திருக்குறள் விளக்கு: கி.வா.ஜகந்நாதன்-1

குரல்1: காமத்துப்பால் முழுவதும் கவிச்சுவை ததும்பும் பகுதி. ஒவ்வொரு பாடலும் காதல் நாடகத்தின் காட்சியாக நிற்கிறது. ஒரு காட்சியை இங்கே கண்டு மகிழலாம்.

[மாற்றம்]

தலைவி: இன்னும் அவர் வரவில்லையே! ஊருக்குப் போனவர் குறிப்பிட்ட காலத்தில் வராமல் இப்படித் துன்புறுத்துகிறாரே!

[தோழி வருகிறாள்]

தோழி: என்ன, ஒரு விதமாகச் சோர்வடைந்திருக்கிறாயே! உடம்புக்கு ஏதாவது தீங்கு உண்டோ?

தலைவி: உடம்புக்கு ஒன்றும் இல்லை! உள்ளந்தான் சரியாக இல்லை.

தோழி: உள்ளத்தில் என்ன வேதனை? உன் கண்கள் ஏன் இப்படிச் சிவந்து கலங்கி இருக்கின்றன?

தலைவி: இரவு முழுவதும் தூக்கமே இல்லை.

தோழி: ஏன் அப்படி?

தலைவி: அவர் ஊரில் இல்லை. போனவுடன் கடிதம் போடுகிறேன் என்றார். போடவில்லை.

தோழி: ஆண்பிள்ளை அவர். போன இடத்தில் என்ன வேலையோ? அதைக் கவனித்துக்கொண்டுதானே வரவேண்டும்?

தலைவி: ஆனாலும் எனக்கு அவருடைய நினைவாகவே இருக்கிறது. அவருக்குக் காலையில் இளஞ்சூடாக வெந்நீரில் குளிக்க வேண்டும். சுடச்சுட உணவு வேண்டும். போகிற இடத்தில் என்ன வசதி இருக்கிறதோ தெரியவில்லை. இவற்றை எண்ணி எண்ணி, இரவெல்லாம் தூக்கம் பிடிக்கவில்லை.

தோழி: அவர் வருகிற வரைக்கும் இப்படித்தான் இருக்குமோ?

தலைவி: ஆம். அவர் வராவிட்டால் இந்தக் கண் தூங்காதுபோல் இருக்கிறது.

[குதிரை வண்டியின் சத்தம்]

தோழி: இதோ அவர் வந்துவிட்டார்போல் இருக்கிறது. நெடுநாளாகப் பிரிந்தவர் வருகிறார். நான் இங்கே தடையாக இருக்கமாட்டேன். நாளைக்கு வருகிறேன்.

[மாற்றம்]

[கோழி கூவுகிறது]

தலைவன்: சிறிது வெளியே போய்விட்டு வருகிறேன்.

தலைவி: விரைவில் வந்துவிடுங்கள்.

தலைவன்: மறுபடியும் ஊருக்குப் போய்விடுவேன் என்றா நினைக்கிறாய்? [சிரிப்பு]

[செருப்பின் ஓசை. தொடர்ந்து காற்சிலம்பின் ஓசை.]

தலைவி: வா, வா தோழி! அவர் வந்துவிட்டார், தெரியுமோ?

தோழி: அதுதான் நேற்றே தெரியுமே! இப்போது எவ்வளவு பூரிப்புடன் இருக்கிறாய் தெரியுமா? இதென்ன உன் கண் கலக்கம் மட்டும் போகவில்லையே?

தலைவி: அதற்கு என்ன செய்வேன்? இரவெல்லாம் தூக்கம் இல்லை.

தோழி: என்னடி இது? அவர் வராதபோது இரவு முழுவதும் தூக்கமில்லை என்றாய். கவலைப்பட்டதனால் தூங்காமல் இருக்க நியாயம் உண்டு. இப்போதுதான் அவர் வந்துவிட்டாரே! உனக்கு என்ன கவலை?

தலைவி: இரவு முழுவதும் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன். போன இடத்தில் அவர் என்னையே நினைத்துக் கொண்டிருந்தாராம். நல்ல உணவு உண்ணும்பொழுது நான் இல்லையே என்று நினைத்தாராம். அழகான காட்சிகளைக் காணும்போது உடன் இருந்து கண்டு இன்புற நானும் அங்கே இல்லையே என்று வருந்தினாராம். போன இடத்தில் கண்டதையும் கேட்டதையும் சொன்னார். இரவு நேரம் போனதே தெரியவில்லை.

தோழி: நன்றாயிருக்கிறது போ! அவர் வரவில்லை என்று நீ துன்புற்றாய் முன்பு. இப்போது அவர் வந்துவிட்டாரென்று மகிழ்கிறாய். ஆனால் உன் கண்களுக்கு மட்டும் எப்போதும் சங்கடந்தான் போலிருக்கிறது! அவர் வரவில்லையென்று அவை முன்பு தூங்கவில்லை. இப்போதோ அவர் வந்துவிட்டாரென்று தூங்கவில்லை.

[தலைவியும் தோழியும் சேர்ந்து சிரிக்கிறார்கள்]

[மாற்றம்]

குரல்1: இந்த அழகிய காட்சியை இரண்டே அடிகளில் காட்டிவிட்டார் வள்ளுவர்.

குரல்2: [பெண் குரல் பாடுகிறது]

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். [குறள் 1179]

குரல்1: இப்படி, காமத்துப்பாலில் இருபத்தைந்து அதிகாரங்களில் இருநூற்றைம்பது பாடல்கள் உள்ளன. அவை யாவும் பல பல வகையில் இன்பத்தை ஊட்டுகின்றன.

திருக்குறள் விளக்கு, கி.வா.ஜகந்நாதன், அமுத நிலையம், முதற் பதிப்பு டிசம்பர் 1961, பக்கம் 31-35.
Related Posts Plugin for WordPress, Blogger...