ஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்

வெளியீடு: நற்றிணை
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2014
விலை ரூபாய்: 1,500
பக்கங்கள்: 960
கட்டமைப்பு: கெட்டி அட்டை
வடிவம்: டெம்மி

மழைப்பாடல், பிதாமகர் பீஷ்மர் கப்பலில் கூர்ஜரத்திற்கு பயணிக்கும் காட்சியோடு தொடங்கி, மனதில் அபரிமிதமான கற்பனையை தோன்றுவித்து, நம்மை ஆகர்ஷித்து, உள்ளே இழுத்துக் கொள்கிறது. வார்த்தைகளில் உருக்கொண்டு கண் முன் விரியும் கடலின் பிரம்மாண்டமும், பெய்யும் கனமழையும் மிகுந்த மனவெழுச்சியைத் தர நாவலின் பக்கங்களில் நாம் தடையின்றி பிரவேசிக்கிறோம். கூர்ஜரத்தில் எழுகின்ற வெக்கையும், பெரு மழைக்குப் பின்னே வரும் குளிர்ச்சியும் பீஷ்மருக்கு மட்டுமல்ல நமக்குள்ளேயும் அதே வெம்மையை, குளிரைத் தருவிக்கிறது. அங்கிருந்து திரும்பும் அவரை, அஸ்தினபுரம் மீண்டும் அரசியல் என்ற சதுரங்கத்தில் பகடைக்காயாக உருட்டுகிறது. அவ்வாறு உருள்வதிலிருந்து மீளவோ, விலகவோ, தப்பிக்கவோ இயலாதபடி தான் அஸ்தினபுரியோடு பிணைக்கப்பட்டுவிட்டதை பீஷ்மரும் உணர்ந்தே இருக்கிறார். அதே பிணைப்பு பேரரசி சத்தியவதியை ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கும் பேராசையாக ஆட்கொள்கிறது.

அம்பிகை, அம்பாலிகை இருவரும் தங்கள் மைந்தர்களே பட்டத்திற்கு வரவேண்டும் என நினைக்கிறார்கள் என்பதை உணரும் விதுரன், “இந்த பெண்களுக்கு என்ன ஆயிற்று” என்று வியக்கிறார். விதுரனுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே நடக்கும் போரைப் பற்றிய உரையாடல்களும், அவர் ஆயுதங்களைப் பார்வையிடும் காட்சியும், மனித குலத்திற்கு பின்னால் நிகழப்போகும் பேரழிவை முன்கூட்டியே தெரிவிப்பதாக அமைந்திருக்கிறது. சகோதரர்களுக்கிடையே எழும் போட்டியும், பொறாமையும் இத்தோடு நில்லாது, வருகின்ற காலங்களில் அது வளர்ந்து விஸ்வரூபம் கொண்டெழுந்து, பெரும் நாசத்தை விளைவிக்கப் போகிறது என்ற குறிப்பை நமக்குக் கோடிட்டுக் காட்டியபடி நாவல் நகர்கிறது.

