July 4, 2014

திருக்குறள் உரை: நிலையாமை

குறள் பால்: அறத்துப்பால்.
அதிகாரம்: 34. நிலையாமை.

மனித வாழ்க்கையின் நிலையாமையை இந்த அதிகாரம் அதிகமும் பேசுகிறது. ஆனால் மனிதன் என்றில்லை, அஃறிணைப் பொருட்களும், கண்களுக்குப் புலப்படாத அரூபப் பொருட்களும் கூட நிலையில்லாதவையே. எல்லாமே சதா மாறுதலுக்குட்பட்டு ஒன்றிலிருந்து ஒன்றாக மாறிக்கொண்டே இருக்கிறது. மாறுதல் ஒன்றே மாறுதல் இல்லாதது என்பதே நிலையாமை. வாழ்க்கையின் பல சிக்கல்களை எதிர்கொள்ளவும், அறியாமையை நீக்கவும் இந்த நிலையாமை தத்துவம் நமக்கு உதவுகிறது.

குறள் 331:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
உரை:
நிலையில்லாததை நிலையானது என்று உணரும்
அற்ப அறிவு ஒருவர்க்கு இழிவானது.

குறள் 332:
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
உரை:
கூத்துக்கு கூட்டம் போல் சேரும் செல்வம்
கூத்து முடிந்ததும் கலைவது போல் போய்விடும்.

குறள் 333:
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
உரை:
நிலையில்லா இயல்புடைய செல்வம் கிடைக்கப்பெற்றால்
நிலைக்கும் செயல்களை அப்போதே செய்க.

குறள் 334:
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.
உரை:
நாள் எனத் தோன்றுவது உண்மையில் உயிரைப்
பிளக்கும் வாளே என்று உணரவேண்டும்.

குறள் 335:
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
உரை:
நாவை அடைத்து பேச்சு நிற்குமுன் நல்லவற்றை
விரைந்து செய்துவிட வேண்டும்.

குறள் 336:
நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.
உரை:
நேற்று இருந்தவன் இன்றில்லை என்னும்
பெருமை உடையது இந்த உலகம்.

குறள் 337:
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல.
உரை:
ஒரு கணமும் வாழ்வதை உணராதவர் கற்பனையோ
கோடியல்ல அதற்கும் மேலாம்.

குறள் 338:
குடம்பை தனித்துதொழியப் புள்பறந் தற்றே
உடம்பொ டுயிரிடை நட்பு.
உரை:
முட்டையைக் கழற்றிவிட்டு பறந்துவிடும் பறவை போன்றது
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு.

குறள் 339:
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
உரை:
உறங்குவது போன்றது இறப்பு உறங்கி
விழிப்பது போன்றது பிறப்பு.

குறள் 340:
புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்த உயிர்க்கு.
உரை:
புகுவதற்கு புகலிடம் கிட்டவில்லையோ நோயுறும் உடம்பில்
ஒதுங்கியிருந்த உயிர்க்கு.
Related Posts Plugin for WordPress, Blogger...