July 2, 2014

திருக்குறள் உரை: கொல்லாமை

குறள் பால்: அறத்துப்பால்.
அதிகாரம்: 33. கொல்லாமை.

எந்த ஒரு உயிரையும் கொல்லாதிருப்பதுதான் கொல்லாமை. ஆனால் ஓர் உயிர் இன்னொரு உயிரைக் கொல்லாமல் வாழமுடியாது. ஓர் உயிர்தான் இன்னொரு உயிருக்கு உணவாகிறது. அப்படியிருக்க கொல்லாதிருப்பது எப்படி? ஒரு மனிதன் பிற மனிதனைக் கொல்லாதிருப்பது கொல்லாமை என்று வேண்டுமானால் பொருள் கொள்ளலாம். ஏனெனில் தற்காலத்தில் இதுதான் அதிகமாக நடக்கிறது. மனித உயிர்கள் என்பது பைசா பெறாத ஒன்றாகிவிட்டது. ஒருவன் மற்றொரு மனிதனைக் நேரடியாகக் கொல்வது மட்டுமல்ல அதற்கு மறைமுகமாக ஏதேனும் ஒரு வகையில் காரணமாக இருப்பதும் கொல்வதற்குச் சமம்தான். கொல்பவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது. அவர்களுக்கு கதிமோட்சம் இல்லை.

குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
உரை:
அறச்செயல் என்பது கொல்லாமையே கொல்வது
பிற தீவினைகள் எல்லாம் தரும்.

குறள் 322:
பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.
உரை:
பகுத்துண்டு எல்லா உயிர்களையும் காப்பது அறநூலார்
தொகுத்த அறங்களில் எல்லாம் முதன்மையானது.

குறள் 323:
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
உரை:
முதன்மையான நல்லறம் கொல்லாமையே அதன்
பின்னே வருவதான பொய்யாமையும் நல்லதே.

குறள் 324:
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழும் நெறி.
உரை:
நல்ல வழி என்பது என்னவெனில் எந்தவொரு
உயிரையும் கொல்லாமையான நெறியே.

குறள் 325:
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
உரை:
தீமை அஞ்சி தீமைகள் விட்டவர்களில் கொலையஞ்சி
கொல்லாமையை மேற்கொள்பவன் சிறந்தவன்.

குறள் 326:
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று.
உரை:
கொல்லாமை மேற்கொண்டு நடப்பவன் வாழ்நாள் மேல்
கை வைக்கமாட்டான் உயிரெடுக்கும் எமன்.

குறள் 327:
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.
உரை:
தன் உயிரை இழப்பினும் செய்யக்கூடாது
பிற உயிரை நீக்கும் செயல்.

குறள் 328:
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
உரை:
நன்மை கிடைப்பது பெரிதானாலும் சான்றோர்க்கு
கொல்வதால் வரும் பலன் இழிவானதே.

குறள் 329:
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
உரை:
கொலை செய்பவர்களை மக்களில் தாழ்ந்தவராகவே
எண்ணுவர் கொலையின் கொடுமையை அறிந்தவர்.

குறள் 330:
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
உரை:
உயிரை உடம்பினின்று நீக்கியவர் இவரென்பதை நோயுடம்பும்
வறுமையும் வைத்தே அறிவர் அறிஞர்.
Related Posts Plugin for WordPress, Blogger...