கலீல் ஜிப்ரான்

சமீபத்தில் நான் வாங்கிய புத்தகங்களில் மிக முக்கியமான புத்தகமாகக் கருதுவது ஓஷோ அவர்களின் Reflections on Kahlil Gibran’s The Prophet என்ற புத்தகம். கல்லூரியில் படிக்கும்போது கலீல் ஜிப்ரானின் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். ஆனால் அப்போது அவைகள் என்னைக் கவரவில்லை. அவரது ‘முறிந்த சிறகுகளை’ படிக்க முயற்சித்து முடியாமல் கைவிட்டேன். எனவே அதன் தொடர்ச்சியாக அவரது ‘தீர்க்கதரிசி’யையும் படிக்க முடியாமல் போனது. அவரை சரியானபடி யாரும் தமிழுக்குத் தரவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. இருந்தும் கலீல் ஜிப்ரான் என்ற பெயரில் ஒரு வசீகரம் இருந்துகொண்டே இருந்தது. கடந்த இருபது நாட்களுக்கு முன்னர்தான் ஓஷோ ‘தீர்க்கதரிசி’ பற்றி பேசியிருப்பதாக அறிந்தேன். எனவே மேலே குறிப்பிட்ட அந்தப் புத்தகத்தை வாங்கினேன்.

OSHO Media International, Pune இந்தப் புத்தகத்தை அழகாக அற்புதமாக வெளியிட்டுள்ளது. ராயல் வடிவத்தில் கெட்டி அட்டையில் தரமான தாளில் 758 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் என் புத்தக அலமாரிக்கு புதுப் பொளிவை, அழகைக் கூட்டுகிறது. ஓஷோவின் புத்தகங்களைத் தமிழில் படிப்பதைவிட ஆங்கிலத்தில் படிப்பது சுகமாக இருக்கும் என்பது என் அனுபவம். அவர் உரையில் வந்து விழும் வார்த்தைகளும் வாக்கியங்களும் நமக்கு வாசிப்பில் அற்புதமானதொரு உணர்வைக் கொடுக்கின்றன. வாசிப்பின் பரவசத் தருணங்கள் அவை.

கலீல் ஜிப்ரான் பற்றி ஓஷோவின் வார்த்தைகளில்:

“கலீல் ஜிப்ரான்... அந்தப் பெயரே ஆனந்தத்தையும் பரவசத்தையும் தரக்கூடியது. அந்தப் பெயருக்கு இணையாக மற்றொரு பெயரை நாம் நினைத்துகூடப் பார்க்க முடியாது. அந்தப் பெயரைக் கேட்டாலே போதும் உள்ளத்தில் மணி ஒலிக்கும். அது இந்த உலகத்துக்குச் சொந்தமானது அல்ல. கலீல் ஜிப்ரான் பரிசுத்தமான ஓர் இசை, ஒரு புதிர். கவிதையில் மட்டுமே அவரை புரிந்துகொள்ள முடியும் அதுவும் சில சமயம் மட்டுமே. இந்த அழகான உலகம் மிகவும் விரும்பி தேர்ந்தெடுத்த ஒரு மனிதன் கலீல் ஜிப்ரான். நூற்றாண்டுகள் கடந்தும் பல புகழ் பெற்ற மனிதர்கள் இருக்கலாம் ஆனால் கலீல் ஜிப்ரான் தனித்துவம் மிக்கவர். மனித இதயத்தின் ஆழத்தை ஊடுருவும் பார்வை கொண்ட இப்படியான இன்னொரு மனிதன் எதிர்காலத்தில் தோன்ற முடியும் என்று நான் கற்பனையிலும் கருத இடமில்லை.”

ஒரு மேதையைப் பற்றி இன்னொரு மேதையின் உரை இந்த அழகிய புத்தகம். வாழ்க்கையின் அடிப்படையை அசைத்து நம்மை விழிக்கச் செய்யும், வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ஆனந்தத்தால் நிரப்பும், அற்புதப் புத்தகம். வாசகர்கள் ஓஷோவின் இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்கவேண்டும் என பரிந்துரைக்கிறேன். தற்போது காவ்யா பதிப்பகம் கலீல் ஜிப்ரானின் அனைத்துக் கவிதைகளையும் சேர்த்து தொகுப்பாக வெளியிட்டுள்ளது. முடிந்தால் அதையும் வாங்கிப் படிக்கலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...