September 8, 2014

தாயார் பாதம் -ஜெயமோகன்

மனித மனம் மிகவும் மென்மையானது; பூவைப் போன்றது. அதைக் காயப்படுத்த சிறு சொல் அல்லது செய்கை போதுமானது. அது மனதில் ஏற்படுத்தும் வடு என்றென்றும் ஆறாது, அழியாது, வாழும் காலம் வரை தொடர்ந்து வந்து ஏதோ ஒரு தருணத்தில் வெளிப்பட்டு பாதிக்கப்பட்டவரை முடக்கிவிடும். ஒருவர் மற்றொருவரது மனதைக் கையாள்வது கண்ணாடி பாத்திரத்தை கையாள்வதற்கு ஒப்பானது. கைதவறினால் சிதறிவிடும்; மீண்டும் ஒட்டுவது எளிதல்ல. ஆண், பெண் என்ற பேதத்திலிருந்து பல்வேறு காரணிகளை மையப்படுத்தி ஒருவர் மற்றொருவரை காயப்படுத்துவது, இகழ்வது, அவமதிப்பது என்பது மனிதர்களிடையே எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கணவனால் தனக்கு நேர்ந்த துயரத்தையும் துன்பத்தையும் மனதுக்குள் புதைத்து வைத்தபடி வாழ்க்கை முழுவதும் புழுங்கிய ஒரு எளிய பெண் உள்ளத்தின் கதை ஜெயமோகனின் தாயார் பாதம். அவரது அறம் வரிசைக் கதைகளில் என்னை மிகவும் பாதித்த மற்றொரு கதை.

தன் துயரத்தை யாரிடமும் வெளிக்காட்டாத அந்தப் பாட்டியின் உள்ளத்தின் வேதனை நம்மை சங்கடப்படுத்துவது. ஏறக்குறைய பெற்றோரை இழந்துவிட்ட நிலையில் தன் துயரத்தை யாரிடமும் பங்கிட்டுக் கொள்ளாத அந்த உள்ளத்தின் பெருமையும் அற உணர்வும் போற்றுதற்குரியது. வேலை என்ற கர்மயோகத்தை மட்டுமே செய்தபடி தன் வாழ்வை நடத்தும் அந்தப் பாட்டியின் தியாகம் மிகவும் உயர்வானது. தனக்கான ஆசைகள், அபிலாசைகள் ஏதுமின்றி கணவனுக்காக, குடும்பத்துக்காக பொறுமையாக வாழும் பெண்கள்தாம் எத்தனை எத்தனை பேர்?

சங்கீதம் எத்தனைதான் உயர்வாக இருந்தாலும் சகமனிதன் அதைவிட உயர்ந்தவன் இல்லையா? அவனைப் பேணாமல் சங்கீத்தைப் பேணுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? சங்கீதம் பெண்ணைப் போல உயர்ந்தது, தூய்மையானது. அதனுடன் ஒப்பிடும் போது, இலக்கியம் ஆணைப் போல அவ்வளவு உசந்ததும் சுத்தமானதும் அல்ல என்பதே ராமன் பேச்சில் வெளிப்படும் குறிப்பு. இரண்டும் பொருத்தமற்ற மனிதர்களிடம் சேர்ந்திருப்பது வாழ்வின் முரண்களில் ஒன்று. தாயார் பாதம் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளும் தந்தை பாதம் உலகத்தையே அழிக்கும் என்பது ஒருவகையில் பெண்ணின் மீதான ஆணின் அடக்குமுறைதான். இப்படியாக பலவும் சொல்லி அவளைக் கட்டிப்போடும் ஆணின் தந்திரம்தான். இருந்தும் இரண்டுக்கும் இடையே இயல்பாக அடிப்படையில் ஒரு வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு ஆண் கோபப்படும் போது சட்டென காலால் எட்டி உதைப்பான். ஆனால் ஒரு பெண் அப்படிச் செய்வதில்லை.

