September 3, 2014

சிந்தனைகள்: கிருஷ்ணனுக்கும் ஓஷோவுக்கும் இடையே

ஜெயமோகனின் நீலம் நாவலுக்கு ஷண்முகவேலின் கிருஷ்ணன் ஓவியங்கள் என் மனதை மயக்கின. மனம் இயல்பாக கிருஷ்ணனை நோக்கித் தாவி ஓடியது. அப்படி ஓடியபோது பின்னாலேயே ஓஷோவின் நினைவுகளும் தொடர்ந்தன. இருவரும் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள். கிருஷ்ணனைப் பற்றிய நினைவுகளில் தவிர்க்க முடியாதவாறு ஓஷோவும் இடம் பெற்றுவிடுகிறார். காரணம் கிருஷ்ணனை நான் முழுவதுமாகப் புரிந்துகொண்டதே ஓஷோவின் மூலமாகத்தான். 

கிருஷ்ணன் மீது மயக்கம் கொள்ளாதவர் என்று யாருமே இல்லை. கிருஷ்ணன் எனும் பெயரே வசீகரம் கொண்டது. வாழ்க்கையை அதன் எல்லா பரிணாமத்துடன் ஏற்றுக்கொண்டவன் அவன். இது அல்லது அது என்ற தேர்வுக்கே அவன் வாழ்வில் இடமில்லை. எல்லாவற்றையும் ஏற்று அதனூடே பயணித்து வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை புரிந்துகொண்டு, வாழ்க்கையை அதன் நிறை குறைகளோடு ஏற்றுக்கொண்டு நிறைவு காண்பதுதான் அவன் கொள்கை. எனவே நாம் அவனைப் புரிந்துகொள்வது கடினம். கிருஷ்ணனைப் பற்றிய விவாதமாக அங்கு ஏன் இப்படிச் செய்தான்? இங்கே ஏன் அப்படிச் செய்தான்? என்று எண்ணற்ற கேள்விகள் நம் உள்ளத்தில் ஊசலாடும். ஆனால் அதற்கான பதில்களைக் கிருஷ்ணனிடம் தேடினால் நாம் ஏமாந்துதான் போவாம். அதற்கான பதில்கள் அவனிடம் இல்லை என்று அர்த்தமல்ல மாறாக அவனிடம் கேள்விகளே இல்லை என்பதுதான் அதன் பொருள். அவன் யாருடனும் ஒப்பு நோக்கிப் பேசப்படக்கூடியவன் அல்ல. ஒப்புவமையற்ற தனியன் அவன். அவனுக்கு நிகராக நாம் அவனை மட்டுமே சொல்லமுடியும். 

கிருஷ்ணனைப் பற்றி நாம் அறிந்துகொள்ள மிகச் சரியான வழி ஓஷோதான்! அவர் ஒருவர் மூலமாகத்தான் நாம் கிருஷ்ணனை முழுமையாக அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடியும். மற்றவர்கள் கிருஷ்ணனை தங்கள் விருப்பம் போல் எடுத்துக்கொண்டு சிலாகிக்கிறார்கள். ஒருவருக்கு குழந்தைக் கிருஷ்ணன் பிடிக்கிறது. மற்றொருவருக்கு வாலிபக் கிருஷ்ணன் பிடிக்கிறது. வேறு ஒருவருக்கு மகாபாதரதக் கிருஷ்ணன் பிடிக்கிறது. இப்படிப் பகுதி பகுதியாகவே எல்லோரும் கிருஷ்ணனை அறிகிறார்கள்; விரும்புகிறார்கள். நான் கிருஷ்ணனைப் பற்றிய மயக்கத்தில் கிறங்கி அவனை அறிய முயன்றபோது எனக்கு நெருக்கமானவனாக அவனை அறியச்செய்தவர் ஓஷோதான். கிருஷ்ணனைப் பற்றி என்னிடமிருந்த பல கேள்விகளை அடித்துத் துவம்சம் செய்து அவற்றை ஒன்றுமில்லாதவையாகச் செய்த ஆற்றல் அவர் ஒருவருக்கே உண்டு. அவரது கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் என்ற புத்தகத்தின் ஐந்து பகுதிகளும், பகவத் கீதை ஒரு தரிசனம் என்ற பதினெட்டுப் புத்தகங்களும் கிருஷ்ணனைப் புரிந்துகொள்ள மிகவும் உதவி செய்வன. அந்தப் புத்தகங்களின் வாசிப்பினூடாக நாம் பெறும் விகாசம் கிருஷ்ணனை கடவுளாக மட்டுமின்றி நம்முடைய உறவாக, தோழனாக, தோழியாக, இன்னும் பலவாகவும் வரித்துக்கொள்ளத் துணை செய்பவை. 

