துறவியின் பொக்கிஷம்

ஒரு அரசன் ஒவ்வொரு இரவும் மாறு வேடத்தில் நகரை வலம் வந்து எல்லாம் எப்படி இருக்கிறது என்று கண்காணிப்பது வழக்கம். அப்போது அழகான இளைஞன் ஒருவன் ஒவ்வொரு இரவும் சாலையோரம் உள்ள மரத்தடியில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு வியப்புற்றான்.

அறிந்துகொள்ளும் ஆர்வம் உந்த ஒரு நாள் அரசன் தனது குதிரையை நிறுத்தி அந்த மனிதனிடம், “நீ ஏன் தூங்காமல் இருக்கிறாய்” என்று கேட்டான்.

அதற்கு அந்த மனிதன், “சாதாரணமாக தங்களிடம் பாதுகாப்பதற்கு எதுவும் இல்லாத மனிதர்கள் தூங்கச் செல்கிறார்கள். ஆனால் என்னிடம் மிகப்பெரிய பொக்கிஷம் இருப்பதால் தூங்காமல் அவற்றைப் பாதுகாக்கிறேன்” என்றான்.

அரசன், “விநோதம். இங்கே உன்னிடம் பொக்கிஷம் ஏதும் இருப்பதை நான் பார்க்கவில்லையே” என்றான்.

அந்த மனிதன், “அந்தப் பொக்கிஷம் என்னுள்ளே இருக்கிறது. நீ அதைப் பார்க்க முடியாது” என்றான்.

ஒவ்வொரு நாளும் அரசன் அங்கே நிற்பது வழக்கமானதாக ஆயிற்று. காரணம் அந்த மனிதன் மிகவும் அழகாக இருந்தான். அவன் எதைச் சொன்னாலும் அதைப் பற்றி பல மணி நேரம் சிந்திக்கும்படி இருந்தது. அரசன் அவனால் கவரப்பட்டவனாக அவன் மீது விருப்பமுள்ளவனாக ஆனான். அத்தோடு அந்த மனிதன் ஒரு துறவி. விழிப்புணர்வு, அன்பு, அமைதி, மௌனம், தியானம், ஞான ஒளி இவைகள்தாம் அவனிடமுள்ள பொக்கிஷங்கள். அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டே அவன் தூங்காமல் இருக்கிறான் என்று அரசன் உணரத் தொடங்கினான்.

ஆரம்பத்தில் அறியும் ஆவலை மட்டுமே கொண்டிருந்த அரசன் தற்போது மெல்ல மெல்ல அந்த மனிதனை மதித்து கௌரவப்படுத்தி அவனைத் தனது ஆன்மிகத் தேடலுக்கு வழிகாட்டியாகக் கருதினான். ஒரு நாள் அரசன் அவனிடம், “எனக்குத் தெரியும் நீ என்னுடன் என் அரண்மனைக்கு வரமாட்டாய் என்று. இருந்தும் பகலும் இரவும் எனக்கு உன்னைப் பற்றிய நினைவே இருக்கிறது. நீயே என் நினைவில் எப்போதும் நிரம்பியிருக்கிறாய். நீ என்னுடைய அரண்மனைக்கு விருந்தாளியாக வரவேண்டும் என விரும்புகிறேன்” என்றான்.

அந்த மனிதன் இதற்குச் சம்மதிக்க மாட்டான் என்று அரசன் கருதினான். துறவிகள் அரண்மனையை விரும்ப மாட்டார்கள் என்ற பழமையான எண்ணம் அரசனுக்கு. ஆனால் அந்த மனிதன், “நீ அப்படி விரும்புகிறாய் எனில் அதை ஏன் முன்னரே சொல்லவில்லை? மற்றொரு குதிரையைக் கொண்டு வா. நான் உன்னுடன் வருகிறேன்” என்றான்.