கணவன் தன் தலை மீது கொட்டிய மலத்தால் பாட்டியின் மனதில் ஏற்படும் அருவருப்பு வீட்டையும் தன்னையும் எப்போதும் சுத்தப்படுத்தும் மனநோயாக மாற்றுகிறது. அந்த அருவருப்பு அவர் மீது கவிழ்க்கப்பட்ட மலத்தால் மட்டும் விளைந்ததல்ல. மாறாக மனைவியை ஒரு பொருட்டாக மதிக்காத கணவனின் புறக்கணிப்பு, அவமதிப்பு எனும் அருவருப்பால் ஏற்பட்டது. இப்படியான ஒரு கணவனுக்காகத்தான் ஒவ்வொரு பெண்ணும் தவம் இருக்கிறாள்! அதுவும் ஒற்றைக் காலில் நின்று! ஒருவேளை இப்படியான ஒரு கணவன் தனக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவா?

இறுதியில் பாட்டி மனப்பிறழ்வின் உச்சத்திற்குச் செல்வதும், தேளைக் கடிக்கவிட்டு தன் உயிரை மாய்த்துக் கொள்வதும் நம்மை அதிர்ச்சியில் உறைய வைப்பது. “பொணத்தை மல்லாக்கப் போட முடியலை. கூனும் வளைவும் அப்டியே இருக்கு. பக்கவாட்டிலே போட்டப்ப ஏதோ கைக்குழந்தை வெரல் சூப்பிண்டு தூங்கற மாதிரித்தான் இருந்தது” என்ற வரிகள் நம் உள்ளத்தில் ஏற்படுத்தும் துக்கத்தின் அளவு மிகப்பெரிது. அந்தக் கூனும் சுருங்கிய உடலும் தன் உள்ளத்தால் நாளும் வெம்பிச் சுருங்கியதன் வெளிப்பாடல்லவா? தன் நடத்தை, சொல் சக மனிதனை வேதனைப்பட வைக்கும் என்பதை ஒரு மனிதன் எப்போதுதான் புரிந்து கொள்வான்?

தன் தாத்தா சொல்லிக் கொடுத்ததால்தான் தனக்கு சங்கீதம் வரவில்லை என்று ராமன் சொல்வது முக்கியமானது. ஏனெனில் அவர் குடும்பத்தில் எல்லோரும் கற்றுக் கொள்கிறார்கள். காரணம் யாருக்குமே பாட்டியை ஒரு மனித ஜன்மமாக நினைத்துப் பார்க்கத் தோன்றவில்லை என்பதுதான். அதைப் பற்றி லவேசமும் குற்ற உணர்வும் கூட யாரிடத்தும் இல்லை. ஆனால் ராமனிடம் மட்டும்தான் தாத்தாவால்தான் பாட்டியின் வாழ்க்கை அப்படி இருந்தது என்ற உணர்வு அவரை வாட்டி வந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்கிறோம். அவளிடமிருந்த சங்கீதத்தை பறித்து அவளை ஒன்றுமில்லாது செய்த மனிதரிடம் நாம் சங்கீதம் கற்றுக்கொள்வதா என்ற கோபம் ராமனின் ஆழ் மனத்தில் இருந்து செயல்படுகிறது. அந்தத் தாக்கமே அவரின் முதல் கதையாக பாட்டியைப் பற்றி எழுதச் செய்திருக்கிறது.

உரையாடல்கள் மூலமாகவே கதையை நகர்த்திச் சென்று, பாட்டியைப் பற்றி அதிகம் விவரிப்புகள் இல்லாமலும், அவரின் மனக் கஷ்டத்தை வெளிப்படையாகக் காட்டாமலும் அவரது வேதனையை, துயரத்தை நாம் முழுமையாக உணரும்படி செய்திருப்பது இந்தக் கதையின் சிறப்பு.

Related Posts Plugin for WordPress, Blogger...