இறந்த உடலில் இருந்து வரும் துர்நாற்றம்: தஸ்தயேவ்ஸ்கி

ஒரு மனிதனுக்கு வாழும்போது எதிரிகள் இருப்பது போலவே அவன் இறந்த பிறகும் அவனுக்கு எதிரிகள் இருப்பது வாழ்க்கையின் புரியாத புதிர்களில் ஒன்று. சாதாரண மனிதனிலிருந்து துறவிகள் என்று சொல்லப்படுபவர்கள் வரை யாருமே இதற்கு விதிவிலக்கல்ல. துறவியான ஸோசிமா இறந்த பிறகு ஏதோ அற்புதம் நிகழும் என்று காத்திருந்தவர்கள், அற்புதத்திற்குப் பதிலாக அருவருப்பான ஒரு நிகழ்ச்சியே நடந்தது கண்டு, அவரை விரும்பியவர்கள் அதிர்ச்சியடை, அவரது எதிரிகள் மகிழ்கிறார்கள். இறந்த ஸோசிமாவின் உடம்பிலிருந்து நறுமணம் கமழும் என நினைத்தவர்கள் அதற்கு மாறாகத் துர்நாற்றம் கிளம்பியதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்தேறுகிறது!

அந்த நிகழ்ச்சி அலெக்ஸெயின் மனதில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது என்று சொல்லும் தஸ்தயேவ்ஸ்கி, நாவலின் இந்தப் பகுதியின் சித்தரிப்பில், நம் மனதில் பல்வேறு கேள்விகளை எழச்செய்கிறார். ஒரு மனிதன் வாழ்ந்து முடித்த பிறகு அவனது வாழ்வைப் பற்றிக் கருத்துச் சொல்ல பிறருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அந்தக் கருத்துகள் நல்ல முறையில் வாழ்ந்த ஒரு மனிதன் மீதான அவதூறாகக் கூறப்படுமென்றால், அவன் அப்படி நல்லவனாக வாழ்ந்ததில் என்ன அர்த்தமிருக்கிறது? அதற்காக அவன் பட்ட சிரமங்கள் இப்படி விழலுக்கு இறைத்த நீராக ஏன் ஆகவேண்டும்? இதில் கடவுளின் பங்கு என்ன? அவருடைய விருப்பத்தின் பேரில் இவ்வாறு நடக்கிறதா? அப்படி இல்லையெனில் பிறர் அவ்வாறு பழிப்பதை அவர் தடுக்கச் சக்தியற்றவராக இருக்கிறாரா? அப்படி அவர் அதைத் தடுக்காத போது இறந்தவரைப் போலத் தன் வாழ்வை அமைத்துக்கொள்ள விரும்பும் ஒருவன் அவ்வாறு வாழ்வதற்கான நம்பிக்கையை எங்கிருந்து பெற முடியும்? போன்ற கேள்விகள் மிக முக்கியமானவை.

இவ்வாறு நடந்துவிட்ட துரதிருஷ்டமான நிகழ்ச்சி அலெக்ஸெயின் மனதைப் பெரிதும் துயரத்தில் ஆழ்த்துகிறது. மனித வாழ்வின் இந்த விசித்திரத்தை, முரண்பாட்டைத் தன் கதையின் நாயகன் அலெக்ஸெவிடம் ஏற்பட்டுவிட்ட மனமாற்றத்தோடு ஒட்டியும் வெட்டியும் நாவலின் இந்தப் பகுதியில் தஸ்தயேவ்ஸ்கி அணுகியிருக்கும் முறை அற்புதமானது. நாவலை முழுமையாகப் படிக்கும்போதுதான் அதன் அழகை நாம் உணர முடியும். இருந்தும் நாவலிருந்து வெட்டிய சில பகுதிகளை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன். படிப்பவர்கள் தஸ்தயேவ்ஸ்கியை முழுதும் அறியும் உந்துதல் பெறக்கூடும்.

