"எழுத்தாளர்களின் வழிகாட்டி தஸ்தயேவ்ஸ்கி"

உலக எழுத்தாளர்களின் வழிகாட்டியாக ரஷிய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி திகழ்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன் புகழாரம் சூட்டினார்.

சென்னையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய உலகப் புகழ்பெற்ற நாவலான "கரமாஸவ் சகோதரர்கள்' என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது.

இந்த நாவலை அதன் மூலமான ரஷிய மொழியில் இருந்து எழுத்தாளர் அரும்பு சுப்பிரமணியன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவலை ரஷிய தூதரக அதிகாரி செர்கேய் எல். கோத்தவ் வெளியிட, கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய் சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சி. மகேந்திரன் பேசியது:

ரஷிய எழுத்தாளரான தஸ்தயேவ்ஸ்கி உலகப் புகழ் பெற்றவர். அவரது படைப்புகள், உலக எழுத்தாளர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்து பலரது மனங்களை கவர்ந்துள்ளது.

அவர் 130 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய "கரமாஸவ் சகோதரர்கள்' என்ற நாவல் ஏற்கெனவே ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இப்போது அதன் மூல மொழியான ரஷிய மொழியிலிருந்து தமிழில் அரும்பு சுப்பிரமணியனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது தமிழ் படைப்புலகில் மிகப்பெரிய சாதனையாகும்.

இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு தஸ்தயேவ்ஸ்கி எழுதிய இந்த நாவல், உலகில் மிகப் பெரிய அதிர்வை உண்டாக்கியது. மனிதனின் மனசாட்சியை உலுக்கிய இந்த நாவல், தமிழகத்திலும் பலரை கவர்ந்துள்ளது. சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு சமூகம் காரணமா? தனி மனிதன் காரணமா? என்பது குறித்து விரிவாக உரையாடுகிறது இந்த நாவல். இதனை தமிழில் மொழிபெயர்த்ததன் மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு மிகப்பெரிய கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றார் மகேந்திரன்.

காலச்சுவடு பதிப்பகத்தின் உரிமையாளர் கண்ணன், பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்பிரமணியன், தாரா கணேசன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

The Dinamani.com.
Jun 29, 2014 2:59 AM
Related Posts Plugin for WordPress, Blogger...