அறியப்படாத தஸ்தயேவ்ஸ்கி: ந.முத்துமோகன்

கரமாஸவ் சகோதரர்கள் படிக்கத் தொடங்கிய போதே தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கை குறித்த செய்திகளைத் தேடிவந்தேன். சரியான ஒரு கட்டுரை இதுவரை கிடைக்காமலே இருந்தது. தற்செயலாக கீற்று இணைய தளத்தில் ந.முத்துமோகன் எழுதிய, ரஷ்ய மொழியிலிருந்து தமிழாக்கிய, அறியப்படாத தஸ்தயேவ்ஸ்கி என்ற கட்டுரை கிடைத்தது. வாசித்து வியந்து போனேன். நாவலுக்கும் அவர் வாழ்க்கைக்கும் அவ்வளவு நெருங்கிய தொடர்பு! இதை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆசையில் இங்கே தருகிறேன்.

தந்தை மிகயில் அந்த்ரேவிச் டாக்டர் தொழிலுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாதவர். அபரிமிதமான எரிச்சலும் மன உளைச்சலும் கொண்டவர். சுற்றியுள்ள ஒவ்வொருவரிடமும் அதீதமான கறார்த்தனம் காட்டுபவர். எந்த நேரத்தில் அவர் வெடிப்பார், இரைச்சலிடுவார் என்று யாருக்கும் தெரியாது. கண்ணு மண்ணு தெரியாமல்குடிப்பார்.

குழந்தைப் பருவத்திலிருந்தே தஸ்தயேவ்ஸ்கி தந்தையின் கொடூர குணங்களை அனுபவித்தார். வீட்டில் தஸ்தயேவ்ஸ்கிக்கு அவரது தந்தையே லத்தீன் மொழி பயிற்றுவித்தார். பாடம் நடத்தும் போது கேள்வி கேட்டுப் பதில் சொல்லுவதில் சிறு தவறு இருந்துவிட்டாலும் தகப்பனாருக்குப் பெரிதாகக் கோபம் வந்துவிடும். முட்டாள்”, “சோம்பேறிஎன்று திட்டிவிடுவார். புத்தகத்தைத் தூக்கி எறிந்து விடுவார். பாடம் அத்தோடு நின்று விடும். பிற்காலத்தில் எப்போதுமே தந்தையைப் பற்றிப் பேசுவதை தஸ்தயேவ்ஸ்கி விரும்பியது கிடையாது. மற்றவர்கள் அவரது தந்தையைப் பற்றி ஏதேனும் கேட்பதையும் விரும்ப மாட்டார். தனது நாவல் ஒன்றின் கையெழுத்துப் பிரதியில் ஒரு வாசகம் எழுதி வைத்திருந்தார். குழந்தைப் பருவத்திலிருந்தே தமது குடும்பத்தைப் பற்றி மௌனமாக யோசிக்கத் தொடங்கி விடுகிற குழந்தைகள் உண்டு. குழந்தைப் பருவத்திலேயே தகப்பனார்களின் நடவடிக்கைகளால் அவமதிக்கப்பட்ட குழந்தைகள் அவர்கள். வாழ்ந்த சூழல்களால் அவமதிக்கப்பட்ட குழந்தைகள். இவை எல்லா வற்றிற்கும் மேலாக, தமது வாழ்வில் எந்த ஒழுங்கும் கிடையாது; எல்லாமே தற்செயலானவைதாம். வாழ்வுக்கு எந்த உறுதியான அடித்தளமும் கிடையாது; குடும்பப் பாரம்பர்யம் என்று எதுவும் கிடையாது என்றெல்லாம் அந்தக் குழந்தைகள் புரிந்துகொண்டு விடுகின்றன.

பதினாறு வயதிலிருந்து நான் எழுதத் தொடங்கினேன்என்று தனது எழுபதாவது வயதில் தஸ்தயேவ்ஸ்க்கி நினைவுகூர்கிறார். இல்லை, இல்லை. அப்போது எனக்குப் பதினைந்து வயது தான் இருக்கும். நெஞ்சுக்குள் ஏதோ தீப்பிடித்து எரிவது போலிருக்கும். அதை நான் நம்பினேன். வெளியே என்ன வந்து விழப்போகிறது என்பதைப் பற்றி அப்போது விசேஷமான அக்கறை எதுவும் இருக்கவில்லை.

தாயின் பெயர் மரியா பியோதரோவ்னா. தந்தை மிகயில் அந்த்ரேவிச்சின் எல்லாக் கொடுமைகளுக்கும் பாத்திரமானவர். 35 வயதிற்குள் எட்டுக் குழந்தைகளுக்குத் தாயானவள். ஒரு பெண் குழந்தை, பிறந்த சில நாட்களுக்குள் இறந்துபோய் விட்டது. எட்டாவது குழந்தை பிறந்த மறு வருடத்தில் படுத்த படுக்கையானாள். அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை. அடுத்த வருடம்-1837-ல் மரணமடைந்தார்.

தஸ்தயேவ்ஸ்கியின் தந்தை தாயின் மீது நிரந்தரமாக சந்தேகப்பட்டவர். ஒவ்வொரு முறையும் அவள் நடத்தை மீது சந்தேகப்பட்டு சண்டை போடுவார். அந்த அம்மையார் மென்மையான உடல் கூறுகளும் ஏராளமான இலக்கிய வாசிப்பும் கொண்டவர். கணவனுக்கு எல்லா வகைகளிலும் கட்டுப்பட்டவர். கணவனின் கொடூரமான சந்தேகத்தில் தவியாய்த் தவித்தார்.

