August 13, 2014

தில்லை அம்பலப் பிள்ளையார் கோயில் -அ.முத்துலிங்கம்

சிறுகதைகள் படித்து நீண்ட நாட்களானதால் ஏதாவது படிப்போம் என்று தற்போது வாங்கிய அ.முத்துலிங்கத்தின் ‘கொழுத்தாடு பிடிப்பேன்’ தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பைப் புரட்டினேன். அதில் தில்லை அம்பலப் பிள்ளையார் கோயில் என்ற கதையை வாசித்தேன். படித்து முடித்ததும் அந்தக் கதை வெகுவாக என்னைக் கவரவில்லை. ஏதோ சிவாஜி படத்தில் வரும் காட்சி ஒன்றின் பிரதியாகவே எனக்குப் பட்டது. ஆனால் படித்து முடித்த பின்னரும் என் ஆழ் மனதில் கதை ஓடிக்கொண்டே இருந்தது. இது வெறும் சாதாரணக் கதைதானா? இல்லை இதில் உள்ள நுட்பங்கள் எனக்குப் பிடிபடவில்லையா? என்ற யோசனையாக இருந்தது. கதையின் காட்சிகளை ஒவ்வொன்றாக மனத்திரையில் ஓடவிட்டுப் பார்த்தேன். அப்போது வியப்பு ஏற்பட்டது. கதையின் நுட்பமான பல விசயங்கள் புலப்பட்டன. கதையின் தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதற்கான பதிலாக நான் அறிந்ததை கடைசியில் சொல்கிறேன். கதை இப்படித்தான் ஆரம்பிக்கிறது: 

எங்கள் வேலைக்காரச் சிறுமி ஓடிவிட்டாள். நான் சிறுவனாக இருந்தபோது நடந்த மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்று. 

கதைசொல்லியும் அவன் தம்பியும் தவிர, மூன்றாவதாக அந்த வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. அது தில்லை அம்பலப் பிள்ளையாரை வேண்டியதால் பிறந்த குழந்தையாகையால் அதற்கு நேர்த்திக் கடன் செய்வதற்குச் செல்லும் வேளையில்தான் வேலைக்காரச் சிறுமி ஓடிவிடுகிறாள். அவள் இல்லாமல் வீட்டு வேலைகளை யார் செய்வது? பாத்திர பண்டங்களை யார் துலக்குவது? ஆனால் தெய்வாதீனமாக அவள் கிடைத்துவிடுகிறாள். எனவே கோயிலுக்கு செல்வது உறுதியாகிறது. இதனால் பள்ளிக்கூடத்திற்கு ஒரு நாள் மட்டம் போடும் சந்தோஷம் கதைசொல்லிக்குக் ஏற்படுகிறது. அந்தக் குழந்தை ஒரு கறுப்புப் புழு என்பதாகவே கதைசொல்லி அதை அருவருப்பாகப் பார்க்கிறான். தன் தம்பி எப்போதும் மார்பிள் வைத்து விளைாடுவதும், தனக்கு அதை அவன் தராததும் அவனுக்கு எரிச்சலாக இருக்கிறது. 

ஒருவழியாக எல்லோரும் கோயிலுக்கு கிளம்புகிறார்கள். ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்த தன் தம்பியை எழுப்பிவிட்டு வரும்போது நீ உட்கார்ந்துகொள் என்கிறான். கோயிலில் ஒரு சிறுமி நாயுடன் விளையாடுவதைப் பார்க்கிறான் அது அவளது கெண்டைக் காலைக் கடிக்கும் தருணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறான். ஆனால் அந்தச் சிறுமியின் தந்தை நாயை விரட்டியதால் அவனது அந்தக் குட்டி சந்தோஷம் கெட்டுப்போகிறது. என்னசெய்வது என்று புரியாமல் அவன் பொன்னியிடம் செல்கிறான். ‘பொன்னி இனி எப்ப நீ ஓடப்போகிறாய்?’ என்று கேட்கிறான். அவள் முறைக்கவே, மேற்கொண்டு என்னசெய்வது என்று தெரியாமல், அந்தப் பகல் பொழுது வீணாவதாக அவன் நினைக்கிறான். 

அப்போது மார்பிளை வைத்து அவன்போக்கில் விளையாடிக் கொண்டிருந்த தம்பியை உனக்கு ஒரு அருமையான இடம் காட்டுகிறேன் என்று குளத்திற்கு அழைத்துச் செல்கிறான். அப்போது மார்பிள்களை தன் அண்ணனுக்குக் கொடுத்து, இனி அதைத் திருப்பிக் கேட்கமாட்டேன் என்கிறான். குளத்தில் இறங்கிப் பார்க்க ஆசைப்பட்ட அவன் தம்பி, எதிர்பாராமல் குளத்தில் மூழ்கிப் போகிறான். அதைப் பார்த்து கதைசொல்லி ஒன்றும் செய்யாதவனாக, அவனுக்கு கையை நீட்டி உதவக்கூட முயலாதவனாக, வட்டவட்ட குமிழிகள் எழுவதை புதினமாகப் பார்த்தவாறு நிற்கிறான். அங்கிருந்து திரும்பும்போது உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தான் யாருக்கும் சொல்லவில்லை என்பதாகவும், தன் தம்பியை ஜன்னல் ஓரத்தில் உட்கார தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்பதாகவும், கதைசொல்லி நினைப்பதாகக் கதை முடிகிறது. 

