்கனவே தனது மகன்தான் நாடாள வேண்டும் என நினைக்கும் அம்பிகையும் அம்பாலிகையும் இப்போது அதில் தீவிர முனைப்புடனும் ஆவேசத்துடனும் இருக்கிறார்கள். இருவருமே தங்களின் கடந்த கால நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்து, ஒருவருக்கு மற்றவர் மீதான வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள். இந்த இடத்தில் ஜெயமோகன அவற்றை சொல்வதன் மூலம் மனித மனம் சுழித்துச் செல்லும் திசையை, அதன் தந்திரத்தை உணரச் செய்கிறார். இருவருக்குமிடையே அல்லாடும் விதுரன் அவற்றையெல்லாம் ஒரு சிறிய புன்னகை மூலம் கடந்து செல்கிறான். சுயநலம் என்ற அரக்கன் அவர்களை ஒருவர் மீது மற்றவர் துவேஷம் கொள்ளுமளவிற்கு மாற்றிவிடுகிறது. 

திருதிராஷ்டிரன் பதவியேற்புக்கு பாண்டு மனமுவந்து சம்மதிக்கிறான். “பாவைகளை வைத்து விளையாடுவதில் எனக்கு இனி ஆர்வமில்லை” என்று சொல்லும் அவன் ராஜ்யத்திற்கு ஈடாக தான் பெற்ற வைரத்தையும் விதுரனுக்கே கொடுத்து விடுகிறான். ஆனால் இந்தப் பெண்கள்தான் தங்கள் உள்ளத்தில் வெறுப்பு மேலிட சூழ்ச்சியும் திட்டமும் போடுகிறார்கள். அவர்கள் உள்ளங்களில் இடியும் மின்னலுமாக பொறாமை எதிரொலிக்கிறது. ஆயினும் நாளாவட்டத்தில் இந்தப் பெண்களின் எண்ணத்தையே ஆண்களும் பிரதிபலிக்கத் தொடங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. தீர ஆலோசித்து ஒரு முடிவை எடுத்து அதைச் செயல்படுத்திய அடுத்த வினாடியே அதுவரையிலும் நாம் கவனிக்காது விட்ட பலவும் நமக்குத் தெரியத் தொடங்குகிறது. அது நம் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி நாம் எடுத்த முடிவை சந்தேகிக்க வைக்கிறது. அவ்வாறே சத்தியவதியும் திருதிராஷ்டிரனுக்கு முடிசூட்ட நிச்சயித்த பின்னர் பல சந்தேகங்கள், குறிப்பாக சகுனியைப் பற்றிய எண்ணங்கள், அவளை அச்சப்பட வைக்கின்றன.

விதுரனுக்கும் சத்தியவதிக்கும் நிகழும் ஒரு சந்திப்பில் பெண்களைப் பற்றி பேச்சு வரும்போது வியாசரின் காவியத்தை விதுரன் மேற்கோள் காட்ட அவள் விதுரனிடம், “அவன் சொற்களெல்லாம் முளைக்கும் ஒரு வயல் நீ” என்கிறாள். இந்த உவமையில் நாம் திகைத்து நின்று சில நிமிடங்கள் வாசிப்பை நிறுத்திவிடுகிறோம். வார்த்தைகள் உள்ளத்தில் ஏற்படுத்தும் சிலிர்ப்புக்கு ஈடாக நாம் இன்னொன்றை சொல்ல முடியும் என்று தோன்றவில்லை. சத்தியவதி சிரிக்கும்போது அவள் அழகை சிலாகிக்கும் விதுரன் மொழி கேட்டு அவள் நாணத்துடன் மலர்கிறாள். அந்த மலர்ச்சி அவள் அழகைக் கூட்டுகிறது. அதைத் தொடாந்து வரும் உரையாடல்கள் இருவரிடையான அன்பின் நெருக்கத்தை, பாசப்பிணைப்பை வெளிக்காட்டுகிறது. அதேபோன்று அம்பாலிகையிடம் குந்தி, “எதிர்த்தபின் பணிவதுபோல முழுமையான தோல்வி பிறிதில்லை” என்று சொன்னதும் கோபம் தணிந்து சமாதனமடையும் அம்பாலிகை, மணிமகுட நிழ்ச்சிக்கு அணியப்போகும் ஆடைபற்றி மகிழ்ச்சியோடு பேசுகிறாள்.

