தஸ்தயேவ்ஸ்கி பார்வையின் விஸ்வரூப தரிசனம்

கடந்த 12 நாட்களில் கரமாஸவ் சகோதரர்களில் 370 பக்கங்களைப் படித்திருக்கிறேன். இவ்வளவு மெதுவாக நான் எந்தப் படைப்பையும் படித்ததில்லை. மனதில் எழும் உணர்வுகளுக்கும், எழுச்சிகளுக்கும் அவ்வப்போது இடைவெளி கொடுத்து படிப்பதுதான் என் வழக்கம் என்றாலும், அது இந்நாவலைப் பொருத்தமட்டில் அதிகமாகத் தேவைப்படுகிறது. நாவலைக் குறித்து என் மொத்தமான பார்வையை எழுதிக்கொண்டு வருகிறேன். ஆனால் அதில் எல்லாவற்றையும் சொல்வது சாத்தியமில்லை என்பதால் சிலவற்றைத் தனிப்பதிவுகளாகப் பதிவுசெய்கிறேன்.

ஒரு சிறு நிகழ்வு தஸ்தயேவ்ஸ்கியால் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதற்கு கரமாஸவ் சகோதரர்கள் நாவலில் ஏராளமான சித்தரிப்புகள் இருக்கின்றன. இருந்தும் என்னைக் கவர்ந்த நாவலின் ஒரு பகுதியைப் பற்றி இங்கே சொல்லப்போகிறேன். படைத் தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற ஸ்நெகிரேவ் என்ற பாத்திரத்துடன் அலெக்ஸெய் மேற்கொள்ளும் சந்திப்பு இதற்கு ஆகச்சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் என்று கருதுகிறேன். ஒரு முறை, திமித்ரி நடுவீதியில் அந்தத் தளபதியின் தாடியைப் பிடித்து இழுத்து அவரை அவமானப்படுத்துகிறான். அதைத் தடுக்க பள்ளியில் படிக்கும் அவரது மகன் இல்யூஷா முயற்சிக்கிறான். திமித்ரி செய்த செயலுக்கு பிராயச்சித்தமாக கத்தரீனா இவானவ்னா படைத் தளபதிக்கு இருநூறு ரூபிள்கள் கொடுக்குமாறு அலெக்ஸெயிடம் கொடுத்து அனுப்புகிறாள்.

இந்த நிகழ்ச்சி தன்னோடு படிக்கும் சிறுவர்களிடம் தனக்குப் பெரும் அவமதிப்பாக ஆகிவிட்டதாக இல்யூஷா மிகவும் வருத்தப்பட்டு உடல்நலம் கெட்டு காய்ச்சலால் அவதிப்படுகிறான். அப்போது இல்யூஷாவிடம் எழும் கோபம், ஆவேசம், வருத்தம் அனைத்தையும் வெளிப்படுத்தும் தஸ்தயேவ்ஸ்கி, சமூக அவலங்களைக் களையவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். அதை ஒரு சிறுவனைக்கொண்டு அவர் சொல்லியிருப்பது, நாளைய சமூகம் மேலும் மோசமானதாக ஆகிவிடக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.

சமூகத்தில் நிலவும் மேல்தட்டு, கீழ்தட்டு மக்கள் என்ற பேதத்தால் மனிதன் எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ள நேர்கிறது என்பது மிகத் தீவிரமாக இப்பக்கங்களில் விவரிக்கப்படுகிறது. வறுமையால் வாடும் படைத் தளபதியின் குடும்பத்தில், குறிப்பாக இல்யூஷா இதனால் மனதளவில் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதை அவன் தந்தையின் வாயிலாக விரிவாகப் பேசச் செய்திருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. தளபதி தனது வறுமையின் கொடுமையையும், மேல்தட்டு மக்கள் என்பவர்களிடமிருந்து வரும் துன்பங்கள் தங்களை எவ்விதம் பாதிக்கிறது என்பதையம் அலெக்ஸெயிடம் சொல்லி, அதைக்குறித்து தன் மகன் தன்னிடம் எழுப்பும் பல கேள்விகள் தன்னைத் தவிக்க வைப்பதையும் சொல்கிறார்.

அவற்றைக் கேட்கும் அலெக்ஸெய், அவர் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகப் பலவற்றையும் பேசிய பிறகு, அவரிடம் இருநூறு ரூபிள்களைக் கொடுக்கிறான். அதைப் பெற்றுக்கொள்ளும் அவர் தனக்குத் தக்க நேரத்தில் கிடைத்த உதவி இதுவென்றும், அதனால் தன் குடும்பத்தின் பல பிரச்சினைகளைத் தான் தீர்க்க முடியும் என்றும், தாங்கள் இனி இங்கிருந்து மாஸ்கோ சென்று புது வாழ்க்கை ஆரம்பிக்கலாம் என்றும் ஆசையுடன் விவரிக்கிறார். ஆனால் திடீரெனப் பணத்தை கசக்கித் தரையில் வீசி, கால்களால் மிதித்து, “நாங்கள் பட்ட கேவலத்திற்காக உங்களிடமிருந்து பணம் வாங்கினால், பிறகு நான், என் பையனிடம் என்ன சொல்வது?” என்று சொல்லி வேகமாக ஓடிப்போகிறார்.