... இதற்கு முந்தைய புத்தகத்தில் நான் குறிப்பிட்டது போல, நம்முடைய ஊரில் இதுவரை எதிர்பார்த்திராத ஒன்று, இதுவரை எதிர்பார்த்ததற்கு மாறாக, மீண்டும் சொல்கிறேன், நடந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் விளக்கமான, பரபரப்பான கதை ஒன்று நம்முடைய ஊரிலும், நம்முடைய ஊரைச் சுற்றியிருந்த பகுதிகளிலும், இன்று வரை பேசப்பட்டு வருகிறது. மீண்டும் ஒரு முறை இங்கு நான் என்னுடைய கருத்தைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்: பரபரப்பான, மாயக்கவர்ச்சி கொண்ட அந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்க்கவே எனக்கு அருவருப்பாக இருக்கிறது; அந்த நிகழ்ச்சியின் உட்பொருளானது இயற்கைக்குட்பட்டது, அப்படியே ஒன்றுமில்லாதது; அதைப் பற்றி என்னுடைய கதையில் நான் குறிப்பிடாமலேயே விட்டுவிடலாம், ஆனால் அது என்னுடைய கதையின் நாயகனை, இனிவரும் கதையின் நாயகனை மிக ஆழமாகப் பாதித்திருக்காவிட்டால், அதைப் பற்றி நான் குறிப்பிடாமலேயே இருந்திருப்பேன்; ஆனால், அது அவனுடைய மனதை நோகடித்து, அவனுடைய வாழ்வின் திருப்பு மையமாகி, அவனை உலுக்கிவிட்டது; அதே சமயம் அவனுடைய எண்ணங்களுக்கு அது வலுவூட்டி, இறுதியாக, அவனுடைய வாழ்க்கை முழுமைக்குமே அதுவோர் அர்த்தத்தைக் கொடுத்தது.

அதைத் தவிர, எல்லாவற்றிற்கும் மேலாக, மிக முக்கியமாக, இறந்துபோனவருடைய புனிதத்தன்மையின் மீதிருந்த பொறாமையும் அவர் வாழ்ந்த காலத்தில் கேள்விகளுக்கு அப்பாற்பட்டு நின்று அவர் நிலைநாட்டிய புனிதத்தன்மையும் இதற்குக் காரணமாக இருந்தது. இறந்துபோன முதியவர் அதிசயங்களை நிகழ்த்தி, மக்களை ஆச்சர்யப்படவைத்து, அதன் மூலமாக அவர்களுடைய உள்ளங்களை வெல்லாமல், அன்பால் வென்று, அன்பான மக்களையே தன்னைச் சுற்றி அவர் கொண்டிருந்ததால், அதன் காரணமாகவே, அவர் பலருடைய பொறாமைக்கும் ஆளாகி, அதிகமான விரோதிகளைத் துறவிமார்களுக்கு மத்தியில் மட்டுமல்லாது, சாதாரண மக்களிடையேயும் அவர் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் சேர்த்திருந்தார். யாருக்கும் எந்தவிதக் கெடுதலும் செய்யாத அவரைப் பார்த்துப் பலர், ‘எதற்காக இவரை மக்கள் இவ்வளவு தூரம் புனிதத் துறவியாக மதிக்கிறார்கள்?’ என்று கேட்டார்கள். இந்தக் கேள்விதான் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டு, இறுதியாகத் தாங்க முடியாத ஒரு வெறுப்பைச் சிலரிடம் ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாகத்தான் இறந்துபோன அவருடைய உடலிலிருந்து சீக்கிரமே துர்நாற்றம் வருவதை அறிந்த மக்கள் எல்லையில்லாத மகிழ்ச்சியடைந்தார்கள் என்று நான் நினைக்கிறேன்; அதேபோல முதியவரிடம் ஈடுபாடுகொண்டு மரியாதையாகப் பழகி வந்தவர்கள் இந்தச் சம்பவத்தால் மிகவும் வேதனையடைந்து பாதிக்கப்பட்டிருந்தார்கள். இப்படியாக, அடுத்தடுத்த நிகழ்வுகள் மெதுவாக நடக்கலாயின.

