கரமாஸவ் சகோதரர்கள் நாவலின் மையம் –ஒரு பார்வை

இலக்கியத்தின் ஆகப்பெரிய நோக்கம் வாழ்க்கையைச் சொல்வதும், அந்த வாழ்க்கையினூடாக ஒருவன் தன்னை அறிதல் அல்லது உணர்தல் என்பதுதான். உலகில் எத்தனையோ இலக்கிய வகைகள் இருக்கலாம், எத்தனையோ படைப்பாளிகள் இருக்கலாம் ஆனால் அவைகள் அனைத்தின் நோக்கமும் இந்தத் தன்னைத்தான் உணர்தல் என்பதை ஆதாரமாகக் கொண்டதே. அப்படி இல்லாதபோது அவைகள் படைப்பல்ல, அவற்றை வழங்குபவன் படைப்பாளியுமல்ல. ஒரு மனிதன் இவ்வாறாக, தன்னைத்தான் ஏன் அறிந்துகொள்ள வேண்டும்? அவ்வாறு அறிந்துகொள்வதால் ஆவதென்ன?

ஒரு மனிதன் தன் வாழ்க்கையின் ஆயுளில் பெறும் மொத்த அனுபவங்கள் மிகமிக சொற்பமானதும் குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்டதுமாகும். எனவே அதைக் கொண்டு வாழ்க்கையை அணுகும்போது அவன் அதிர்ச்சியடைய நேர்கிறது. வாழ்க்கையின் நிஜம் அவனை நிலைகுலைய வைக்கிறது. யதார்த்தம் என்ற இடி அவன் தலையில் இறங்கி, அவன் பைத்தியம் பிடிக்காமல் தப்பிக்க வேண்டுமெனில் வாசிப்பு என்ற இடிதாங்கியை அவன் மூளையில் பொருத்த வேண்டியது அவசியமாகிறது. அந்த வாசிப்பின் மூலம் அவன் மனம் சேகரிக்கும் பலதரப்பட்ட அனுபவங்கள் அவன் மனதைச் செழுமைப்படுத்தி, விகாசம் கொள்ள வைக்கிறது. இதன் வாயிலாக வாழ்க்கையை, அதன் பிரம்மாண்டத்தை எதிர்கொள்வதில் இருக்கும் சிக்கல்களை அவன் எளிதாகக் கலைய முடிகிறது. அதன் மூலம் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதில் ஒரு இலாவகம், எளிமை கைகூடுகிறது. அதைவிட முக்கியமானது, நம் வாழ்க்கையிலிருந்து நாம் கிரகித்துக்கொள்ளும் வாழ்க்கை என்பதன் அர்த்தம் முற்றும் தவறானதாகக் கூட இருக்கலாம். எனவே நாம் நம் வாழ்க்கையின் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க இலக்கியம் உதவுகிறது. அது காட்டும் பாதையில் நாம் பயணிக்கும் போது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக, பொருட்படுத்தக் கூடியதாக அமைகிறது.
இந்தப் பின்னனியில் தஸ்தயேவ்ஸ்கியின் கரமாஸவ் சகோதரர்கள் நாவல் நமக்குக் காட்டும் தரிசனம் என்ன? ஆயிரத்து இருநூறு பக்கங்களுக்கு நீளும் இந்நாவலின் மையம் என்ன? என்ற கேள்விக்கான பதிலைச் சற்றே ஆராய்வோம். கரமாஸவ் சகோதரர்களான திமித்ரி (மீச்சியா), இவான், அலெக்ஸெய் (அல்யோஷா) மூவரும் தங்கள் வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்து மூன்று விதமான உணர்வை அடைகிறார்கள். அவர்கள் பெறும் அனுபவங்களும், அந்த அனுபவங்களிலிருந்து பெறும் உணர்வுகளின் வெளிப்பாடும் வெவ்வேறாக இருப்பினும் அதன் சாராம்சம் ஒன்றுதான்.