1990களில் ஓஷோவின் காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற புத்தகத்தை முதன் முதலாக படித்தேன். அதுவரை நான் வாழ்நாளில் அப்படி ஒரு புத்தகத்தைப் படித்ததில்லை. அப்படியே தலைகீழாக என்னைப் புரட்டிப் போட்டது அந்தப் புத்தகம்! அவரது புத்தகங்கள் பலவற்றையும் தேடித்தேடிப் படிக்கத் தொடங்கினேன். அந்த வாசிப்பு என்னை, நான் நானாக இல்லாமலாக்கியது. அப்போதுதான் அவர் தமிழில் அறிமுகமான காலம். எனவே அவரைப் பற்றிய பல தவறான கருத்துகள் நிலவிய காலம்கூட. ஆனால் நான் அவரைக் கண்டுகொண்டேன். அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். அந்தப் பிடி வாழ்க்கையின் கனத்தைத் தண்ணீரில் இழுத்து இலகுவாக்கும் வித்தையை எனக்குக் கற்றுக்கொடுத்தது. 

அவரது பகவத் கீதை ஒரு தரிசனம் என்ற நூல் அற்புதமான புத்தகம். கீதையின் பதினெட்டு அத்தியாயங்களுக்கு ஒரு புத்தகம் வீதம் மொத்தம் பதினெட்டுப் புத்தகங்கள் கொண்ட அவரது உரை ஒரு பொக்கிஷம். நமக்கு அற்புதமான உணர்வைத் தரக்கூடிய அவற்றைப் படித்துவிட்டால் பிறகு நாம் வாழ்வில் படிக்கவேண்டியது என்று எதுவும் இல்லை. ஏனெனில் அதில் சொல்லப்பட்ட பலவும் திரும்பத் திரும்ப வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு நபர்களால் பேசப்படுகின்றன என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். அந்த உரை முழுவதும் கடல் அலையென பொங்கிப் பிரவகிக்கும் அவரது பேச்சாற்றல் அசாதாரணமானது. மகத்தான உரை அது. நம்மை முழுவதுமாக உருமாற்றம் செய்துவிடும் ஆற்றல் அவற்றுக்கு உண்டு. இவற்றை வாசிப்பதன் மூலமாக நாம் இதுவரை இல்லாத ஒரு புதுமனிதனாக அவதாரம் எடுத்தவர்களாவோம். நம்மை உணரவும், இந்த உலகை புரிந்துகொள்ளவும், சக மனிதர்களை அறிந்துகொள்ளவும் பெருமளவில் உதவுபவை அவரது இந்தப் புத்தகங்கள். இவற்றின் வாசிப்பினால் எனக்குள் ஏற்பட்ட மாற்றம் வாழ்க்கையை எதிர்கொள்ளவதில் எனக்கிருந்த சிக்கல்களை விடுவித்து, எனக்கான பாதையைச் செப்பனிட்டுக் கொடுத்தது. 

