மழைப்பாடல் கிடைத்தது!

ஜெயமோகனின் மழைப்பாடல் இரண்டு தொகுதிகள் இன்று கிடைத்தது. பல நாட்கள் காத்துக்கிடந்து இன்று கையில் பெற்றதும் உள்ளம் குதூகலித்தது! கைகளில் வைத்து முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்து, ஒரு குழந்தையைக் கைகளால் தடவும் வாஞ்சையுடன் தடவி, குழந்தையின் மணத்தைப் போல அதன் பக்கங்களின் வாசனையை நுகர்ந்து, ஆழ்ந்து அனுபவித்தேன். இப்போதே மெல்லிய சாரலாய் என் மனக் கண்ணில் மழையைப் பார்த்து அதனூடே ஒலிக்கும் இனிமையான பாடலைக் கேட்கிறேன். பக்கங்கள் சரியாக இருக்கின்றனவா என்று சோதித்தேன். நற்றிணை பதிப்புலகில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. 

எப்போது படிக்கத் தொடங்குவேன் என்பதைச் சொல்ல முடியாது. இன்றே கூட ஆரம்பித்துவிடலாம்! எனக்காக ஒரு அற்புத புனைவின் வெளி காத்திருக்கிறது. அந்த வெளியில் பறக்கும் தேரென வெண்முரசும், அதில் பூட்டிய வெண் குதிரைகளாக மழைப்பாடலின் இரு தொகுதிகளும் இருக்கின்றன! அவற்றின் பிடறிகளைத் தடவிக்கொடுத்து பரவசம் அடைந்தவனாய் காற்றெனப் பறக்கும் கணத்திற்காய் காத்திருக்கிறேன். நான் நானாக இல்லாமல் மகாபாரத மாந்தர்களில் ஒருவனாகி கால வெளியில் சஞ்சரிக்கும் விந்தை வெண்முரசின் வாசிப்பில் நிகழும் அற்புதம். படிக்கும் போது நான் கவலைகள் அற்றவன். என்னை வெல்பவன் இந்த உலகில் யாரும் இல்லை. நான் விஸ்வரூபம் எடுத்த கிருஷ்ணன். அப்போது எல்லாமே என் காலடியில்! இந்த உலகம் எனக்குச் சின்னஞ் சிறிய விளையாட்டுப் பொருள். 

Related Posts Plugin for WordPress, Blogger...