அவர்களுக்கு ஏற்படும் அனுபவத்தை தஸ்தயேவ்ஸ்கி காட்டும் காட்சிகளின் வாயிலாக நாம் காணலாம். முதலாவதாக, மனம் முழுதும் துக்கம் நிரம்பியவனாக ஸோசிமாவின் மரணத்திற்குப் பின் மடாலயத்திற்குத் திரும்பிய அலெக்ஸெய்க்கு நிகழ்வது என்னவென்று பார்ப்போம்.

...வராந்தாவில் நிற்காமல் வேகமாக அவன் கீழே இறங்கினான். ஆச்சர்யம் நிறைந்த அவனுடைய மனம், முழுச் சுதந்திரத்தையும் அண்டவெளியையும் விரும்பத் தகித்திருந்தது. அவனுடைய தலைக்கு மேலே பரந்த வானமும் வானம் முழுவதும் அமைதியாய் ஒளிரும் நட்சத்திரங்களும் நிறைந்திருந்தன. அடிவானத்திலிருந்து மேல் வானம் வரை மென்மையாய் ஒளிரும் இரண்டு பால்வீதி மண்டலங்கள் தெளிவாய்த் தெரிந்தன. புத்துணர்ச்சி ததும்பிய குளுமையான இரவு அமைதியாய் பூமியை நனைத்து நிதானமாக நின்றுகொண்டிருந்தது. ஒளிரும் நீல நிற வானில் வெண்மையும் தங்க வண்ணமும் கலந்த கோபுரங்கள் தெரிந்தன. அற்புதமான இலையுதிர் காலப் பூக்கள் வீட்டருகே காலை வேளையில் உறங்கிக்கொண்டிருந்தன. பூமியை அரவணைத்த அமைதி வானத்தில் பரவி நிற்கும் மௌனத்தோடு கலந்து, பூவுலக விசித்திரங்களுடனும் நட்சத்திரங்களுடனும் குலவிக் கிடந்தது... அல்யோஷா கண்களை அகல விரித்துப் பார்த்தபடி திடீரென்று தரையில் விழுந்தான்.

அவன் ஏன் அப்படித் தரையைத் தழுவினான் என்ற விளக்கத்தை அவன் தனக்குக் கொடுத்துக்கொள்ள விரும்பவில்லை; தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் ஏன் பூமியை முத்தமிட்டான், அப்படி முழுவதுமாய்ப் பூமியை அணைத்தபடி அவன் பூமியை முத்தமிட்டதன் காரணமென்ன என்பது அவனுக்கே தெரியவில்லை; ஆனால் கண்ணீர் விட்டழுதுக் கதறிக் கண்ணீர் மல்க அவன் பூமியை முத்தமிட்டான்; அப்படி முத்தமிட்டு அவன் பூமியை விரும்புவதாக, காலம் முழுவதும் பூமியை நேசிப்பதாக வெறிபிடித்தவன் போல் சத்தியம் செய்தான். ‘சந்தோஷமான உன்னுடைய கண்ணீரால் பூமியை நனை, அப்படி நனைக்கும் உன் கண்ணீரை நீ நேசி’ என்ற வார்த்தைகள் அவனுடைய மனத்தில் ஒலித்தன. எதற்காக அவன் அழுதான்? ஓ, பரவசத்தின் காரணமாக அழுதான்; அகண்டு பரந்த வான்வெளியில் அவனுக்காக ஒளிர்ந்த நட்சத்திரங்களைப் பார்த்துத் ‘தன்னுடைய பரவசத்திற்காக வெட்கப்படாமல்’ அவன் அழுதான். ஏதோ கடவுள் படைத்த எண்ணிலடங்கா எல்லா உலகங்களும் ஓரே சமயத்தில் அவனுடைய மனத்தில் ஒன்றிப் போனது போல, ‘மற்ற உலகங்களுடன் தொடர்பு ஏற்பட்டது போல’ அவன் உடல் அதிர்ந்துபோனான். எல்லோரையும் எல்லாவற்றிற்காகவும் மன்னிக்க அவன் விரும்பினான். அப்படி மன்னிப்புக் கேட்கவும் அவன் விருப்பப்பட்டான்; ஓ! அது தனக்காக அல்ல, மற்ற எல்லோருக்காகவும் எல்லாவற்றிற்காகவும், ‘மற்றவர்கள் என்னையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறார்கள்’ என்ற வார்த்தைகள் மீண்டும் அவன் மனத்தில் ஒலித்தன. ஒவ்வொரு நிமிடமும் தெளிவாக அவன் உணர்ந்தான், ஆழமான, உறுதியான, அசைக்க முடியாத ஒன்று, தேவலோக வாயில் போன்ற ஒன்று அவனுடைய மனத்தில் நுழைந்தது என்பதை. காலகாலத்திற்கும் ஏதோவோர் எண்ணம் அவனுடைய மனத்தில் உதித்தது போல அவன் உணர்ந்தான். தரையில் விழுந்தபோது வலிமையில்லாத இளைஞனாக அவன் இருந்தான்; விழுந்து எழுந்தபோது வலிமை உள்ளவனாக, வாழ்நாள் முழுவதும் போராக்கூடிய சக்தி உள்ளவனாக அவன் மாறிவிட்டிருந்ததைத் திடீரென்று அந்தப் பரவ தருணத்தில் அவன் உணர்ந்தான். இந்தத் தருணத்தை அவனுடைய வாழ்நாள் முழுவதும் எப்போதும் எப்போதுமே அவனால் மறக்க முடியவில்லை. ‘அந்த நிமிடம் என்னுடைய மனத்திற்குள் யாரோ வந்துபோனார்கள்’ என்று அவன் பிறகு அசைக்க முடியாத நம்பிக்கையுடன் நினைவுகூர்ந்தான்...