1835 மே 31-ல் அவர் எழுதிய கடிதம் :

அந்தக் கடவுளின் பெயரால், வானம், பூமி, நான் பெற்ற பிள்ளைகள், நான் அடைந்த சந்தோஷங்கள், என் வாழ்க்கை-ஒவ்வொன்றின் பெயராலும் சத்தியம் செய்கிறேன். பதினாறாவது வயதில் நம்முடைய திருமண தினத்தன்று தேவ சபையின் நடுவில், என் அன்பிற்குரிய உங்கள் ஒருவருக்கு மட்டும் தந்த வாக்குறுதியை என்றைக்கும் மீறியது கிடையாது. எந்தக் காலத்திலும் அதை மீறப் போவதும் கிடையாது. இப்போது நான் வயிற்றில் ஏந்தியிருப்பது ஏழாவது முறையாக நம் இருவரின் நேசத்தில் விளைந்தது-சத்தியம் செய்கிறேன்-திருமண நாளிலிருந்து நான் உங்கள் மீது கொண்ட பரிசுத்தமான, புனிதமான, உணர்ச்சி மயமான, நிலைத்த, குறைபாடில்லாத காதலில் விளைந்தது அது.

அதே கடிதத்தின் கடைசி வரிகள்-இதற்கு மேலும் என்னால் எழுத முடியவில்லை. என் மனதில் ஓடுபவற்றை ஒன்று சேர்க்க முடியவில்லை. என் நெஞ்சுப் படபடப்பை உன்னிடமிருந்து மறைக்க முடியவில்லை. அதற்காக என்னை மன்னித்து விடு. நான் இல்லாமல் சங்கடப்படாதே. என் அன்புக்காக உன்னைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள். எனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்று தோன்றினால் சொல். என் வாழ்க்கை முழுதும் உனக்காகத் தியாகம் செய்யப்பட்டதுதான்.

மீண்டும் அவளது நடத்தையில் சந்தேகப்பட்டு மிகயில் அந்த்ரேவிச் கடிதம் எழுதுகிறார். 1835 ஜூன் 8-10 தேதிகளில் மரியா பியோதரோவ்னா இன்னொரு கடிதம் எழுதுகிறார்.

கடவுள் படைத்த வெளிச்சம் எனக்கு மட்டும் கிடைக்கவில்லை. எனக்கு எங்கேயும் இடமில்லை. நிம்மதியில்லை. பைத்தியம் பிடித்தவள் போல் நான் மூன்று நாட்களாக அலைந்தேன். சே.... நீ என்னை நம்பவில்லை. எப்படியெல்லாம் என்னைச் சித்திரவதை செய்கிறாய்!

அந்தக் கடிதம் தொடருகிறது: என் காதலைக் கண்டு கொள்ள யாருக்கும் கண்கள் இல்லை; என் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வார் யாருமில்லை. நான் காதலாலேயே சுவாசிக்கிறேன். ஆனால் என்னைக் கீழ்த்தரமான சந்தேகத்தோடு உறுத்துப் பார்க்கிறார்கள். நாட்களும் வருடங்களும் கடந்து கொண்டிருக்கின்றன. சளியும் உமிழ்நீரும் என் முகத்தில் வழிகின்றன. இயற்கை எனக்குத் தந்த உற்சாகமும் சிரிப்பும் தனிமைச் சோகமாக முடிந்து விட்டன. இவைதான் நான் ஈட்டியவை. கள்ள மில்லாத வெறி கொண்ட எனது காதலுக்கு நான் பெற்ற வெகுமதி. என் நெஞ்சுக்குள் மிஞ்சி இருக்கிற பரிசுத்தமான மனச்சாட்சியும் இன்னும் எனக்கிருக்கிற நம்பிக்கையும் பிடித்து நிறுத்தாமலிருக்குமானால், என்னுடைய விதி எப்போதோ அலங்கோலமாக முடிந்து போயிருக்கும். எனது உணர்ச்சிகளின் கசப்பான உண்மையைத்தான் நான் உனக்கு எழுதுகிறேன். அதற்காக என்னை மன்னித்துக்கொள். நான் உன்னிடம் இப்போது கெஞ்சவில்லை, சத்தியம் செய்யவில்லை, உன்னை நான் வெறுக்கவுமில்லை-காதலிக்கிறேன், உன்னைக் கடவுளாக்குகிறேன். எனக்குள்ள ஒரே நண்பனான உன்னோடு என் மனத்தில் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளுகிறேன். அவ்வளவுதான்.

1837 பிப்ரவரி 27-ஆம் தேதி இரவு மரியா ஃபியோதரோவ்னா குழந்தைகளை அழைத்தாள். ஒரு முறை பார்த்தாள். நினைவை இழந்தாள். மறு நாள் அதிகாலை உயிர் பிரிந்தது. 1837 பிப்ரவரியில் தான் புஷ்கினும் கொல்லப்பட்டார்.

