August 6, 2014

நினைவின் நதியில் -ஜெயமோகன்: இரு வேறு ஆளுமைகள்

நட்சத்திரத் தகுதி: ✰✰✰✰

வெளியீடு: நற்றிணை
முதல் பதிப்பு: ஜுலை 2014
விலை ரூபாய்: 220
பக்கங்கள்: 240
கட்டமைப்பு: கெட்டி அட்டை
வடிவம்: டெம்மி


நான் படிக்கத் தவறவிட்ட புத்தகங்களில் ஒன்று ஜெயமோகனின் நினைவின் நதியில். அதன் மறுபதிப்புக்காக காத்திருந்த வேளையில், சென்ற மாதத்தில், நற்றிணைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வழக்கம்போல நேர்த்தியாக, அசத்தலாக இந்தப் புத்தகத்தை நற்றிணை பதிப்பித்துள்ளது. இரண்டு பெரும் ஆளுமைகளை, அவர்களின் படைப்புகளை, புரிந்துகொள்வது இந்த நினைவின் நதியில் நீந்துவதின் மூலம் சாத்தியமாகிறது. மரபும், நவீனத்துவமும் கொண்ட இருவேறு மனங்களிடையே, அவர்களது படைப்பின் அடிப்படை இயல்பை அறிந்துகொள்வதின் வாயிலாக, அவர்களது ஆளுமைப் பண்பை நாம் அறிய முடிகிறது. முழுக்க முழுக்க சுந்தர ராமசாமியைப் பற்றிய நினைவுகள் என்றாலும், அவர் கூடவே நடந்து, அவருக்கு எதிரான திசையைச் சென்றடையும், ஜெயமோகனையும் நாம் கண்டுகொள்கிறோம். சுந்தர ராமசாமியின் நவீனத்துவமே, ஜெயமோகனை அதற்கு எதிர்த்திசையான மரபை நோக்கி நகர்த்தியதோ என நினைக்கத் தோன்றுகிறது! அவருடனான விவாதங்கள் வாயிலாகவே தன்னை வளர்த்துக் கொண்டதாக ஜெயமோகன் கூறுவதிலிருந்து அவ்வாறு ஊகிக்க முடிகிறது. 

மனம் நெகிழவும், உணர்ச்சி வயப்படவும், பல சம்பவங்கள் புத்தகத்தின் பக்கங்களில், ஜெயமோகன் நினைவுகளாக, பரவிக் கிடக்கின்றன. அவற்றில் முக்கியமானதாக, தன்னை சுந்தர ராமசாமி எவ்வாறு பொறுத்துக் கொண்டார் என்பதும், இப்போதைய சூழ்நிலையில் அப்படி ஒருவரைத் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் ஜெயமோகன் சொல்வதைக் குறிப்பிடலாம். இது சுந்தர ராமசாமி என்ற ஆளுமை ஜெயமோகனிடம் ஏற்படுத்திய தாக்கத்தின் பிரதிபலிப்பாக வெளிப்படும், மிகச்சிறந்த இடமாகச் சொல்லலாம். அவரை வெளிப்படுத்தும் அதே வேளையில் தன்னையும் வெளிப்படுத்திக் கொள்கிறார் ஜெயமோகன். உறவின் உன்னதங்கள், வாழ்வின் இத்தைகைய தருணங்களிலேயே இருக்கின்றன என்பது நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் இருக்கும்போது அதை உணராமல் போவதுதான் நமது மிகப்பெரிய துரதிருஷ்டம். இழந்தபிறகுதான் அதை நாம் உணர முடிவதற்கு, நம்மின் பாதியை நாம் இழந்துவிட்டதாக, அப்போது நமக்குள் ஏற்படும் வருத்தம் கலந்த வெறுமை உணர்வுதான் காரணம். நாம் இழந்தது நமது எதிரியையே என்றாலும்கூட இத்தகையதோர் உணர்வையே நாம் அடைவோம் என்பது விசித்திரமான உண்மை!