“என்ன மாதிரியான துறவி இந்த மனிதன்? அவ்வளவு எளிதாக இதற்குச் சம்மதிக்கிறானே?” என்று அரசன் சந்தேகப்பட்டான். ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டது. அவனை அரண்மனைக்கு வரும்படி அழைத்தாயிற்று. அரசன் அந்த மனிதனுக்கு சகல வசதிகளும் நிரம்பிய, தன் அரண்மனையிலிருந்த மிகச் சிறந்த அறையை, முக்கியமான நபர்கள் மட்டுமே தங்கும் அறையை, ஒதுக்கினான். அந்த மனிதன், “நான் ஒரு துறவி. நான் இத்தகைய ஆடம்பரமான இடத்தில் வாழமாட்டேன்” என்று சொல்வானென்று அரசன் எதிர்பார்த்தான். ஆனால் அவனோ, “மிக நன்றாயிருக்கிறது” என்றான்.

அன்று இரவு முழுவதும் அரசன் உறங்கவில்லை. “பார்க்கப் போனால் அந்த மனிதன் என்னை ஏமாற்றிவிட்டான் என்று தோன்றுகிறது. அவன் துறவியுமல்ல ஒன்றுமல்ல” என்று நினைத்தான். இரண்டு மூன்று முறை அங்கே சென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்தான். அந்தத் துறவி தூங்கிக் கொண்டிருந்தான். எப்போதும் மரத்தினடியில் நின்று தூங்காமல் இருந்த அந்த மனிதன் இப்போது எதையும் பாதுகாக்காமல் தூங்குகிறான். “நான் ஏமாற்றப்பட்டேன். இவன் உண்மையில் ஒரு ஏமாற்றுக்காரன்” என்று அரசன் நினைத்தான்.

இரண்டாவது நாள் அந்த மனிதன் அரசனோடு சாப்பிட்டான். எல்லாமே சுவை மிகுந்த உணவு வகைகள். அவன் ருசித்து ரசித்துச் சாப்பிட்டான். அரசன் அவனுக்குப் புத்தம் புதிய ஆடைகளைக் கொடுத்தான். அரசனுக்கு உரிய உயர்ந்த ஆடைகளை அவன் மிகவும் விரும்பினான். “இப்போது இந்த மனிதனை இங்கிருந்து எப்படி விரட்டியடிப்பது?” என்று அரசன் யோசித்தான். கடந்த ஏழு நாட்களாக அரசன் யோசித்து யோசித்து சோர்ந்து போனவனாக, “இது என்னை ஏமாற்ற திறமையாக நடிக்கப்பட்ட நாடகம்” என நினைத்தான்.

ஏழாவது நாளில் அரசன் அந்த மனிதனிடம், “நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றான்.

அந்த மனிதன், “எனக்குத் தெரியும் உன்னுடைய கேள்வி என்னவென்று. நீ ஏழு நாட்களுக்கு முன்பாகவே அதை கேட்க நினைத்தாய். ஆனால் பண்பாடு நாகரிகம் கருதி கேட்காதிருந்தாய் என்பதை நான் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். நீ கேள்வியைக் கேள். பிறகு இருவரும் நீண்ட தூரம் காலை நேரக் குதிரைச் சவாரி செல்வோம். நான் உன்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கிறேன்” என்றான்.

அரசன், “அப்படியே ஆகட்டும். என்னுடைய கேள்வி என்னவென்றால் எனக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்? நீ ஒரு அரசனைப் போலவே வாழ்கிறாய் ஆனால் துறவி என்று சொல்லிக் கொள்கிறாய். இப்போது நீ ஒரு துறவியாக இல்லை” என்றான்.

அந்த மனிதன், “குதிரைகளைத் தயார் செய்!” என்றான். இருவரும் வெளியே சென்றார்கள். “எவ்வளவு தூரம் செல்லப் போகிறோம்? பதில் சொல்” என்று அரசன் அவனுக்குப் பலமுறை நினைவு படுத்தினான்.

கடைசியாக அவர்கள் அரசனின் நாட்டு எல்லைக்கு அருகே இருந்த ஆற்றை அடைந்தனர். “இப்போது நாம் என்னுடைய நாட்டின் எல்லைக்கு வந்துவிட்டோம். அதற்கு அப்பால் இருப்பது வேறு ஒருவருடைய நாடு. பதில் சொல்வதற்கு இதுவே நல்ல இடம்” என்றான் அரசன்.