தந்தையின் மரணம்:

மிகயில் அந்ரேவிச்சின் குணக் கேடுகளே முடிவை நிர்ணயித்தன. அவரது மிக அற்புதமான மனைவியின் மரணத்திற்குப் பிறகு, மிகயில் அந்ரேவிச் தனது குழந்தைகளோடு தாரவோய் என்ற தனது கிராமப்புறக் குடித்தனப் பகுதிக்குச் சென்று சேர்ந்தார். தனிமை, அதனோடு குற்ற உணர்வும் சேர்ந்துகொண்டிருக்க வேண்டும். முதுமையின் எரிச்சல்கள். இன்னும் கொடூரமாக அவர் மாறிக்கொண்டிருந்தார். மாபெரும் மனித வீழ்ச்சி. அவரது பேத்தி லுபோல் ஃபியோதரோவ்னா சொல்லுகிறார்:

கோடைக் காலத்தில் ஒரு நாள் தாரவோயிலிருந்து செரிமோஷ்னா என்ற இடத்திலிருந்து தனது எஸ்டேட் ஒன்றுக்குப் புறப்பட்டுச் சென்றார். திரும்பி வரவில்லை. நடு வழியில் அவரைப் பிறகு கண்டுபிடித்தார்கள். தலையணையில் மூச்சு முட்ட நசுக்கிக் கொல்லப்பட்டு வண்டிக்குள்ளேயே கிடந்தார். வண்டியோட்டி எங்கோ ஓடிப் போய் விட்டான்-குதிரையோடு. அதே நேரத்தில், கிராமத்தில் இன்னும் சில விவசாயிகளும் காணாமற் போய் விட்டார்கள். அது ஒரு பழிச் செயல் என்று வேறு சில விவசாயிகள்-தாத்தாவின் பண்ணையில் உள்ளவர்கள்- உறுதிப்படுத்தினார்கள். கிழவர் குடியானவர்களிடம் எப்போதுமே ரொம்பவும் கடுமையாக நடந்துகொள்வார். குடித்திருந்தால் ரொம்பவும் கொடூரமாக நடந்து கொள்வார்...

தஸ்தயேவ்ஸ்கியின் தம்பி அந்ரேவ் மிகயிலவிச் தகப்பனாரின் மரணம் குறித்து வேறு விதமாகச் சொல்லுகிறார்:

அப்பா ரொம்பக் குடிப்பார். கடைசி நாட்களில் அவர் அளவு கடந்து குடித்தார். எப்போதுமே போதையில்தான் இருந்தார். 1839 ஜூன் 8-ஆம் நாள் செரிமோஷ்னாவிலிருந்த வயலுக்குச் சென்றார். காட்டை வெட்டித் திருத்த பத்துப் பதினைந்து ஆட்களை வேலைக்கு விட்டிருந்தார். வேலைக்காரர்கள் ஏதோ ஒன்றைச் சரியாகச் செய்யவில்லை என்று-அல்லது அவருக்கு அப்படித் தோன்றியிருக்க வேண்டும்-தாறுமாறாகச் சத்தம் போட ஆரம்பித்தார். விவசாயிகளில் ஒருத்தன்-கொஞ்சம் தைரிய சாலியாக இருக்க வேண்டும்-பதிலுக்குக் கொச்சையான வார்த்தைகளால் அவரைத் திட்டினான். அதோடு வாங்கடா, முடித்துவிட வேண்டியது தான்என்று குரல் கொடுத்தான். பதினைந்து பேர் ஒரே நொடியில் அவர் மீது பாய்ந்து அவரைத் தீர்த்துக் கட்டி விட்டார்கள்.

கொலைக்கு எந்தச் சாட்சியும் இல்லை. கொலை குறித்து எந்தத் தகவலும் மிஞ்சவில்லை. கொலைக்காரர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. கோர்ட் விசாரணை என்ற சடங்குகளும் தவிர்க்கப்பட்டன. உடல் போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பப்பட்டது என்று அந்த்ரேவ் மிகயிலவிச் குறிப்பிடுகிறார். ஆனால் எந்த விவரமும் தெரியவில்லை. இருப்பினும் குடும்ப உறுப்பினர்கள் அரைகுறையாக சில தகவல்களைச் சொல்லுகிறார்கள்.

மரியா அலெக்சாந்திரவ்னா என்ற உறவுக்கார அம்மையார் ஒருவர், 1926-ல் சொன்ன செய்தி ஒன்று. கொலையில் கத்தி, கம்பி போன்ற ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. உடலில் எந்த வெளிக்காயமும் காணப்படவில்லை. ரத்தக் காயங்கள் எதுவும் கிடையாது. செரிமோஷ்னா குடியானவர்கள் மூன்று பேர் எஜமானனைக் கொலை செய்ய முடிவு செய்தார்கள். அவர் வாசலிலிருந்து வெளியே வந்தவுடன் மூன்று பேரும் அவர் மீது பாய்ந்தார்கள். உடலில் காயம் எதையும் ஏற்படுத்தவில்லை. கையில் ஒரு பாட்டில் பச்சைச் சாராயம் வைத்திருந்தார்கள். வற்புறுத்தி அவர் வாயில் ஊற்றினார்கள். தொண்டைக்குள் நிறைந்தவுடன் ஒரு துணியால் வாயை இறுக்க மூடி அமுக்கினார்கள். அதோடு அவர் மூச்சு முட்டி இறந்தார்.

மிகயில் அந்த்ரேவிச் குடியானவர்களிடம் கொடூரமாக நடந்துகொண்டார் என்பது போக, பெண் பழியால்தான் கொல்லப்பட்டார் என்பதற்கும் சில தகவல்கள் உள்ளன.

கொலையாளிகள் மூவரில் ஒருவரான இசாயவ் என்பவருக்கு அக்கூலினா என்று ஒரு மகள் இருந்தாள். கொலை நடந்த சமயத்தில் அவளுக்கு வயது பதினான்கு. மனைவி மரியா ஃபியோதரவ்னா உயிரோடு இருக்கும் போது-அதாவது, 1836க்கு முந்தியே அக்கூலினாவை வீட்டு வேலைக்காகச் சேர்த்து வைத்துக் கொண்டார். அப்போது அக்கூலினாவிற்கு பத்து, பதினொரு வயதுதான் இருக்கும். மிகயில் அந்த்ரேவிச் அந்தச் சிறுமியைத் தனது உதவியாளராக வைத்துக்கொண்டாராம். மனைவி இறந்த பிறகும் கொஞ்ச நாட்கள் இந்த நிலை நீடித்ததாம்.