அலெக்ஸெய் அடையும் இத்தகைய மாற்றம், துறவி ஸோசிமாவுடன் ஏற்பட்ட நெருக்கத்தாலும், அவரது போதனைகளாலும், பல்வேறு தரப்பட்ட மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் கூர்ந்து கவனித்ததாலும், அத்தருணத்தில் அவனுக்குள் நிகழ்வது. தான் ஒரு புதிய மனிதனாக மாற்றம் கொண்டுவிட்டதாக, அலெக்ஸெய் அவனுக்குள் உணரும் அந்தக் கணத்தின் உணர்வு, புத்தபிரான் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதற்கு நிகரானது. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என அவர் கண்டடைந்தார் ஆனால் அலக்ஸெய் மனிதர்களிடையே அன்பில்லாமையே துன்பத்திற்குக் காரணம் என்று கண்டடைகிறான். எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் அவன் மன்னிப்புக் கோருவதும், மன்னிப்பதாகக் கூறுவதும் அதனால்தான்.

இரண்டாவதாக, தந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காக கைதாகி முதற்கட்ட விசாரணைக்கு ஆளாகும் திமித்ரிக்கு என்ன நேர்கிறது என்பதைப் பார்ப்போம்.

...முடிவாக விசாரணை அறிக்கை தயாரானது. மூலையில் அமர்ந்திருந்த தன்னுடைய நாற்காலியிலிருந்து எழுந்து வந்த மீச்சியா திரைச்சீலைக்குப் பின்புறம் கம்பளியால் மூடப்பட்டிருந்த பெரிய பெட்டியின் மீது படுத்தவன் நிமிடத்தில் தூங்கிப் போனான். அந்த இடத்திற்கும் அந்த நேரத்திற்கும் பொருத்தமில்லாத விநோதமான ஒரு கனவை அவன் கண்டான். இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில், சகதியான பாதை ஒன்றில், நீண்ட நாட்களுக்கு முன்பு ராணுவத்தில் பணியாற்றியபோது வன்பாலை நிலத்தில் போவது போல அவன் கனவு கண்டான். நவம்பர் மாத முற்பகுதியில் பெருமளவு விழுந்த பனித்துகள்கள் தரையில் பட்டுக் கரைந்து போக, மீச்சியாவுக்கு மட்டும் குளிரடிப்பது போல இருந்தது. குதிரை வண்டியை வெகு வேகமாகச் சாட்டையால் அடித்து விரட்டிக் கொண்டிருந்த குதிரைக்காரர், அவ்வளவு வயதானவராக இல்லாமல், ஐம்பது வயது மதிக்கத்தக்கவராக, அளவான தாடியுடன் பொதுவாகக் குடியானவர்கள் பயன்படுத்தும் சாம்பல் நிற மேல் உடுப்பை அணிந்தவராக இருந்தார். சற்றுத் தொலைவில் பாதி எரிந்துபோன நிலையில் கரும்புகை படிந்த கறுப்பு நிறக் குடிசைகளில் எரிந்துபோன மரக்கட்டைகள் மட்டுமே வெளியே துருத்திக்கொண்டிருந்தன. வழியில் சாலையோரமாக விவசாயப் பெண்கள் பலர் மெல்லிய உடல்வாகுடன் குழிவான