யுதிஷ்டிரனும் நாயும்

கடந்த ஐயாயிரம் வருடங்களாக யாரும் சரியாகப் புரிந்துகொள்ளாத மிகவும் அழகான ஒரு கதை இது. நான் கிருஷ்ணனைப் பற்றியும், தனது சொந்த சகோதரர்களுக்கு எதிராக போரிடுவதற்குக் கிருஷ்ணனால் தூண்டப்பட்ட அவனது பக்தனான அர்ச்சுனனைப் பற்றியும் சொல்கிறேன். போர் நடைபெற்று கோடிக்கணக்கான மக்கள் இறந்துபோனார்கள். ஆனால் யாரும் இங்கேயே நிரந்தரமாக இருக்க முடியாது. எனவே அர்ச்சுனனும் அவனது நான்கு சகோதரர்களும், திரௌபதியும் அவர்களுக்கான நேரம் வந்தபோது இறந்து போகிறார்கள். இறந்த பிறகு அவர்கள் அனைவரும் சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள். ஆனால் அது மிகவும் உயரத்திலும், பனி அடர்ந்தும் இருந்ததால் போகப்போக ஒரு சகோதரன் விழுந்து பனியில் காணாமல் போக, அடுத்த சகோதரனும் விழ, அவர்களின் மனைவியும் விழுகிறாள்.

யுதிஷ்டிரன் மட்டும் – நேர்மையானவன் என்று அறியப்படும் மனிதன் - அவனது நாயுடன் சொர்க்கத்தின் வாசலை அடைகிறான். கதவு திறக்கப்பட்டு காவலாளி, “நீங்கள் உள்ளே வரலாம், ஆனால் நாய்கள் சொர்க்கத்தில் அனுமதிக்கப் படுவதில்லை” என்றான். யுதிஷ்டிரன், “என்னுடைய சகோதரர்கள், என்னுடைய மனைவி எல்லோரும் உருகி பனியில் காணாமல் போய்விட்டார்கள். இந்த நாய் மிகவும் நேர்மையானதாக இருந்ததால் இறுதியில் எனக்குத் துணையாக வந்திருக்கிறது. நான் இதை வெளியே விட்டுவிட முடியாது. நீ உன்னுடைய கதவைச் சாத்திக்கொள். நானும் உள்ளே வரப்போவதில்லை” என்றான்.

அந்தக் காவலாளிக்கு சிக்கல் ஏற்பட்டது. அவன் தன்னுடைய தலைவனைக் கேட்க, அவன், “இருவரையும் உள்ளே வரவிடு ஏனெனில் யுதிஷ்டிரன் அவனுடைய சொல்லின்படி நடப்பவன். ‘நாங்கள் இருவரும் உள்ளே செல்வோம் அல்லது இருவரும் வெளியே இருப்போம்’ என்கிறான் அவன். இப்போது நாம் யுதிஷ்டிரனை வெளியே அனுப்பினால் பிரச்சினை வரும். கடவுள் இதை அறிந்தால் அவரின் முழு ஆட்சி முறையும் பிரச்சினைக்குள்ளாகும். அதனால் நல்லது... இந்த நாய் என்ன செய்தது? பார்க்கப் போனால் இந்த நாய் யுதிஷ்டிரனின் சகோதரர்கள், மனைவியைவிட நேர்மையானதாகத் தெரிகிறது” என்றான்.

அவர்கள் உள்ளே அனுமதிக்கப் பட்டனர்.

நீங்கள் நேர்மையானவராக இருந்தால் – நீங்கள் நாயாக இருந்தால்கூட - சொர்க்கத்தின் கதவு திறக்கும் ஆனால் நீங்கள் நேர்மையாக இல்லாதபோது, நீங்கள் அர்ச்சுனனைப் போல உலகத்திலேயே சிறந்த வில்லாளியாக இருந்தாலும் அல்லது பீமனைப் போல மிகச்சிறந்த மல்யுத்த வீரனாக இருந்தாலும் அதனால் பயனில்லை என்பதாகவே இது புரிந்து கொள்ளப்படுகிறது. உங்களின் இந்தத் தகுதிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் நீங்கள் பாதிவழியில் காணாமல் போய், முழுவதுமாகக் கரைந்து இல்லாமல் போவீர்கள். இதுவே இந்துக்கள் இந்தக் கதையை விளங்கிக்கொள்ளும் விதம். ஆனால் நான் இந்த விளக்கத்தால் திருப்தி அடையவில்லை.

