வெண்முரசு கேள்விகள்

ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தைப் பார்த்தால் தினமும் வெண்முரசு பற்றி வரும் கேள்விகள்தான் எத்தனை எத்தனை? அது ஏன் இப்படி? இது ஏன் இப்படி? அங்கே அப்படி? இங்கே ஏன் இப்படி? என்று கேள்வி மேல் கேள்விகள். பாவம் அவரும் தினம் தினம் பதில் சொல்லி அலுத்துவிட்டார்! ஆனாலும் நாம் கேள்வி கேட்பதை நிறுத்திய பாடில்லை! ஏன் கேள்வி இல்லாமல் அந்த நாவலை வாசிக்க முடியாதா? தங்களுக்குத் தெரிந்ததை வைத்து, படித்ததை வைத்து, கேள்விப்பட்டதை வைத்து, யாரோ சென்னதை வைத்து இப்படியாக எத்தனையோ வைத்துகளை வைத்து கேள்விகளைக் கேட்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். ஐயா! இது ஜெயமோகன் அவர்களின் மகாபாரதம். உங்களுக்குத் தெரிந்ததை, அறிந்ததை ஏன் ஜெயமோகன் மெனக்கெட்டு எழுதவேண்டும்? அதற்கு அவர் தேவையில்லையே?

தாங்கள் கேட்கும் கேள்விக்கு ஏற்கனவே தங்களின் பதில்களைத் தயாராக வைத்திருப்பவர்கள், ஜெயமோகன் அதே பதிலைச் சொல்வார் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவரிடமிருந்து வித்தியாசமான பதில் வரும்போது ஒன்று ஏமாந்து போகிறார்கள் அல்லது அதிருப்தி அடைகிறார்கள். ஒரு படைப்பை முன் முடிவுகளோ கேள்விகளோ இன்றி வாசிக்க முதலில் கற்கவேண்டும். கேள்விகள் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அது படைப்பைப் பற்றியதாக மட்டுமே இருக்கவேண்டும். அதைவிடுத்து வியாசரின் மகாபாரதத்தோடு ஒப்பிட்டு கேள்விகள் கேட்கக் கூடாது. ஜெயமோகன் வியாச பாரதத்திற்கு உரையோ விளக்கமோ எழுதவில்லை என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள். அதனால்தான் அவர்கள் மனம் கேள்விகளால் நிரம்பியுள்ளது.

சிலர் தாங்கள் அதிபுத்திசாலிகள் என்று நிரூபிக்க கேட்கிறார்கள். பலர் தாங்கள் அறியாததால் கேட்கிறார்கள். மேலும் பலர் கேள்விகள் கேட்பது தங்கள் உரிமை என்பதால் கேட்கிறார்கள். அறியாமையால் கேள்விகள் கேட்பாரும் உண்டு. எனவே நமது மனோபாவம் எப்போதும் கேள்விகள் கேட்பதிலேயே இருக்கிறது. சிலர் அவரது புனைவுக்குள் மூக்கை நுழைத்து ஏன் இப்படி மாற்றி எழுதியுள்ளீர்கள் என்கிறார்கள். நீங்கள் எழுத நினைப்பதையெல்லாம் அவரிடம் கேட்டு அவரை ஏன் இம்சிக்கிறீர்கள்? அதற்கு பதிலாக நீங்களே ஒரு மகாபாரதத்தை ஏன் எழுதக்கூடாது? ஐயா! அவரைக் கொஞ்சம் இயல்பாக எழுத விடுங்கள். உங்களின் கேள்விகள் அவரின் எழுத்தாற்றலைத் திசை திருப்பி விடுமோ என்று அஞ்சுகிறேன். எல்லோரின் கேள்விகளையும் திருப்தி செய்வதென்றால் அது ஜெயமோகனின் மகாபாரதமாக இருக்காது. முடிந்தவரை தகவல் பிழைகளை தவிர்ப்பதாக அவர் குறிப்பிடுகிறார். எனவே வாசகர்கள் இத்தகைய கேள்விகளை விடுத்து நாவலைப் பற்றி மட்டும் பேசுவது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...