தஸ்தயேவ்ஸ்கி காட்டும் அற்புதத் தருணங்கள்

தஸ்தயேவ்ஸ்கியின் கரமாஸவ் சகோதரர்களைப் படிக்கப் படிக்க ஆவலும் பிரமிப்பும் அதிகரித்தபடியே இருக்கிறது. பாத்திரங்களின் வார்ப்பும், நாவலைக் கட்டமைத்த விதமும் நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்கிறது. நாவல் ஒன்று நம்முள் ஏற்படுத்தும் விளைவைப் பாதிப்பு என்கிறோம். ஆனால் கரமாஸவ் சகோதரர்கள் போன்ற பெரும் படைப்பை நாம் அவ்வாறு சொல்ல முடியாது. மாறாக தரிசனம் என்ற வார்த்தையைப் பிரயோகிப்பதே சிறந்ததாக இருக்கும். அத்தகைய தரிசனத்தை தருவதாலேயே உலகம் முழுதும் அவரைக் கொண்டாடுகிறார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

கடல் தூரத்தில் இருந்து பார்க்க வசீகரமானதுதான். கடலைப் பற்றி பிறர் சொல்வதைக் கேட்பதும் பிரமிக்க வைக்கலாம்தான். ஆனால் நாமாக கடலில் இறங்காதவரை அதன் ஆழத்தையோ அற்புதத்தையோ அறிந்துகொள்ள முடியாது. எனவே மொழிபெயர்ப்பு நாவல் என்ற மனத்தடையை மட்டுமல்ல, இந்நாவலை வாசிக்க நமக்கிருக்கும் மனத்தடை அனைத்தையும் நீக்கிவிட்டு, அறியும் முனைப்பு ஒன்றையே துணையாகக் கொண்டு நாவலைப் படிக்க ஆரம்பித்தால் ஒரு கட்டத்திற்குப் பிறகு நாவலே நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. இது என் அனுபவம். எனவே, தீவிர இலக்கியத்தில் நாட்டம் கொண்ட வாசகர்கள் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்நாவலை வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

ஒரு மனிதனுக்கு மற்றோர் மனிதன் நேரில் துன்பத்தைக் கொடுக்கலாம். ஆனால் தூரத்திலிருந்தபடியே அத்தகைய துன்பத்தை, துயரத்தைப் பிறருக்குக் கொடுக்க முடியமா என்ன? முடியும் என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. பல்வேறு சமயங்களில் நமக்கு இனம்புரியாத துயரம் ஒன்று மனதைக் கௌவிப் பிடித்து கசக்கிப் பிழியும்போது நாம் காரணம் தெரியாமல் தவிக்கிறோம். ஆனால் உளவியல் ரீதியாக ஆராய்ந்தால் தூய்மையில்லாத கெட்ட எண்ணங்கள் நம்மை பாதிக்கவே செய்கின்றன என்பதை அறியலாம். அத்தகைய எண்ணம் கொண்டவர்கள் நமக்கு நெருக்கமாக அருகில் இல்லாவிடினும் சற்று தூரத்தில் இருந்தபடியே நம்மை பாதிப்படையச் செய்ய முடியும். (நாவலை முழுமையாகப் படித்த பிறகு இதை இன்னும் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். அவரது குற்றமும் தண்டணையும் நாவல் முழுமையாக இத்தகைய எண்ணங்களை மையமாகக் கொண்டதுதான்). 

இதை இவான் மற்றும் ஸ்மெர்த்தியாக்கவ் சந்திப்பில் வியக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தியிருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. தன் மனதில் எழுந்த துயரத்திற்குப் பலவகையிலும் காரணங்களைத் தேடும்போது அவன் ஸ்மெர்த்தியாக்கவ்வை சந்திக்கிறான். அவனைக் கண்டதும்தான் தன் மனத்துயருக்குக் காரணம் அவன்தான் என்று அறிகிறான். அவன் மீது இவானுக்கு ஏற்படும் ஏதோ ஒரு சொல்லத்தெரியாத வெறுப்பே இவானை இம்சிக்கிறது. அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே நிகழும் உரையாடல்களை என்னவென்று சொல்வது? சொல்ல வார்த்தை வரவில்லை. நாவலின் அந்தக் கட்டம் வரும்போது படிக்கும் ஒவ்வொருவரும் அதனை ஒரு அற்புதம் என்று நிச்சயமாகச் சொல்வோம். மனித மனங்களை அதன் ஆழம்வரை ஊடுருவிச் சென்று அதன் ரகசியங்களை வெளிப்படுத்தும் அந்த எழுத்தாற்றல் நம்மை பிரமிக்கவும், கிறங்கவும் வைப்பது. அதைப் படிக்கும் தருணத்தில் நம் மனம் கொள்ளும் பரவசம், கண்டடைதல் அற்புதத்திலும் அற்புதமானது.