கதையின் ஆரம்பம் முதல் கடைசிவரை மனித மனத்தை ஊடுருவி பார்க்கும் நுட்பத்தை வெளிப்படுத்தியவாறே கதையைச் செலுத்தும் முத்துலிங்கத்தின் எழுத்தாற்றல் நம்மை வியக்கவைப்பது. கதையின நோக்கம் வேலைக்காரச் சிறுமி பொன்னி ஓடிப் போவதுதானா என்றால் இல்லை. அப்படியிருக்க,  தன் வாழ்வில் நடந்த மறக்க முடியாத ஒரு சம்பவமாக கதைசொல்லி இதைச் சொல்வானேன்? எந்த ஒரு மனிதனும் தான் மோசமானவன் என்று ஒப்புக்கொள்வதில்லை. தன்னைப் பிறருக்கு நல்லவனாகக் காட்டிக் கொள்ளவே அனைவரும் விரும்புகிறார்கள். எனவேதான் கதைசொல்லியும் முக்கியமானதை, தான் செய்த மிகப்பெரிய குற்றத்தை விட்டுவிட்டு அவள் ஓடிப்போனதை மறக்க முடியாத ஒன்றாகச் சொல்லி கதையை ஆரம்பிக்கிறான். மேலும் அவள் கிடைக்காமல் இருந்திருந்தால் நாங்கள் கோயிலுக்குச் சென்றிருக்க முடியாது, நானும் அவ்வாறு செய்திருக்க மாட்டேன் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவே அவன் இவ்வாறு கதையைத் தொடங்குகிறானோ என ஊகிக்க இடமிருக்கிறது. ஏனென்றால் வேலைக்காரச் சிறுமிக்கு கதையில் எந்தப் பெரும் பங்கும் இல்லை. அவள் இல்லாமலேயே கதையைச் சொல்லமுடியும்.

இரண்டாவதாக, கதை நெடுகிலும் கதைசொல்லியின் குணாம்சத்தை நுட்பமாக நமக்கு உணர்த்தியபடியே கதையை நகர்த்துகிறார் முத்துலிங்கம். தன் வீட்டில் பிறந்த குழந்தையை கறுப்புப் புழுவாகப் பார்ப்பதும், தன் தம்பி தனக்கு விளையாட மார்பிள்கள் கொடுக்காதது எரிச்சலை ஏற்படுத்துவதும், காரில் அவன் ஜன்னலோர சீட்டை பிடித்தபோது கோபப்படுவதும், கோயிலில் சிறுமி ஒருத்தியை நாய் கடிக்கவேண்டும் என ஆசைப்படுவதும், பொன்னியை நீ எப்போது ஓடப்போகிறாய் என்று கேட்பதும் ஆகிய அனைத்துமே கதைசொல்லியின் மனோபாவத்தையே பிரதிபலிக்கிறது. அவனது குரூரம், கோபம் ஆகியவை மெல்ல மெல்ல வளர்ந்து கடைசியில் அதன் உச்சத்திற்குச் சென்று, அவன் தம்பி குளத்தில் விழுந்ததை வேடிக்கை பார்ப்பதில் சென்று முடிகிறது. கதையின் முடிவில் வரும் வாக்கியமும் முக்கியமானதாக நான் கருதுகிறேன். அந்த முடிவான வாக்கியம், தான் காரில் ஜன்னலருகே உட்கார்ந்து வரும்பொருட்டே, தன் தம்பியின் இழப்பை அவன் விரும்பினானோ என்ற தொனியை உள்ளடக்கி இருக்கிறது. இப்படியாக கதையைப் படித்த பின்னர் நான் உணர்ந்த பல்வேறு விசயங்கள்தான் படித்ததில் பிடித்த கதையாக இந்தக் கதையைச் செய்திருக்கிறது.

இறுதியாக கதையின் தலைப்புக்கு வருவோம். கதைக்கு வேறு தலைப்பு வைக்க முடியாமல் முத்துலிங்கம் இந்தத் தலைப்பை வைத்தாரா இல்லை ஏதாவது பொருள்பட தலைப்பு வைத்தாரா? எப்படி இருந்தபோதும், சும்மா இருந்தவர்களை கோயிலுக்கு அழைத்து இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்திக் காட்டியதில் கடவுளின் பங்கு என்ன? ஒருவேளை கதைசொல்லியின் இயல்பை அம்பலப் பிள்ளையார் அம்பலப்படுத்துவதாலா? இதன் மூலம் கடவுள் ஒவ்வொரு மனிதனையும் அவனுக்கே அடையாளம் காட்ட விரும்புகிறாரா? இக்கேள்விகளோடு இன்னும் பல கேள்விகளை நம்மிடம் எழுப்பும் முகமாகவே இத்தலைப்பு சூட்டப்பட்டதாக அறிகிறேன். இது அவரவர் அனுபவத்திற்கேற்ப மேலும் விரிவு கொள்ளும் என்பது நிச்சயம். ஆக, இந்தக் கதை ஒரு நல்ல கதை. அது நாம் கதையை அணுகும் விதத்திலேயே இருக்கிறது. முத்துலிங்கத்திடம் அவ்வப்போது வெளிப்படும், நம்மை அதிரச் சிரிக்க வைக்காமல் புன்னகைக்க வைக்கும், மெல்லிய நகைச்சுவையும், ‘திடீரென்று அந்த அறையில் இருந்த காற்றை யாரோ அகற்றிவிட்டார்கள்’ போன்ற வாக்கியங்களின் அழகும் நம் மனதைக் கவரக்கூடியவை. மேலும் இந்தக் கதை சிறுகதைக்கான அம்சமான முடிவை நோக்கி நகரவில்லை மாறாக நம்மை வாசிப்பின் பல இடைவெளிகளில் புகுந்து சஞ்சரிக்கும்படி செய்திருக்கிறார் முத்துலிங்கம்.
Related Posts Plugin for WordPress, Blogger...