“ஆமாம். நான் போகிறேன். நீ இரண்டு குதிரைகளையும் கொண்டு செல். அல்லது நீ விரும்பினால் என்னுடன் வரலாம்” என்றான் அந்த மனிதன்.

“நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டான் அரசன்.

“என்னுடைய பொக்கிஷம் என்னுடன் இருக்கிறது. நான் எங்கே சென்றாலும் அது என்னிடம்தான் இருக்கும். நீ என்னுடன் வரப்போகிறாயா இல்லையா சொல்” என்றான் அந்த மனிதன்.

“நான் எப்படி உன்னுடன் வர முடியும்? என்னுடைய அரண்மனை, என்னுடைய நாடு, என்னுடைய முழு வாழ்க்கையும் எனக்குப் பின்னால் இருக்கிறதே” என்றான் அரசன்.

அந்த மனிதன் சிரித்தான். “இப்போது வித்தியாசத்தைப் பார்த்தாயா? நான் மரத்தடியில் நிர்வாணமாக நிற்பேன் அல்லது அரசனைப் போல் அரண்மனையில் வாழ்வேன் ஏனென்றால் என்னுடைய பொக்கிஷம் எனக்குள்ளே இருக்கிறது. அந்த மரமா அல்லது அரண்மனையா என்பதில் எனக்கு எந்த வேறுபாடும் இல்லை. எனவே நீ திரும்பிச் செல். நான் வேறோர் நாட்டுக்குச் செல்கிறேன். உன்னுடைய நாடு நான் இருப்பதற்கான மதிப்புடையதாக இல்லை” என்றான் அந்த மனிதன்.

அரசன் தன் செயலுக்காக வருந்தினான். அந்த மனிதனின் கால்களைத் தொட்டு வணங்கி, “என்னை மன்னியுங்கள். நான் உங்களைப் பற்றித் தவறாக எண்ணிவிட்டேன். நீங்கள் உண்மையில் ஒரு மகா துறவி. நீங்கள் என்னை இப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடாதீர்கள். அப்படிச் செய்தால் அந்த வடு என்னை வாழ்நாள் முழுதும் துன்புறுத்தும்” என்றான்.

அந்த மனிதன், “எனக்கு அதனால் ஒன்றும் கஷ்டமில்லை. நான் உன்னுடன் தாராளமாக வருவேன். ஆனால் நான் உன்னை விழிப்போடு இருக்கச் சொல்கிறேன். நாம் எப்போது அரண்மனையை அடைகிறோமோ அப்போது அந்தக் கேள்வி மீண்டும் உன் மனதில் எழும். அதனால் என்னைப் போக அனுமதிப்பது நல்லது” என்றான்.

“நான் நீ சிந்திப்பதற்குக் கால அவகாசம் தருகிறேன். நான் மீண்டும் வருவேன். எனக்கு அதனால் எந்த வித்தியாசமும் இல்லை. உன்னைப் பொருத்தவரை நான் இங்கிருந்து செல்வதுதான் நல்லது. அப்போதாவாது நான் ஒரு துறவி என்ற எண்ணமாவது உன் மனதில் எஞ்சியிருக்கும். அரண்மனைக்குத் திரும்பினால் “இவன் ஒரு ஏமாற்றுக்காரன்” என்று நீ மீண்டும் சந்தேகப்படுவாய். ஆனால் நீ வற்புறுத்தினால் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அந்தக் கேள்வி ஏழு நாட்களுக்குப் பிறகு மீண்டும் உன் மனதை அழுத்தும் அப்போது நான் மீண்டும் சென்றுவிடுவேன்.”

Osho –Autobiography of a Spiritually Incorrect Mystic.

குறிப்பு: சொற்பொழிவுக்கு இடையே ஓஷோ சொல்லும் கதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றைத் தமிழாக்கும் என் முயற்சியில் இது மூன்றாவது கதை.

Related Posts Plugin for WordPress, Blogger...