அரசியல் எனும் வெம்மையில் அவர்களின் முகங்கள் வெறுப்பிலும் ஆத்திரத்திலும் வெம்பியிருக்கும் போது, ஆபரணங்கள், ஆடைகள், அழகு பற்றிய பேச்சுக்களில் மழையில் நனைந்த புஷ்பங்களாய் அவர்களின் முகங்கள் மலர்வதை ஜெயமோகன் வெகு இயல்பாக, நுட்பமாக இப்பகுதிகளில் காட்சிப்படுத்தியிருக்கிறார். என்னதான் அரசியாக இருந்தாலும் பேரரசியாக இருந்தாலும் அவர்கள் தாங்களும் பெண்கள்தான் என்பதை உணரும் இக்காட்சிகள் நம்முடைய மேலோட்டமான வாசிப்பில் தவறவிடும் சாத்தியம் நிரம்ப இருக்கிறது. வாசிக்குந்தோறும் இன்பத்தை, சுவாரஸ்யத்தை மிகுத்தும் இத்தகைய சித்தரிப்புகள் மழைப்பாடல் முழுதும் ஆங்காங்கே மெல்லிய தூரலாய் நம்முடைய மனதை வருடிச் செல்கிறது.

முடிசூட்டு விழா ஏற்பாடுகளைக் காவலர்கள் செய்துகொண்டிருக்கும் காட்சிக்கென்றே ஓர் அத்தியாயத்தை ஓதுக்கியிருக்கிறார் ஜெயமோகன். இந்த அத்தியாயம் நாவலில் இடம்பெறவில்லை எனினும் எந்தக் குறைவும் ஏற்பட்டுவிடாது. இருந்தும் இந்த அத்தியாயத்தின் வழியாகப் பயணிக்கும்போது, விழாவிற்கான கொண்டாட்டமாக, நமக்குள்ளும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. அதைவிட முக்கியமான காரணம் பின்னால் நிகழப்போகும் உணர்ச்சிக் கொந்தளிப்பான காட்சிக்கு ஓர் அமைதி தேவைப்படுகிறது. திரைப்படத்தில் திடுமென ஓர் அதிர்ச்சி வெளிப்படுவதற்கு முன்னால் நீண்ட அமைதியைக் காட்சிப்படுத்துவது போல. பெரும் மழைக்கு முன் வரும் மண்வாசனை போல. விழா மண்டபத்தில் நடப்பவற்றை நேரடியாக விவரிக்காது சிறுவன் சஞ்சயன் மொழியில் திருதிராஷ்டிரன் செவிமடுப்பதாக காட்டியிருப்பது நுட்பமான கற்பனை. ஏனெனில் வேறு யாரையும்விட முடிசூடும் அவனுக்குத்தான் அவற்றை அறிவதில் ஆசையும், மகிழ்வும் இருக்க முடியும் மழையை எதிர்நோக்கும் மண் போல.

விழியற்ற திருதிராஷ்டிரன் நாட்டை ஆள்வதற்கு குலமூதாதையர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதன் தீய சகுனமாகவே புவிபிளந்து தன் சீற்றத்தைக் காட்டியிருக்கிறது என்கிறார்கள். பீஷ்மர், விதுரன், சத்தியவதி, சகுனி ஆகிய நால்வரும் இந்த சிக்கலை எதிர்கொள்ள உரையாடும் காட்சிகள் அவர்களிடையே மட்டுமின்றி நமக்குள்ளும் உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. இறைவன் ஆசி இல்லையெனில் மனிதன் போடும் எந்தத் திட்டங்களும் வெற்றி பெற முடியாது என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. நிலைமையைச் சமாளிக்க அதே உணர்ச்சியை வேறு ஒரு பாதையில் திசைதிருப்பி, ஓர் எளிய நாடகத்தை அரங்கேற்றி, திருதிராஷ்டிரனையும் பாண்டுவையும் விதுரன் சம்மதிக்க வைக்கிறான். ஆயினும் ஆவேசத்துடன் சினத்தை வெளிக்காட்டும் சகுனியை எப்படி அமைதிப்படுத்த முடியும் என்று நாம் திகைக்கும்போது அவனை ஓங்கி அறைவதன் மூலம் பீஷ்மர் அதைச் செய்துவிடுகிறார். வாசிப்பில் நாம் எதிர் பாரத தருணம் இது! பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு திருதிராஷ்டிரனின் மைந்தன் பட்டத்திற்கு வருவான் என்று கூறி, சகுனியை அணைத்து ஆறுதலும் உறுதியும் அளிக்கிறார் பீஷ்மர். எப்போதும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத சகுனி, காந்தாரியை எண்ணிக் கலக்கமுற்று மழைத் துளிகளென தன் கண்களில் கண்ணீரை வடிக்கிறான்.