கொலையாளிகளில் இன்னொருவர்-எஃபிமவ் என்ற குடியானவன். அவரது உறவுக்காரப் பெண் காத்யா என்பவள். எஃபிமவின் பிள்ளைகளோடு அவரது வீட்டிலேயே வளர்ந்தவள். பதினான்கு வயது இருக்கும்போது, மரியா ஃபியோதரோவ்னாவின் உதவிக்கு அவள் வந்து போய்க் கொண்டிருந்தாள். மனைவியின் மரணத்திற்குப் பிறகு கிழவர் பதினாறு வயது காத்யாவிடம் தவறாக நடந்து கொண்டார். அவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்து சில நாட்களில் இறந்து போய்விட்டது.

கொலை செய்யப்பட்ட மிகயில் அந்த்ரேவிச்சின் உடல் இரண்டு நாட்களாகக் கேட்பாரற்று வயல் காட்டில் கிடந்தது.

தஸ்தயேவ்ஸ்கியும் தந்தையின் மரணமும்:

தந்தையின் கொலை பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டவுடன் தஸ்தயேவ்ஸ்கி உடல் கிடுகிடுவென... நடுங்க தரையில் விழுந்தார். பிறகு நினைவிழந்தார். டாக்டர் வந்து பார்த்துவிட்டு காக்காய் வலிப்புஎன்றார். குடும்பத்தார் சொல்வதன்படி தஸ்தயேவ்ஸ்கிக்கு முதல் தடவையாக காக்காய் வலிப்பு ஏற்பட்டது அப்போதுதான்.

செரிமோஷ்னாவில் நடந்த கொலை பற்றி தஸ்தயேவ்ஸ்கி யாரிடமும் பேசியது கிடையாது. எங்கும் எழுதிவைக்கவுமில்லை. 1839 ஆகஸ்ட் 16ஆம் தேதி அவர் தனது அண்ணனுக்கு எழுதிய கடிதத்தில் ஒரு சில வரிகள் உள்ளன.

தந்தையின் சாவு, தஸ்தயேவ்ஸ்கியின் மூன்று தங்கைகள், இரண்டு தம்பிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியது. மூத்த அண்ணன் மிகயில் மிகயிலவிச் ராணுவப் பயிற்சி பெற்றுக்கொண்டு இருந்தார். அவர் பயிற்சியை இடையில் விட்டு விட்டு, தாரவோய் கிராமத்தில் வந்து தங்கி குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளப் போவதாக உறுதியளித்தார். தம்பி தஸ்தயேவ்ஸ்கி பெரிதும் சந்தோஷப்பட்டார். அண்ணனுக்குக் கடிதம் எழுதினார்.

தந்தையின் சாவு குறித்து ஏற்கெனவே ஏராளமாகக் கண்ணீர் வடித்து விட்டேன். இப்போது நமது நிலை ரொம்பவும் கொடூரமானது... நமது தங்கைகளையும் தம்பிகளையும்விட துரதிருஷ்டசாலிகள் இந்த உலகத்தில் வேறு யாரேனும் இருப்பார்களா? அவர்கள் யாருமற்ற அனாதைகளாக, பிறர் கைகளால் வளர்க்கப்படுவார்கள் என்ற நினைப்பே என்னைக் கொல்லுகிறது...

தஸ்தயேவ்ஸ்கி குடும்பத்தின் சொந்தக்காரர் ஒருவர்-குமானின்-வசதி படைத்தவர்- கடைசி பிள்ளைகள் ஐந்தையும் வளர்க்க முன் வந்தார். ஆனால் தஸ்தயேவ்ஸ்கிக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை. குமானின் வீட்டிலிருந்து வந்த கடிதங்களுக்கு தஸ்தயேவ்ஸ்கி பதில் ஏதும் எழுதவில்லை. அந்த வீட்டுக்காரர்களை இதய மில்லாதவர்கள்”, “குள்ள மனசு படைத்தோர்”, என்று தஸ்தயேவ்ஸ்கி குறிப்பிடுவார். அண்ணன் மிகயில் மிகயிலவிச் தம்பிகளையும் தங்கைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் தஸ்தயேவ்ஸ்கி ஆசைப்பட்டார். நீ ஒருவன்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும்என்று எழுதினார். முதல் முறையாக ரஸ்கோல்னிக்கவின் வார்த்தைகளை அவர் உச்சரித்தார்-தங்கச்சிகள் செத்துப் போய்விடுவார்கள்...

வாழ்வை நேசித்தபடி...

வாழ்வை நேசித்தபடி
 சூழலும் பழக்க வழக்கங்களும்
 சொல்லித் திரிந்த ஒவ்வொரு நிமிட - சந்தோஷங்களோடு
 தடுமாறிய கால்களில் அந்த நோக்கத்தைச் சாதிக்க நடந்தேன்.
 ஆனால் வாழ்க்கையை நேசித்தபடி....

