July 10, 2014

திருக்குறள் உரை: கனவுநிலை உரைத்தல்

குறள் பால்: காமத்துப்பால்.
அதிகாரம்: 122. கனவுநிலை உரைத்தல்.

காதல் அனுபவம் நம்மை எப்போதும் கற்பனையில் மிதக்கச் செய்வது. எனவே கனவு காண்பது தவிர்க்க முடியாதது. ஒருவரைப் பற்றிய அந்தக் கனவு மற்றவர்க்கு இன்பத்தைக் கொடுக்கக்கூடியது. அதே சமயம் நேரில் காண முடியவில்லை என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்துவது. காதலனைப் பிரிந்த காதலி இவ்வாறு இன்பமும் துன்பமும் அடைவதை இந்த அதிகாரத்தில் படம் பிடிக்கிறார் வள்ளுவர்.

குறள் 1211:
காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து.
உரை:
காதலர் தூதோடு வந்த கனவிற்கு
என்ன விருந்து செய்வேன்?

குறள் 1212:
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன்.
உரை:
கயல் விழிகள் நான் கெஞ்சத் தூங்குமாயின் காதலர்க்கு
உயிரோடிருக்கும் உண்மையைச் சொல்வேன்.

குறள் 1213:
நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
உரை:
நேரில் வரதாவரைக் கனவில் காண்பதினால்
இன்னும் போகாதிருக்கிறது என்னுயிர்.

குறள் 1214:
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
உரை:
கனவினால் கிடைக்கும் இன்பம் நேரில் வராதவரைக்
கொணர்ந்தது போன்ற இன்பத்தைத் தருகிறது.

குறள் 1215:
நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
உரை:
நேரில் கண்டபோதும் இன்பம் அப்போது கனவில்
கண்டபோதும் இன்பம் இப்போது.

குறள் 1216:
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்.
உரை:
நனவென ஒன்றில்லை எனில் கனவிலே
காதலர் பிரியாது இருப்பார்.

குறள் 1217:
நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது.
உரை:
நேரில் வந்து அன்பு காட்டாத கொடியவர் கனவில்
வந்து என்னை வருத்துவது ஏன்?

குறள் 1218:
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
உரை:
தூங்கும்போது தோள்மேல் வருபவர் விழிக்கும்போது
மனதிற்குள் செல்கிறார் விரைந்து.

குறள் 1219:
நனவினான் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
உரை:
நேரில் வராதவரைக் கடிந்துகொள்பவர்கள் கனவிலே
காதலரைக் காணாதவர்.

குறள் 1220:
நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
காணார்கொல் இவ்வூ ரவர்.
உரை:
நேரில் என்னைப் பிரிந்தார் என்பவர்கள் கனவிலே
அவர் வருவதைக் காணாரோ இந்த ஊரார்.
Related Posts Plugin for WordPress, Blogger...