திருக்குறள் உரை: ஈகை

குறள் பால்: அறத்துப்பால்.
அதிகாரம்: 23. ஈகை.

சுயநலம் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் பிறருக்கு கொடுப்பது அல்லது உதவுவது அருகிவிட்டது. அப்படியே கொடுத்தாலும் அல்லது செய்தாலும் அது சுய லாபத்துக்காகவே செய்யப்படுகிறது. ஆனால் பிறரிடமிருந்து எவ்வகையிலும் பெறுவது மேலானதாக ஆகிவிட்டது. வள்ளுவர் காட்டும் ஈகை  இந்த உலகத்தின் இன்றைய நடைமுறைக்கு முற்றிலும்  புறம்பாக இருக்கிறது. அப்படி புறம்பானதாக நாம் மாற்றியிருக்கிறோம். மனித வரலாற்றின் பக்கங்களில் இது மாபெரும் சாதனை. இதற்காக தனி ஒரு மனிதனைக் குற்றம் சுமத்த முடியாது. மொத்த சமூகமும் அப்படியான ஒரு மனநிலையில் தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் தனி மனிதன் திருந்தும்போது சமூகம் தானே திருந்தும் என்பதை நாம் ஞாபகம் கொள்வது நல்லது.

குறள் 221:
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
உரை:
இல்லாதவர்க்கு கொடுப்பதே ஈகை மற்றவை
பலனை எதிர்நோக்கி கொடுப்பதாகும்.

குறள் 222:
நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
உரை:
நல்லதுதான் என்றாலும் பெறுவது தீமையே வானுலகம்
இல்லையெனினும் கொடுப்பதே நல்லது.

குறள் 223:
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
உரை:
இல்லை என்று சொல்லாது கொடுக்கும் குணம்
உயர்ந்த குடிப் பிறந்தவரிடம் உண்டு.

குறள் 224:
இன்னாது திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு.
உரை:
கொடுப்பது இரவலரை திருப்திபடுத்துமா என்ற துன்பம்
இரவலரின் இன்முகம் காணும் வரை இருக்கும்.

குறள் 225:
ஆற்றுவார் ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.
உரை:
பசித்திருக்கும் விரதத்தின் ஆற்றலைவிட பசித்தவரின்
பசியைப் போக்கும் ஆற்றல் மேம்பட்டது.

குறள் 226:
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
உரை:
வறியவரின் கடும்பசியை தீர்ப்பதே ஒருவனுக்கு
பெற்ற பொருளைச் சேமிக்கும் கிடங்காகும்.

குறள் 227:
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது.
உரை:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புபவனை பசியென்ற
கொடிய நோய் நெருங்க முடியாது.

குறள் 228:
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
உரை:
கொடுக்கும் இன்பத்தை அறியாதார் தம் பொருளை
பொத்திவைத்து இழந்திடும் அருளிலாதார்.

குறள் 229:
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.
உரை:
இரத்தலைவிடக் கொடியது தன்னிடம் நிரம்பியுள்ளதை
தான் மட்டும் தனியே உண்பது.

குறள் 230:
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் லியையாக் கடை.
உரை:
சாவைவிடத் துன்பமானது வேறில்லை எனினும்
கொடுக்க இயலாதபோது சாவதும் இனிதே.
Related Posts Plugin for WordPress, Blogger...