நின்னைச் சரணடைந்தேன்!

நின்னைச் சரணடைந்தேன் –கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று

மிடிமையு மச்சமு மேவியென் னெஞ்சிற்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவுபெறும் வணம்

துன்பமினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட

நல்லது தீயது நாமறியோ மன்னை!
நல்லது நாட்டுக! தீமையை யோட்டுக!

மனிதன் ஏதோ ஒன்றிடம் சரணடைவது அவசியமாகிறது. அந்த ஒன்று எதாகவும் இருக்கலாம். ஆனால் அப்படிச் சரணடைவதன் மூலமே தன் துன்பங்களை மறக்கவும், குறைக்கவும் முடியும். மனிதனுக்கு ஏன் துன்பம் ஏற்படவேண்டும்? மனித வாழ்க்கை பணம், புகழ், முன்னேற்றம் இவற்றை மையப்படுத்தியதாக இருக்கிறது. எனவே பொன்னையும், உயர்வையும், புகழையும் வேண்டி விரும்புவதால் கவலைகள் சூழ்கின்றன. அந்தக் கவலைகள் நம் மனத்தை அரித்துத் தின்கின்றன. 

கவலைகள் நம்மைத் தின்னத் தொடங்கும்போது என்னசெய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம். அந்தத் தவிப்பு நம் செயல்பாட்டை முடக்கிவிடுகிறது. எனவே வறுமைத் துன்பமும், எதிர்காலம் பற்றிய அச்சமும் நம் மனத்தில் நிலையாக குடிபுகுந்து விடுகிறது. 

வாழ்க்கையில் நாம் நமக்காக மட்டுமே செல்படுகிறோம். எதையும் நமக்கு என்ற சுயநலத்துடன் செய்கிறோம். எனவே வாழ்க்கையில் போட்டியும் பொறாமையும் ஏற்படுகிறது. எனவே நானா நீயா என்று முந்துவது முக்கியமாகிறது. இது நம் மனதை நிம்மதியின்றி தவிக்க வைக்கிறது. அதலிருந்து விடுபட நாம் பிறருக்காக செயல்படுவது அவசியமாகிறது. சுயநலத்தை மையப்படுத்திச் செய்யாமல் பிறரையும் கருத்தில் கொண்டு செயலாற்றும் போது நமக்கு நிறைவு கிட்டுகிறது.

அந்த நிறைவு நம் துன்பத்தை சோர்வை விரட்டி அடிக்கிறது. அப்படி அவைகள் விலகிவிடும் போது தோல்வி இல்லை. தோல்வி இல்லாமையால் நாம் பிறருக்காகவும் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. அந்த நம்பிக்கை அன்பு நெறியை போற்றி அறத்தை வளர்க்கிறது.

இப்படிச் செய்வது நன்மையா தீமையா? நமக்கு முடிவில் என்ன கிட்டும்? நம் வாழ்க்கை சுகமாக இருக்குமா? போன்ற சந்தேகங்கள் நமக்கு இயல்பாக எழுகிறது. ஆனால் வாழ்க்கையில் செயல் புரிவதே நம் வேலை. எது நன்மை அல்லது தீமை என்பதை நாம் பகுத்து அறிய முடியாது. அதை நம்மைவிட மேலான ஒன்றிடம் ஒப்படைத்து விடுவோம். அந்த ஒன்று தீமையை ஓட்டி நன்மையை நாட்டும்.

இவையெல்லாம் நடக்க நாம் ஒன்றிடம் நம்மை ஒப்பித்துச் சரணடைவது அவசியமாகிறது. அந்தச் சரணடைதலே நம் கவலைகளை துன்பத்தை அச்சத்தைப் போக்கி, தீமையை விலக்கி நன்மையை நமக்கு அளிக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...