திருக்குறள் உரை: நீத்தார் பெருமை

குறள் பால்: அறத்துப்பால்.
அதிகாரம்: 3. நீத்தார் பெருமை.

நீத்தார் பெருமை பற்றி சொல்கிறது இந்த அதிகாரம். நீத்தார் என்பவர் யார் என்றால் அதற்கு இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். இல்லற வாழ்வைத் துறந்தவர்கள் என்று ஒரு பொருள். மற்றொரு பொருள் ஆசைகளைத் துறந்தவர் என்பது. ஆசைகளைத் துறந்தவர்தான் துறவிகளாக முடியும் என்றாலும் இல்லறத்திலிருந்தபடியே குறைந்த பட்ச ஆசைகளுடன் வாழமுடியும். அவர்களையும் நீத்தார் என்றே கருதலாம். பொதுவாக ஆசைகளைத் துறந்தவர் என்று பொருள் கொள்ளும்போது குறளின் வீச்சு பல தளங்களில் விரிவதை நாம் காணமுடியும்.

குறள் 21:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
உரை:
ஒழுக்கத்தில் நின்ற துறவிகளின் பெருமையை
மேலானதாக நூல்கள் போற்றும்.

குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
உரை:
துறந்தவர்களின் பெருமையின் அளவு உலகத்தில்
இறந்தவர்களின் எண்ணிக்கை போல எண்ணற்றது.

குறள் 23:
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.
உரை:
நன்மை தீமை தெரிந்து அறத்தை மேற்கொண்டவர்
பெருமை உலகத்தில் உயர்ந்தது.

குறள் 24:
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
உரை:
அறிவு எனும் அங்குசத்தால் ஐம்பொறிகளையும் காப்பவன்
துறவுக்கு ஒப்பற்ற விதையாவான்.

குறள் 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
உரை:
ஐம்பொறிகளை அடக்கியவன் வலிமைக்கு வானத்து
தலைவன் இந்திரனே தக்க எடுத்துக்காட்டு.

குறள் 26:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
உரை:
முடியாத செயலையும் முடிப்பவர் பெரியர் சிறியர்
முடியாத செயலைச் செய்ய இயலாதவர்.

குறள் 27:
சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
உரை:
ஐம்பொறிகளின் குணங்களை ஆராய்ந்து அறியும்
திறனுடையவற்கே இந்த உலகம் சொந்தமாகும்.

குறள் 28:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
உரை:
நிரம்பிய கல்வியறிவுடைய சான்றோர்களின் பெருமையை
உலகத்தில் நிலவும் அவர்களின் மறை நூல்களே காட்டும்.

குறள் 29:
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.
உரை:
குணமாகிய சிகரத்தில் நின்ற சான்றோரின் கோபம்
அவரிடம் ஒரு கணம்கூட தங்காது நீங்கிவிடும்.

குறள் 30:
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
உரை:
அந்தணர் என்பவர் எவரெனில் பிற உயிர்களுக்கு
அன்புடன் அருள் பொழியும் அறவோராவார்.
Related Posts Plugin for WordPress, Blogger...