முதியவர் ஸோசிமாவை அருட்தந்தை ஃபெரபோன்த்திற்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காது என்பது ஏற்கெனவே எல்லோரும் அறிந்த விஷயம்; இப்போது அவரைப் பற்றி அருட்தந்தை ஃபெரபோன்த்திடம், அவர் இருக்கும் அறையைத் தேடிச் சென்று, ‘இதிலிருந்து தெரிவது என்னவென்றால், கடவுளுடைய தீர்ப்பு மனிதனுடைய தீர்ப்பிலிருந்து மாறுபட்டிருக்கிறது, அப்படியே அவர் இயற்கையின் போக்கையும் மாற்றி அமைத்துவிட்டார்’ என்று சொல்கிறார்கள்... நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல, அருட்தந்தை பாய்ஸி சற்றும் அசையாமல் சவப்பெட்டி அருகே பைபிள் வாசகங்களைப் படித்துக்கொண்டிருந்ததால் அறைக்கு வெளியே நடப்பவற்றை அவரால் பார்க்கவும் கேட்கவும் முடியாமல் இருந்திருக்கக்கூடும்; ஆனால் மடாலயத்திலுள்ளவர்களைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்ததால், அங்கு நடப்பவற்றை அவரால் தெளிவாக உணர முடிந்தது. இருந்தாலும் எந்தவிதப் பயமுமின்றி நடக்கப்போவதை எதிர்பார்த்து அவர் கவலையுடன் காத்திருந்தார்; நடக்கப்போகும் குழப்பத்தைத் தன்னுடைய ஞானக் கண்களால் அவர் தெளிவாகப் பார்த்தார். அப்போது அமைதியைக் குலைக்கும் விதத்தில் திடீரென்று நடைபாதையிலிருந்து வந்த மிகப்பெரிய சத்தம் அவருடைய காதுகளைக் கிழித்தது. கதவுகள் திறக்கப்பட்டபோது அருட்தந்தை ஃபெரபோன்த்தின் உருவம் தெரிந்தது. அவருக்குப் பின்னால் அவரைத் தொடர்ந்துவந்த துறவிமார்களும் பொதுமக்களும் கூட்டமாக நடைப்பாதையில் நிற்பது முதியவரின் அறையிலிருந்தே தெளிவாகத் தெரிந்தது... வாசலில் வந்து நின்ற அருட்தந்தை ஃபெரபோன்த் கைகளை மேலே உயர்த்தினார்; திடீரென்று உரக்கக் கத்தினார்:

‘தூக்கி எறிவதன் மூலம் உன்னை நான் தூக்கி எறிகிறேன்!’ என்று சொன்னபடி சுவரின் நான்கு மூலையிலும் அவர் சிலுவையிட்டார்.

‘எதற்காக இங்கு வந்தாய், நேர்மையான அருட்தந்தையே, ஏன் இப்படி ஆரவாரம் செய்கிறாய்? அமைதியாக இருக்கும் மக்களுக்கு ஏன் இப்படித் தொல்லை கொடுக்கிறாய்?’ என்று இறுதியாக அருட்தந்தை பாய்ஸி கடுமையாகக் கேட்டார்.

‘எதற்காக இங்கு வந்தேனா? அதை நீ ஏன் கேட்கிறாய்? உன்னுடைய நம்பிக்கை எப்படிப்பட்டது தெரியுமா?’ என்று மடத்தனமாக அருட்தந்தை ஃபெரபோன்த் கத்தினார். ‘வந்திருக்கும் உன்னுடைய விருந்தாளிகளையும் சாத்தான்களையும் இங்கிருந்து விரட்டியடிக்கத்தான் வந்திருக்கிறேன். நான் இல்லாத நேரத்தில் நீ எவ்வளவு சாத்தான்களைத் திரட்டி வைத்திருக்கிறாய் என்று பார்க்கத்தான் வந்திருக்கிறேன். அவற்றை பீர்ச் மரத் துடைப்பத்தால் பெருக்கி வெளியே தள்ள வேண்டும்’.