என்று நிக்ராசவின் கவிதை ஒன்று உண்டு. தஸ்தயேவ்ஸ்கி சந்நியாசி அல்லர்; வாழ்க்கையை விட்டு ஒதுங்கியவர் அல்லர். சாயங்காலச் சந்திப்புகள் அவருக்குப் பெரிதும் பிடிக்கும். இரவுநேரப் பரபரப்பான வீதிவிளக்குகள், கேளிக்கைகள், களியாட்டங்கள், சூதாட்டம், எல்லாமே அவருக்குப் பிடிக்கும். இளமையில் பீட்டர்ஸ்பெர்க் நகர ஆட்ட பாட்டங்கள் அனைத்திலும் ஒன்று விடாமல் கலந்துகொண்டார். அவருக்குப் பணம் போதவில்லை. பணம் ரொம்பவும் தேவைப் பட்டது. இந்தக் காலத்தில்தான் பீட்டர்ஸ்பெர்கின் பணக்கார உலகத்தையும் அவர் அறிந்துகொண்டார். பணம், வட்டி, அடகு, ஏழ்மை-இவையெல்லாம் அறிமுகமாகின. அவர் வாழ்ந்த யுகத்தைக் குறியீடாகக் குறித்துநின்ற மனிதர்களை அவர் சந்தித்தார்- இரக்கம், கருணை என்பது போன்ற மனித மதிப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மூலதனக்காரனை, வட்டிக்காரனை, அடகுக்காரனை, பணக்காரனை அப்போதுதான் அவர் கண்டுபிடித்தார். பூர்ஷ்வா உடமையாளன் பணம் பண்ணுபவன்-அவனை தஸ்த்தயேவ்ஸ்கி வெறுத்தார்.

தந்தையைப் போல் தஸ்தயேவ்ஸ்கி கருமி அல்ல. பணத்தைத் தண்ணீராகச் செலவழிப்பார். யாருக்குப் பணம் தேவையாக இருந்தாலும் அவரிடம் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். கடைசி பைசாவையும் பக்கத்தில் இருப்பவனோடு பகிர்ந்துகொள்வார். யாரையும் எதையும் சாராமல் சுதந்திரமாக இருக்கவேண்டுமென விரும்பினார். அப்படிச் சுதந்திரமாக இருப்பதற்குத் தனக்கு ஏராளமான பணம் வேண்டுமென்று விரும்பினார். எழுத்தாளனுக்குப் பொருளாதாரத் தட்டுப்பாடு இருந்தால் அவனால் படைக்க முடியாது என்று கருதினார். எழுத்தாளனுக்குச் சுதந்திரம் வேண்டும்; அவனுக்கு எல்லாச் சுகங்களும் வேண்டும்; ரஸ்கோல்னிக் கோவ் போல எல்லாப் பணத்தையும் ஒரே நேரத்தில் பெற்றுவிட வேண்டும் என விரும்பினார். குடும்பச் சொத்துக்காக வாதிட்டார். ஷில்லர், ஏஷன் ஆகியவர்களது நூல்களை லாபகரமாக வெளியிட்டுப் பணம் சம்பாதிக்க விரும்பினார். கிராமத்திற்குப் போய் நிலச்சுவான்தாராக குடி அமர்ந்துவிடத் திட்டம் போட்டார். சூதாட்ட விளையாட்டுகளில் மொத்தமாக வெற்றிகள் கிட்டும் என்றும் திட்டங்கள் தீட்டினார்.

எழுத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் அவருக்குத் தன்னை மறந்த ஈடுபாடு உண்டு. சுடச்சுட, வெறித்தனமாக, வேகத்தோடு அவர் வாழ்ந்தார். எல்லா இடங்களிலும் எல்லா விஷயங்களிலும் கடைசி எல்லை வரை போயிருக்க வேண்டும் எனக்கு. வாழ்க்கை முழுவதிலும் எல்லைகளைத் தாண்டியவன் நான்என்று தஸ்தயேவ்ஸ்கி பிற்காலத்தில் நினைவுகூர்வார். ஸ்தயேவ்ஸ்கி எல்லை கடந்தவர். கட்டுப்பாடு இல்லாதவர். மிகை உணர்ச்சியாளர். அபரிமிதமானவர். இன்பத்தையும் துன்பத்தையும் தீவிரமாக அனுபவித்தவர்.

வாழ்க்கை மீது அவர் கொண்டிருந்த வேட்கை முரட்டுத்தனமானது; பிடிவாதமானது. பிற்காலத்தில் 1871-ல் அவர் எழுதினார்-எவ்வளவோ இழப்புகள்... இருந்தாலும் நான் வாழ்க்கையை அழுத்தமாக நேசிக்கிறேன். வாழ்க்கையை வாழ்க்கைக்காக மட்டுமே நேசிக்கிறேன். சும்மா சொல்லவில்லை.... இப்போதுகூட மீண்டும் ஒரு முறை வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்குவதற்கு நான் தயார். சீக்கிரத்தில் எனக்கு ஐம்பது வயதாகிவிடும். ஆனால் நம்பவே முடியவில்லை; வாழ்க்கையை நான் வாழ்ந்து முடித்துக் கொண்டிருக்கிறேனா என்று தெரியவில்லை.

பாவப்பட்ட ஜனங்களும் பெலீன்ஸ்கியும்:

பாவப்பட்ட ஜனங்கள்” - தஸ்தயேவ்ஸ்கியின் முதல் நாவல். 1844 ஜனவரி மாதத்தில் ஒரு நாள் நெஞ்சுக்குள் தீப்பிடித்து எரிவது போலஏதோ ஒன்றை உணர்ந்தார் தஸ்தயேவ்ஸ்கி.

நேவா நதிக் கரையில் கண்ட காட்சிஎன்று அந்த மனச் சம்பவத்தைப் பற்றி அவர் குறிப்பிடுவார். அவரது வருங்காலச் சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் அவர் காணத் துவங்கினார்.

