திருக்குறள் விளக்கு: கி.வா.ஜகந்நாதன்-2

குரல்1: கவிதைப் பண்புக்கு வாருங்கள்.

குரல்2: அதைச் சொல்லத்தான் வந்தேன். பாவியென்று குணத்தையே வைகிறார் திருவள்ளுவர். அந்த வசவைப் பெறும் குணங்களில் ஒன்று வறுமை. அதன் கடுமையை வேறு ஒரு பாட்டில் சொல்ல வருகிறார் திருவள்ளுவர்.

குரல்1: அப்படிச் சொல்லும் முறையில் கவிச்சுவை அமைந்திருக்கிறது என்று சொல்லப் போகிறீர்களா?

குரல்2: ஆம். ஆவலைத் தூண்டிவிடும் வகையில் அதைச் சொல்கிறார்.

குரல்1: எப்படி?

குரல்2: வறுமையை இன்மை என்னும் சொல்லால் குறிக்கிறார். வள்ளுவரையும் அவர் உபதேசத்தைக் கேட்பவரையும் இங்கே கொண்டு வந்து நிறுத்தி ஒரு காட்சியைக் கற்பனை செய்யலாமென்று தோன்றுகிறது.

[மாற்றம்]

வள்ளுவர்: இன்மையின் கடுமையை என்னென்பது! அதை உவமை கூறி விளக்கினால் உங்களுக்கு விளங்கும். நீங்களும் வறுமையைப்பற்றித் தெரிந்து கொண்டிருப்பீர்களே. நீங்களே உங்கள் சிந்தனையைத் தூண்டிப் பாருங்கள். எதை உவமை கூறலாம் என்று ஆராய்ந்து பாருங்கள். இன்மையின் இன்னாதது யாது?

ஒரு குரல்: நாம் யோசிக்கலாமே! மிகக் கொடுமையான வறுமைக்கு எதை உவமையாகச் சொல்லலாம்? நெருப்பைச் சொல்லலாமா?

மற்றொரு குரல்: நெருப்பா? அது எத்தனை நல்ல காரியங்களைச் செய்கிறது! அதைச் சொல்லலாமா?

முதற் குரல்: அப்படியானால் நேயைச் சொல்லலாமா?

மற்றொரு குரல்: நோயால் உடம்புதானே நலிவு பெறும்?

முதற் குரல்: பின்னே எதைச் சொல்வது? கடன் வாங்கினவன் படும் தொல்லையைச் சொல்லலாமா? அருமைப் பிள்ளையை இழந்தவன் துயரைச் சொல்லலாமா?

வள்ளுவர்: இன்னும் உவமை கண்டுபிடிக்கவில்லையா? இன்மையின் இன்னாதது யாது?

இரண்டாவது குரல்: பாம்பைச் சொல்லலாமா? காட்டு விலங்கைச் சொல்லலாமா? நஞ்சைச் சொல்லலாமா?

வள்ளுவர்: ஒன்றும் தெரியவில்லையா? நான் சொல்லட்டுமா?

ஒரு குரல்: [மெல்ல] சொல்லப் போகிறார் போலிருக்கிறதே!

வள்ளுவர்: இன்மையின் இன்னாதது யாது எனின்...

இரண்டாவது குரல்: [மெல்ல] நல்ல வேளை! புலவர் பெருமானே நம் தவிப்பை அறிந்து நம் உதவிக்கு வருகிறார். அவருக்குத்தான் தக்கபடி உவமை சொல்லத் தெரியும். பேசாதீர்கள். அவர் சொல்வதைக் கேட்கலாம்.

வள்ளுவர்: இன்மையின் இன்னாதது யாது எனின்?...

முதற் குரல்: [மெல்ல] என்ன இது? இன்னும் சொல்லாமல் நம்மைத் தவிக்க விடுகிறாரே! இவர் எதைச் சொல்லப் போகிறார்?

வள்ளுவர்: இன்மையின் இன்னாதது யாது? எனின் இன்மையின்...

இரண்டாவது குரல்: [மெல்ல] ஆ! இதோ உவமை வரப்போகிறது. வள்ளுவர் உவமைக்குத் தனிச் சிறப்பு உண்டல்லவா?

வள்ளுவர்: இன்மையின் இன்னாதது யாது? எனின் இன்மையின்...

முதல் குரல்: [மெல்ல] பெருமூச்சு விடாதீர்கள். இதோ திருவள்ளுவர் திருவாக்கிலிருந்து உவமை நழுவி விழப்போகிறது. கவனியுங்கள்.

வள்ளுவர்: இன்மையின் இன்னாதது யாது? எனின் -இன்மையின் இன்மையே இன்னாதது.

முதற் குரல்: ஆ! எத்தனை அழகாகச் சொல்லிவிட்டார்? வறுமையைப்போலக் கொடுமையானது எது என்றால், வறுமையைப் போல வறுமையே கொடுமையானதாம்.

இரண்டாவது குரல்: உவமை சொல்லி மாளாது என்பதையல்லவா, நம் ஆவலைத்தூண்டிச் சடுகுடுக்காட்டி அழுத்தமாகப் புலப்படுத்திவிட்டார்?

[மாற்றம்]

குரல்1: திருவள்ளுவர் வறுமையின் கொடுமையை, அது இன்னாதவற்றுள் தலைசிறந்தது என்பதை, அழகிய முறையில் தெளிவாக்குகிறார். உவமையே இல்லாத கொடியது அது என்று சொன்னால் உப்புச்சப்பு இல்லாமல் இருக்கும். உவமையைக் கேட்பார் போன்று ஒரு கேள்வியை எழுப்புகிறார். இன்மையின் இன்னாதது யாது என்ற அந்தக் கேள்வியைக் கேட்கும்போது, நாம் நம் அனுபவத்தில் வந்த கொடுமைகளையெல்லாம் அடுக்கிப் பார்க்கிறோம். ஒன்றும் சரிப்படுவதில்லை. பிறகு அவரே சொல்லப்புகுவார் போல, “இன்மையின் இன்னாதது யாது? எனின்” என்று தொடங்கி இன்மையின் என்று அதை நீட்டி, கடைசியில் அதற்கு அதுவே உவமை என்று சொல்லிவிடுகிறார். பாட்டை மறுமுறையும் கேட்போமா?

வேறு குரல்: [பாடுகிறது]

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. [குறள் 1041]

குரல்1: அழகான கவிதை! அற்புதமான உத்தி. இறையனார் சொன்னதுபோல இது நின்று அலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மையதுதான். இன்னும் வள்ளுவர் ஆளும் கவிதை உத்திகளைக் கேட்க விரும்புகிறேன்.

திருக்குறள் விளக்கு, கி.வா.ஜகந்நாதன், அமுத நிலையம், முதற் பதிப்பு டிசம்பர் 1961, பக்கம் 26-30.
Related Posts Plugin for WordPress, Blogger...