‘சாத்தானை வெளியில் துரத்த விரும்புகிறாயா, அல்லது நீயே அதற்குச் சேவகம் செய்ய விரும்புகிறாயா’ என்று பயமின்றித் தொடர்ந்த அருட்தந்தை பாய்ஸி, ‘நான் புனிதமானவன்’ என்று யார் தனக்குத்தானே சொல்லிக்கொள்ள முடியும்? உன்னால் முடியுமா அருட்தந்தையே?’

‘நான் புனிதமானவனல்ல, கேடுகெட்டவன்தான். ஒருபோதும் நான் நாற்காலியில் அமர்ந்து, வழிபாட்டிற்குரிய தெய்வமாக என்னை வணங்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை!’ என்று அருட்தந்தை ஃபெரபோன்த் முழங்கினார். ‘மக்கள் இப்போதெல்லாம் புனித நம்பிக்கைகளைக் கெடுக்கிறார்கள். இறந்துபோன உங்களுடைய துறவி’ என்று அங்கிருந்த சவப்பெட்டியைத் தன் விரலால் சுட்டிக்காட்டியபடி கூட்டத்தைப் பார்த்து, ‘சாத்தான்கள் இல்லை’என்று சொன்னார். ‘சாத்தான்களுக்கு எதிராக நின்று பாவங்களை அழித்தார். அதனால்தான் அவை சிலந்திகளைப் போலப் பெருகி, மூலை முடுக்குகளெல்லாம் நிரவிப் பரவிக் கிடக்கின்றன. இப்போது அவரே நாற்றமெடுத்துப் போய்க் கிடக்கிறார். இப்படிச் சுட்டிக்காட்டப்படுவதால் தான், நாம் கடவுளின் பெருமையை உணர முடிகிறது’

‘இங்கிருந்து போய்விடுங்கள், அருட்தந்தையே!’ என்று கட்டளையிட்ட அருட்தந்தை பாய்ஸி, ‘மக்கள் தீர்ப்பளிக்க வேண்டாம், கடவுள் தீர்ப்பளிக்கட்டும். ஒருவேளை நாம் பார்க்கும் இந்த ‘அறிகுறியை’ நீங்களோ, நானோ அல்லது வேறு யாருமே கூடப் புரிந்துகொள்ளும் சக்தியில்லாதவர்களாகக்கூட இருக்கலாம். இங்கிருந்து போய்விடுங்கள் அருட்தந்தையே, மக்களிடையே குழப்பத்தை உண்டாக்காதீர்கள்!’ என்று திரும்பவும் அவர் அழுத்திச் சொன்னார்.

‘கடைப்பிடிக்க வேண்டிய உபவாசங்களை அவர் கடுமையாகக் கடைபிடிக்கவில்லை, அதனால்தான் இந்த அறிகுறி வெளிப்பட்டிருக்கிறது. இது மிகத் தெளிவாகத் தெரிகிறது, எனவே இதை மறைப்பது பாவம்!’ என்று தன்னுடைய எழுச்சி வேகத்தில் பைத்தியம் பிடித்தவர் போல அருட்தந்தை ஃபெரபோன்த் அர்த்தமில்லாமல் கத்தினார். பெண்கள் கொண்டுவந்த ‘இனிப்புப் பதார்த்தங்களை அவர் ஆவலுடன் வாங்கிச் சாப்பிட்டார்; தேநீரை இனிப்புப் பண்டத்துடன் சேர்த்து அருந்தினார்; வயிற்றிற்கு அவர் அதிக சலுகை காட்டினார்; இனிப்புப் பண்டங்களால் தன்னுடைய வயிற்றை அவர் நிறைத்தார்; அவருடைய மனமோ பெருமையில் திளைத்திருந்தது . . . அதனால்தான் அவர் அவமானத்திற்குள்ளாக்கப்பட்டார் . . .’