கண்களுடன் ஏழ்மை நிலையில், பழுப்பு நிற முகத்துடன் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். குறிப்பாக வரிசையின் இறுதிப் பகுதியில் மிக உயரமாக, மெலிந்த பெண்மணி ஒருத்தி, பார்ப்பதற்கு நாற்பது வயது மதிக்கத்தக்கவளாக இருந்தவள், ஆனால் இருபதே வயதானவள், நீண்ட ஒல்லியான முகத்துடன் அழுகின்ற குழந்தையைத் தன்னுடைய கையில் வைத்துக்கொண்டு ஒரு சொட்டுப் பாலில்லாமல் வறண்டுபோன மார்புடன் நின்றுகொண்டிருந்தாள். அந்தக் குழந்தையோ அழுதுகொண்டு போர்த்தப்படாத தன்னுடைய கைகளை வெளியே நீட்டிக் கொண்டிருக்க, அதனுடைய கைகள் குளிரால் நீலம் பூத்துப் போயிருந்தது.

‘எதற்காக அழுகிறார்கள்? ஏன் அழுகிறார்கள்?’ என்று வேகமாக அவர்களைக் கடந்து செல்லும் மீச்சியா கேட்கிறான். ‘பச்சிளங்குழந்தைகள்’ என்று பதிலளித்த வண்டிக்காரன், ‘பச்சிளங்குழந்தைகள் அழுகின்றன’ என்றான். அப்படி அவர் ‘குழந்தைகள்’ என்று குறிப்பிடாமல் ‘பச்சிளங்குழந்தைகள்’ என்று குறிப்பிட்டதைக் கேட்டு மீச்சியா ஆச்சர்யப்பட்டான். ‘பச்சிளங்குழந்தைகள்’ என்று அவன் குறிப்பிட்டதில் இருந்த அதீதப் பரிவிரக்கம் மீச்சியாவுக்கு மிகவும் பிடித்திருந்தது.

‘எதற்காக அவை அழுகின்றன?’ என்று முட்டாள்தனமாகத் தொடர்ந்து கேட்டான் மீச்சியா. ‘ஏன் அதனுடைய கைகள் போர்த்தப்படாமல் திறந்து கிடக்கின்றன?’

‘நல்லி வரை குளிர்ந்து, அதனுடைய உடைகள்கூடச் சில்லிட்டு உறைந்துபோனதால் அவை கத்துகின்றன.’

‘ஏன் அப்படி? ஏன்?’ என்று மீண்டும் அவன் முட்டாள்தனமாகக் கேட்டான்.

‘அவர்கள் ஏழைகள், அவர்களுடைய வீடு எரிந்து போய், சாப்பிட உணவில்லாமல், பிச்சை எடுக்கிறார்கள்.’

‘இல்லை, இல்லை’ என்று இன்னமும் புரிந்துகொள்ளாத மீச்சியா, ‘நீ சொல், பாவப்பட்ட இந்தத் தாய்மார்கள் ஏன் இப்படி நிற்கிறார்கள், எப்படி அவர்கள் ஏழைகளானார்கள், இந்தக் குழந்தைகள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள், ஏனிந்த ஸ்டெப்பி பிரதேசத்தில் ஒன்றுமில்லாமல் இருக்கிறது, கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுக்காமல் அவர்கள் ஏன் நிற்கிறார்கள், சந்தோஷத்தில் அவர்கள் ஏன் பாட்டுப் பாடாமல் இருக்கிறார்கள், இப்படி உற்சாகமில்லாமல் இருண்ட பேரிடரில் அவர்கள் ஏன் இருக்கிறார்கள், இந்தச் சின்னஞ்சிறுசுகளுக்கு அவர்கள் ஏன் உணவு கொடுக்காமல் இருக்கிறார்கள்?’

