திருக்குறள் உரை: சிற்றினம் சேராமை

குறள் பால்: பொருட்பால்
அதிகாரம்: 46. சிற்றினம் சேராமை

மனிதன் எப்போதும் மேலானவற்றுக்குத் திறப்பாக இருக்கவேண்டும். அதை ஒரு பழக்கமாகக் கொள்ளும்போதுதான் அவன் தவறு செய்வதிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியும். ஆனால் அவன் கீழானவற்றுக்குப் பழகிவிட்டால் அவன் வாழ்க்கை பல்வேறு துன்பங்களின் புகலிடமாகும். இவையிரண்டும் நாம் சேரும், நட்புகொள்ளும் மனிதர்களுக்கேற்பவே அமைகிறது. எனவே மனிதர்களின் குணம் அறிந்து, உயர்ந்த மனமும் குணமும் உடையவர்களைச் சேர்வது ஒருவனுக்குப் பல்வேறு நன்மைகளைத் தரும் எனில் மோசமான மனிதர்களிடம் கொள்ளும் உறவு சொல்லவியலாத இன்னல்களைக் கொண்டு சேர்க்கும்.

குறள் 451:
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
உரை:
பெரியார் சிற்றினம் சேர அஞ்சுவர் சிறியோரோ
அவற்றையே சுற்றமாகக் கொள்வர்.

குறள் 452:
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு.
உரை:
நிலத்தின் தன்மை நீரின் தன்மையாவது போல மனிதருக்குச்
சேரும் இனத்திற்கேற்பவே அறிவிருக்கும்.

குறள் 453:
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னா னெனப்படுஞ் சொல்.
உரை:
மனத்திற்கேற்ப மனிதர்க்கு உணர்ச்சியும் இனத்திற்கேற்ப
இத்தகையவன் எனப்படும் சொல்லும் அமையும்.

குறள் 454:
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு.
உரை:
மனத்திலிருப்பதாகக் காட்டினாலும் ஒருவருக்கு
இனத்தினாலேயே ஆகும் அறிவு.

குறள் 455:
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
உரை:
மனத்தூய்மை செயலின் தூய்மை இரண்டும்
இனந்தூய்மை துணையாலே வரும்.

குறள் 456:
மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை.
உரை:
மனம் தூயவர்க்கு எஞ்சுவது நன்றாகும் இனம் தூயவர்க்கு
நன்றாகாத செயல் எதுவுமில்லை.

குறள் 457:
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்.
உரை:
மனநலம் மனிதர்க்குச் செல்வம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

குறள் 458:
மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து.
உரை:
மனநலம் மிக உடையவராயினும் சான்றோர்க்கு
இனநலம் வலிமை சேர்க்கும்.

குறள் 459:
மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து.
உரை:
மன நலத்தினால் வரும் பேரும் புகழும்
இனநலத்தினால் வலிமை பெறும்.

குறள் 460:
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்.
உரை:
நல்லினத்தைவிடத் துணையானது ஏதுமில்லை
தீயினத்தைப் போலத் துன்பம் தருவதுமில்லை.
Related Posts Plugin for WordPress, Blogger...