‘உன்னுடைய வார்த்தைகள் அர்த்தமற்றவை, அருட்தந்தையே!’ என்று தன்னுடைய குரலை உயர்த்திச் சொன்ன அருட்தந்தை பாய்ஸி, ‘நீ உபவாசமிருப்பதையும் உன்னுடைய கடும் ஒழுக்கமுறைமையையும் பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன், ஆனால் உன்னுடைய வார்த்தைகள் அற்பமானவை, ஏதோ சிற்றறிவு கொண்ட சிறு பையனின் வார்த்தைகளைப் போல இருக்கின்றன. இந்த இடத்தைவிட்டுப் போய்விடு, அருட்தந்தையே, உனக்கு நான் கட்டளையிடுகிறேன்’ என்று அருட்தந்தை பாய்ஸி இடிபோல் முழங்கினார்.

‘நான் என்னவோ போய்விடுவேன்!’ என்று சொன்ன அருட்தந்தை ஃபெரபோன்த், சற்றே திக்குமுக்காடிப் போனவராக, தன்னுடைய வெறுப்பை ஒதுக்கித்தள்ள முடியாமல், ‘நீங்கள் அறிவாளிகள்! உங்களுடைய அதீத அறிவால் என்னைப் போன்றவர்களை நீங்கள் துச்சமாக மதிக்கிறீர்கள். இங்கு வந்தபோது படிப்பறிவில்லாதவனாக நான் இருந்தேன், ஆனால் இங்கு வந்த பிறகு எனக்குத் தெரிந்த கொஞ்சமும் மறந்துபோய்விட்டது; இந்தச் சிறியவனை அறிவாளிகளான உங்களிடமிருந்து கடவுள்தான் காப்பாற்றியிருக்கிறார்...’

‘என்னுடைய கடவுள் ஜெயித்துவிட்டார்! ஏசு கிறிஸ்து சூரிய அஸ்தமனத்தை வென்றுவிட்டார்!’ என்று ஆர்ப்பரித்தபடி, சூரியன் இருக்கும் திசைப்பக்கமாகக் கைகளை உயர்த்தி, முகம் தரையைத் தொட, கீழே விழுந்து ஒரு சிறு குழந்தையைப் போலக் கதறிக் கண்ணீர் வடித்து உடல் குலுங்க அழுதார்.

அவருடைய கைகள் நிலத்தில் பரவியிருந்தன. இதைப் பார்த்து எல்லோரும் ஆச்சர்யப்பட்டு, அவரைப் பின்தொடர்ந்து சென்று அவருடன் சேர்த்து தேம்பி அழுதார்கள் . . . அசாதாரணமான வெறி எல்லோரையும் பற்றியிருந்தது.

‘இதோ இவர்தான் புனிதமானவர்! இவர்தான் உண்மையானவர்!’ என்று பயப்படாமல் பலகுரல்கள் எழுந்தன. ‘இதோ இவர்தான் மூத்த துறவி என்று அறிவிக்கப்பட வேண்டும்’ என்று இன்னும் சிலர் வன்மத்துடன் சொன்னார்கள்.

அருட்தந்தை ஃபெரபோன்த்தும் தரையிலிருந்து எழுந்து சிலுவை போட்டுக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் அறைக்குப் போனவர், இன்னமும் எதை எதையோ கத்திக்கொண்டு போனது எதுவுமே புரியாமல் இருந்தது. ஒருசிலர் அவரைப் பின்தொடர்ந்து சென்றாலும், பலர் அவரைவிட்டு விலகி பிரார்த்தனைக்குச் செல்ல விரைந்தார்கள். அருட்தந்தை ஜோசப், பைபிளை அருட்தந்தை பாய்ஸியைப் படிக்கச் சொல்லிவிட்டுக் கீழே இறங்கிப் போனார். பைத்தியக்காரர்களின் வெறிபிடித்த கூக்குரல்கள் அருட்தந்தை பாய்ஸியைப் பாதிக்க வில்லை; ஆனால் திடீரென்று அவருடைய மனத்தில் சோகம் பீடிக்க, குறிப்பாக அது அவரைக் கவலை கொள்ளவைத்தது என்பதை அவர் உணர்ந்தார்.

