சிந்தனைகள்: வெற்றியின் வழி

சைக்கிளை அந்த மேட்டில் மிதிமிதி என்று மிதித்து ஏறியதும், சட்டென்று வந்த இறக்கம் ஆசுவாசத்தைக் கொடுத்தது. இறக்கத்தில் சைக்கிள் சர்ரென விரைந்து வலது புறம் திரும்பியதும் பாலத்தின் மீது பயணிக்க ஆரம்பித்தேன். பாலத்தினடியில் தண்ணீர் ஆங்காங்கே குட்டையாகத் தேங்கியிருந்தது. மனித உருவங்கள் பல குளிப்பதும் துணிகளைத் துவைப்பதுமான காட்சிகள் தென்பட்டன. இரு கரைகளையும் தொட்டு ஆர்பரித்துச் செல்லும் ஆறு அடங்கிச் சென்றது. எப்போதும் எதையாவது வேடிக்கை பார்க்க கூட்டம் கூடி நிற்கும். இன்று எந்தக் கூட்டமும் இல்லை.

இடது புறத்தில் பாலத்திற்கு இணையாக தொலைவில் மற்றொரு பாலம் நீண்டு கிடந்தது. அது புதுப்பாலம். பழைய பாலத்தில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பழைய பாலத்தின் பலவீனத்தை உத்தேசித்து புதுப்பாலம் கட்டப்பட்டது. அதன் முடிவில் தெரிந்த செல்லீஸ்வரர் ஆலயத்தின் கோபுரத்தைப் பார்த்தேன். உயர்ந்த கோபுரத்தின் பின்னே மேகக்கூட்டங்களும், வானமும் ரம்மியமாகத் தெரிந்தது. கோவிலை ஒட்டிய படித்துறையில் ஓரளவு நீர் ஓடிக்கொண்டிருந்தது. ஆடி மாதங்களில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் ஓடும் ஆறு இப்போது அசைவின்றி படுத்திருந்தது.

பாலத்தின் முடிவுக்கு வந்ததும் வலது புறம் திரும்பினேன். குண்டும் குழியுமான சாலையில் சைக்கிள் குதித்தோடியது. சற்று தூரம் பயணித்து மீண்டும் இடது புறமாகத் திரும்பி வலது புறம் திரும்ப, புதிதாகப் போடப்பட்ட சாலை விரிந்து கிடந்தது. வாகனங்கள் பல ஒலியெழுப்பிபடி வேகமாகச் சென்றுகொண்டிருந்தன. சாலை சமமாக இருந்ததால் சைக்கிளில் செல்வது சுலபமாக இருந்தது. சிறிது தூரம் சென்றதும் நான்கு சாலைகளின் சந்திப்பு. அங்கே மனிதக் கூட்டங்கள் இரைந்திருந்தன. வாகனங்களின் இரைச்சலும் ஜனங்களின் பேச்சும் கலந்து கலவையான ஒலி காதில் விழுந்தது. சாலையோரங்களில் முளைத்திருந்த பல்வேறு கடைகளில் ஜனங்கள் தங்களுக்கானதை வாங்குவதில் முனைந்திருந்தார்கள். நான் வலது புறச் சாலையில் திரும்பி, காவல் நிலையத்தைத் தாண்டிச் சென்றேன். ஒரு குறுகலான சந்தில் திரும்பினேன்.

வலது புறச் சாலையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்ற வளைவு மழையிலும் வெய்யிலிலும் காய்ந்து சோபையிழந்து நின்றது. நான் உள்ளே நுழைந்து ஏற்கனவே சைக்கிள்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் என் சைக்கிளை நிறுத்தினேன். மாணவர்களின் கத்தலும் கூச்சலும் கேட்டது. ஆங்காங்கே குறுக்கும் நெடுக்குமாகக் கயிற்றில் கட்டப்பட்டிருந்த வண்ணக் காகிதங்கள் பள்ளியின் ஆண்டு விழா என்பதைப் பறை சாற்றியது.

நான் என் வகுப்பறையில் நுழைந்தேன். ஒருவருமில்லை. பள்ளியின் பின்புறமிருந்த மைதானத்திற்குச் சென்றேன். மைதானமெங்கும் கூட்டம். வளைவுகளாலும், பேனர்களாலும், வண்ணக் காகிதங்களாலும் மைதானம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. மைதானத்தில் சிவப்பும் நீலமுமான இரு அணிகள் பயிற்சியில் இருந்தன. விளையாட்டு வீரர்களின் கால்களுக்கிடையே பந்து உதைபட்டுக்கொண்டிருந்தது. “இன்னும் சற்றுநேரத்தில்...” என்பதாக ஒலிபெருக்கி பெரிதாக அலறிக்கொண்டிருக்க, நான் கூட்டத்திடையே சகமாணவர்களைத் தேடினேன். பள்ளியைச் சுற்றி அமைந்திருந்த சுற்றுச்சுவர் மீதிருந்து கையசைப்பு தெரிந்தது. நான் கூட்டத்திடையே உடம்பை நுழைத்து நெளிந்து அங்கே சென்றேன். நானும் அவர்களுடன் சுற்றுச்சுவர் மீது ஏறி அமர்ந்தேன்.