நாவலின் ஒரு பகுதியை அப்படியே தருகிறேன். இதைப் படிப்பவர்கள் நாவல் முழுமையும் படிக்கவேண்டும் என்ற தூண்டுதல் அடைவார்கள் என்று நம்புகிறேன்.

அல்யோஷாவிடமிருந்து விடைபெற்றுச் சென்ற இவான் பியோதரவிச், பியோதர் பாவ்லவிச்சின் வீட்டிற்குச் சென்றான். தடீரென்று ஒருவித மனத்துயர் ஏனோ அவனைப் பற்றி இழுக்க, முக்கியமாக அது வீட்டை நெருங்க எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும், அதிகமாக, இன்னும் அதிகமாக அதிகரித்தது. அப்படி ஒரு மனத்துயரம் இருந்தது அவனுக்கு விநோதமாகப் படவில்லை, ஆனால் எதன் பொருட்டு இந்த மனத்துயரம் என்பதைத் தான் இவான் பியோதரவிச்சால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமலிருந்தது. இதற்கு முன்பும் இப்படி அவனுக்கு அடிக்கடி மனத்துயரம் ஏற்பட்ட காரணத்தால், அது ஒன்றும் அவனுக்கு ஆச்சர்யமாக இருக்கவில்லை. ஏனெனில் நாளைக்கே அவன் திடீரென்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு, எது அவனை இங்கு ஈர்த்து இழுத்து வந்ததோ, அதை விட்டுவிட்டு முற்றிலும் வேறு ஒரு திசைக்கு, புதிய வாழ்வை நோக்கி, முன்பின் தெரியாத எதிர்காலத்தை நோக்கி, மறுபடியும் அவன் தன்னந்தனியாக, முன்பு போலவே அதிக நம்பிக்கையுடன், ஆனால் எதன் மீது நம்பிக்கை என்று தெரியாமல், அதிக எதிர்பார்ப்புகளுடன், வாழ்க்கையிடமிருந்து மிக அதிக எதிர்பார்ப்புகளுடன், ஆனால் அந்த எதிர்பார்ப்புகளிலிருந்தும் தன்னுடைய விருப்பங்களிலிருந்தும் கூட எதையுமே புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தான் இவான். இருந்தாலும் இனம் புரியாத இந்த மனச்சோர்வு இந்த நிமிடம் அவனை உண்மையாகவே ஆட்கொண்டிருந்தாலும், அவனுடைய மன உலைவுக்குக் காரணம் முற்றிலும் அதுவாக இல்லை. ‘பெற்றோரின் வீட்டிற்குப் போவதே வெறுப்பாக இருக்கிறதோ?’ என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் இவான். ‘இன்று கடைசி முறையாக இவ்வளவு தூரம் வெறுத்து ஒதுக்கும் கேடுகெட்ட இந்த வாசற்படியை நான் மிதிக்கிறேன், இருந்தாலும் அது எனக்கு வெறுப்பாக இருக்கிறது...’ அதனால்தானோ என்னவோ இன்று எனக்கு மிகவும் துயரமாக இருக்கிறது.... ஆனால் அது இல்லை. அது இல்லவே இல்லை. ஒரு சமயம் அல்யோஷாவிடமிருந்து விடைபெற்றுக்கொண்டதால் இருக்குமோ அல்லது அவனிடம் இப்படிப் பேசியதால் இருக்குமோ ‘எத்தனை காலம் இந்த உலகத்துடன் நான் பேசாமல் மௌனமாக இருந்திருக்கிறேன், பேசும் எண்ணமில்லாமலும் இருந்திருக்கிறேன், இப்போது திடீரென்று எவ்வளவு விஷயங்களை உளறிக்கொட்டியிருக்கிறேன்.’ உண்மையாகவே, இவை எல்லாமே ஓர் இளைஞனின் மனத்துயர், அனபவமில்லாத ஒரு சிறுவனின் உளறல், இளைஞனின் தற்பெருமை, என்றுடைய மனத்திலுள்ளதை வெளிப்படுத்தத் தெரியாததால் ஏற்பட்ட சோர்வு, அதுவும், கண்டிப்பாக, அல்யோஷா போன்ற ஒருவனிடம் மிகப்பெரிய விஷயங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கும் அவனிடம், வெளிப்படுத்தத் தெரியாததால் ஏற்பட்ட சோர்வு. கண்டிப்பாக இந்த மனத்துயரம், எனக்கு இருக்க வேண்டியதுதான், ஆனால் அதுவல்ல இது. முற்றிலுமாக அதுவல்ல இது. ‘வாந்தி எடுத்து விடும் அளவுக்கு இருக்கும் இந்த மனத்துயரம், எதனால் என்றுதான் எனக்குப் புரியவில்லை, என்ன வேண்டுமென்றுதான் தெரியவில்லை. ஒரு சமயம் இதைப் பற்றி நான் யோசிக்காமல் இருந்தால் என்ன...’

