திருக்குறள் உரை: புணர்ச்சி மகிழ்தல்.

குறள் பால்: காமத்துப்பால்.
அதிகாரம்: 111. புணர்ச்சி மகிழ்தல்.

புணர்ச்சி மகிழ்தலாவது காதலனும் காதலியும் கூடியபின் அந்த இன்பத்தை எண்ணிக் காதலன் மகிழ்வதாம். புத்தகத்தைப் படித்ததும் அதை நினைத்து மனம் பரவசப்படுதல் போன்றது இது. அந்தப் புத்தகத்தில் உள்ள பலவற்றையும் நினைத்து மனம் அடையும் மகிழ்ச்சிக்கு நிகரானது காதலியுடன் தான் பெற்ற இன்பத்தை நினைத்துக் காதலன் மகிழ்வது.

குறள் 1101:
கண்டுகேட் டுண்டுயிர்த்துத் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
உரை:
கண்டு கேட்டு சுவைத்து முகர்ந்து தொட்டு ஐம்புலனும்
அறியுமின்பம் வளையலணிந்த இவளிடமே உள்ளன.

குறள் 1102:
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
உரை:
நோய்க்கு மருந்து வேறாயிருக்க அணிகலன்
அணிந்த இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.

குறள் 1103:
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
உரை:
தான் மயங்கியவளின் மென்மையான தோளில் துயில்வதைவிட
இனிதோ தாமரைக் கண்ணனின் உலகு.

குறள் 1104:
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.
உரை:
விலகினால் சுடுவதும் நெருங்கினால் குளிர்விப்பதுமான
தீயை எங்கே பெற்றாள் இவள்.

குறள் 1105:
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
உரை:
விரும்பிய பொழுது விரும்பியவையாகவே வந்து
இன்பம் தரவல்லது பூச்சூடிய பாவையின் தோள்.

குறள் 1106:
உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தின் இயன்றன தோள்.
உரை:
அணைக்கும் போதெல்லாம் உயிர் தளிர்க்கத் தீண்டுவதால்
இவளுக்கு அமிழ்தத்தினால் செய்த தோள்.

குறள் 1107:
தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.
உரை:
தம்மிடம் இருப்பதை இல்லாதவற்குப் பகிர்ந்துண்ணும்
இன்பம் பொன்நிறமுடைய இவளைத் தழுவுதல் போலாகும்.

குறள் 1108:
வீழும் இருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
உரை:
விரும்பிய காதலர்க்கு இனிமையானது அவர்களுக்கிடையே
காற்றும் புகாதபடி இறுகத் தழுவதலாம்.

குறள் 1109:
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
உரை:
ஊடலும் உணர்ந்து புணர்தலும் ஆகியவை காதலுடையார்
சேர்ந்து பெறும் பயனாகும்.

குறள் 1110:
அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
உரை:
அறியுந்தோறும் அறியாமை மிகுதல் போலக் காமம்
அணிகலன் அணிந்த இவளோடு சேருந்தோறும் மிகும்.
Related Posts Plugin for WordPress, Blogger...