ஏதோ ஒரு இருண்ட மூலைக்குள், இருட்டுக்குள் ஒரு நேர்மையான பரிசுத்தமான இதயம், கடை நிலை அரசு ஊழியன் ஒருவனது இதயம் தோன்றியது. அவனோடு ஓர் இளம் பெண். அவமதிக்கப்பட்ட, தனிமைப்பட்ட, ஒடுங்கிய பெண்ணின் முகம், அவர்கள் இருவரின் வரலாறு ஆழமாக என் நெஞ்சைக் கீறியது.

ஆழமான மனித உணர்ச்சிகள் சோக முடிவு, வாழ்க்கையால் ரணமாக்கப்பட்ட, கிழித்தெடுக்கப்பட்ட மனிதர்கள். இவர்களது காதல் அனுபவங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும்? நடு நடுங்கும் மனத்தின் அதிர்வுகளோடு வெளிப்படும் காதல் உணர்ச்சிகள். பாவப்பட்ட ஜனங்கள்கையெழுத்துப் பிரதியை தஸ்தயேவ்ஸ்கியின் நண்பர் கிரிகோரவிச், நிக்ராசவிடம் கொண்டு போய்க்கொடுத்தார். நிக்ராசவ் அதைப் படித்துப் பார்த்தார்.

அந்த மாணவன் செத்துப்போன பகுதிகளில் நிக்ராசவ் வாசித்துக் கொண்டிருந்தார். திடீரென்று நான் அவரை ஏறிட்டுப் பார்த்தேன். மகனுடைய சவப் பெட்டியோடு அவனது தகப்பனார் ஓடுகிறார். நிக்ராசவின் குரல் கம்முகிறது. வாசிப்பதை நிறுத்து கிறார். ஒரு தடவைக்கு இன்னொரு தடவை படிக்க முடியாமல் தடுமாறுகிறார். தாங்க முடியவில்லை அவரால். புறங்கையால் பேப்பரைத் தட்டிவிட்டுக் கேட்டார்- ஏய் யாரிவர்? இதை எழுதியவர் யார்?”

கிரிகோரவிச் நினைவுகூர்கிறார்:

கடைசிப் பகுதியை நான்தான் வாசித்தேன். தேவுஷ்கின் கிழவர் வாரின்காவிடம் வழியனுப்பி விட்டுப் புறப்படும்போது தொடர்ந்து என்னால் வாசிக்க முடியவில்லை. எனக்குத் தெரியாமலேயே நெஞ்சுக்குள்ளிருந்து ஒரு விம்மல். குற்றவுணர்வோடு நிமிர்ந்தேன். நிக்ராசவின் கன்னங்களிலும் கண்ணீர்.

பாவப்பட்ட ஜனங்கள்கையெழுத்துப் பிரதியை நிக்ராசவ், பெலீன்ஸ்கியிடம் கொண்டு போய்க் கொடுத்து உடனடியாக வாசித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். கறாரான அந்த விமர்சகர்என்ன சொல்வார்? நிக்ராசவும் கிரிகோரவிச்சும் தஸ்தயேவ்ஸ்கியும் ஒரு தீர்ப்புக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். சாயந்தரத்திற்குள் பெலீன்ஸ்க்கி நாவலைப் படித்து முடித்து விட்டார்.

ஆச்சரியப்பட வைக்கும்படியான திறமை! ரெண்டு-மூன்று வார்த்தையில், வாசிப்பவனது கண்களுக்கு முன்னால் முகங்களை முழுசாக உயிரோடு கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார். மனிதனின் ஏழ்மையுடனும் அவனது துயரங்களுடனும் எவ்வளவு ஆழமாக சக உணர்ச்சி கொள்ளுகிறார்? ரொம்பவும் கஷ்டப்பட்ட மனிதராக இருக்க வேண்டும். அவரே ரொம்பவும் அவஸ்தைப்பட்டவராக இருக்க வேண்டும்! இருபத்தைந்து வயதுக்குள் இப்படி ஒன்றை எழுதுவதற்கு அவன் மேதையாகத்தான் இருக்க வேண்டும். சாதாரண மனிதனுக்கு இந்த அனுபவத்தைப் பெற ஆயுள் பூராவும் வேண்டியதிருக்கும். ஆனால் இவர் ஒரே ஒரு நிமிட முயற்சியில் அதைப் பிடித்துக் கொண்டு வந்து விடுகிறார்.

இரவு நெடு நேரமாக நிக்ராசவும் பெலீன்ஸ்கியும் அந்த நாவலைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். பெலீன்ஸ்க்கியின் வீட்டிலிருந்து நிச்ராசவ் நேராக தஸ்தயேவ்ஸ்கியைப் பார்க்கச் சென்றார். பெலீன்ஸ்க்கியின் பாராட்டுதல்களை விவரித்தார்.

மறுநாள் மீண்டும் பெலீன்ஸ்க்கி நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது பாவப் பட்ட ஜனங்களைப் பற்றிச் சொன்னார்.

இந்த உலகம் முழுவதையும் நேசிக்க வேண்டும்; இது ஒவ்வொரு மனிதனின் கடமை. அது ஓர் அதி அற்புதமான விஷயம்-இப்படிச் சில கருணா மூர்த்திகள் ரொம்பவும் தாராளமாகச் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்! அவர்கள் வாழ்க்கையில் எதையுமே புரிந்துகொண்டது கிடையாது. வாழ்க்கையின் கொடிய சக்கரங்கள், அதன் சட்ட திட்டங்களோடு மனிதர்கள் மீது ஏறி உருளுகின்றன; எந்த அரவமுமில்லாமல் மனிதர்களின் உறுப்புகளையும் எலும்புகளையும் சிதைக்கின்றன. இதுதான்-இந்த வாழ்க்கையின் நாடகம் இதுதான்....

