August 28, 2014

ஜெயமோகனின் வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகள்

நம் சமூக அவலத்தின் ஒரு காலகட்டத்தை அப்பட்டமாக நம்முன் வைக்கிறது வணங்கான். அறம் சிறுகதை வரிசையில் நேர்த்தியாகவும் அழகாகவும் வெளிப்பட்ட ஒரு கதை என இதைச் சொல்ல முடியும். மனிதர்கள் விலங்குகளைவிடக் கொடுமையாக, கேவலமாக நடத்தப்பட்ட அவமதிப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வழியின்றி அவற்றைத் தங்கள் வாழ்க்கை முறையாகவே ஏற்றுகொண்ட மனிதர்களிடையே, வீறுகொண்டு எழுந்த ஒரு மனிதனின் கதை. படிக்கப் படிக்க நம் சமூகத்தின் அன்றைய கொடுமைகள் நம்மைப் பதைக்கச் செய்வதைவிட, ஏன் அவர்கள் அப்படி இருந்தார்கள் என்ற கேள்விதான் பிரதானமாக நம் மனதை அலைக்கழிக்கிறது. அதற்கான விடையாகத்தான் இந்தக் கதை என்பது கதையை வாசித்து முடித்ததும் நாம் உணர்ந்து கொள்கிறோம்.

ஒரு மனிதன் வாழ்க்கையில் அறியாமை, பசி இரண்டும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த இரண்டில் அறியாமையைவிட, பசி மிகவும் வலிமையானது. நமக்கெல்லாம் பசி என்பதன் உண்மையான அர்த்தம் தெரியாது என்றே சொல்லலாம். அடுத்த வேளை உணவைத் தள்ளிப் போடுவது பசி அல்ல. மாறாக அடுத்த வேளை உணவு கிடைக்குமா? கிடைக்காதா? எப்போது கிடைக்கும்? என்று தெரியாத தவிப்புதான் பசி. எனவே மனிதன் இருப்பைத் தீர்மானிப்பதில் பசி முக்கியமானதாகிறது. அந்த பசியிலிருந்தே மனிதன் மனிதனை அடிமைப்படுத்தும் சமூக அமைப்பு உருவாகிறது. மனிதனின் வயிற்றுப் பசி அவனை எதையும் தங்கள் வாழ்க்கை முறையாக ஏற்கும்படி செய்துவிடுகிறது என்பதைப் பார்க்கும் போது பசியில்லாத மனிதனைப் படைக்கத் தவறிய இறைவன் மீதே குற்றம் சொல்ல முடிகிறது. இத்தகைய மனிதர்களின் மீட்சிக்கு நேசமணி போன்றவர்கள் போராடினார்கள் என்பதைவிட இதற்கு வெள்ளைக்காரர்களும் ஒருவகையில் உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளையர்கள் சுயநலத்திற்காக நமக்குச் செய்த தீங்குகளில் மிகப் பெரிய நன்மையாக முடிந்தது இதுவென்றே சொல்லலாம்.

வணங்கானின் அப்பா யானையின் அடியில் கட்டப்படுவதும், பின்னாளில் அவர் அதே யானை மீது ஏறிவருவதும் நம் மனதில் எழுச்சியை ஏற்படுத்துகிறது. கதையில் யானை என்பது அடங்காமையின், வீரத்தின் அடையாளமாகச் சுட்டப்பட்டாலும், சிறு அங்குசம் அதை அடக்குவது போல சாதி என்ற அங்குசம் எளிய மனிதர்களை அடக்கி ஒடுக்கிவிடுகிறது என்ற குறிப்பு வெளிப்படுகிறது.

வணங்கான் என்பது கதைசொல்லியின் கதை அல்ல, அவனது அப்பாவின் கதை என்பது கதையின் ஒரு நுட்பமான அம்சமாகும். ஏனெனில் இன்று கதைசொல்லி வணங்கானாக இருப்பது பெரிய விசயமில்லை மாறாக அவனது அப்பாவின் முயற்சியால் அவனது வருங்காலச் சந்ததியினர் வாழ்க்கை மாறிவிட்டது என்பது இதனால் உணர்த்தப்படுகிறது. கதையில் வரும் வணங்கானின் தாத்தாவைப் பற்றிச் சொல்லும்போது, “பணிவின் அடுக்குகள்தான் சமூகம் என்று அவருக்குத் தெரிந்திருந்தது” என்ற ஜெயமோகன் வரிகள் ஆழமானதும் நுட்பமானதுமாகும். எனவேதான் அந்தப் பணிவின் எதிராக வணங்கான் என்ற பெயர் கதைக்கு மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது.

ஒரு மனிதன் அவனாகத் தடைகளை ஏற்படுத்திக் கொண்டால் ஒழிய அவனது முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது ஒன்றுமேயில்லை என்பதையே இந்த வணங்கான் நமக்கு அறிவுறுத்துகிறது.

