ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?

1921 செப்டம்பர் 11ம் நாள். 39 வயதான இளம் கவிஞன் இறந்துபோகிறான். அவனது இறுதிச் சடங்கில் இறுபதுக்கும் குறைவான நபர்களே கலந்து கொள்கிறார்கள்! ஒரு மாபெரும் கவிஞனுக்குக் கிடைத்த மிகப்பெரிய அவமதிப்பு. ஒரு மூன்றாந்தர திரைப்பட நடிகனுக்குக் கூடும் கூட்டம் கூட அவனுக்கு இல்லை. நாட்டு விடுதலைக்காக, மக்கள் சுதந்திரத்திற்காக தன் கவிதைள் மூலம் உத்வேகத்தையும் உணர்ச்சியையும் ஊட்டிய கவிஞனுக்கு நாம் செய்த மரியாதை!

பாரதியார் என்று சொன்னதும் அவனது எத்தனையோ பாடல்கள், வரிகள் நம் நினைவுக்கு வரலாம். என் நினைவுக்கு வருவது ‘ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?’ என்ற வரிதான். அவனது வருத்தம் நியாயமானதே என்று நாம் அவனது மரணத்தில் நிரூபித்திருக்கிறோம்! அவன் இல்லாமல் போன பிறகு ஒவ்வொரு வருடமும் இந்த நாளை நாம் நினைவு கொள்வது என்பது சம்பிரதாயமாக, வெற்றுச் சடங்காக ஆகிவிட்டிருக்கிறது. இது நாம் அவனுக்குச் செய்யும் மிகப்பெரிய அவமதிப்பு அன்றி வேறில்லை.


‘பொருளி லார்க்கிலை யிவ்வுல’ கென்றநம்
புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்றுகாண்
பொருளி லார்க்கின மில்லை துணையில்லை
பொழுதெ லாமிடர் வெள்ளம்வந்த தெற்றுமால்.
பொருளி லார்பொருள் செய்தல் முற்கடன்:
போற்றிக் காசினுக் கேங்கி யுயிர்விடும்
மருளர் தம்மிசை யேபழி கூறுவன்;
மாமகட் கிங்கோர் ஊன முரைத்திலன்.

அறமொன் றேதரும் மெய்யின்பம் என்றநல்
லறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்
பிறவி ரும்பி உலகினில் யான்பட்ட
பீழை எத்தனை கோடி! நினைக்கவும்
திறன ழிந்தென் மனமுடை வெய்துமால்.
தேசத் துள்ள இளைஞர் அறிமினோ!
அறமொன் றேதரும் மெய்யின்பம்; ஆதலால்
அறனை யேதுணை யென்றுகொண் டுய்திரால்.

வெய்ய கர்மப் பயன்களின் நொந்துதான்
மெய்யு ணர்ந்திட லாகு மென்றாக்கிய
தெய்வ மேயிதுநீதி யெனினும்நின்
திருவ ருட்குப் பொருந்திய தாகுமோ?
ஐய கோ!சிறி துண்மை விளங்குமுன்,
ஆவி நையத் துயருறல் வேண்டுமே!
பையப் யையவோர் ஆமைகுன் றேறல்போல்
பாருளோர் உண்மை கண்டிவன் உய்வரால்.

தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது;
தரணி மீதினில் அஞ்சலென் பாரிலர்.
சிந்தை யில்தெளி வில்லை; உடலினில்
திறனு மில்லை; உரனுளத் தில்லையால்;
மாந்தர் பாற்பொருள் போக்கிப் பயின்றதாம்
மடமைக் கல்வியால் மண்ணும் பயனிலை.
எந்த மார்க்கமும் தோற்றில தென்செய்கேன்?
ஏன்பி றந்தனன் இத்துயர் நாட்டிலே?

உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
உண்டு றங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவி னுங்கன வாகும்; இதற்குநான்
பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்?
பண்டு போனதை எண்ணி யென்னாவது?
சிலதி னங்கள் இருந்து மறைவதில்
சிந்தை செய்தெவன் செத்திடு வானடா!

ஞான முந்துற வும்பெற் றிலாதவர்
நானி லத்துத் துயரன்றிக் காண்கிலர்;
போன தற்கு வருந்திலன் மெய்த்தவப்
புலமை யோனது வானத் தொளிருமோர்
மீனை நாடி வளைத்திடத் தூண்டிலை
வீச லொக்கு மெனலை மறக்கிலேன்;
ஆன தாவ தனைத்தையுஞ் செய்ததோர்
அன்னை யே!இனி யேனும் அருள்வையால்.

பாரதியைப் பற்றி எத்தகைய பிம்பம் நமக்கிருக்கிறது? நாம் அவனைப் பற்றி நம் மனதில் கொண்டுள்ள எண்ணங்கள் என்னென்ன? அனைவரும் பாரதியைப் புகழ்கிறார்கள் கொண்டாடுகிறார்கள் என்பதற்காகத்தான் நாமும் அவனை நினைக்கிறோமா? பொத்தாம் பொதுவாக அல்லாது நமக்காக நம் உள்ளத்தில் காட்சி தரும் பாரதி எத்தகையவன்? அவனை எப்படி நாம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம்? அவன் எத்தனை தூரம் நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறான்? போன்ற கேள்விகள் நம் ஒவ்வொருவர் மனத்திலும் எழுந்து நம்மை ஆக்ரமிக்க, அவற்றுக்கான பதிலைக் கண்டடைவதிலேயே பாரதியை நாம் மதிப்பதும் கொண்டாடுவதும் இருக்கிறது. வெற்றுச் சடங்குகளாலோ சம்பிரதாயங்களாலோ அல்ல.

Related Posts Plugin for WordPress, Blogger...