‘யோசிக்கக் கூடாது’ என்றுதான் இவான் பியோதரவிச் முயன்றான், ஆனால் அவனால் அது முடியவில்லை. முக்கியமாக, அவனுடைய இந்த மனத்துயரம் தற்செயலாக, முற்றிலுமாக ஏதோ ஒரு வெளிப்புறக் காரணத்தால் எற்பட்டிருக்க அது அவனுக்கு எரிச்சலை ஊட்டியது. இதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். இந்த மனத்துயரம் உயிருள்ள ஏதோ ஒரு ஜீவனின் ரூபத்திலோ, எங்கோ எதுவோ துருத்திக்கொண்டிருக்கும் ஒரு பொருளாகவோ அல்லது சில சமயம் நம் கண் முன்னேயே நீண்ட நேரம் உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு பொருளாகவோ இருக்க, நம்முடைய வேலைகளுக்கு இடையே, சூடான வாக்குவாதத்திற்கிடையே அதை நாம் கவனிக்காமல் இருந்தாலும், ஏனோ அது நமக்கு எரிச்சலூட்டுவதாக, ஏறக்குறைய வேதனை அளிப்பதாக இருக்க, இறுதியாக, அது தேவையில்லாத ஒரு பொருளாக, அதை நாம் கண்டுபிடித்து ஒதுக்கிவைத்தாலும், அநேகமாக அது ஒன்றுமில்லாத, கேலிக்குரிய ஒரு பொருளாக, ஞாபக மறதியாக வேறு ஒரு இடத்தில் மாற்றி வைத்த அல்லது எங்கோ தவறி விழுந்துவிட்ட ஒரு கைக்குட்டையாக, மாற்றி வைக்கப்பட்ட ஒரு புத்தகமாக இப்படி எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். இறுதியாக, எரிச்சலூட்டும் இந்த மனநிலையில் இவான் பியோதரவிச் தந்தையின் வீட்டை வந்தடைய, வீட்டை நெருங்கப் பதினைந்து அடிதான் இருந்திருக்கும், திடீரென்று எது அவனை இப்படி வேதனைப்படுத்தி, கவலைப்பட வைத்தது என்று அவன் உணர்ந்தான். 

மாலை நேரப்பொழுதை அனுபவித்தபடி அந்தக் கதவருகே இருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்த வேலைக்காரன் ஸ்மெர்த்தியாக்கவைப் பார்த்த மாத்திரத்திலேயே இவான் புரிந்துகொண்டான், இவன்தான் அவனுடைய மனத்தை இதுவரை அழுத்திக்கொண்டிருந்தவன் என்றும் அவனைத்தான் இவானால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் உடனே புரிந்துகொண்டான். அவனுக்குச் சட்டென்று இப்போது எல்லாமே விளங்கிவிட்டது. சிறிது நேரத்திற்கு முன்பாக அல்யோஷா, ஸ்மெர்த்தியாக்கவை சந்தித்த விஷயத்தைப் பற்றிச் சொன்னதிலிருந்தே பயங்கரமான, வெறுக்கத்தக்க ஏதோ ஒரு உணர்வு திடீரென்று இவான் மனத்தில் ஊடுருவிச் செல்ல, அதன் விளைவாக, அப்போதிலிருந்தே அவனுடைய மனத்தில் வெறுப்பு மோலோங்கி நின்றது. பிறகு அவர்கள் பேசிக்கொண்டிருந்ததில் ஸ்மெர்த்தியாக்கவைப் பற்றி இவான் மறந்து போயிருக்க, அல்யோஷாவிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு வீட்டிற்குப் போனபோது மறந்து போயிருந்த ஸ்மெர்த்தியாக்கவின் நினைவு சட்டென்று அவன் மனத்தில் மேலெழ ஆரம்பித்தது. 

‘ஆமாம், கேடுகெட்ட இந்தக் கயவனின் நினைவா இந்த அளவுக்கு என்னை ஆட்கொண்டுவிட்டது!’ என்று நினைத்த இவானின் மனத்தில் அடக்க முடியாத வெறுப்பு மேலோங்கியது.
Related Posts Plugin for WordPress, Blogger...