இதே போன்ற ஒரு கதைதான் நூறு நாற்காலிகள் என்றாலும்கூட இது சமூகத்தின் மற்றொரு கோணத்தைச் சித்தரிக்கிறது. இந்தக் கதை நம் சமகாலத்தில் நடக்கிறது என்பதோடு, துயரங்கள், அவமதிப்புகள், இயலாமை மற்றும் கோபம் ஆகியனவற்றின் மூலம் கதைசொல்லியின் மனவோட்டங்கள் அற்புதமாகப் பின்னப்பட்டிருப்பதால், முதல் கதையைவிட இந்தக் கதை நம்மைப் பெரிதும் பாதிக்கிறது. கதை மாந்தர்கள் அனைவரும் சூழ்நிலைக்குத் தக்கவாறு கச்சிதமாக எதிர்வினை ஆற்றுகிறார்கள். எந்தெந்த வகையில் எந்தெந்த பாத்திரம் எப்படி எதிர்வினயாற்றுகிறது என்பதை நுட்பமாக, யதார்த்தமாக ஜெயமோகன் காட்டியுள்ளார். பாத்திரங்களின் செயல்பாடுகள் கதையில் துல்லியமாகத் தீர்மானத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் எந்த பாத்திரத்தின் மீதும் நாம் குற்றம் குறை காணமுடிவதில்லை. மாறாக இச்சமூகத்தின் மீதும் அதன் நியதிகளின் மீதும், அது நம் மனதில் காலங்காலமாக விதைத்து வைத்திருக்கும் மூடத்தனத்தின் மீதும் சொல்லவியலாத ஆத்திரம் பிறக்கிறது.

மனிதன் எப்போதும் குழு மனப்பான்மை உடையவன். தான் சாதிக்க நினைக்கும் ஒன்றை, அது நல்லதாக இருப்பினும் கெட்டதாக இருப்பினும், அவனுக்குக் கூட்டம் தேவைப்படுகிறது. அது சாதி, மதம், நாடு, மாநிலம், ஊர், தெரு இப்படி எந்த வகையிலும் இருக்கலாம். இந்த கூட்டமோ குழுவோ இல்லாமல் தனி ஒருவனாக இந்தச் சமூகத்தை ஜெயிப்பது கடினம். கதைசொல்லி தாழ்ந்த சாதியில் இருந்து வந்தவன் என்பது அவனைப் புறக்கணிக்கும் ஒரு காரணமாக இருந்தாலும், வேறு பல காரணங்களையும் நம் அதிகார வர்க்கம் புறக்கணிப்பின் காரணியாகக்கொள்கிறது. உதாரணமாக நல்லவனாக, நோ்மையானவனாக ஒருவன் இருப்பதும், இந்தச் சமூகம் புறக்கணிக்கும் காரணிகளில் ஒன்று. எனவே சாதி மட்டும் குறுக்கே நிற்பதில்லை, தனி ஒருவனின் குணமும் நடத்தையும் கூட அவ்வாறே புறக்கணிக்கவும், எள்ளி நகையாடவும் உரியதாகிறது. ஆனால் அவற்றில் ஏற்படும் வலியும் வேதனையையும் விட பிறப்பைக் கொண்டு ஏற்படும் புறக்கணிப்பின், அவமானத்தின் வலிகள் கொடுமையானவை. 

அந்த வலியின் வேதனையைப் படிப்போரின் உள்ளத்திலும் வெகு ஆழமாக தைக்கும்படி செய்திருக்கிறார் ஜெயமோகன். குறிப்பாக கதைசொல்லியின் அம்மாவின் வாழ்க்கை நம் உள்ளத்தில் ஈட்டியைச் சொருகி குருதியைப் பெருக்குகிறது. இதையும் ஒரு வாழ்க்கை முறையாக நம் சமூகம் வைத்திருக்கிறது என நினைக்கும் போது, அதன் சுரணை கெட்டத்தனம் நம்மை உறைய வைக்கிறது. ‘தம்றானே, கஞ்சி தா தம்றானே’ என்ற குரல் காதுகளில் ரீங்காரமிட்டபடியே இருக்கிறது. காதுகள் இருக்கும் வரை அந்த ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும் என்றே தோன்றுகிறது. எனவே கதையைப் படித்து முடித்ததும் மனம் ஒரு நிலையில் இல்லாமல் பல்வேறு உணர்வுகளுக்கு ஆட்பட்டுத் தத்தளிக்கிறது. அவைகள் மட்டுப்பட்டு நாம் நிதானமடைய நீண்ட நேரம் பிடிக்கிறது. ஒரு கதை மனதை இப்படி ஆக்கிரமிக்க முடியுமா என வியக்கும்படி இந்தக் கதை நம் மனதை வெகுவாக இம்சிக்கிறது. மொழியும், நடையும், வடிவமும், சித்தரிப்பும், அழகாகவும் நேர்த்தியாகவும் கூடிவந்த அற்புதமான கதை. இந்தக் கதை நம்முள் ஏற்படுத்தும் தாக்கமும் பாதிப்பும் நம் மனதில் சூறாவளியாகச் சுழன்றடிக்கிறது.

இரண்டு கதைகளும் இருவேறு மனநிலையில் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. வணங்கான் வாசித்து முடித்ததும் நம் மனதில் மனிதர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால் நூறு நாற்காலிகள் நம் நம்பிக்கையைச் சிதறடித்து, நிகழ்காலத்தின் நிதர்சனத்தைக் கண்முன் நிறுத்துகிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தால் மனிதனின் இந்த ஆதாரச் சிக்கல்கள் தீரும் என்ற விடைதெரியாத கேள்வி நம்மை நிம்மதி இழக்கச் செய்கிறது.

இந்த இரண்டு கதைகளையும் இணைத்து ஒரு வாக்கியம் சொல்லவேண்டும் என்றால் அதை இப்படிச் சொல்லலாம்: நூறு நாற்காலிகளில் அமர்வது பெரிதல்ல, அப்படி அமர்ந்த பிறகு வணங்காதவர்களாக இருக்கவேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...