அவனுக்கே அவன் கேட்ட கேள்விகள் அர்த்தமற்ற, அறிவில்லாக் கேள்விகளாகத் தெரிந்தாலும், அப்படிக் கேட்காமல் அவனால் இருக்க முடியவில்லை, ஆகவே இப்படிப்பட்ட கேள்விகளை அவன் கேட்டான். இதற்கு முன் எப்போதுமே உணரப்படாத உணர்வு ஒன்று அவனுள் கிளர்ந்தெழுந்து அழ வேண்டுமென்ற உணர்வை ஏற்படுத்தி, ஏதாவது ஒரு வழியில் அழுகின்ற இந்தப் பச்சிளங்குழந்தைகள் அழாமலும், இருளடைந்து வாடிப்போன தாய்மார்கள் அழாமலும் இருக்க ஏதாவது ஒன்றை உடனடியாகச் செய்ய வேண்டும், அதுவும் இப்போதே செய்ய வேண்டுமென்ற உணர்வு கரமாஸவின் பரம்பரை முரட்டுத்தனத்தையும் மீறி அவனுள் எழுந்தது.

...‘என்ன இது? நான் எங்கே இருக்கிறேன்?’ என்று முகம் மலரச் சிரித்தபடி, ஏதோ மயக்கத்திலிருந்து விழித்தவனைப் போலக் கண்களைத் திறந்து, படுத்திருந்த மரப்பெட்டியின் மீது எழுந்து உட்கார்ந்தான் மீச்சியா. ...மேஜையருகே வந்தவன், எங்கு வேண்டுமானாலும் தான் கையெழுத்திடத் தயாராக இருப்பதாகச் சொன்னான்.

‘அருமையான கனவு ஒன்றை நான் கண்டேன், நன்மக்களே’ என்று ஏதோ ஒரு விசித்திரமான குரலில் முற்றிலுமாக மாறிப்போனவன் போலச் சந்தோஷத்தில் முகம் மலரச் சொன்னான் மீச்சியா...

திமித்ரி காணும் இக்காட்சி அவனுக்குள் ஏன் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்? திமித்ரியைப் பொருத்தவரை, ஊதாரித் தனமாகச் செலவு செய்து, குடியும் கூத்தியுமாக இருப்பதே வாழ்க்கை என்று கருதுபவன். வாழ்வாதாரமான பாலுக்குகூட ஒரு பச்சிளங்குழந்தைக்கு வழியில்லாத போது, தான் இங்ஙனம் வாழ்வது சரியா? முறையா? என்ற கேள்வி அவன் மனதைச் சம்மட்டி கொண்டு அடிக்கிறது. இந்தக் குழந்தைகள் இப்படி இருப்பதற்குத் தானும் ஏதோ ஒரு வகையில் காரணம் என்ற குற்றவுணர்ச்சி அவனை வாட்டி வதைக்கிறது. எனவே அதன்பொருட்டு ஏதேனும் ஒருவகையில் தான் தண்டனை பெறுவதுதான் சரி என்று அவன் மனம் சுட்டுகிறது. ஆக, அந்தக் கணத்தில், தருணத்தில் அவன் மனதால் ஆத்ம சுத்தி அடைகிறான்.