என்னுடைய விளக்கம், என்னுடைய சொந்த உள்ளுணர்வின் அனுபவத்தின் அடிப்படையில் அமைந்தது. நீங்கள் உண்மையான சொர்க்கத்திற்கு அருகே வரும்போது, உங்கள் ஆன்மாவின் இருப்பு உருகத்தொடங்கி, இல்லாமலாகிவிடும். உண்மையில், அந்த நாயும் யுதிஷ்டரனும் உருகாமல் ஆத்மாவாக அங்கே செல்கிறார்கள். அவர்கள் சத்தியத்தின் தேடல் என்பதன் நிஜ அர்த்தத்தை விளங்கிக் கொள்ளவில்லை. சொல்லப்போனால் அந்த நாய்க்கு சத்தியத்தின் மீது எந்த அக்கறையும் இல்லை எனவே அது மறையவேண்டிய தேவை இருக்கவில்லை. அது சத்தியத்தைக் கடந்து செல்கிறது அல்லது சத்தியத்தின் மீது சிறுநீர் கழிக்கிறது – அதற்கு சத்தியம் என்பதன் மீது எந்தப் பிடிப்பும் இல்லை. நல்லதாக ஒரு இடம் கிடைத்தால் அது தயக்கமின்றி சிறுநீர் கழிக்கவே செய்யும்!

யுதிஷ்டிரனை, எல்லா இந்துக்களும், ஒரு நேர்மையான மனிதன் என்கிறார்கள். நான் அவனை அப்படியான ஒரு மனிதனாகக் கருதவில்லை. அவனை தர்மன் – மதத்திற்கு தலைவன் என்கிறார்கள். நான் அவனை ஆன்மீகமான மனிதன் என்று கருதவில்லை ஏனெனில் அவன் ஒரு சூதாடி. தன் நாட்டையும், சொத்தையும், தன்னிடம் இறுதியாக எஞ்சிய – அது அவனுடைய உடமையாக இல்லாத போதும், திரௌபதி ஐந்து சகோதரர்களும் உரியவள்... அவன் தன் மனைவியை பந்தயம் வைத்து அவளை இழக்கிறான். விசித்திரமான மனிதர்கள்! கருணையே இல்லாத, சக மனிதன் மீது, சொந்த மனைவி மீது எந்த மரியாதையும் வைக்காத அவனை, மதத்தின் தலைவன் என்கிறார்கள்.

ஆக, என்னுடைய உணர்வு என்னவெனில் அந்த இருவரும் எந்த வாசலை அடைந்தார்களோ அது உண்மையான சொர்க்க வாசலாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அவர்கள் போலியான வாசலையே அடைகிறார்கள், அது சொர்க்கத்தின் வாசல் அல்ல.

உண்மையாகவே நேர்மையனவர்கள், குறிப்பாக அர்ச்சுனன்... அவன் போரை விரும்பவே இல்லை ஆனால் கிருஷ்ணன்தான், இது கடவுளின் விருப்பம் என்று சொல்லி, அவனை கட்டாயப்படுத்தி போரில் ஈடுபடச் செய்கிறான். வெற்றி பெற்றபோதும் அவன் மகிழ்ச்சி அடையவில்லை. அவன் அதற்குப் பிறகு சிரிக்கவே மறந்து போனான் ஏனெனில் அவன் தன்னுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோரையும் கொன்றவன். அவர்கள் எதிர்தரப்பிலிருந்து கலந்துகொண்டதால் அல்லது தன் சார்பாக கலந்துகொண்டதால் எதிர்தரப்பு அவர்களைக் கொன்றது. துயரத்தில் வாழ்ந்த அவன் இந்த முழு முட்டாள்தனத்தை உதறிவிட்டு இமயமலைக்குச் சென்று தியானம் செய்யவே விரும்பினான்.

நடந்த மாபெரும் படுகொலையில் கிருஷ்ணன்தான் குற்றவாளி, ஏனெனில் அர்ச்சுனன் இல்லாமல் இந்தப் போர் நடந்திருக்க முடியாது. அப்போது அவனது நான்கு சகோதரர்களும் போர் தொடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டிருப்பார்கள். அர்ச்சுனன் இல்லாமல் அவர்களால் வெற்றி பெற முடியாது. வெற்றி கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவன் அர்ச்சுனனே.

என்னுடைய கருத்துப்படி, நீங்கள் சத்தியத்துக்கு அருகே செல்லும்போது, நீங்கள் உருகத்தொடங்கி காணாமல் போய்விடுவீர்கள். அப்போது சத்தியம் கண்டு கொள்ளப்படும் ஆனால் நீங்கள் இல்லாமல் போவீர்கள்.

Osho -Reflections on Kahlil Gibran’s The Prophet

குறிப்பு: சொற்பொழிவுக்கு இடையே ஓஷோ சொல்லும் கதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றைத் தமிழாக்கும் என் முயற்சியில் இது ஐந்தாவது கதை.

Related Posts Plugin for WordPress, Blogger...