அரசர்கள் மணிமுடி தரிப்பதென்பது ராமாயணம், மகாபாரதம் காலந்தொட்டு அன்றும் இன்றும் என்றும் பிரச்சினைக்குரியதுதான் போலும். ராமாயணத்தில் ராமபிரானுக்கு நிகழ்ந்ததே இங்கே திருதிராஷ்டிரனுக்கு நிகழ்கிறது. ராமன் முடிசூடுவதை மக்கள் அனைவரும் விரும்பினார்கள் ஆனால் கைகேயி மட்டும் விரும்பவில்லை. திருதிராஷ்டிரன் மன்னனாவதை மக்கள் விரும்பாதபோதும் அரச குடும்பத்தினர் அனைவரும் விரும்புகிறார்கள். கைகேயி வார்த்தையை மறுவார்த்தை பேசாமல் ஏற்றுக்கொள்கிறான் ராமன். திருதிராஷ்டிரனோ அதற்காக வாதாடினாலும் பின்னர் நிலைமை உணர்ந்து பாண்டுவை மணிமகுடம் சூடிக்கொள்ள ஒப்புக்கொள்கிறான். “என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?” என்று ராமன் சொன்னது போலவே திருதிராஷ்டிரனும், “என் இளவல் நாடாள விழைந்தான் என்றால் அவன் மண்ணைப் பிடுங்கி ஆளும் வீணனெ்றா என்னை நினைத்தாய்? உடல், உயிர், நாடு, புகழ் என எனக்குரியதனைத்தும் இவனுக்குரியதேயாகும்” என்கிறான். ஒருவகையில் இங்கே திருதிராஷ்டிரனும் ராமனுக்கு நிகராக உயர்ந்து நிற்கிறான். ஆனால் காலம் ஏனோ அவனை இராவணனாக மாற்றி விளையாடுகிறது.

எப்பொதும் செயல் அல்ல பாவனைதான் நம்மில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. கோவில் கர்ப்பகிரகத்தில் உள்ள சிலையை நாம் கடவுளாக பாவிக்காத வரை அது வெறும் கல்தான். நம் பாவனையே அதைக் கடவுளாக்கிக் காட்டுகிறது. இதற்குத் தக்க சான்று காந்தாரி அரசியாவது தடுக்கப்படுவதும் குந்தி அரசியாவதும். காந்தாரி அரசியாவதற்குப் பலரும் முயற்சிக்கிறார்கள். குந்தியோ அணிகலன்கள் பூட்டி தன்னை அலங்கரித்துக் கொண்டு, யாதவப் பெண் என்ற எண்ணத்தை விட்டொழித்து, ஓர் அரசியாகவே தன்னை பாவித்து பவனி வருகிறாள். ‘முகத்தை புன்னகைபோல விரித்துக்கொண்டால் உண்மையிலேயே அகத்திலும் சிறு புன்னகை பரவுகிறது’ என அவள் நினைப்பதாக ஜெயமோகன் காட்டுவதிலிருந்து அவளிடம் இந்த பாவனை எப்போதும் இருந்துவருகிறது என்பது புரியும். சத்தியவதி குந்தியிடம், “எப்போதுமே அரசியைப் போலப் பேசுகிறாய். அரசியைப்போலவே இருக்கிறாய்... இதை எங்கே கற்றாய்?” என்கிறாள். காந்தாரியிடம் அதிகாரத்தின் செருக்கிருக்க, குந்தியோ பணிவதையே அதிகாரமாக பாவித்து உணரும் திறன் கொண்டிருக்கிறாள்.

குந்தியின் பாத்திர வார்ப்பு ஓர் அபாரமான சித்தரிப்பு. நிதானமாக, அழுத்தமாக தன்னை எந்தவிதத்திலும் வெளிப்படுத்திக் கொள்ளாமல், அனைத்தையும் நுட்பமாகச் சீர்தூக்கிப் பார்த்து ஆராயும் மதி கொண்டவளாக அவள் இருக்கிறாள். அவளிடம் வெளிப்படும் இந்தக் குணங்களே அவள் பின்னால் எதிர்கொள்ளப் போகும் இன்னல்களை சமாளிக்கும் ஆற்றலை அவளுக்குத் தருகிறது. காந்தாரியையும் அவள் தங்கைகளைப் பற்றியும் அவள் கொண்டிருக்கும், ‘ஒருபோதும் அவர்கள் தனக்கு எதிரிகளாக அமையப்போவதில்லை. மாறாக அவர்களுடைய எளிய காழ்ப்பு தன்னை மேலும்மேலும் வல்லமைகொள்ளச் செய்யும். தன் வெற்றிகளை மேலும் உவகையுடையவையாக ஆக்கும்’ என்ற கருத்து அவளை நாம் புரிந்துகொள்ள உதவும்.

கதாபாத்திரங்கள் தங்கள் உணர்ச்சிகளால் மோதிக்கொள்ளும், வாசிப்பில் நம்மைக் கட்டிப்போடும், நாவலின் ஆகச்சிறந்த பகுதிகள் இவை. இடியும் மின்னலுமாக வெளிப்படும் உணர்ச்சிக் குவியல்களே நம்மீது பெரும் மழையெனப் பொழிகின்றன. இவர்கள் போதாதென்று பாண்டுவுக்கு மாத்ர நாட்டு இளவரசன் சல்லியனின் தங்கை மாத்ரியை மணமுடித்துக் கொண்டுவர பிதாமகர் பீஷ்மர் முடிவுசெய்கிறார்.

Related Posts Plugin for WordPress, Blogger...