பல வருடங்களாக அரண்மனையை விட்டு வெளியே வராத புத்தர், ஒரு நாள் வெளியேவந்து மனிதர்களுக்கு வயதாவதையும், மரணம் நேர்வதையும் வியப்புடன் பார்க்கும் காட்சிக்கு நிகரானது திமித்ரி காணும் கனவும், அதில் அவன் கேட்கும் கேள்விகளும். கனவு என்ற நுட்பமான நினைவின் வழியாக இவற்றைத்தஸ்தயேவ்ஸ்கி காட்டியிருப்பது அற்புதத்திலும் அற்புதமானது. ஏனெனில் நனவு நிலையில் நாளும் இத்தகைய காட்சிகளைக் கண்டும் காணாமல், நமக்குச் சம்பந்தமே இல்லாதது போல, போவதற்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். அதுவும் திமித்ரி போன்ற குணாம்சம் கொண்ட பாத்திரத்திற்கு நனவு நிலையில் மனமாற்றம் ஏற்படுவதாக சொல்வது உகந்ததல்ல. ஆனால் அலெக்ஸெயின் பாத்திரப் படைப்பிற்கு கனவு தேவையில்லை. ஆகவேதான் அலெக்ஸெயின் மனதில் நிகழும் மாற்றத்தைப் புறச்சூழலால் சித்தரித்திருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி என்பது கவனிக்கத்தக்கது. இங்குதான் தஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞனின் புனைவின் திறம், ஆளுமை, மனித மனத்தை பகுத்து ஆராயும் அவரது உளவியல் தன்மை ஆகியன வெளிப்படுகின்றன.

இறுதியாக, எதையும் யாரையும் அறிவினால் எடைபோட்டு மதிப்பிடும் இவான் என்ன கதியை அடைகிறான் என்பதைப் பார்ப்போம்.

கொலை செய்தது ஸ்மெர்த்தியாக்கவ்தான் என்று திமித்ரியும், அலெக்ஸெயும் சந்தேகிக்கிறார்கள். ஆனால் இவான் திமித்ரிதான் கொலைகாரன் என நினைக்கிறான். இருந்தும் அவன் மனதில் ஏதோ ஒரு சந்தேகம் அவனை நிம்மதி இழக்கச் செய்கிறது. எனவே அதற்கு விளக்கம் காணும் பொருட்டு மூன்று முறை ஸ்மெர்த்தியாக்கவை சந்திக்கிறான். கடைசி சந்திப்பில் ஸ்மெர்த்தியாக்கவ், ‘நான்தான் கொலை செய்து பணத்தைத் திருடினேன்’ என்றும், இவானின் ‘எல்லாமே அனுமதிக்கப்பட்டவை’ என்ற மறைமுகத் தூண்டுதலே தான் கொலை செய்யக் காரணம் என்றும் சொல்கிறான். ஆகவே உண்மையில் இவான்தான் கொலைகாரன், தான் வெறும் கருவிதான் என்கிறான். இதனால் இவான் பெரும் மன உலைவுக்கும் துயரத்திற்கும் ஆளாகிறான். இந்நிலையில் ஸ்மெர்த்தியாக்கவ் தற்கொலை செய்துகொண்ட செய்தியை அலெக்ஸெய் மூலம் இவான் தெரிந்து கொள்கிறான். கொலை செய்வதற்குத் தூண்டுதலாக இருந்தது இவான்தான் என ஸ்மெர்த்தியாக்கவ் சொல்வது இவானை அதிர்ச்சியடையச் செய்தாலும் அவனது உள்ளுணர்வின் குற்ற உணர்வால் ஒருவகையில் அது உண்மைதான் என்பதை உணர்ந்து, மனதளவில் பாதிப்படைந்து, புத்தி பேதலித்து, பைத்தியமாகிறான்.

கடைசியாக, அனைத்தையும் தொகுத்துச் சொல்வதானால், எல்லாவற்றையும் தன் உள்ளத்தால் சீர்தூக்கிப் பார்த்து செயல்பட்ட அலெக்ஸெய் உள்ளொளி பெறுகிறான். தன் உடல் இன்பத்தையே பிரதானமாகக் கருதிய திமித்ரி மனத்தால் ஆத்ம சுத்தி அடைகிறான். ஆனால் உள்ளம், உடல் இரண்டையும் மறுத்து அறிவினால் இயங்கிய இவான், இரண்டுக்கும் இடையே அல்லாடிய காரணத்தால் பைத்தியமாகிறான்.
Related Posts Plugin for WordPress, Blogger...