எல்லாம் விரும்பியபடி நடந்தால்?

நான் ஒரு மிகப் பழமையான நீதிக் கதை ஒன்றைக் கேட்டிருக்கிறேன் – மிகமிகப் பழமையானது ஏனெனில் அந்தக் காலத்தில் கடவுள் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருந்தார். மெல்ல மெல்ல அவர் இந்த மனிதர்களால் மிகவும் சலிப்படைந்தார். காரணம் மனிதர்கள் அவரை தொடர்ந்து தொல்லைப் படுத்திக் கொண்டிருந்தார்கள். நடு இரவில் யாரோ ஒருவர் கதவைத் தட்டி, “நீ ஏன் இப்படிச் செய்தாய்? நீ ஏன் அப்படிச் செய்யவில்லை?” என்பார். ஒவ்வொருவரும் அவருக்கு புத்திமதி சொன்னார்கள். ஒவ்வொருவர் பிரார்த்தனையும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருந்தது. ஒரு மனிதன் அவரிடம் வந்து, “இன்று சூரியன் இருக்குமாறு செய் ஏனெனில் நான் என்னுடைய உடைகளை துவைக்கப் போகிறேன்” என்பான்.

வேறொரு மனிதன் வந்து, “இன்று மழை பெய்யச் சொல் ஏனெனில் நான் மரங்களை நடப்போகிறேன்” என்பான். இப்போது என்ன செய்வது? அனைவரும் கடவுளை பைத்தியம் பிடிக்கச்செய்து கொண்டிருந்தார்கள்!

ஒரு நாள் ஒரு மனிதன், வயதான விவசாயி, அவரிடம் வந்தான். அவன், “பார், நீ கடவுளாக இருக்கலாம், இந்த உலகத்தைப் படைத்தவனாக இருக்கலாம். ஆனால் நான் ஒன்றைச் சொல்கிறேன், நீ ஒரு விவசாயி அல்ல. உனக்கு விவசாயத்தில் அஆஇ கூடத் தெரியாது. உன்னுடைய முழு இயற்கையும் அது செயல்படும் விதமும் அபத்தமானது. நான் இதை என் வாழ்நாளின் அனுபவத்தில் சொல்கிறேன், நீ சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றான்.

கடவுள், “உன்னுடைய அறிவுரை என்ன?” என்றார்.

அந்த விவசாயி, “நீ ஒரு வருட காலத்தை எனக்குக் கொடு, எல்லாம் என் சொற்படி நடக்கும்படி செய், அப்போது என்ன நடக்கிறது என்று பார். வறுமை என்ற ஒன்று அப்போது எஞ்சியிருக்காது” என்றான்.

கடவுள் அதற்கு இணங்கி ஒரு வருட காலத்தை விவசாயிக்குக் கொடுத்தார். இப்போது அவனுடைய விருப்பத்தின்படி எல்லாம் நடந்தன. இயல்பாகவே அவன் சிறந்ததையே கேட்டான். அவன் நல்லது ஒன்றை மட்டுமே நினைத்தான் –இடி இல்லை, வலிமையான காற்று இல்லை, பயிர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. எல்லாமே சௌகரியமாக, வரவேற்கத் தக்கதாக இருந்தன. அவன் மிகவும் மகிழ்ந்து போனான். கோதுமைப் பயிர்கள் மிக உயரமாக வளர்ந்தன! எந்த ஆபத்தும் இல்லை, தடங்களும் இல்லை. எல்லாமே அவன் விருப்பத்தின்படி நடந்தன. அவன் சூரியனை வேண்டும் போது சூரியனும், மழையை வேண்டும் போது மழையும், அவன் எவ்வளவு தேவை என்று கருதினானோ, அந்த அளவிற்கு வந்தது. இதற்கு முன்பு, சில சமயம் அதிகமான மழை பெய்து, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, பயிர்களை அழிந்துவிடும். சில சமயம் போதிய மழை இல்லாமல் நிலம் காய்ந்து பயிர்கள் அழிந்துவிடும். சில சமயம் வேறு ஏதாவது நடக்கும். எல்லாம் சரியானபடி நடப்பது அரிதிலும் அரிது. ஆனால் இந்த வருடம் எல்லாமே சரியாக, கணக்குப்படி சரியாக நடந்தது.

கோதுமைப் பயிர்கள் மிக உயரமாக வளர்ந்தது கண்டு விவசாயி மிகவும் மகிழ்ந்தான். அவன் கடவுளிடம் சென்று, “பார்! இந்த முறை மனிதர்கள் பத்து வருடத்திற்கு வேலை செய்யாமல் சாப்பிடும் அளவிற்குப் போதுமான பயிர்கள் விளைந்திருக்கிறது” என்றான்.

ஆனால் பயிர்களை அறுவடை செய்தபோது அதனுள்ளே கோதுமை மணிகள் இல்லை. அவன் வியப்படைந்தான் –என்ன நடந்தது? அவன் கடவுளிடம், “என்ன நடந்தது? எது தவறாகப் போயிற்று?” என்று கேட்டான்.

கடவுள், “ஏனெனில் எந்தச் சவாலும் இல்லை, ஏனெனில் எந்தக் கஷ்டமும் இல்லை, ஏனெனில் எந்த முரண்பாடும் இல்லை, எந்த மோதலும் இல்லை, ஏனெனில் எல்லாமே நலமாக இருந்தது. நீ கெட்டது என்றதையெல்லாம் தவிர்த்துவிட்டதால் கோதுமை விளையாமல் மலடாகிவிட்டது. சிறிது போராட்டம் அவசியம். புயல் தேவை, இடி, மின்னல் தேவை. அவையே கோதுமையின் உள்ளே உள்ள ஆன்மாவை அசைக்கிறது” என்றார்.

இந்த நீதிக்கதை மிக்க மதிப்பு வாய்ந்தது. நீங்கள் எப்போதும் மகிழ்ச்சி, மகிழ்ச்சி மேலும் மகிழ்ச்சி என்றிருந்தால் மகிழ்வு என்பதன் அர்த்தம் காணாமல் போய்விடும். நீங்கள் அதனால் சலிப்படைந்து வீடுவீர்கள். நீங்கள் அதனால் துன்பமே அடைவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியில் ஆர்வம் காட்டப் பின்புலமாக சில துயரமான தருணங்களும் தேவையாகிறது. அந்தத் துயரத் தருணங்கள்தான் உங்களை மகிழ்வில் ஆர்வம் கொள்ள வைக்கிறது. நீங்கள் எப்போதும் இனிப்பு, இனிப்பு, மேலும் இனிப்பு மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் –ஏதாவது உப்பானதும் அவசியமாகிறது, இல்லையேல் எல்லா சுவைகளும் காணாமல் போய்விடும்.

Osho – “The Perfect Master”

குறிப்பு: சொற்பொழிவுக்கு இடையே ஓஷோ சொல்லும் கதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றைத் தமிழாக்கும் என் முயற்சியில் இது நான்காவது கதை.

Related Posts Plugin for WordPress, Blogger...