தன்னுடைய அறிவினால் எதிராளியோடு மோதித் தோற்பவனைவிட, உடல் வலிமையால் தோற்பவன் அதிக ஏமாற்றமடைகிறான். அந்த ஏமாற்றம் வெறுப்பாக அவன் மீதே படர்வதும், அந்த வெறுப்பு பிறர் மீது கோபமாக வெளிப்படுவதும் இயல்பு. எனவேதான் பீஷ்மரிடம் மல்யுத்தத்தில் ஏற்பட்ட தோல்வியை தன் மீதான வெறுப்பாக உணரும் திருதிராஷ்டிரன் அதையே அம்பிகையிடம் கோபமாக மாற்றி உமிழ்கிறான். ஆயினும் அந்தக் போபம் உடனே தணிந்து அன்பாக மாற்றம் கொண்டு விடுகிறது. அதைப் பார்க்கும் விதுரன் தன்னுடைய தாய் தன்னிடம் அவ்வாறு அன்பை வெளிப்படுத்தியதில்லை என்று உணர்வதும், திருதிராஷ்டிரன் விதுரன் மீது எவ்வளவு அன்பை வைத்திருக்கிறான் என்று அம்பிகை சொல்லும்போது விதுரன் பார்வையைத் திருப்பிக்கொள்வதும், “விழியிழந்தவர்களின் கைகளில் எழும் அன்பை பிறர் தரமுடியுமா என்ன?” என்று விதுரன் அம்பிகையிடம் கேட்பதுமான நுட்பமான சித்தரிப்புகள் நம் உள்ளத்தை நெகிழ்ச்சியால் நிரப்புபவை. திருதிராஷ்டிரன் பார்வையற்றவனாக இருப்பதனாலேயே அவனுக்குத் தான் அரசாட்சியைப் பெற்றுத் தர முயல்வதாக அம்பிகை சொல்வது தாயன்பின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது. மகாபாரதப் பாத்திரங்களை இவ்வளவு நெருக்கமாக, அந்யோன்னியமாக, அருகிருந்து பார்ப்பதாக இதுவரை நாம் உணர்ந்ததில்லை என்பதையே இந்தக் காட்சிகளின் சித்தரிப்புகள் நமக்குத் தெரியப்படுத்துகிறது.

உயர்வு தாழ்வு என்ற வேற்றுமை உணர்வு விளைவிக்கும் அவமதித்தலும் அவமதிக்கப்படுவதும் எல்லா மனிதர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருக்கிறது. தன்னிலிருந்து சகமனிதனை வேறுபடுத்திப் பார்க்கும் இந்த உணர்வு அரசன் முதல் ஆண்டிவரை அனைவருக்கும் பொதுவானதாக, தகுதிக்கேற்ப அமைந்திருக்கிறது. காந்தாரம் ஷத்ரியகுல அரசாக அங்கீகரிப்படாமல் மகதத்தால் அவமதிக்கப்படுவதும், கண்ணற்ற திருதிராஷ்டிரனுக்கு சத்தியவதி காந்தாரத்தில் பெண் எடுக்க நினைப்பதும் இதனால்தான். ஏனெனில் அங்கஹீனமும் ஒருவகையில் வேற்றுமை உணர்வை ஏற்படுத்துகிறது. உலகத்தின் ஒவ்வொரு கோடியிலும் இத்தகையவர்கள் இணைந்து தங்களுக்கான ஒரு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் வாயிலாக கனவுகள் நனவாகும் சாத்தியத்திற்கு முயல்கிறார்கள். அவமதிப்பான சொல்லும் செயலும் அது பிறந்த கணமே அழிந்துதான் போகின்றன. ஆயினும் அவமதிக்கப்பட்டவனின் வஞ்சினம் அவற்றை மீண்டும் உயிர்பித்து அழியாமல் காக்கிறது. மகதம் தங்களை அவமதிக்க அனுப்பிய சவுக்கை சகுனி நெருப்பிலிருந்து மீட்டெடுப்பது இதையே உணர்த்துகிறது. “அது அவ்வளவு எளிதாக அழியாது” என்று சொல்லும் போது சகுனி குறிப்பிடுவது அவன் மனதில் கனன்று கொண்டிருக்கும் அந்த வஞ்சினத்தைத்தான். இவ்வாறு சகுனியை வேறோர் பரிணாமத்தில் நமக்கு அறிமுகப்படுத்தி அழைத்துச் செல்கிறது மழைப்பாடல்.