முடக்குவாதத்தால் சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நடத்தும் தன் இளம்பருவத்துத் தோழியான லீஸிடம் இதைப் பற்றிப் பேசும் அலெக்ஸெய் அவரது நடத்தைக்கான காரணத்தை விவரிக்கிறான். உளவியல் ரீதியாக ஒரு மனிதனின் மனதில் நுழைந்து, அங்கிருப்பதை அறிந்து, மிகத் திறமையாக வெளிப்படுத்தும் தருணங்கள் இவை. அதை என் வார்த்தைகளில் சொல்வதைவிட தஸ்தயேவ்ஸ்கி சொல்வதை அப்படியே தருகிறேன்.

“... அந்தப் படைத் தளபதி ஒரு கோழை, உறுதியில்லாத மனங்கொண்டவர். வாழ்க்கையில் மிகவும் அடிபட்டவர். அப்படியே அதீத இரக்க மனப்பான்மையும் உள்ளவர். இப்போது, நான் இப்படித்தான் யோசிக்கிறேன் திடீரென்று அவர் பணத்தைக் கீழே காலால் போட்டு மிதிக்கும்வரை, அப்படி அவர் செய்வார் என்று அவருக்கே தெரியாமல் இருந்திருக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். எனக்கு என்ன தெரிகிறதென்றால், ஏதோ அவர் சட்டென்று ஒரு நிமிடத்தில் உணர்ச்சி வசப்பட்டுவிட்டாரென்று... ஆமாம், அதைத் தவிர வேறுவிதமாக அவர் நடந்திருக்க முடியாது... முதலாவதாக, அந்தப் பணம் தனக்குக் கிடைத்ததை எண்ணி அவர் மிகவும் சந்தோஷப்பட்டு, மகிழ்ச்சியடைந்ததை அவரால் என்னிடம் மறைக்க முடியாமல் போனதற்கு அவர் தன் மீதே கோபப்பட்டுக் கொண்டார். அப்படி அவர் சந்தோஷப்பட்டு, அதிகமாக அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், நவநாகரிகமாக, மற்றவர்களைப் போல பணத்தை வாங்கும்போது வளைந்து நெளிந்து, குழைந்திருந்தால், அந்தப் பணத்தை அவரால் வாங்கியிருந்திருக்க முடியும். ஆனால் உண்மையாகவே அவர் மிக அதிகமாக அந்தப் பணத்தைப் பற்றி நினைத்து சந்தோஷப்பட்டதில், அதை ஏற்றுக்கொள்ள அவருக்கு அவமானமாகப் போய்விட்டது. ஹா, லீஸ், அவர் நேர்மையான, கருணையுள்ள மனிதர். அதுதான் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மிகவும் சிக்கலாகிவிடுகிறது! அவர் பேசிய நேரம் முழுவதும் அவருடைய குரல் மெலிதாய், வலுவற்றதாய், அப்படியே அவசர அவசரமாகப் பேசப்பட்ட தொனியில், சற்றே ஏளனச் சிரிப்புடன் தேம்பி அழும் குரலில், ஆமாம், எந்த அளவுக்கு அவர் உணர்ச்சிவசப்பட்டாரோ, அந்த அளவுக்கு அவர் அழுதபடியே தன் மகள்களைப் பற்றிப் பேசினார்... அவருக்குக் கிடைக்கப்போகும் வேலை வேறு ஊரில் இருப்பதாகச் சொன்னார்... தன்னுடைய உள்ளார்ந்த உணர்வை அவர் என்னிடம் சற்றே அதிகமாகக் காட்டியபோது, அவருக்கே வெட்கம் வந்துவிட்டது. அதனால்தான் இப்போது அவர் என் மீது வெறுப்புப் பாராட்டுகிறார். அவர் ஏழைகளில் ஒருவர். முக்கியமாக இப்படி அவர் வெட்கப்பட்டதற்குக் காரணம் சீக்கிரமே அவர் என்னைத் தன்னுடைய நண்பனாக ஏற்றுக்கொண்டு, என்னிடம் அவரை ஒப்படைத்துவிட்டதுதான். முதலில் அவர் என்னை வெறுத்து ஒதுக்கிப் பயப்படவைத்தவர், திடீரென்று என்னிடமிருக்கும் பணத்தைப் பார்த்தவுடன், என்னைக் கட்டித்தழுவ ஆரம்பித்துவிட்டார். அவர் கட்டித் தழுவியதில் அவருடைய கை விரல்கள் என்னைத் தொட்டன. இந்தச் சமையத்தில்தான் அவர் தன்னுடைய அவமானத்தை உணர்ந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட தருணத்தில்தான் நான் மிகப்பெரிய தவறு ஒன்றைச் செய்துவிட்டேன். திடீரென்று அவரிடம் நான், வேறு ஒரு ஊருக்குப் போவதற்கு அவருக்குப் பணம் போதவில்லையென்றால், அவருக்குத் தேவையான பணத்தை இன்னும் கொடுப்பார்கள் என்றும் அப்படியில்லையென்றால், அவருக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறதோ அதை நானே கொடுக்கிறேன் என்றும் சொல்லிவிட்டேன். இதுதான் அவரை ஆச்சர்யப்பட வைத்துவிட்டது. எதற்காக அவருக்கு நான் உதவ முன்வர வேண்டும்? லீஸ், உங்களுக்குத் தெரியுமா, அவமானப்படும் மனிதருக்கு உதவ, சுற்றியுள்ள மக்கள் முன்வரும்போது... இதைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், முதியவர் இதைப் பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். எப்படி இதை விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இப்படிப்பட்ட சம்பவங்களை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஆமாம், நான்கூட அவர் எப்படி நினைத்தாரோ அப்படியேதான் நினைக்கிறேன். முக்கியமான விஷயம் என்னவென்றால், கடைசி நிமிஷம்வரை அவர் அந்த வங்கிக் காசோலைகளைக் கீழே போட்டு காலால் மிதிப்பார் என்று அவரே எண்ணிப் பார்க்கவில்லை, ஆனால் அப்படிச் செய்வார் என்று அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. அப்படி அவர் முன்கூட்டியே அதை உணர்ந்திருந்ததால்தான் அவர் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போய்விட்டார்... சாதகமாக இந்தக் காரியம் முடியவில்லை என்றாலும், இது நல்லதுக்குத்தான். நான் என்ன நினைக்கிறேன் என்றால், இதைவிட நல்லது நடந்திருக்க முடியாது என்று...”