சோகத்தில் அப்படியே நின்றவர், ‘என்னுடைய மனம் நொறுங்கிப் போகுமளவுக்கு எதற்காக நான் இப்படிக் கவலைப்படுகிறேன்?’ என்று திடீரென்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டார்.

திடீரென்று எழுந்த இந்தக் கவலை சொல்லப்போனால், குறிப்பிட்ட ஒரு சிறிய காரணத்தால் தான் எழுந்தது என்பதை அவர் ஆச்சர்யத்துடன் உணர்ந்தார்; அதற்குக் காரணம் என்னவென்றால், அறையின் வாசலில் கூட்டமாகக் குழுமியிருந்தவர்களுக்கு நடுவே பதற்றத்துடன் அல்யோஷா நின்று கொண்டிருந்ததைப் பார்த்து, அதன் காரணமாகத்தான் ஏதோ ஒரு வலி சட்டென்று அவருடைய மனத்தில் ஏற்பட்டது என்பதை அவர் உணர்ந்தார். ‘இந்தச் சிறுவனா இவ்வளவு தூரம் என்னைக் கவலைப்படவைக்கிறான்’ என்று ஆச்சர்யத்துடன் அவர் தன்னைத் தானே கேட்டுக்கொண்டார். அந்தச் சமயம் பார்த்து அல்யோஷா அவரைக் கடந்து தேவாலயப் பக்கமாகப் போகாமல் வேறு பக்கமாக அவசரமாகப் போனான். அவர்களுடைய கண்கள் இரண்டும் சந்தித்துக்கொண்டன. சட்டென்று அல்யோஷா தன்னுடைய பார்வையைத் திருப்பிக் கீழே பார்த்த அந்த ஒரு பார்வையிலேயே அருட்தந்தை பாய்ஸிக்குப் புரிந்துவிட்டது, அவனுள் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது.

‘நீயும் ஒருவேளை நெறி தவறிவிட்டாயோ?’ என்று திடீரென்று உரக்கக்கேட்ட அருட்தந்தை பாய்ஸி, ‘ஆமாம், நீ கூடவா நம்பிக்கையை இழந்துவிட்டாய்!’ என்று வருத்தத்துடன் மறுபடியும் கேட்டார்.

இதைக் கேட்டுக்கொண்டு நின்ற அல்யோஷா, ஏனோ அருட்தந்தை பாய்ஸியை வெறுமையாகப் பார்த்தபடி மீண்டும் சட்டென்று தன்னுடைய பார்வையைக் கீழே தாழ்த்திக்கொண்டான். அவருக்குப் பக்கத்தில் நின்ற அவன், அவரைப் பார்க்கவில்லை. அருட்தந்தை பாய்ஸி இதைக் கவனித்தார்.

‘அவசரமாக எங்கே போகிறாய்? பிரார்த்தனைக்காக ஆலயமணி அடித்துவிட்டது’ என்று மீண்டும் அவனைக் கேட்டார்; ஆனால் அல்யோஷா மறுபடியும் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

‘ஒரு சமயம் மடாலயத்தைவிட்டே போகிறாயா? அனுமதியும் ஆசீர்வாதமும் இல்லாமல் அதை எப்படி நீ செய்யலாம்?’

அல்யோஷா உதட்டைக் கோணலாகச் சுழித்தபடி திடீரென்று ஏளனமாகச் சிரித்தவன், தன்னைக் கேள்வி கேட்ட அருட்தந்தையை விநோதமாகப் பார்த்தபடி, முதியவரின் இறப்புக்கு முன்பு யார்மீது நம்பிக்கை வைத்திருந்தானோ, யாரிடம் இறந்துபோன முதியவர், இறந்தபோன வழிகாட்டி, ஆலோசகர், அவனுடைய மனத்தையும் அறிவையும் ஆட்கொண்ட அன்புமிக்க முதியவர், யாரிடம் அவனை நம்பி ஒப்படைத்தாரோ, அவரைப் பார்த்து, பதில் எதுவும் பேசாமல், பேசுவதில் பயனில்லை என்பதுபோலத் தன்னுடைய கையைக் காற்றில் உதறி, மரியாதையின் பொருட்டுகூடப் பதில் சொல்லாமல் வேகமாக அடியெடுத்து மடாலயத்தின் கதவுகளைத் தாண்டி வெளியே சென்றான்.