திருதிராஷ்டிரனின் மிகப்பெரிய ஆகிருதியும், அவன் உணவை விரும்பி உண்பதும், ஆபரணங்களின் மீது அளவற்ற விருப்பு கொள்வதும், விதுரனை “மூடா” என விழிப்பதும் ஆரம்பத்தில் நமக்கும், காந்தாரியைப் போலவே, அவனுடன் ஒவ்வாமையை, இப்படி ஒருவன் ஏன் வாழவேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆனால் கண்ணிழந்த ஒருவனின் நிலையில் நின்றால் மட்டுமே இவற்றை நாம் புரிந்துகொள்ளும் சாத்தியம் இருக்கிறது. “ஆம், அவளை நான் மணப்பது நீதியே அல்ல. ஆனால் அப்படி நான் எண்ணப்புகுந்தால் என்னால் உயிர்வாழவே முடியாது. அதை சிறியவயதிலேயே அறிந்துகொண்டேன். அந்தச் சிந்தனையின் எல்லை ஒன்றே ஒன்றுதான். நான் உயிர்வாழ்வதே தேவையற்றது. ஆகவே இங்கே நான் உண்ணும் ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு துண்டு உணவும் தேவையான எவருக்கோ உரியது. ஆகவே நான் அவற்றை உண்பதே அநீதியானது” என்பதாக அவன் சொல்லும் போது நாம் அவனை முழுமையாகப் புரிந்துகொள்ளும்படி செய்துவிடுகிறார் நாவலாசிரியர். அவன் எல்லாவற்றின் மீதும் கொள்ளும் விருப்பம் அவனின் உயிர் தரிக்கும் விருப்பே என்பதை உணரும்போது, இந்த மண்ணில் ஒவ்வோர் உயிரும் வாழ்வதற்கான தகுதியும் உரிமையும் உண்டு என்பதையும் நாம் புரிந்துகொள்கிறோம்.

அவன் இசை மீது கொண்ட விருப்பும், லாஷ்கர்களிடமிருந்து காந்தாரியை போரிட்டு மீட்பதும் அவன் மீதான நம் பார்வையை முற்றிலும் மாற்றிவிடுகிறது. அவன் காந்தாரியை மீட்கும் சித்தரிப்புகள் நம்முடைய மனதில் அபாரமான கற்பனையை எழுப்புகிறது. கண்ணற்ற குருடன் என்ற நிலையிலேயே திருதிராஷ்டிரனை விளங்கிக் கொண்ட நாம் அவனை இன்னும் நெருங்கி, நம்மில் ஒருவனாகவே உணரும் விந்தை நாவலின் இத்தருணத்தில் நிகழ்வது குறிப்பிடத்தக்கது. அவன் மீதான நம்முடைய இந்தப் புரிதல் பின்னால் நிகழும் மகாபாரத நிகழ்ச்சிகள் பலவற்றையும் நாம் விளங்கிக்கொள்ள ஏதுவாகும் என்று தோன்றுகிறது.

காந்தாரிக்கும் திருதிராஷ்டிரனுக்கும் நடக்கும் அந்தப்புர உரையாடல் அற்புதமான ஒரு கற்பனை. இருவரும் உடலால் மட்டுமல்ல மனதாலும் நெருங்கி உணர்ந்து கொள்ளும் அந்தப் பகுதி வாசிப்பில் நமக்கு ஓர் அலாதியான இன்பத்தை தருகிறது. “என் கைகள் கடினமானவை... நான் பெரிய பாறைகளைத் தூக்கி உடற்பயிற்சி செய்வேன்.” “மென்மையானவற்றையும் பயிலவேண்டும் அல்லவா?” “இசைநிறைந்த யாழ் என அமர்ந்திருந்தீர்கள்.” “விழியுள்ள எவரும் என்னைப்போல ஆழ்ந்து இசைகேட்க முடியாதாம்.” “விழிகளை அறியாதவரென்பதனாலேயே நீங்கள் பொய்மையையும் அறியவில்லை.” “நான் அலைகளாக அறிந்தவை என்னை அன்று கிளர்ச்சியுறச்செய்தன. இன்றுதான் அலைகளெல்லாம் பெண்ணுடல்கள் என்பதை அறிந்தேன்.” இத்தகைய உரையாடல்களின் பின்புலத்தில் அந்தப் பகுதி நம்முள் இனம்புரியாத ஓர் உணர்வை கிளர்ந்தௌச் செய்கிறது. அவற்றின் உச்சமாக காந்தாரி தன் கண்களைக் கட்டிக்கொள்வது அவர்களிடையான பிணைப்பின் மேன்மையை வெளிப்படுத்துகிறது. காவியத்தின் சுவை நிரம்பிய இப்பகுதி மழைப்பாடலில் ஓர் உன்னதச் சித்தரிப்பு.