ஓஷோவைப் பற்றி பல்வேறு கருத்துகள் நிலவினாலும் அவரது மிக முக்கியமான பங்களிப்பாகாகக் நான் கருதுவது, மனிதனை அவனது பாவச்சுமை என்ற சிலுவையிலிருந்து விடுவித்ததுதான். நூற்றாண்டு காலமாக மனிதனின் மனதில் ஆழப்புதைந்து கிடந்த பாவம் என்ற அழுக்கை முற்றிலுமாகத் தூக்கி எறிந்த ஒரு பெரும் ஆளுமை அவருடையது. நாளும் பாவமூட்டைகளைச் சுமந்து தன்னுள்ளேயே அழுகி, தனக்கேயான இருட்குகையில் முடைநாற்றம் வீசிக் கொண்டிருந்த மனிதனை இழுத்து வெளியே விட்டவர் அவர்தான். சமூகம் என்ற அமைப்பு எவ்வாறெல்லாம் மனிதனைக் கட்டுப்படுத்தி கணந்தோறும் அவனைக் குற்ற உணர்வில் அமிழ்த்திக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை துணிவுடன் வெட்ட வெளிச்சமாக்கியவர் ஓஷோதான். சொல்லப்போனால் கிருஷ்ணரும் அதே காரியத்தையே செய்கிறார். மனிதனை அவன் இயல்பான போக்கில் இருக்கும்படிச் செய்வதே கிருஷ்ண லீலைகளின் அடிப்படைத் தத்துவம். எதையும் விட்டு விலகாதே எல்லாவற்றையும் கடந்து செல் என்பதே கிருஷ்ணன் நமக்கு அறிவுறுத்தும் செய்தி. 

திரௌபதி தன் பல்வேறு சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் கிருஷ்ணனிடம் பதில் கேட்கிறாள். அதற்குக் கிருஷ்ணன் இவ்வாறு பதில் சொல்வதாக இ.பா. தன் கிருஷ்ணா கிருஷ்ணா நாவலில் எழுதியிருக்கிறார்:

“யுதிஷ்டிரன், தர்மந்தான் முடிவு, எந்த நிலையிலும் சத்தியத்தைக் காப்பாற்றுவது என்பதுதான் அதன் பாதை என்று நினைக்கின்றான். வேறோரு பரிமாணத்தில் அவனால் சிந்திக்க முடியாது என்பதுதான் அவன் விதி, குணச்சித்திரம். வேறு பரிமாணங்களில் சிந்திக்க முயற்சி செய்து, அண்ணனோடு என்ன வழக்காடினாலும் இறுதியில் அவன் வார்த்தைகளுக்குக் கட்டுப்படுவதுதான் மற்றைய பாண்டவர்களின் விதி, குணச்சித்திரம். எதற்காக ஒரு வறட்டுத்தனமான ஒரு கோட்பாட்டு எல்லையை நிர்ணயித்துக்கொண்டு, பொறியில் அகப்பட்ட எலி போல் தவிக்க வேண்டும் என்று நீ தொடர்ந்து வினா எழுப்பிக் கொண்டு இருந்தாலும், உன்னாலும் அந்த வட்டத்தை விட்டு வெளியே வர இயலவில்லை என்பதுதான் உண்மை. மனித வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிப்பதும் இந்த மனப்போராட்டங்கள்தாம். குணச்சித்திர முரண்பாடுகள்தாம். இவை அனைத்துமே வாழ்க்கை என்கிற அலகிலா விளையாட்டின் விதிகள். பிறந்துவிட்டால் விளையாடித்தான் ஆகவேண்டும், விலகிச் செல்ல வழியில்லை.”

இந்த உலகில் எல்லா கேள்விகளுக்கும் பதில் இல்லை. பதில் இல்லாத கேள்விகள், பதில் தெரியாத கேள்விகள் பல உண்டு. எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த பதில் இல்லாத கேள்விகளில்தான் வாழ்க்கையின் புதிர், அழகு, ரகஸ்யம் இருக்கிறது. அதை அனுவிப்பதுதான் வாழ்க்கை என்பதே கிருஷ்ணனின் கோட்பாடு, தத்துவம் எல்லாம். அதையே தன் உரைகளில் வலியுறுத்துகிறார் ஓஷோ என்பது குறிப்பிடத் தக்கது. இருந்து இல்லாமலாகி இப்போது எப்போதும் இருப்பவர்களாகி இருக்கும் அவர்களுக்கிடையே நானும் இருப்பது ஓர் அற்புத உணர்வு.

Related Posts Plugin for WordPress, Blogger...