சற்று நேரத்தில் நடுவரின் விசில் ஒலிக்க, விளையாட்டு ஆரம்பமானது. முதல் ஐந்து நிமிடங்கள் விளையாட்டு எந்தவிதமான சுவாரஸ்யமுமின்றி சென்று கொண்டிருந்தது. அதன் பிறகு ஆட்டம் சூடுபிடித்தது. சிவப்பு அணிகளின் ஆட்டத்தைவிட நீல அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. கூட்டமும் ஆர்பரித்துக் கைதட்டி அதை ஆமோதித்தது. அவர்களின் கால்களுக்கிடையே பந்து மின்னலாய் மறைந்து பறந்தபடி இருக்க, சிவப்பு திணறுவது தெரிந்தது. அந்தத் திணறலை சமார்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்ட நீலம் கோல் ஒன்றை அடித்தது. கூட்டத்திற்கு ஒரே உற்சாகம். கைதட்டலும் விசில் சத்தமும் விண்ணை எட்டியது. அதற்குப் பிறகும் நீலத்தின் ஆதிக்கமே ஓங்கியிருந்தது. ஆக்ரோஷமாக விளையாடியது சிவப்பு அணி. ஆனால் பந்தை அவர்களுக்கிடையே கொண்டுசெல்வதில் ஏதொ ஒரு தடை இருந்தது. எனவே நீலம் அவர்களைச் சுலபமாகத் தடுத்தது. நடுவரின் விசில் ஒலிக்க இடைவேளை.

மீண்டும் ஆட்டம் ஆரம்பித்தபோது சிவப்பு தீர்மானமாக இருப்பதாகப் பட்டது. அவர்கள் பந்தைவிட்டுவிட்டு விளையாடுபவர்களை உதைக்க ஆரம்பித்தார்கள். அப்படி இருந்தும் நீலத்தின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. நடுவரின் விசில் பலமுறை ஒலித்து ஆட்டத்தை தடைபட சிவப்பு அணியினர் காரணமாக இருந்தார்கள். கூட்டம் சிவப்பு அணியினரை வார்த்தைகளால் வசைபாடியது. அப்போது சிவப்பு கோல் அடித்தது. கூட்டம் ஸ்தம்பித்தது. ஒரே அமைதி. கைதட்டல் விசில் சத்தம் ஏதுமில்லை. நீலம் மற்றொரு கோல் போட்டுவிடப் பிரயத்தனப்பட்டது. ஆனால் சிவப்பின் அராஜகமான ஆட்டம் அவர்களைத் தடுத்துக்கொண்டிருந்தது. கூட்டம் அதிருப்தி அடைந்து, சிவப்புக்கு எதிராகக் கண்டனக் குரல்களை எழுப்பின. வசைச் சொற்கள் தெரித்தன. யாரும் எதிர்பாராமல் சிவப்பு மீண்டும் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தது.

கூட்டத்தில் பேரமைதி. யாரும் மூச்சுக்கூட விடவில்லையோ எனுமளவிற்கு அமைதி நிலவியது. சிவப்பு அணியினர் கோப்பையை வாங்கும்போதுகூட யாரும் கைதட்டவில்லை. மைதானமெங்கும் அமைதியே நிலவியது. ஆனால் நீலம் ஆறுதல் கோப்பையை வாங்கியபோது கரகோசம் காதைக் கிழித்தது. கைதட்டல். ஆரவாரம். ஒரே கூச்சல். சிவப்பு அணியினர் முகம் ஒளியிழந்தது. தங்களை ஆறுதல் படுத்திய கூட்டத்தைப் பார்த்து நீல அணியினர் கையசைத்தனர். அதற்குக் கூட்டம் மறுகையசைப்பு செய்து மகிழ்ந்தது.

கூட்டம் களைய ஆரம்பித்தது. நான் சைக்கிளில் ஏறி வீட்டை நோக்கி விரைந்தேன். பல்வேறு எண்ணங்கள் மனத்திரையில் ஓட, சிந்தனையில் லயித்தவனாக சைக்கிளை மிதித்தேன்.

இது நடந்தது 1982-83ல். ஆனால் மறக்க முடியாத ஒரு சம்பவமாக என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. வெற்றவர்களைப் பாராட்டாத அந்தக் கூட்டத்தின் நிலை எனக்குப் பலவற்றை உணர்த்திற்று. வெற்றி என்பது எந்தளவிற்கு முக்கியமோ அதேபோல் அதை அடையும் வழி அதைவிட முக்கியம் என்பதை புரியவைத்தது இந்த நிகழ்ச்சிதான். நாம் எத்தனையோ விசயங்களைப் படிக்கலாம் அல்லது கேட்கலாம். ஆனால் படித்தவை அனைத்தையும் படித்த அதே கணத்தில் புரிந்துகொண்டோம் என்று சொல்வதற்கில்லை. புரியவும், உணரவும் அதற்கான சந்தர்ப்பங்கள் தேவைப்படுகின்றன. ஏதேனும் ஒரு நேரடி அனுபவம்தான் நாம் ஒன்றை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள உதவுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...