மழைப்பாடலின் முதல் மழை கற்பனையின் முழு வீச்சுடன் நம் அகத்தே இறங்கி, பிருதையின் கருவை அழிக்கவந்த மருத்துவச்சி நாகம் தீண்டி இறப்பது வரை, தொடர்ந்து வந்து பெரும் மழையாகப் பெய்து ஓய்கிறது. அபாரமான மனவெழுச்சியை தருகின்ற இப்புனைவின் வெளியில் சஞ்சரிப்பது வாசிப்பில் நிறைவைத் தருகிறது. அதைத் தொடர்ந்து குந்தி கர்ணனை ஈன்றெடுப்பதும், அரசுகளுக்கு இடையே நிலவும் அரசியல் சிக்கல்கள் குந்தியைப் பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொள்ள விழைவதும், குந்தி தன் குழந்தையை ஆற்றில் தவறவிடுவதுமான காட்சிகள் நீண்டதாக இருப்பினும் சலிப்பேற்படுத்தாத வகையில் அமைந்திருக்கிறது. முதல் மழையைப் போலவே நம் உள்ளத்தில் மனக்கிளர்ச்சியைத் தரும் காட்சியாக குந்தியின் தாய்ப்பால், நாயின் மூலமாக, கர்ணனின் வளர்ப்புத் தாய்க்கு போய்ச்சேர்வதைச் சொல்லலாம். இன்று நவீன யுகத்தில் தாய்ப்பாலை சேகரித்து வைத்து வேண்டும் போது வேண்டுமிடத்தில் பயன்படுத்துகிறோம். இதையே காவியச் சுவை நோக்கில் ஜெயமோகன் கையாண்டிருக்கிறார்.

அரசியல் காரணங்களுக்காக அஸ்தினபுரி காந்தாரத்தை நாடியது போல மார்த்திகாவதியும் அஸ்தினபுரியை நாடுகிறது. எனவே பாண்டுவுக்கும் குந்திக்கும் திருமணம் நடக்கிறது. திருதிராஷ்டிரன், பாண்டு இருவருக்குமான மணமங்கல இரவு காட்சிகளில் இரு ஜோடிகளுக்கிடையே நிகழும் உரையாடல்கள் நுட்பமானவை. “ஒரு பேரழகு கண்களால் தீண்டப்படவில்லை என்பதில் மகத்தான ஏதோ ஒன்று உள்ளது“ என்று காந்தாரியைப் பற்றிச் சொல்கிறான் பாண்டு. ஆனால் குந்தியோ வேறோர் ஆடவனால் தீண்டப்பட்டவள். எனவே இந்த உரையாடல்களில் விலகிவிலகிச் செல்கிறார்கள் பாண்டுவும் குந்தியும். மாறாக திருதிராஷ்டிரனும் காந்தாரியும் நெருங்கிநெருங்கி வருகிறார்கள். காந்தாரி வெகு இயல்பாக திருதிராஷ்டிரனிடம் தன்னை ஒப்படைத்துவிட, குந்தி பாண்டுவின் மனதைச் சோதித்து சந்தேகத்துடனே நெருங்க முயற்சிக்கிறாள். குந்தி குழந்தையுடன் வருவது மங்கலமானது என்று கம்சன் சொல்வதனால், தான் யாதவ குலத்தைச் சார்ந்தவள் என்பதால், குந்தியும் அதையே தனக்கு மனச்சமாதானமாகக் கொள்கிறாள். ஆனால் தற்போது ஷத்ரியகுலத்தில் மணம் புகுந்த பின் அதுவே அவளுக்கு சங்கடமாக, சிக்கலானதாக ஆகிவிடுகிறது. ஆகவே, அவளுக்கும் பாண்டுவுக்குமிடையே உள்ள தயக்கத்திற்கு, இடைவெளிக்கு இதுவே காரணமாகிறது.

