தஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞனும் அவன் படைப்புகளும்

ஒரு படைப்பு என்பது செயலல்ல மாறாக அது ஒரு நிகழ்வு. ஆனால் அந்த நிகழ்வு நிகழ்வதற்கு ஒரு படைப்பாளி எப்போதும் தன்னைத் தயார் நிலையில் வைத்திருக்கும் போதே அந்த நிகழ்வு நிகழும். தன் வாழ்க்கையின் அனுபவங்களின் சாரத்தோடு புனைவைச் சரிவிகிதத்தில் இணைக்கும் கற்பனையிலும் முயற்சியிலும் எந்நேரமும் முனைப்புடன் இருக்கும்போது அவன் தன் படைப்புக்கான ஆயத்தத்தில் இருக்கிறான் என்றாகிறது. ஒரு சாதாரண படைப்புக்கே இந்த நியதி அவசியமெனில் பெரும்படைப்புகளுக்கு எத்தகைய உழைப்பும், முயற்சியும் வேண்டும் என்பது புரியும். படைப்பு தொழிலல்ல மாறாக அது ஒரு தவம் என்று நினைப்பவர்களே சிறந்த படைப்பாளியாக முடியும். அத்தகையவர்களே சிறந்த படைப்புகளைத் தரவும் முடியும். சொந்த வாழ்வின் அனுபவங்களும், பிறர் வாழ்வின் அனுபவங்களும் ஒன்று சேர்வதால் மட்டுமே ஒரு படைப்பு உருவாகிவிட முடியாது. அவற்றோடு அசாதாரணமான கற்பனை வளம் தேவை. அனுபவங்களோடு கற்பனை உரசும் போதுதான் படைப்பு பிறக்க முடியும். கற்பனை இல்லாத அனுபவமும், அனுபவமில்லாத கற்பனையும் என்றுமே படைப்பாக முடியாது.

கரமாஸவ் சகோதரர்கள் நாவலின் ஐந்தாவது அத்தியாயத்திற்கு தஸ்தயேவ்ஸ்கி ஒரு ஸ்கெட்ச் போட்டிருந்ததைப் பார்த்து நான் அசந்து போனேன். அதில் அவரது கடும் உழைப்பும், கற்பனை வளமும் தெளிவாகப் புலப்படுகிறது. அவரது இந்த உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு பற்றிய வியப்பு, அவரின் இந்த வரைபடத்தைப் பார்த்தவுடன், பல மடங்காகப் பெருகிவிட்டது. கரமாஸவ் சகோதரர்கள் நாவலின் எந்தவொரு பக்கமும் மேம்போக்கானதல்ல, மாறாக சிற்பி ஒருவனின் நுணுக்கத்தோடு நாவலின் பக்கங்களைச் செதுக்கியிருக்கிறார் அவர். அதனால்தான் தஸ்தயேவ்ஸ்கி ஒரு படைப்பாளி என்ற நிலையையும் தாண்டி, நாவல் கலையின் சிகரத்தில் ஒரு கலைஞனாக உயர்ந்து நிற்கிறார். எனவே தன் படைப்போடு உறவு கொள்ளும் யாரையும் அவர் பெருமளவில் பாதிப்பது தவிர்க்க முடியாதது. அவருடன் நெருக்கம் கொள்ளும் ஒருவன் முதலில் இந்த உலகை, பிறகு அதில் வாழும் மனிதர்களை, அதன் பிறகு அந்த மனிதர்களின் மனங்களைப் புரிந்துகொள்கிறான். இறுதியாக, எதையும் ஊடுருவிப் பார்க்கும் தெளிவு பெற்றவனாகத் தன்னைத்தானே அறிந்துகொள்கிறான்.

“தஸ்தயேவ்ஸ்கியின் அறிமுகம்தான், காலம்-கலை-படைப்பெழுச்சிமிக்க கலைஞன் என்ற உறவின் திகைப்பூட்டும் அதிசயங்களை ஆழமாய் எனக்கு வெளிப்படுத்தியது. சூரியனின் முகம் படாத ரகஸ்ய ஊற்றுகளின் சலனங்களைக் காணக் கிடைத்ததும், குமிழ் ஓசைகளைக் கேட்க முடிந்ததும் அக் கலைஞனின் படைப்புலகோடு கொண்ட உறவில்தான். கலை இலக்கியம் குறித்து இளம் வயதில் நான் கொண்டிருந்த கோட்பாடுகளை முதன்முறையாக, முற்றிலுமாகத் தகர்த்தெரிந்தவர் தஸ்தயேவ்ஸ்கி. யதார்த்தம் என்பதன் வெளிமுகங்களில் அல்ல, மாறாக, அவற்றின் உள்முகங்களிலேயே, படைப்பெழுச்சியில் பிரவஹிக்கக்கூடிய வாழ்வின் உண்மைகள் சலனம் கொண்டிருக்கின்றன என்பதை உணர்த்தியது இந்த உறவுதான். பாத்திரங்களின் எண்ணங்கள், செயல்கள் எல்லாம் அதனதன் வரையறைக்குள், பிசகற்ற ஒரு நேர்கோட்டில் வார்க்கப்பட்டிருக்க வேண்டும் என்ற ஒரு மதிப்பீட்டுப் பார்வை என்னிடமிருந்து கழன்றோடியது. ஒழுங்கு, பிசகின்மை, நேர்த்தி, முரணற்ற தன்மை என்பனவற்றின் பெயரில் உண்மையும், படைப்பும் நேர்மையும் நழுவி விடுகின்றன என்பதை தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புலகமே உணர்த்தியது. ஒழுங்கு குறித்த எவ்விதத் தீர்மானங்களுமின்றி, முரண்பட்ட உணர்ச்சிகளில் ஊசலாடும் இயல்பினராக அவர்கள் இருக்கிறார்கள். தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்பெழுச்சியில், உள்ளுறைந்து கிடக்கும் உண்மைகளின் மீது வெளிச்சம் பரவுகிறது. அவ்வெளிச்சத்தில் அந்த உண்மைகள் நம்மீதும் படர்கின்றன. யதார்த்தத்தின் ஆழ்ந்த பகுதிகளில் ஊடுருவிப் பாய்வதன் மூலம் வெளிவரும் உண்மைகள் அவை.” என்று தஸ்தயேவ்ஸ்கி தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை சி.மோகன் வெளிப்படுத்துகிறார்.

தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கை, அவர் வாழ்ந்த காலம், அவரது படைப்புகள் என்று பலவற்றையும் ஆராயும் சுந்தர ராமசாமி இறுதியில் இவ்வாறு சொல்கிறார் “அவனிடம் இருந்து கற்றுக்கொள்ளாத எந்த உளவியல் அறிஞனும் அவனுக்குப் பின் உலகத்தில் தோன்றவே இல்லை. காலத்தின் நீட்சியில் வெளிப்படும் புதிய உண்மைகளின் முதல் கிரணங்களைத் தத்துவவாதிக்கும் விஞ்ஞானிக்கும் முன்னால் கலைஞனின் உணர்வுக் கொம்புகள் பதிவு செய்துவிடுகின்றன என்பதற்குத் தலைசிறந்த உதாரணமாக தஸ்தயேவ்ஸ்கி நின்றுகொண்டிருக்கிறான். ஆனால் இந்தப் புதிய உண்மைகள் மீது சாய்ந்து நிற்பவை அல்ல தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள். அவை மனிதன் மீது சாய்ந்து நிற்கின்றன. தன்னை அறிந்துகொள்ள விழையும் மனிதன், தன் காலத்தை அறிந்துகொள்ள விழையும் மனிதன், வாழ்க்கையின் எண்ணற்ற முகங்களைப் புரிந்துகொள்ள விழையும் மனிதன் இருக்கும் காலம் வரையிலும் அவனுக்குத் தஸ்தயேவ்ஸ்கியைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இருந்துகொண்டுதானிருக்கும்.”

கரமாஸவ் சகோதரர்களின் முன்னுரைப் பகுதியில் தன் நாவலின் நாயகன் அலெக்ஸெயைப் பற்றித் தான் இரண்டு நாவல்கள் எழுதப்போவதாகவும், முதல் நாவல் கரமாஸவ் சகோதரர்களைவிட இரண்டாவது நாவல் முக்கியமானது என்றும் கூறுகிறார். ஆனால் கரமாஸவ் சகோதரர்கள் வெளியான மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரைக் காலம் தன்னோடு அரவணைத்து அழைத்துக்கொள்கிறது. இப்படி ஒரு படைப்பாளியைத் தன்னோடு இருத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற காலத்தின் ஆசை, அவரது இரண்டாவது நாவலைப் படிக்கும் நம் ஆசையை நிராசையாக்கி விட்டது. ஆக, தஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞனும் அவன் படைப்புகளும் என்றென்றும் காலத்தால் அழிக்கப்பட முடியாதவை. நான் மீண்டும் புத்தக அலமாரி வாசகர்களுக்கு வற்புறுத்திச் சொல்வது, வாழ்வில் ஒரு முறையாவது கரமாஸவ் சகோதரர்களைப் படித்துவிடுங்கள் என்பதுதான்.

அவர் வரைந்த அந்த வரைபடத்தை வாசகர்களின் பார்வைக்கு வைப்பதோடு, கால வரிசையிலான அவரது நாவல்களின் பட்டியல் ஒன்றையும் கீழே தருகிறேன்.
நாவலின் ஐந்தாவது அத்தியாயத்திற்கு தஸ்தயேவ்ஸ்கி எழுதிய குறிப்பு
(1846) Poor Folk

(1846) The Double

(1847) The Landlady

(1849) Netochka Nezvanova (unfinished)

(1859) Uncle's Dream

(1859) The Village of Stepanchikovo

(1861) Humiliated and Insulted

(1862) The House of the Dead

(1864) Notes from Underground

(1866) Crime and Punishment

(1867) The Gambler

(1869) The Idiot

(1870) The Eternal Husband

(1872) Demons

(1875) The Adolescent

(1880) The Brothers Karamazov


Related Posts Plugin for WordPress, Blogger...