சிந்தனைகள்

சிந்தனைகள் எனும் தலைப்பில் நான் கேட்ட, படித்த, அனுபவித்த பலவற்றை புத்தக அலமாரியில் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். வானத்து நட்சத்திரங்கள் போல ஒவ்வொரு மனிதன் வாழ்பனுபவமும் வெட்டவெளியில் கொட்டிக் கிடக்கிறது. நாவல், கட்டுரை, கவிதை என அனைத்திலும் பகிரப்படுவது இவைதான். வாழ்வை அதன் பிரம்மாண்டத்தை, பரவசத் தருணங்களைக் கண்டடைந்தவன் அதைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள முயலும்போது கிட்டும் வடிவங்கள்தான் இவை. கதைகளும் காவியங்களும் இதனாலேயே தோன்றின. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதே இவை அனைத்தின் தாரக மந்திரம்.

இவைகள் யாருக்கேனும் பயன்படலாம் அல்லது பயன்படாமலும் போகலாம். ஆனால் என்னை நானே சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ள எனக்கு இவைகள் உதவும் என நம்புகிறேன். வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நாட்குறிப்புகள் எழுதி வந்தவன் நான். ஆனால் ஏதோ ஒரு மனஅவசத்தில் அவற்றையெல்லாம் எரித்துவிட்டேன். என் வாழ்வின் அனுபவங்களைத் தொலைத்துவிட்ட உணர்வையே இதனால் நான் அடைந்தேன். அந்த முட்டாள் தனத்தை நினைத்து இன்றும் வருந்துகிறேன். நினைவுகளிலிருந்து அவற்றை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமானதன்று.

நானும் என் எழுத்தும் என்ற கட்டுரையில் சுந்தர ராமசாமி குறிப்பிட்டதை இங்கே நினைவுகொள்கிறேன். “.... என்னைப்பற்றி நான் தெரிந்துகொள்ள எழுதும் எழுத்துக்கள், தங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள உபயோகப்படும் என்று எண்ணுகிறவர்கள்தான் என்னுடைய வாசகர்கள். என்னுடைய பூட்டுக்கு நான் அடித்த சாவிகள் அவர்களுடைய பூட்டுகளுக்கும் சேரும் என்று கேள்விப்படுகிற பொழுது அவர்கள் என் வீடு தேடி வருவார்கள்.” ஒவ்வொரு எழுத்தும் செய்யும் பணி இதுதான். அவரவர் தங்களுக்கான ஒத்த அலைவரிசையுடைய எழுத்துக்களைக் கண்டடைவதே வாசிப்பின் ரகசியம். வாசிப்பின் இன்பம்.
Related Posts Plugin for WordPress, Blogger...