ஒரு படைப்போடு படைப்பாளிக்கு நெருங்கிய உறவு இருப்பதால் படைப்பு வேறு அவன் வேறு என்று பிரிக்க முடியாது. எனவே இரு படைப்பாளிகளுக்கு இடையே படைப்பைக் குறித்ததான உரையாடல்கள் படைப்பைத் தாண்டி படைப்பாளியின் மீதான விவாதமாக மாறிவிடும்போது, பிரிவு நிகழ்வது உறுதியாகிறது. மேலும் படைப்பாளிக்கே உரிய செருக்கு, அகங்காரம், தனித்தன்மை ஆகியன ஒரு கட்டத்திற்குப் பிறகு பிரிவு ஏற்படுவதைத் தடுக்க முடியாமல் செய்துவிடுகிறது. எனவே, சாதாரண மனிதர்களைவிட கலைஞர்களிடம் இத்தகைய மோதலும் பிரிவும் இருப்பது நாம் புரிந்துகொள்ளக் கூடியதுதான். இருந்தாலும் இருவரும் இறுதிவரை இணைந்தே இருந்திருக்கலாமே என்ற எண்ணம் புத்தகத்தைப் படித்து முடித்ததும் மனதில் எழாமல் இல்லை. நினைவில் நதியில் நீந்தித் திளைத்ததும், நமக்குத் தோன்றுவது: சுந்தர ராமசாமி என்ற நவீனத்துவமும், ஜெயமோகன் எனும் மரபும் வெவ்வேறு துருவங்களாக இருந்தபோதும் இணைந்திருந்ததே அபூர்வமான அழகு என்பதுதான்.

உணர்ச்சிகரமாக வெளிப்படும் ஜெயமோகன் மொழிநடை அப்போதைய அவரது மனநிலையை உணர்ந்துகொள்ளச் செய்கிறது. கட்டற்ற வெள்ளம் போல அவரது நினைவுகள் பொங்கிப் பிரவகித்து வெளிப்படுவது வியப்பாக இருக்கிறது. மனிதர் எத்தனை எத்தனை விசயங்களை நுட்பமாகவும், ஆழமாகவும் நினைவு வைத்திருந்து எழுதியிருக்கிறார்! இன்னும் அவர் எழுதாமல் விட்டது பலவும் இருக்கக்கூடும்! சுந்தர ராமசாமி, ஜெயமோகன் இருவரையும் பற்றி மட்டுமில்லாது இலக்கியம், ஆன்மீகம், அரசியல் போன்ற துறைகளைச் சார்ந்த பல்வேறு ஆளுமைகளையும் நாம் அறிந்துகொள்ள ஏதுவாகிறது. அத்தோடு படைப்பு, படைப்பாளி என்ற இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பை, தாள லயத்தை, அறிவதன் மூலம் அவர்களின் படைப்போடு நாம் இன்னும் நெருக்கம் கொள்ள முடிகிறது. நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, நகைச்சுவை எனப் பல்வேறு சம்பவங்களின் கலவையான இந்த நினைவின் நதியில் திளைத்திருப்பது ஒரு நாவல் வாசிப்பிற்கு நிகரான அனுபவத்தை தரக்கூடியது என்பதில் ஐயமில்லை. சுந்தர ராமசாமி, ஜெயமோகன் இருவருக்கும் இடையே இருந்து அனைத்தையும் கவனிப்பது போன்ற ஒரு பிரமையை இந்நூல் நமக்கு ஏற்படுத்தித் தரும் உணர்வு அலாதியானது.

இது சுந்தர ராமசாமி, ஜெயமோகன் என்ற இருவருக்கும் இடையேயான உறவும், மோதலும் பிரிவும் பற்றிய புத்தகமல்ல என்றும், எந்த இரு உறவுகளுக்கும் இடையே நிகழும் நிகழ்வுகள்தாம் என்றும் உணரும்போது, மனதளவில் நம்மை நாம் உயர்த்திக்கொள்ள முடியும். மாறாக அவர்கள் இருவரையும் மட்டுமே வைத்துப் பார்க்கும்போது, ஒருவரை தேர்வதும் மற்றொருவரை நிராகரிப்பதும் இயல்பாக நடக்கக் கூடியதே. ஆனால், உண்மையில், ஒரு நல்ல வாசகன் என்பவன் இருவரையும் ஏற்றுக்கொண்டு, அவர்களிடமிருந்து கற்று, தன்னைத் தான் உணர்ந்தவனாக, மேல்நோக்கிப் பயணப்பட வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...