“ஏன், ஏன் இதைவிட நல்லது நடந்திருக்க முடியாது?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள் லீஸ்.

“ஏனென்றால், லீஸ், அப்படி அவர் அந்தப் பணத்தைக் காலால் உதைத்து உதாசீனப்படுத்தாமல் வாங்கியிருந்தால், வீட்டிற்குப் போன சில மணி நேரங்கழித்துத் தான் செய்த அந்தச் செயலுக்காக அவர் வெட்கப்பட்டுக் கண்டிப்பாக அழுதிருப்பார். அதுதான் நடந்திருக்கும். அழுதழுது, அடுத்த நாள் காலையே என்னிடம் வந்து அவர் அந்தக் காசோலைகளை முன்பு வீசியெறிந்தது போலவே இப்போதும் வீசியெறிந்து காலால் மிதித்துக் கசக்கியிருப்பார். ஆனால், இப்போது அவர், மிகப்பெருமையுடன், வெற்றிக் களிப்புடன் ‘தன்னைத்தானே கெடுத்துக்கொண்டார்’ என்ற நினைப்புடன் அவர் போய்விட்டார். அதனால் இந்த இருநூறு ரூபிள்களை நாளைக்குள் அவரை வாங்க வைப்பது கடினம், ஏனென்றால் தன்னுடைய தன்மானத்தை நிரூபிக்கும் விதத்தில் அவர் அதைக் கீழே போட்டுக் காலால் மிதித்துவிட்டார்... அப்படி அவர் அதைக் கீழே போட்டு மிதித்தபோது மீண்டும் அவரிடம் நான் அந்தப் பணத்தை எடுத்துக் கொடுப்பேன் என்று அவருக்குத் தெரியாதுதானே. அதுமட்டுமல்ல, இந்தப் பணமும் அவருக்கு மிக அவசியமாக இருக்கிறது. இப்போது அவர் கர்வத்துடன் இருந்தாலும், எப்படிப்பட்ட உதவியை அவர் உதறித் தள்ளியிருக்கிறார் என்பதை அவர் இன்று நினைத்துப் பார்ப்பார். இன்னும் தீவிரமாக இரவு முழுவதும் யோசித்துப் பார்த்து, பணத்தைப் பற்றிக் கனவு கண்டபிறகு, நாளை விடிந்தவுடன் அவர் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்க ஓடிவருவார் பாருங்கள். அப்போது நான் சொல்வேன், ‘தன்மான மிக்க மனிதர் நீங்கள் என்பதை நரூபித்துவிட்டீர்கள், எனவே இந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு எங்களை மன்னித்துவிடுங்கள்’ என்பேன். அப்போது அவர் இந்தப் பணத்தை வாங்கிக்கொள்வார்!”

இவ்வாறு மனித மனங்களின் ஆழத்தில் ஓடும் எண்ணங்களைத் துல்லியமாகப் புலப்படுத்தும் விதமாக நாவல் முழுதும் தஸ்தயேவ்ஸ்கியின் பார்வை விரிந்து கிடக்கிறது. திருதராஷ்டிரனுக்குச் சஞ்சயன் கொடுத்த பார்வையாக தஸ்தயேவ்ஸ்கி நமக்களிக்கும் பார்வை வாழ்க்கையின் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...