திருக்குறள் உரை: அறிவுடைமை

குறள் பால்: பொருட்பால்
அதிகாரம்: 43. அறிவுடைமை

அறிவு என்பது என்ன? அதனால் என்ன பயன்? அது இருப்பவர்க்கும் இல்லாதவர்க்கும் என்ன வேறுபாடு? போன்ற பல கேள்விகளுக்கு அறிவுடைமை பதிலளிக்கிறது.

குறள் 421:
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
உரை:
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவி
பகைவர்க்கும் உட்புகுந்து அழிக்க முடியாத அரண்.

குறள் 422:
சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.
உரை:
மனம் போன போக்கில் போகவிடாது  தீமை நீக்கி
நன்மையை நோக்கிச் செலுத்துவது அறிவு.

குறள் 423:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
உரை:
எதைப் பற்றி யார்யார் சொல்லக் கேட்பினும்
அதைப் பற்றிய உண்மையை அறிவது அறிவு.

குறள் 424:
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
உரை:
எளிய பொருளாகப் பிறர் விரும்புமாறு சொல்லி
பிறரிடமிருந்து நுட்பமான பொருளைக் காண்பது அறிவு.

குறள் 425:
உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு.
உரை:
உலகத்துடன் ஒட்டி நடந்து அதனுடன்
நெருங்கியும் விலகாதும் இருப்பது அறிவு.

குறள் 426:
எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.
உரை:
உலகம் எவ்விதம் நடக்கிறதோ அதன்படி
அதனோடு ஒழுகுதல் அறிவு.

குறள் 427:
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
உரை:
அறிவுடையார் பின் நடப்பதை முன்பே அறிவார்
அறிவிலார் அவ்வாறு அறியமாட்டார்.

குறள் 428:
அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.
உரை:
அஞ்சுவதற்கு அஞ்சாதிருப்பது மடமை அஞ்சுவதற்கு
அஞ்சுவது அறிவுடையோர் செயல்.

குறள் 429:
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
உரை:
எதிர் வருவதை அறிந்து முன்னரே காக்கும் அறிவினார்க்கு
இல்லை அதிரவைக்கும் துன்பம்.

குறள் 430:
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்.
உரை:
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
எல்லாமிருந்தும் ஏதும் இல்லாதவரே.
Related Posts Plugin for WordPress, Blogger...