மூன்றாவது நாள் தஸ்தயேவ்ஸ்கி, பெலீன்ஸ்க்கியின் வீட்டிற்குச் சென்றார். இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

உங்கள் கதையில் வருகின்ற அந்தப் பரிதாபகரமான குமாஸ்தா-தான் பரிதாபத்திற்குரியவன் என்று உணரவில்லை. அதை அங்கீகரிக்கக்கூட அவனுக்குத் தைரியமில்லை. எல்லாவற்றிற்கும் பணிந்துபோவது ஒன்றுதான் அவன் அறிந்தது. அந்த இராணுவ அதிகாரி அவன் மீது இரக்கப்பட்டு நூறு ரூபிள் பணத்தைக் கொடுக்கும்போது கூட அவன் பரிதாபத்திற்குரியவன் என்பதை உணரவில்லை. ஆச்சரியத்தால் வாயடைத்துப் ய்... அறுந்துபோன சட்டைப் பொத்தான், ராணுவ ஜெனரலின் கையைப் பிடித்து முத்தம் கொடுப்பது-கொடுமை, கொடுமை; அவனது அந்த நன்றியுணர்வுதான் கொடுமையானது. இது வீழ்ச்சி, சோகம்! விஷயத்தை அதன் வேரோடு தேடிக் கண்டுபிடித்து விட்டீர்கள்.பெலீன்ஸ்க்கி கடைசியாகச் சொன்னார்:

இதுதான் கலையின் ரகசியம். கலையில் உண்மை என்று சொல்லப்படுவது இதுதான். இப்படித்தான் கலைஞன் உண்மைக்குச் சேவை புரிய வேண்டும். உங்கள் கண்களுக்கு உண்மை தெரிகிறது. உண்மையின் காட்சி உங்களுக்கெனத் திறந்து விடப்பட்டிருக்கிறது. கலைஞனுக்கு இதுதான் மிகப் பெரிய வெகுமதி. இதன் மதிப்பை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வெகுமதிக்கு எப்போதும் உண்மையாக இருங்கள்-நீங்கள் மாபெரும் எழுத்தாளராக ஆக முடியும்.

பாராட்டுதல்களும் அவமதிப்புகளும்:

தஸ்தயேவ்ஸ்கியின் முதல் படைப்பு பாவப்பட்ட ஜனங்கள்அமோகமான பாராட்டுகளைப் பெற்றது. ரஷ்ய இலக்கிய உலகுக்கு தஸ்தயேவ்ஸ்கி என்ற புதிய பெயர் மிக அவசரமாக அறிமுகமானது கோகலின் மேதமையை மிஞ்சிவிட்டார்”; “பாவப்பட்ட ஜனங்கள்-ரஷ்ய இலக்கியத்தின் முதல் சமூக நாவல்என்றெல்லாம் வார்த்தைகள் பரவின. 1846 பிப்ரவரி முதல் தேதியில் தஸ்தயேவ்ஸ்கி தன் சகோதரருக்கு எழுதிய கடிதத்தில்:

எப்போதாவது என் புகழ் இவ்வளவு உயரத்திற்குச் செல்லும் என்று நான் எதிர்பார்த்தது கிடையாது. கோகலையும் தாண்டி நான் வெகு தூரத்திற்கு முன்னால் சென்றுவிட்டேன். நம் இலக்கியவாதிகள் சொல்லுகிறார்கள்; பெலீன் ஸ்க்கியே சொல்லுகிறார்.... வேறு யாரிடமும் இல்லாத ஒரு பிரத்யேகமான எழுத்தாற்றல் என்னிடம் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். நான் பகுப்பாய்வு செய்கிறேன்; தொகுப்பாய்வு அல்ல. அதாவது சிறு சிறு அணுக்களாகப் பிரித்து ஆழத்தை நோக்கிச் சென்று அங்கு வாழ்க்கை முழுமையைக் காணுகிறேன். கோகல் நேரடியாக முழுமையை எடுத்துக் கொள்ளுகிறார். பகுப்பது கிடையாது. அதனாலேயே அவரிடம் ஆழம் இல்லையாம்.... எனது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

சிறு பிள்ளை போல அப்பட்டமாக, நேரடியாகச் சந்தோஷப்பட்டார் தஸ்தயேவ்ஸ்கி. முதல் வெற்றியின் பூரிப்பும் அனுபவமின்மையும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன.

பெலீன்ஸ்க்கியின் இலக்கியப் பட்டாளம் கறாரான இலக்கியப் பார்வை கொண்ட வட்டாரம் மட்டுமல்ல; விஷமத்தனமான கிண்டலும் கேலியும் நையாண்டியும் அவர்களிடத்தில் உண்டு. மிக விரைவில் தஸ்தயேவ்ஸ்கி குறித்து மாற்றுப் பார்வைகள் தோன்றின. பெலீன்ஸ்க்கியின் தீர்ப்பைதுர்கேனவ் ஏற்றுக்கொள்ளவில்லை. பாவப்பட்ட ஜனங்களைஅளவுக்கதிகமாக பெலீன்ஸ்க்கி பாராட்டி வைத்திருப்பது அவரது முதல் தடுமாற்றத்தைக் குறிக்கிறது. முதுமையால் அவரது உடல் உறுப்புக்கள் தளரத்தொடங்கி விட்டன என்பதற்கு அது நிரூபணம்.

