திருக்குறள் உரை

அன்றிலிருந்து இன்றுவரை திருக்குறளுக்கு எண்ணற்ற உரைகள் வந்துள்ளன. இன்னும் வந்துகொண்டிருக்கின்றன. பலர் குறளுக்கு அதன் உட்பொருளை ஆய்ந்து உரை எழுதியிருக்கிறார்கள். ஆனால் படித்த மாத்திரத்திலேயே குறள் அதுவாகவே நமக்கு சொல்லும் உரைதான் அலாதியானது. கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே அதுகுறித்து பெரிதும் வியந்திருக்கிறேன். திருக்குளை நான் ஆழ்ந்து கற்றவனல்ல என்றாலும் அதன் மீது ஒரு காதல், கவர்ச்சி இருந்தது. அது இன்றும் மாறாமல் அப்படியே இருந்துவருவது ஆச்சர்யமளிக்கிறது. எனவே திருக்குறளுக்கு உரை ஒன்று எழுதினால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவாகவே இந்த திருக்குறள் உரையை எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதை எழுதுவதற்கு நான் அமைத்துக்கொண்ட விதி பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுவது என்பதுதான். படித்தவுடன் சட்டென்று பற்றிக்கொள்ளும் பொறியைப்போல அது நம் மனதில் பிரகாசிக்க வேண்டும். அதைத்தவிர வேறு எந்த விதியையும் நான் கைக்கொள்ளவில்லை. நான் எழுத முற்பட்டிருப்பது ஒரு எளிய உரை. அவ்வளவே. 

இதை ஆரம்பத்திலிருந்து எழுதாமல் எனக்கு தோன்றிய வகையில் எழுதப்போகிறேன். 1330 குறள்களுக்கும் எழுதுவது என்பதைவிட எனக்குப் பிடித்த பல அதிகாரங்களுக்கு, குறள்களுக்கு எழுதுவது என்றுதான் இதை ஆரம்பிக்கிறேன். போகப்போக எல்லா குறள்களுக்கும் எழுத முடிந்துவிட்டால் அது ஆண்டவன் அளித்த பேறு என்பதைவிட  வேறோன்றுமில்லை. நான் எழுதப் போவதில் சில குறைகள் இருக்கலாம். அது என் அறியாமையால் நேரும் பிழைகளாக படிப்பவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...