‘கண்டிப்பாக மீண்டும் நீ திரும்பி வருவாய்!’ என்று முணுமுணுத்த அருட்தந்தை பாய்ஸி, வருத்தங்கலந்த ஆச்சர்யத்துடன் வெளியே போகும் அல்யோஷாவைப் பார்த்தார்.

-000-

மிக மிக உண்மையாக இருப்பதை விடவும் அதிக உண்மையாக இருந்த ஒருவர், எல்லாவிதத்திலும் பல மடங்கு கீழான, சிற்றறிவு கொண்ட மக்களிடையே இவ்வளவு தூரம் கேவலப்படுத்தப்படுவதை வருத்தமின்றி அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சரி, அற்புதம், நடக்காமலேயே இருக்கட்டும்; அப்படி எந்த அதிசயமும் நிகழாமலேயே இருக்கட்டும்; உடனே ஏதாவது ஒன்று நடக்குமென்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போகட்டும்; ஆனால் ஏன் இந்த ஏளனப் பழிப்பு, எதற்காக இந்தக் கேவலம், இந்த உடல் துர்நாற்றம், ‘இயற்கையின் போக்கை முந்திவிட்டது’ என்ற துறவிமார்களின் வன்மப் பேச்சுக்கள்? ஏன் இந்த ‘அறிகுறியை’ப் பெரிய வெற்றி என்று அருட்தந்தை ஃபெரபோன்த்துடன் மற்றவர்களும் சேர்ந்து கொண்டு கூத்தாடுகிறார்கள்; இப்படி நடந்துகொள்ள அவர்களுக்கு ஏது உரிமை? கடவுள் எங்கே இருக்கிறார்? உதவும் அவருடைய கைகள் எங்கே? இப்படிப்பட்ட இந்த ‘இன்றியமையாத தருணத்தில்’, (அல்யோஷா நினைத்துக் கொண்டான்) அவர் ஏன் தன்னுடைய கைகளை ஒளித்துவைத்துக் கொண்டு, குருடர்களுக்கும் முட்டாள்களுக்கும் இரக்கமற்ற நியதிகளுக்கும் அடிபணிந்து போகிறார்?

இதனால்தான் அல்யோஷாவின் மனதில் ரத்தம் கசிந்தது. நான் முன்பே குறிப்பிட்டது போல, அவன் முன்பாக, அவருடைய முகம், இவ்வுலகிலேயே அவன் மிக அதிகமாக நேசித்த அவருடைய முகம் ‘கேவலப்படுத்தப்பட்டு’, ‘புகழிழந்து’ கிடந்தது! என்னுடைய இந்த இளைஞனின் முணுமுணுப்பு சிற்றறிவுள்ளதாக, பகுத்தறிவில்லாததாகவே இருக்கட்டும், ஆனால், மூன்றாவது முறையாகத் திரும்பச் சொல்கிறேன் (முன்பு சொல்லப்பட்டதுடன் உடன்பட்டு, ஒருவேளை, இதுவும் சிற்றறிவுள்ளதாக): எனக்கு மகிழ்ச்சிதான், என்னுடைய இளைஞன் இந்த நேரம் இவ்வளவு தூரம் பகுத்தறிவில்லாமல் இருப்பதைப் பார்த்து எனக்கு மகிழ்ச்சிதான்; ஏனெனில் அறிவார்ந்த மனிதனுக்குப் பகுத்தறியக்கூடிய நேரம் வரும், ஆனால் அசாதாரணமான இந்தத் தருணத்தில் அந்த இளைஞனின் உள்ளத்திலிருந்து அன்பு வெளிப்படவில்லையென்றால், பிறகு எப்போது வெளிப்படும்?...
Related Posts Plugin for WordPress, Blogger...