இன்னும் சில நாட்களுக்குள், நிக்ராசவும் துர்கேனவும் சேர்ந்து எழுதிய ஒரு நையாண்டிக் கவிதை-இளம் இலக்கியவாதிஎன்ற தலைப்பில்-வெளிவந்தது. பெலீன்ஸ்க்கி, தஸ்தயேவ்ஸ்கிக்கு எழுதிய பாராட்டுக் கவிதை போன்ற பாவனையில் அது எழுதப்பட்டிருந்தது. ஆகா, ஓகோவென்ற பாராட்டுக்களுடன் தொடங்கிய அந்தக் கவிதை கொஞ்சம் கொஞ்சமாக தஸ்தயேவ்ஸ்கியை மிக மென்மையாகச் சீண்டி விளையாடியது. அவிந்து போன குப்பைச் சாம்பலைக் கிண்டிப்பார்க்கும் உன் பார்வையைக் கொஞ்சம் குறைத்துக்கொள்என்று ஒரு வரி. புகழ் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த தஸ்தயேவ்ஸ்கியின் மென்மையான இதயம் திடீரென கிடு கிடுவென நடுங்கத் தொடங்கியது.

ஒரு நாள் மாலைநேரச் சந்திப்பு. பீட்டர்ஸ் பெர்கின் இலக்கியப் பட்டாளம் நண்பர் ஒருவரின் வீட்டில் கூடியது. எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கலைஞர்கள், நடிகைகள், வேடிக்கைகள், கும்மாளங்கள். செனியாவினா என்ற அழகான நடுத்தர வயதுப் பெண் ஒருத்திக்கு தஸ்தயேவ்ஸ்கி அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். பீட்டர்ஸ்பெர்கின் கலை, இலக்கியப் பிரபலங்களுடன் கலந்து பழகி தன் அழகால் அவர்களைக் கௌரவப்படுத்துவது அந்தப் பெண்மணியாரின் வழக்கம். அன்று மாலை செனியாவினா தஸ்தயேவ்ஸ்கியைத் தேடிப் பிடித்து அறிமுகமாகிக் கொண்டார். சபை கிளுகிளுத்தது. கை தட்டியது. இடையிடையே சில உரத்த குரல்கள்.

ஜனக்கூட்டத்தின் அழுத்தத்தை எப்போதுமே தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் தஸ்தயேவ்ஸ்கி, அந்த அழகு தேவதையின் முன்னால் நடுநடுங்கிக் கீழே விழுந்து விட்டார். காக்காய் வலிப்பு. நினைவிழந்தார். இந்தச் செய்தி அதன் எல்லாவித வர்ணனைகளுடனும் இலக்கிய வட்டாரங்களில் வேகமாகப் பரவியது. தஸ்தயேவ்ஸ்கி நத்தை போல் தன்னைப் பின்னால் இழுத்துக் கொண்டார். மாலை நேர இலக்கியச் சந்திப்புகளை நிறுத்திக்கொண்டார். புது அறிமுகங்களைத் தவிர்த்துவிட்டார். அநியாயமாகத் தான் கேவலப் படுத்தப்பட்டதாக அவர் உணர்ந்தார். முழுவதுமாகத் தன்னை மூடிக் கொண்டார். 1846 அக்டோபர் 7ஆம் தேதி தன் அண்ணனுக்கு எழுதிய கடிதத்தில்-

பீட்டர்ஸ்பெர்க்-எனக்கு ஒரு நரகம். ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. இங்கு என்னால் வாழ முடியாது.

தொடர்ந்து எழுதுகிறார் : ஏப்ரல் 1847.

நீ நம்ப மாட்டாய். எனது இலக்கியப் பயணத்தின் மூன்றாவது வருடம் இது. ஒரு புகை மூட்டத்தின் நடுவில் நான். வாழ்க்கை கண்ணுக்குத் தெரியவில்லை. மயக்கத்திலிருந்து இன்னும் நினைவு திரும்பவில்லை. புதிதாக எதையும் படிக்க முடியவில்லை. எப்படியும் காலை ஊன்றிவிட வேண்டுமென்று தவிக்கிறேன். மாயாஜாலம் போன்ற ஒரு புகழ் எனக்கு. அதை நம்ப முடியவில்லை. இன்னும் எத்தனை நாளுக்கு இந்த நரக வாழ்க்கை என்று தெரியவில்லை. இங்கு ஏழ்மை, அவசர வேலைகள்-கொஞ்சம் நிம்மதி கிடைக்குமா?”

நேத்தக்கா நீஸ்வானவாஎன்ற அவரது முடியாத நாவலில் பிடில் வாசிக்கும் ஒரு கலைஞன். இளைஞன். காலை ஊன்றிவிட அவன் தவிப்பதை தஸ்தயேவ்ஸ்கி எழுதுவார்: திறமையின் மீது சக உணர்ச்சி கொள்ளுபவர்கள் தேவை. ஆதரவு வேண்டும். அவனைப்புரிந்து கொள்ளுபவர்கள் வேண்டும். கொஞ்ச தூரம் நடந்தவுடன் தெரிகிறது-யார் யாரோ வந்து உன்னை இடித்துத் தள்ளுகிறார்கள்; தடுமாறிக் கீழே விழத் தட்டுகிறார்கள். கடுமையான உழைப்பு, இழப்புகள், பசி, தூக்கமில்லாத இரவுகள்- இவற்றுக் கிடையில் உன்னால் எழுந்திருக்க முடிகிறதா என்று, நீ எப்படி நிமிருகிறாய் என்று உன்னை அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நீ ஒருவன்; அவர்களோ பலர். குண்டூசிகளால் அவர்கள் உன்னைக் குத்துவார்கள்.

ருஷ்ய மொழியிலிருந்து தமிழில் : ந.முத்துமோகன்
(உங்கள் நூலகம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)
Related Posts Plugin for WordPress, Blogger...