“என் எழுத்து மனிதர்களுக்குச் செய்யும் மரியாதை”

காலச்சுவடு செப்டம்பர் 2014 இதழ் 177ல் தேவிபாரதியும் சுகுமாரனும் சேர்ந்து செய்த அசோகமித்திரன் அவர்களின் “என் எழுத்து மனிதர்களுக்குச் செய்யும் மரியாதை” என்ற நேர்காணலும், அவரது சிறுகதை, அவரைப் பற்றிய கட்டுரை, அவரது நாவல் பற்றிய விமர்சனம் என்று பலவும் வெளியாகியிருக்கிறது. நேர்காணலில் சில கேள்விகளுக்கான அவரது பதில்களை புத்தக அலமாரி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

சொல்வனத்தில் வந்த கட்டுரை ஒன்றில் ஒரு குறிப்பு இருக்கிறது. ‘எனக்கு இந்த ஆன்மீகம், தேடல் போன்ற வார்த்தைகளிலெல்லாம் நமபிக்கையில்லை. சொல்லப் போனால் அந்த மாதிரி வார்த்தைகளில் ஒரு பயம் பாருங்கோ. நான் ஒரு நல்ல டூத் பேஸ்ட்டையே ரொம்ப காலமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். அதுவே இன்னும் கிடைத்தபாடில்லை. இதில் ஆன்மீகத்தை எப்படித் தேடுவது’ என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் கதைகளில் பலவற்றிலும் ஒரு ஆன்மீக விசாரம் இருக்கிறது. கதாபாத்திரங்களுக்கோ அல்லது எழுத்தாளருக்கோ. நீங்கள் ஆன்மீகம் என்று எதைக் கருதுகிறீர்கள்?

ஆன்மீகம் என்றால் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அது தெரியவில்லை என்று ஒத்துக்கொள்வதில் எனக்குத் தயக்கமும் இல்லை. ஆன்மீகவாதிகள் நிறைய பேரைப் பார்த்துவிட்டேன். எல்லோரும் ஏதோ ஒரு இடத்தில் நமக்குப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக ஆகி விடுகிறார்கள். நான் சொன்ன இந்தச் சித்தர் செத்துவிட்டார். அவருடைய குழந்தைகள் செத்துப் போய்விட்டார்கள். அந்தப் பெண் பட்டினி கிடந்தே செத்துவிட்டாள். நான் அவளைப் பார்த்தேன். அவளை சித்தருடைய மகளாகத்தான் பார்த்தேன். அந்தப் பெண்ணுக்கு பணம் கொடுக்க வேண்டுமென்று தோன்றவில்லை. அன்றைக்கு கும்பகோணத்தில் மழையான மழை. அந்தப் பெண்ணுக்கு அப்போது நூறு ரூபாயாவது கொடுத்திருக்கலாம். நான்கு நாள்கள் சாப்பிட்டிருப்பாள். ஆனால் நான் கொடுக்கவில்லை. பிறகு அதைப் பற்றி யோசித்தேன். கொடுக்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை? அதை வருத்தம் என்று சொல்கிறீர்களா? இது மாதிரி சின்னச் சின்ன விஷயங்கள். ஆக ஆன்மீகம் என்று எதை வரையறுப்பது?

பலதரப்பட்ட மனிதர்கள் பற்றி எழுதிய நீங்கள் புராண இதிகாச பாத்திரங்களைக் கையாளாமல் இருப்பதற்குக் காரணம் உண்டா?

என்னைப் புராணங்கள் பிரமிக்க வைக்கின்றன. இதிகாசம் என்னை மலைக்க வைப்பதோடு பல இடங்கள் புரியாமலும் உள்ளன. ஆரம்ப நாட்களிலிருந்தே நான் புரியாததைத் தவிர்த்திருக்கிறேன். என்வரை இதிகாசங்கள் புரிந்துவிடக் கூடாத புதிர்கள். சில சமிக்ஞைகளை உணரலாம். ஆனால் இதிகாசங்களின் கால அளவை, தூர அளவை, தர்க்கம் நம் அறிவுகொண்டு கற்பனை செய்து கொள்ளக்கூடியது அல்ல என்று நம்புகிறேன். இது கிரேக்க இதிகாசங்களுக்கும் பொருந்தும். ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது விட்டுவிட வேண்டும். விட்டுவிடுவது, இந்தியாவரை நாத்திகர்களுக்கு சாத்தியமில்லை. இராமயணத்து தசரதர் 60000 ஆண்டுகள் ஆண்டவர். 60000 மனைவிகள் கொண்டவர், இவ்வளவு நாட்கள் ஆண்டுவிட்டு அவருக்கு மகன் இல்லை என்று புத்திரகாமேஷ்டி யாகம் புரிந்து மூன்று மனைவிகள் மூலம் நான்கு மகன்கள் அடைகிறார். அந்த இதிகாசக் களம் இந்தியா முழுதும் பரவி இருக்கிறது. அதே போல பாரதமும் இந்தியா முழுதும் நிகழ்ந்த கதையாக இருக்கிறது. யுத்தங்களில் நால்வகைப் படைகள். இதில் தேர்ப்படை எப்படி இயங்கியது? வழியெல்லாம் மாண்டவர்கள், கைகால் இழந்து துடிப்பவர்கள்–இவர்கள் மீது எப்படி ஓட்டிச் சென்றிருக்க முடியும்? நமக்குத் தெரிந்த தர்க்கத்தைக் கொண்டு இதெல்லாம் புரிந்துகொள்ள முடியாது. அப்புறம் விஸ்வரூபம்.

பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவர்களாகப் படைக்கப்பட்டவர்கள். ஒரு மகாமனிதர் இவ்வளவு நுணுக்கமாகப் படைத்த பாத்திரத்தை நான் பயன்படுத்துவது நியாயமாகப் படவில்லை. ‘இரண்டாம் இடம்’ என்று பீமனை வைத்தோ பரதனை வைத்தோ எழுத முடியாது. வியாசரும் வால்மீகியும் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் எழுதியிருக்கிறார்கள். படிக்கப் படிக்கத் திகட்டாதவை. என்னால் என்ன கூட்ட முடியும்?

இதெல்லாம் நான் எனக்கு வகுத்துக்கொண்டவை. இதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்த மாட்டேன். இறுதியாக ஒரு கருத்து. எல்லா நேர்காணலிலும் கேள்வி கேட்பவர் அவர் சிந்தித்து அடைந்த முடிவுகளின் அடிப்படையில்தான் கேளவி கேட்பார். தவறில்லை. ஆனால் என்வரை ஆன்மீகம், முன் ஜன்மம், மறு ஜன்மம், கர்மம் எல்லாமே நிழலாக உள்ளவை. இவற்றுக்கு எனக்குப் பதில்கள் இல்லை. இன்று ஒருவர் வாழ அன்றாட வினை-விளைவு போதுமானது. இது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் செயல்படுகிறதா? இல்லை. காரணம், நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாத காரணிகள். எனக்கு ஆன்மீக வேட்கை உள்ளது என்பதே சுயமயக்கம். என்னால் எனக்குத் தெரிந்தது மேல்தான் வேட்கை கொள்ள முடியும்.

அப்படியானால் எழுத்தாளனாக இருப்பது என்றால் என்ன?

அதை நான் சொல்ல மாட்டேன். எழுத்தாளன் எதைச் சொன்னாலும் சுவாரசியமாக இருக்க வேண்டும். நம்பும்படியாக இருக்க வேண்டும். தி.ஜ.ரங்கநாதன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தாரே, அவருக்குக் கல்கியைப் பிடிக்காது. என்னைப் பார்க்கும்போது இவருக்குக் கல்கியைப் பிடிக்குமாம் என்று கிண்டல் செய்வார். நான் இப்படித்தான் என்று கிடையாது. ஜெயமோகன் எழுதிய மகாபாரதத்தை என் மனைவியிடம் கொடுத்தேன். அவளால் படிக்க முடியவில்லை. அதில் பத்துப் பதினைந்து பகுதிகள். அதற்கு இத்தனை விவரிப்புத் தேவையா? ராஜாஜி மகாபாரதத்தை 250 பக்கங்களில் எழுதியிருப்பார். அதற்கு இருக்கிற வாசகப் பரப்பு இதற்கு இருக்குமா? மகாபாரதத்தைப் பிரச்சாரம் செய்ய நான் விரும்பினால் இதைப் பரிந்துரைக்க முடியாது. இதில் வேறு என்னென்னவோ குழப்பங்கள் இருக்கின்றன. நாகர்கள் நாகர்கள் என்று சொல்கிறார். நாகர்களுக்கு அரண்மனையெல்லாம் கிடையாது. ஆனால் அவர் அதற்கெல்லாம் ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்கிறார். மலையாள மகாபாரதத்தில் இருக்கிறது என்கிறார்.

இன்று தலைமுறைகளைப் பற்றிய நாவல்கள் வருகின்றன. ஒரு நூற்றாண்டு. இரண்டு நூற்றாண்டு வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார்கள். நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இரண்டு நூற்றாண்டுகள் அல்ல, ஆறு நூற்றாண்டுகளைப் பற்றிக்கூட எழுதுகிறார்கள். சு.வெங்கடேசன் நாவல். பெயர் நினைவுக்கு வரவில்லை.

‘காவல் கோட்டம்.’

அந்த மாதிரி ரொம்பவும் பின்னோக்கியெல்லாம் போக முடியாது. அந்த நாள்களில் இப்படியெல்லாம் இருந்தது என்று வெகு சுலபமாக எழுதி விடுகிறார்கள். எனக்கு ரொம்பப் பயமாக இருக்கிறது. நிறையத் தப்பபிப்ரயாமெல்லாம் உருவாகிறது. எனக்கு நேற்று பற்றியே சந்தேகம். இன்றைக்கு நீங்களிருவரும் வந்திருக்கிறீர்கள். அதுவரை உண்மை.

ஆனால் பெண் பாத்திரங்கள் அதில் துலக்கமாகிவிடுகின்றன. ‘தண்ணீரில்’ வரக்கூடிய சாயா, டீச்சர், மானசரோவரில் வரக்கூடிய ஜம்பகம் எல்லோருமே மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் சக்தியின் குறியீடுபோல் தோன்றுகிறது.

எனக்கு நீங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. நீங்களாக அதிகப்படியான அர்த்தத்தை ஏற்றிவிடுகிறீர்கள். அவை எல்லாம் வெறும் கதைகள், ஐயா. அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் இல்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...