September 11, 2014

விதி சமைப்பவர்கள்!

நான் ஒரு சிறிய கதை சொல்கிறேன். பிரார்த்தனை செய்துகொண்டிருந்த ஒரு மனிதனை மோசஸ் கடந்து சென்ற போது இது நடந்தது. ஆனால் அந்த மனிதன் மிகவும் முட்டாள்தனமாகப் பிரார்த்தனை (முட்டாள்தனமானது மட்டுமல்ல, அது கடவுளை அவமதிப்பதும் கூட) செய்யவே மோசஸ் நின்றுவிட்டார். அது அப்பட்டமாக விதிக்குப் புறம்பானதாக இருந்தது. இப்படிப் பிரார்த்திப்பதைவிட பிரார்த்திக்காமல் இருப்பது மேலானது ஏனெனில் அவனது பிரார்த்தனை நம்ப முடியாததாக இருந்தது. அவன், “கடவுளே நீ என்னருகே வரவேண்டும். கடவுளே நான் உனது உடல் அசுத்தமடைந்தால் அதைச் சுத்தம் செய்வதாக உறுதி அளிக்கிறேன். அதில் பேன்கள் இருந்தால் அவற்றை எடுக்கிறேன்... மேலும் நான் நன்றாக காலணிகள் செய்வேன், உனக்குப் பொருத்தமான காலணி ஒன்றைச் செய்வேன். நீ மிகப் பழைய, கிழிந்துபோன, அழுக்கான காலணிகளால் நடக்கிறாய்.... கடவுளே உன்னைப் பார்த்துக்கொள்ள யாருமே இல்லை. நான் உன்னைப் பார்த்துக்கொள்வேன். உனக்கு உடல் நலமில்லாத போது நான் உனக்குப் பணிவிடை செய்து மருந்துகள் கொடுப்பேன். நான் ஒரு நல்ல சமயல்காரனும் கூட” என்றான்.

அவன் இப்படியாகத்தான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான்! எனவே மோசஸ், “நிறுத்து! உன்னுடைய முட்டாள்தனத்தை நிறுத்து! நீ என்ன சொல்கிறாய்? நீ யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய்? நீ கடவுளுடனா பேசுகிறாய்? அவர் உடலின் மேல் பேன்கள் இருக்கிறதா? மேலும் அவரது உடைகள் அழுக்காக இருப்பதால் நீ சுத்தம் செய்கிறாயா? அவரைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்பதால், நீ அவருடைய சமயல்காரனாகப் போகிறாயா? நீ யாரிடமிருந்து இத்தகைய பிரார்த்தனையைக் கற்றுக்கொண்டாய்?” என்றார்.

அந்த மனிதன், “நான் அதை யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ளவில்லை. நான் மிகவும் படிக்காத ஒரு ஏழை, எனக்கு எப்படிப் பிரார்த்திப்பது என்று தெரியவில்லை. எனவே நானே அதை உருவாக்கினேன். இவற்றைத்தான் நான் அறிவேன்: பேன்கள் என்னை மிகவும் இம்சிக்கின்றன, இதேபோல் அவரும் துன்பத்தில் இருப்பார். சில நேரங்களில் உணவு நன்றாக இருப்பதில்லை – எனது மனைவி நல்ல சமயல்காரி இல்லை –எனவே எனது வயிறு வலிக்கிறது, அவரும் இப்படியே துன்பப்படுவார். இப்படி என்னுடைய சொந்த அனுபவமே எனது பிரார்த்தனையாக ஆயிற்று. ஆனால் உங்களுக்கு சரியானபடி பிரார்த்தனை தெரியுமென்றால் எனக்குச் சொல்லிக்கொடுங்கள்” என்றான்.

எனவே மோசஸ் அவனுக்குச் சரியான பிரார்த்தனையைச் சொல்லிக்கொடுத்தார். அந்த மனிதன் மோசஸை குனிந்து வணங்கி, கண்களில் கண்ணீர் மல்க நன்றி சொன்னான். மோசஸ் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றார். தான் ஒரு நல்ல காரியத்தைச் செய்துவிட்டதாக எண்ணினார். இதைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆகாயத்தைப் பார்த்தார்.

கடவுள் மிகவும் கோபத்தில் இருந்தார்! அவர், “மக்களை என்னிடம் நெருக்கமாக இருக்கச் செய்யத்தான் உன்னை அனுப்பினேன் ஆனால் நீ என்னுடைய சிறந்த பக்தன் ஒருவனை தூர விலகிச் செல்லும்படி செய்துவிட்டாய். இப்போது அவன் சரியான பிரார்த்தனையைச் செய்வான் ஆனால் அது பிரார்த்தனையாக இருக்காது –ஏனெனில் பிரார்த்தனைக்கும் விதிக்கும் சம்பந்தமில்லை. அன்புதான் பிரார்த்தனை. அன்பு தன்னளவில் முழுமையானது. அதற்கு வேறு விதிகள் தேவையில்லை” என்றார்.

ஆனால் மோசஸ் விதிகளைக் கொடுப்பவர். அவர் பத்துக் கட்டளைகளைப் புகுத்தி சமூகத்தை உருவாக்கினார். மேற்கத்திய உலகின் அடித்தளமாக அந்தப் பத்துக் கட்டளைகள் இன்னும் இருக்கின்றன. யூத, கிறுஸ்து, இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களும் மோசஸின் இந்த விதிகளைச் சார்ந்திருக்கிறது.

ஆக, இந்த முழு உலகம் இரண்டு விதி சமைப்பவர்களை கண்டிருக்கிறது. கிழக்கு மனுவையும், மேற்கு மோசஸையும் அறிந்திருக்கிறது. இந்துக்கள், சமணர்கள், புத்த மதத்தினருக்கு மனுவும், முகம்மதியர்கள், கிருஸ்துவர்கள், யூதர்கள் ஆகியோருக்கு மோசஸூம் விதிகளை வழங்கியிருக்கிறார்கள்.

இந்த விதி சமைப்பவர்கள் இந்த முழு உலகத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதில் ஏதோ ஒன்று இருக்கிறது –இருவரும் ‘ம’: மனு மற்றும் மோசஸ். அதற்குப் பிறகு வரும் மார்க்ஸ் மூன்றாவது ‘ம’. சீனா, ரஷ்யாவுக்கு அவர் விதிகளை வழங்கியுள்ளார். இவர்கள் மூவரும் குறிப்பிடத்தக்க மூன்று ‘ம’க்கள் – விதி சமைப்பவர்கள்.

Osho – “Come Follow To You”

குறிப்பு: சொற்பொழிவுக்கு இடையே ஓஷோ சொல்லும் கதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றைத் தமிழாக்கும் என் முயற்சில் இது இரண்டாவது கதை.

Related Posts Plugin for WordPress, Blogger...