திருக்குறள் உரை: உறுப்புநலன் அழிதல்

குறள் பால்: காமத்துப்பால்.
அதிகாரம்: 124. உறுப்புநலன் அழிதல்.

காதலனைப் பிரிந்த காதலி அவன் பிரிவாற்றாமையால் வருந்தித் துன்புறுகையில், அத்துன்பத்தின் வெளிப்பாடாக உடலில் ஏற்படும் மாறுதல்களைச் சுட்டுகிறது இந்த அதிகாரம். அந்த மாறுதல்களை பசலை படர்தல் என்ற சொல்லால் இலக்கியங்கள் சொல்வது மரபு. கண்கள், தோள்கள், நெற்றி மற்றும் மேனி ஆகியவற்றில் இயல்புக்கு மாறாக ஏற்படும் மாற்றங்களே இங்கே உறுப்புநலன் அழிதல் எனப்படுகிறது.

குறள் 1231:
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.
உரை:
பிரிவுத் துன்பத்தை நமக்கெனவிட்டு நெடுந்தூரம் சென்றவரை
நினைத்து அழுததால் நறுமலர்களை நாணின கண்கள்.

குறள் 1232:
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
உரை:
விரும்பியவர் அன்பு காட்டாததை சொல்லுவது போல
பசலை படர்ந்து நீர் சொரிகின்றன கண்கள்.

குறள் 1233:
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
உரை:
பிரிவை மிகவும் தெரிவிப்பது போல மெலிந்தன
முன்பு மண நாளன்று பூரித்திருந்த தோள்கள்.

குறள் 1234:
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
உரை:
திண்மை நீங்கிப் பசும்பொன் வளையல்கள் கழன்றுவிழ
இயற்கை அழகை இழந்து வாடிவிட்டன தோள்கள்.

குறள் 1235:
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
உரை:
கொடியவர் கொடுமை உரைக்க வளையல்கள் கழன்று
இயற்கை அழகை இழந்து வாடிவிட்டன தோள்கள்.

குறள் 1236:
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
உரை:
வளையல்கள் கழன்று தோள்கள் மெலிந்து துன்புற்றாலும்
அவரைக் கொடியவரெனக் கூறுதல் வருத்தமே.

குறள் 1237:
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.
உரை:
பெருமை பெறுவாயோ மனமே கொடியவரென்பவரிடம்
வாடும் தோள்களின் ஆரவாரத்தை உரைத்து.

குறள் 1238:
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
உரை:
தழுவிய கைகளை சிறிது தளர்த்தவே பசலை படர்ந்தது
பசும்பொன் வளையலணிந்த பேதை நெற்றி.

குறள் 1239:
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
உரை:
தழுவதற்கிடையே சில்லென்ற காற்று நுழைய பசலையுற்றது
பேதையின் குளிர்ந்த பெரிய கண்கள்.

குறள் 1240:
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
உரை:
கண்களின் பசலையோ வருத்தம் எய்திற்று
ஒளி பொருந்திய நெற்றியின் பசலை கண்டு.
Related Posts Plugin for WordPress, Blogger...