இப்படியிருக்கும் இவர்களுக்குப் பிறக்கும் துரியோதனர்கள் கெட்டவர்களாவும் பாண்டவர்கள் நல்லவர்களாகவும் ஆகிறார்கள் என்பது விசித்திரம். சேடி ஒருத்தி பாண்டுவிடம், “நன்றும் தீதும் நாம் செய்யும் வினைப்பயன் மட்டுமே” என்று சொல்லும் போது அவன், “ஆம்... எளிதில் கடந்துசெல்ல அப்படியொரு ஒற்றை விடை இல்லையேல் வாழ்வே வினாக்களால் நிறைந்து மூடிவிடும்” என்கிறான். மகாபாரத கதாபாத்திரங்கள் பலரது வாழ்க்கையின் விசித்திரப் போக்கை, புரிந்து கொள்ள இயலாத இயல்பை வேறு என்ன சொல்லி நியாயப்படுத்த முடியும்?

நாவலில் வரும் நிலக்காட்சிகள் பரந்துபட்டதாக, அந்தந்த நாட்டின் சீதோஷ்ண நிலைக்குத் தக்கவாறு சித்தரிக்கபட்டிருக்கிறது. அவற்றினூடே கதாபாத்திரங்கள் மேற்கொள்ளும் பயணம் நம்மையும் அவர்களோடு கைகோர்த்து அழைத்துச் சென்று வியப்படை வைக்கிறது. கூர்ஜரத்தின் கடலும், காந்தாரத்தின் பாலைவெளியும், மார்த்திகாவதியின் கங்கையும் நம் நினைவில் நீங்காது நின்றுவிடுகின்றன. நாவலின் வாசிப்பில் கிட்டும், வாசிப்பின் மேன்மையை உணர்த்தும், இந்தக் கணங்களே புத்தகங்கள் இந்த மண் மீதில் நிலைத்திருப்பதற்கான நியாயத்தைப் பறைசாட்டுகிறது.

திருதிராஷ்ரன், பாண்டு, விதுரன் மூவரும் மூன்று வெவ்வேறு விதமான குணங்களுடன் தனித்தன்மைகளுடன் சித்தரிக்கபட்டிருக்கிறார்கள். திருதிராஷ்ரன் இசையில் நாட்டம் கொண்டவனாக இருக்க, பாண்டுவோ ஓவியத்தில் விருப்பம் கொண்டவனாக இருக்கிறான். தங்களிடம் உள்ள குறைகளை ஈடுசெய்யவே இவற்றின் பால் அவர்கள் லயித்திருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் மாறாக தாழ்ந்த குலத்தில் பிறந்ததால், தான் என்றாவது யாராலாவது அவமானப் படுத்தப்படலாம், என்ற அச்சத்தில் இருக்கும் விதுரன் அரசியலை கைக்கொள்கிறான். பார்க்கப் போனால் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுள்ளே அச்சத்தைப் புதைத்து மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதோடு, அனைவரும் தாங்கள் விரும்புவதை தங்கள் சுயநலத்திற்கு ஏதுவானதை நோக்கி மட்டுமே நகர்கிறார்கள்.

மழை எனும் ஓவியத் திரையினூடாக மகாபாரத நிகழ்ச்சிகள் காட்சியாக, அதன் பின்னனி இசை என மழையே ஒலிக்க, நம் உள்ளத்தில் பரவசத்தை கிளர்ச்சியை மனவெழுச்சியை தருவதாக அமைந்திருக்கிறது மழைப்பாடல். மழைப்பாடலின் இசையாக திருதிராஷ்டிரனும், அதைத் தீட்டும் ஓவியனாக பாண்டுவும் நாவலின் இப்பகுதிகளில் வலம்வருகிறார்கள். இந்த இசையும் ஓவியமும் இயைந்திருந்த அழகையே மழைப்பாடல் இசைக்கிறது. அந்த இசையில் அபஸ்வரத்தைப் போலவும், ஓவியத்தில் பொருந்தா வண்ணம் போலவும் சகுனி அஸ்தினபுரியில் காலடி எடுத்து வைக்கிறான்.

(தொடரும்...)
2. இடியும் மின்னலும்
3. கண்ணீர் மழை
4. பிறவிப் பெருமழை

Related Posts Plugin for WordPress, Blogger...