தஸ்தயேவ்ஸ்கியின் மனக்கண்ணாடி

காலச்சுவடு இதழ் 176, ஆகஸ்டு 2014ல் கிருஷ்ணபிரபு எழுதிய கட்டுரை ஒன்றின் சில பகுதிகள்:

தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் யாவும் உலகின் பிரதான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இலக்கிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில், ‘Sovremennik’ இதழில் வெளியான ‘Poor Folk’ (1844) என்ற நாவலே தஸ்தயேவ்ஸ்கியின் முதல் படைப்பு. எனினும் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ‘கரமாஸவ் சகோதரர்கள்’ ஆகியனதான் அவருடைய பிரம்மாண்ட படைப்புகள். அவை அவருக்கான இலக்கிய அந்தஸ்தை உலக அளவில் பெற்றுத் தந்தன. நாவல் இதுவரை பல்வெறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர்களால் பதினாறு முறை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. தொலைக் காட்சித் தொடராகவும் எடுத்திருக்கிறார்கள்.

நூறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் மறுபடியும் மறுபடியும் மொழியாக்கம் செய்யப்படுவதும், அதுசார்ந்து வாசகர்களின் கூரிய விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இதுவரையிலும் தமிழில் வெளிவந்த தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் யாவும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்துள்ள நிலையில் – அரும்பு சுப்ரமணியன் ரஷ்ய மூலத்திலிருந்து நேரடியாகவே தமிழாக்கம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே நாவலின் மீதான நம்பிக்கையையும், கவனத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.

ரஷ்ய இலக்கியத்தைப் படிப்பதற்காகவே தனது தாயாருடன் மாஸ்கோ சென்று, அங்குள்ள பல்கலைக் கழகத்தில் ஒன்பது வருடங்கள் ரஷ்ய இலக்கியமும் பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அரும்பு சுப்ரமணியன். ஐந்தாண்டு கால உழைப்பில் நாவலின் மொழியாக்கத்தைச் சாத்தியமாக்கி இருக்கிறார்.

“தஸ்தயேவ்ஸ்கி வலிகளுடனே வாழ்ந்தவர். வலிகள் மனிதனை இரண்டு விதமாகப் புரட்டிப்போடும். ஒன்று அது வாழ்க்கையின் மீதான வெறுப்பாக மாறும். மற்றொன்று கனிந்து, பழுத்து, ஞானப்பழமாக உருவாக வழிவகுக்கும். இதில் இரண்டாவது விதமாகத்தான் தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கை இருந்தது. இந்நாவல் மனித மனங்களை உள்ளபடியே பிரதி பலித்துக் காட்டும் மனித மனக் கண்ணாடி என்பதால்தான் விரும்பி மொழிபெயர்க்கத் துவங்கினேன். உண்மையில் நாவலை மொழிபெயர்க்கும் தருணத்தில் என்னை நானே மறு ஆக்கம் செய்துகொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்” என்பதைத் தனது ஏற்புரையில் அரும்பு சுப்ரமணியன் குறிப்பிட்டுப் பேசினார்.
***
காலச்சுவடு வெளியீடான கரமாஸவ் சகோதரர்கள் நாவலின் பின் அட்டை வாசகங்கள்:

உலகின் மகத்தான் படைப்பாகிய ‘கரமாஸவ் சகோதரர்கள்’ நாவல் அதன் மூலமாகிய ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் பல்லாண்டுகள் வாழ்ந்து அம்மொழியையும் நிலப்பரப்பையும் பண்பாட்டையும் ஆழ்ந்து அறிந்து உணர்ந்தவர் மொழிபெயர்ப்பாளர். மூலமொழிக்கு நெருக்கமான தொடரமைப்புகளைப் பயன்படுத்தியும் நாவலின் சாரமான விவாதப் பகுதிகளையும் பைபிள் மேற்கோள்களையும் ரஷ்ய இலக்கியத் தொடர்களையும் மிகுந்த கவனத்தோடும் மொழிபெயர்ப்பாளர் தமிழுக்குக் கொண்டு சேர்த்துள்ளார். அசைவுகளையும் சொற்களையும் உளவியல் அம்சம் பொருந்த வார்த்திருக்கும் தஸ்தயேவ்ஸ்கியின் பாத்திர உருவாக்கங்கள் தமிழுக்கு இயைந்து வந்திருக்கின்றன. வாழ்வைப் பரிசீலிக்கத் தூண்டும் அவரது ஒவ்வொரு வரியையும் நுட்பமாக உள்வாங்கி சாரத்தைப் பிடித்திருக்கும் அரிய மொழிபெயர்ப்பு இது. பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலான இதைத் தமிழின் மரபான சொல்லாட்சிகளும் நவீனச் சொற்களும் கலந்துவரும் வகையில் உருவாக்கியிருப்பதன் பொருத்தத்தை வாசிப்பு தெளிவாக உணர்த்தும்.
Related Posts Plugin for WordPress, Blogger...